பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு  சாவுமணி

தென்னாட்டில் வெகுகாலமாக பார்ப்பனராதிக்கத்தினால் உத்தியோக விஷயத்திலும் சமூக விஷயத்திலும் கஷ்டமனுபவித்து வந்த பார்ப்பன ரல்லாதார்களில் சில பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து சுமார் 10, 13 வருஷங்களுக்கு முன்பாக தென் இந்தியர்களின் நல உரிமைச் சங்கம் என்னும் பேரால் பார்ப்பனரல்லாதார் ஸ்தாபனம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு சமூக சமத்துவத் தையும் உத்தியோக வகுப்புவாரி பிரநிதித்துவத்தையும் முக்கிய கொள்கை யாய் வைத்து பார்ப்பனர்களை அந்த ஸ்தாபனத்தில் சேர்த்துக் கொள்வ தில்லை என்கின்ற விதிகளையும் ஏற்படுத்தி பார்ப்பனரல்லாத பொது ஜனங்க ளின் ஆதரவையும் பெற்று “ஜஸ்டிஸ்” என்கின்ற ஒரு ஆங்கில பத்திரிகை யையும் “திராவிடன்” என்கின்ற ஒரு தமிழ் பத்திரிகையும் அந்த ஸ்தாபனத் தின் சார்பாக நடத்தி, காங்கிரசின் பேராலும் தேசீயத்தின் பேராலும் பார்ப்பனர் களும் அவர்கள் தாசர்களும் செய்துவந்த தொல்லைகளை எல்லாம் சமாளித்து அறிவாளி மக்களிடத்திலும் அரசாங்கத்தினிடத்திலும் ஒத்துழைத் ததின் பயனால் நாட்டில் அந்த ஸ்தாபனத்திற்கும் பத்திரிகைகளுக்கும் பெரும் பான்மையான பார்ப்பனரல்லாத மக்களின் சரியான பிரதிநிதித்துவம் வாய்ந்தது என்கின்ற கவுரவமும் பெற்று விளங்கி வந்ததானது யாவரும் அறிந்த விஷயமேயாகும்.

அப்படிப்பட்ட ஒரு நியாயமான ஸ்தாபனம் அதன் முக்கியஸ்தர் களுக்குள் ஏற்பட்ட சுயநல உத்தியோக வெறியினால் பிளவுபட்டு செல்வாக் கையும் அதிகாரப் பதவியையும் யிழந்துவிட்ட காலத்தில் சுயமரியாதை இயக்கத்தாருடையவும் வாலிபர்களுடையவும் முயற்சியாலும், மறுபடியும் அக்கட்சிக்குள் ஒற்றுமை ஏற்பட்டதின் பலனாகவும் பழைய நிலைமையை அடைந்தது என்றாலும் இப்போது சிலரின்  அதாவது ஒரு கைபிடிக்குள் அடங்கக்கூடிய தலைவர்கள் என்பவர்களின் சுயநலத்திற்காக அப்பேர்பட்ட ஒரு ஸ்தாபனத்தின் கொள்கைகளும், விதிகளும், கௌரவங்களும் அழிக்கப் பட்டு இன்று சந்தி சிரிக்கக்கூடிய நிலைமைக்குப் போய் அந்த ஸ்தாபனமே அடியோடு மறையக் கூடிய நிலைமைக்குப் போகக் கூடிய மாதிரியில் சாவு மணி அடித்தாகி விட்டது. ஆகவே இவ் விஷயத்தைக் கேட்ட எந்த பார்ப்பன ரல்லாதார் மனமும் சிறப்பாக வாலிபர்கள் மனமும் சுயமரியாதை இயக்கத் தார்கள் மனமும் பதறாமல் இருக்க முடியாதென்றே சொல்லுவோம்.

அதென்னவென்றால் இம்மாதம் 15 ² சென்னையில் கூடிய பார்ப்பன ரல்லாதார் கட்சி (தென் இந்திய நலவுரிமைச் சங்க) நிர்வாக சபைக் கூட்டத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ திட்டக் கொள்கையையும் ஆட்டம் கொடுக்கச் செய்து பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் பார்ப்பனர்களையும் அங்கத்தினர் களாகச் சேர்த்துக் கொள்வது என்று தீர்மானமாகி இருக்கின்றது. ஆகவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் ஆட்டம் கொடுத்து பார்ப்பனர்களையும் அந்த இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளுவது என்று ஏற்பட்டுவிட்டால்  பிறகு பார்ப்பனரல்லாதார் என்கின்ற கட்சியோ அல்லது அதனுடைய கொள் கையோ ஏதாவது மீதி இருக்கமுடியுமா? என்றும் அப்படி ஏதாவது இருந்தா லும் அக்கட்சிக்கு இனி பார்ப்பனரல்லாதார் (சூடிn – க்ஷசயாஅin ஞயசவல) கட்சி என்று பேர் சொல்லத்தகுமா? என்றும், அப்படியே ஒரு சமயம் சொல்லிக் கொண்டி ருப்பதனாலும், வெறும் பெயரளவில் மாத்திரம் அப்படி ஒரு ஸ்தாபனம் இருக்க வேண்டுமா? என்றும் ஒரு சமயம் இருக்கச் செய்யலாமானாலும் அதனால் பார்ப்பனரல்லாதார் மக்களுக்கு ஏதாவது பயன் விளையுமா? என்றும் யோசித்துப் பார்க்கும்படி பார்ப்பனரல்லாத பிரமுகர்களையும் அக் கட்சிக்குப் புத்துயிர் கொடுத்த வாலிபர்களையும் வேண்டிக் கொள்ளு கின்றோம்.

அன்றியும் இனிமேல் அக்கட்சியானது அதன் தலைவர்கள் என்பவர் கள் பொதுமக்களை ஏமாற்றிப் பார்ப்பனரல்லாதாருக்கு நன்மை செய்யப் போகிறோம் என்று சொல்லி பார்ப்பனரல்லாத பாமர மக்களிடம் ஓட்டுப் பெற்று சட்டசபை முதலிய ஸ்தாபனங்களில் அங்கத்தினர்களாகி தங்கள் சொந்த வாழ்வுக்கு மந்திரியாவதும் அல்லது மற்ற ஏதாவது லாபகரமான பதவி பெறுவதுமான காரியங்களுக்கு அவற்றை உபயோகப்படுத்தப்படுவதைத் தவிர அதனால் மக்களுக்கு எவ்விதமான பலனும் கண்டிப்பாய் உண்டாகப் போவதில்லை என்பது உறுதியான காரியமாகும்.

பார்ப்பனர்களை இக்கட்சியில் சேர்க்கலாமா வேண்டாமா என்னும் விஷயமும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை தளரவிட வேண்டுமா என்னும் விஷயம் ஒருபுறமிருக்க; இவ்விஷயத்தில் தலைவர்கள் என்பவர் களின் நாணையம் எவ்வாறு இருக்கின்றது என்பது இதில் முதலாவதாக கவனிக்கத்தக்க விஷயமாகும் என்பதை வாசகர்களுக்கு முதலில் ஞாபக மூட்ட விரும்புகின்றோம்.

அதாவது பார்ப்பனரல்லாதார் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்ப்பது என்பதும் தள்ளுவது என்பதும் பற்றிய பிரச்சினை அடிக்கடி கிளப்பப்படு வதும் கட்சியின் நன்மையைக் கோரின நல்ல எண்ணத்துடனா? அல்லது சுயநலத்தைக் கோரி சமயத்திற்கேற்றார் போல் நடப்பது என்கின்றதான புரட்டு எண்ணத்தைக் கொண்டா? என்பதே முக்கியமாய் யோசிக்கத்தக்கதாகும்.

சென்ற அதாவது 1926-ம் வருஷக் கடைசியில் நடந்த  சட்டசபைப் பொதுத் தேர்தலில் பார்ப்பனரல்லாத கட்சிப்பிரமுகர்கள் பலர் தோல்விய டைந்து மந்திரி ஸ்தானம் தங்கள் கையை விட்டுப் போக நேர்ந்தவுடனே மதுரையில்  கூடிய மகாநாட்டின் போதே பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டுவந்தது யாவருக்கும் தெரிந்த விஷயமேயாகும். அது சமயம் சிலர் போட்ட கூச்சலினால் அப்போது அது வலியுறுத்தப்படாமல் மறைந்து போயிற்று.

மறுபடியும் அடுத்தார்ப் போல் கோயமுத்தூரில் கூடின ஸ்பெஷல் மகா நாட்டின் போதும் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வர முயற்சி செய்து பார்த்து பிரயோஜனப்படாது என்று தெரிந்த பிறகு அதை விட்டு விட்டு காங்கிரசி லாவது போய்ச் சேரவேண்டுமென்று அதாவது பார்ப்பனர்களைத் தாங்கள் சேர்த்துக் கொள்ள இடம் கிடைக்காமல் போனாலும் பார்ப்பனர்களுடனாவது  தாங்கள் போய்ச் சேர்ந்து விடலாம் என்று கருதி அதற்காக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அந்தச் சமயத்தில் திருவாளர்கள் வரதராஜுலு கல்யாணசுந்தரம் முதலியவர்கள் தங்களுக்கு பார்ப்பன சூட்சி விளங்கி விட்டதாகவும், இனிமேல் ஞானம் வந்து விட்டதாகவும், பார்ப்பனர்களை காங்கிரசை விட்டு விரட்டி விடலாம் என்றும் சொல்லிக்கொண்டு அவர்களும் இதில் வந்து சேரும் தீர்மானத்துடன் வந்திருந்தபடியால் அவர்கள் ஆசைக் காகவும் அத்தீர்மானம் அனுமதிக்கப் பட்டது என்றாலும்  ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள் மூன்றே மாதத்தில் தங்கள் தங்கள் குற்றங்களை உணரும்படி யாக ஏற்பட்டு அதாவது தாங்களும் காங்கிரசில் சேர முடியாமலும் பார்ப் பனர்களையும் அதைவிட்டு விரட்ட முடியாமலும் போய் விட்டது கண்டு தங்கள் தவறுதலுக்காக வருந்தவும் செய்தார்கள். ஆனாலும் அதுமுதல் இதுவரை இவ்வியக்கத் தலைவர்கள் என்பவர்களின் புத்தி ஒரு நிலையில் இல்லாமல் என்ன செய்தால்  மந்திரி ஆகலாம் என்கின்ற ஒரே கவலையின் மீது வகுப்புவாரி பிரதிநிதித்துவமே வேண்டாம் என்று ஒரு தடவையும், பார்ப்பனர்களைச் சேர்க்கலாம் என்று ஒரு தடவையும், சேர்க்க வேண்டாம் என்று  ஒரு தடவையும், கவுன்சில் நடவடிக்கைகளில்  மாத்திரம் சேர்க்கலாம் என்று ஒரு தடவையும், கமிட்டி ஏற்படுத்தி சேர்க்கலாம் என்று ஒரு தடவையும், சுவற்று மீது பூனையாக ஒரு தடவையும், இம்மாதிரியாக சமயத் திற்குத் தகுந்தபடி யெல்லாம் பேசிக் கொண்டே ஒரு நிலையும் இல்லாமல் இருந்து விட்டு இப்போது தேர்தல் சமீபித்து விட்டதினாலும், உப்புச் சத்தியாக்கிரகத்தின் பயனாய் பார்ப்பனர்களுக்கு ஆதிக்கம்  வந்திருக்கும் என் கின்ற  எண்ணத்தினாலும் பார்ப்பனர்களுக்கு பயந்து கொண்டு இப்போது பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் வகுப்புவாரி பிரதிநிதி திட்டத்தையும் தளர்த்தி பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்வது என்று முடிவு செய்து விட்டு அதை அமுலுக்கு கொண்டு வர மகாநாடும் சமீபத்தில் தஞ்சாவூரில் கூட்டத் தீர்மானிக்கப்பட்டு மாய் விட்டது. அந்த மகாநாடும் கூட நாணைய மான முறையில் கூட்டப்படுவதானால் கண்டிப்பாய் இந்த தீர்மானம் அதில் தோல்வியடைந்தே தீரும் என்றும், சூட்சி முறையில் கூட்டப்படுவதானால் அவர்களின் இஷ்டப்படி நிறைவேற்றப்பட்டு விடவும் கூடும் என்றும் கருதுகிறோம்.

எது எப்படியானாலும் இதன் பயனாய் இனிமேல் பார்ப்பனரல்லா தாரின் சமூக சமத்துவத்திற்கும் தீண்டாத மக்களின் கொடுமை நீங்குவதற்கும்,  முகமதியர் கிருஸ்தவர்கள் ஆகிய குறைந்த துகையினர் பாதுகாப்பிற்கும் பார்ப்பனரல்லாதார் கட்சியை நம்புவதில் பலனில்லை என்று ஏற்பட்டு விடுவ தோடு அத்தலைவர்களின் நாணையத்திலும் ஜனங்களுக்கு அடியோடு நம்பிக்கையற்றுப் போய் விடுமென்பதே நமது அபிப்பிராயமாகும். காரணம் என்னவென்றால் நெல்லூர் மகாநாட்டிற்கு முன்னும் இவ்விதமான  ஒரு முயற்சி ஏற்பட்டு இதே தலைவர்களில் பலர் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளுவதற்கும் அனுகூலமாயிருந்து  சுயமரியாதை இயக்கத்தாரின் பலமான ஆnக்ஷபனைகளுக்கு பயந்து மந்திரிகளுடைய தாட்சண்ணியத் திற்காகவும் சிநேகத்திற்காகவும் பார்ப்பனர்களை சட்டசபை நடவடிக்கை யிலாவது சேர்த்துக் கொள்ள அனுமதி கோரி மந்திரி கட்சியும் பார்ப்பனரல் லாதார் கட்சியும் ஒன்றாக வேண்டும் என்கின்ற சமாதானத்திற்காக ஒரு கமிட்டி ஏற்படுத்தி அக்கமிட்டியில் ராஜித் தீர்மானமாகச் செய்து நிர்வாக சபை யிலும் இராஜியை உத்தேசித்து ஏகமனதாய் தீர்மானம் செய்யச் செய்து மற்றவர்களையும் ஒப்புக் கொள்ளச் செய்த பிறகு சிறிது நாள் பொருத்து அடுத்த தேர்தலுக்கு பிறகு நியமனம் செய்யப்படும் மந்திரி சபையில் யார் முதல் மந்திரியாயிருப்பது? என்கின்ற தகராரின் பேரிலேயே சிலருக்குள் ராஜி முறிந்து  நெல்லூர் மகாநாட்டில் அத்தீர்மானத்திற்கு அதாவது சட்டசபை நடவடிக்கைகளில் பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று செய்து கொண்ட ராஜி ஒப்பந்த தீர்மானத்திற்கு விரோதமாய் பிரசாரஞ் செய்து ஒரே ஒரு ஓட்டில் ஒப்பந்தத்திற்கு விரோதமாக தீர்மானிக்கப்பட்டு விட்டது. இதைப் பற்றி சுயமரியாதை சங்கத் தலைவர் திரு. சௌந்தரபாண்டியன் அவர்கள் கூட “அரசியல் சூதாட்டத்தின் பலனாக இப்படி செய்ய நேர்ந்தது” என்று கண்டித்து அப்போதே எழுதியிருக்கிறார். இது ஒரு புறமிருக்க,

சட்டசபை நடவடிக்கையில் கூட பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்து 4 மாதம் ஆவதற்குள் நெல்லூரில் அத் தீர்மா னத்தை யார் எதிர்த்தார்களோ அந்த கனவான்களாலேயே (சென்னை கன வான்களால்) மறுபடியும் “தற்கால நிலைமையை உத்தேசித்து பார்ப்பனர்களை பார்ப்பனரல்லாதார் கட்சியிலேயே அங்கத்தினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு 2, 3 மாதமாய் அதை தள்ளித் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து இப்போது ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் சட்ட சபை தேர்தல் வருவது நிச்சயம் என்கின்ற சங்கதி தெரிந்த வுடன் பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்ள வேண்டியது தான் என்கின்ற தீர்மானம் ஒரு சிறு எதிர்ப்புக் கூட இல்லாமல் நிறைவேறும் படியாகச் செய்து கொண்டாய்  விட்டது. எனவே இவற்றை யெல்லாம் கவனிக்கும் போது இவர்கள் நடவடிக்கைளைப் பார்க்கும் போதும் தமிழ்நாட்டில் பார்ப்பன ரல்லாத மக்களின் “தலைவிதி” இதுவரை எப்பேர்ப்பட்டவர்கள் கையில் இருந்தது, இருக்கின்றது என்பதை  நினைக்க நினைக்க மனம் கொதிக்கத்தக்க விஷயமாய் இருக்கின்றது.

இந்த சமயத்தில் பார்ப்பனப் பத்திரிக்கைகள் பரிகாசமாக பார்ப்பனரல் லாத கட்சியைப் போற்றுவதுபோல் எழுதுகின்றன. அதாவது கோயமுத்தூர் மகாநாட்டில் பார்ப்பனரல்லாத கட்சியைச் சேர்ந்தவர்கள் காங்கிரசில் சேரலாம் என்றவுடன்  புகழ்ந்து எழுதிவிட்டு எப்படி காங்கிரசில் மெம்பராகவே சேர்க்க வொட்டாமல் செய்து எந்தப் பார்ப்பனரல்லாதாருக்கும் காங்கிரசில் மரியா தையும் இல்லாமல் செய்தார்களோ அது போலவே இப்போதும் போற்றி  எழுதி விட்டு  எந்த பார்ப்பனரும் விதியை திருத்தும்படி கேட்டுக் கொள்ள வில்லை யென்றும்  யாரும் வந்து சேருதற்கு தயாராயில்லை என்றும் கேவல மாக இழிவு படுத்தி மற்றொரு பக்கத்தில் எழுதுகின்றன.

நிற்க இம்மாதிரியாக இப்போது ஒரு தீர்மானம் செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன? என்பதைப் பற்றி மறுபடியும்  சற்று  யோசிப்போம். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருக்கும் மந்திரிக்கட்சித் தலைவர் ஒருவருக்கும் அடுத்த தடவை யார் முதல் மந்திரியாக வருவது என்ற  விஷயத்தில் தகராறு ஏற்பட்டவுடன் இரண்டு கட்சியிலுமிருந்த பின்பற்றுகிற வர்கள் தங்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் போகுமே என்கின்ற  கவலையின் பேரிலும் பொறாமையின் பேரிலும் இவ்விரு தலைவர்களையும் இந்த சமயத்தில் பிரித்து வைத்து விட்டால் பிறகு இருவரும் நம்மை வந்து கெஞ்சு வார்கள், அப்போது நாம் மெதுவாய் உள்ளே புகுந்து பங்கு பெற்று விடலா மென்று கருதி முதல் மந்திரி ஆசைக்காரத் தலைவர்களைப் பிரித்து வைக்க தந்திரம் செய்து அதற்கு மார்க்கமென்ன என்று யோசித்துக் கடைசியாக முன்குறிப்பிட்ட ஒப்பந்தமாகிய அதாவது பார்ப்பனர்களை சட்டசபை நடவடிக்கைகளில்  சேர்த்துக் கொள்ளுவது என்கின்ற இரு கட்சித் தலைவர் கள் செய்து கொண்ட இராஜி ஒப்பந்தத்தை முறித்து விடுவதின் மூலம் இருவருக்கும் விரோத முண்டாக்கி இருவரையும் ஒன்று சேர விடாமல் செய்து விடலாமென்று கருதி சூட்சி செய்யப்பட்டதின் பயனாய் நெல்லூர் மகாநாட்டில் ஒப்பந்தம் முறிந்து ஜஸ்டிஸ் கட்சித் தலைவருக்கும் மந்திரிக் கட்சி தலைவருக்கும் வெளிப்படையான விரோதமேற்பட நேர்ந்தது. இந்த மத்தியில் இம் மூன்று கட்சியும் தவிர அதாவது (மந்திரிகட்சி, ஜஸ்டிஸ் கட்சி, இவற்றைப் பிரித்து வைத்த சூட்சிக் கட்சி) வேறு ஒரு கூட்டம் தங்களுக்குள் யார் யார் எந்தெந்த  பதவிகளைப் பங்கு  போட்டுக் கொள்வது என்கின்ற ஒப்பந்தத்தின் பேரில் வேறு கூட்டம் ஒரு கட்சியாக முளைக்க ஆரம்பித்து விட்டது. இதனால் ஜஸ்டிஸ் கட்சிக்கு பயம் ஏற்பட்டு அந்தப் புதுக் கட்சி மந்திரிக் கட்சியுடன் சேர்ந்து விடாமல்  இருப்பதற்காகவும், பார்ப்பனர்கள் மந்திரிக்கட்சியில் சேர்ந்து விடாமல் இருப்பதற்காகவும் யோசனை செய்து அவ்விருவர்களுக்கும் பயந்து கொண்டே பார்ப்பனரல்லாதார் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளுகிறது என்கின்ற  நிபந்தனையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டியதான நிர்பந்தம் ஏற்பட்டுப் போய் விட்டது. ஆகவே பார்ப்பனரல்லாதார் தலைவர்களுக்குப் பார்ப்பனர்களைத் தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாமென்பதும், சட்டசபை நடவடிக்கைகளிற் பார்ப்பனர்களுடன் கலந்து கொள்ளலாமா வென்பதும் அடுத்த தடவை மந்திரி உத்தியோகம் கிடைக்குமா கிடைக்காதா என்பதைப் பொறுத்துத்தான் இருக்கின்றதே தவிர கட்சி நன்மையையோ பார்ப்பனரல்லாதார் சமூக நன்மையையோ பொறுத்ததல்லவென்பதே நமது அபிப்பிராயம். பார்ப்பனர் களிலும் பலர் இந்த சண்டையில் தங்களுக்கும் ஒரு பங்கு கிடைக்கும் என்கின்ற ஆசையின் மீது பலர் வாலை ஆட்டி வாயைத் திறந்து கொண்டு வரலாம் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் இந்த சூக்ஷியானது இதுவரை பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்பட்ட சிறிது நன்மையும் பாழாய்ப் போய்விடும் படி செய்துவிடும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

ஆகவே இந்தவிதமாக யாரோ சில கனவான்களின் மந்திரிப் பதவி சூதாட்டத்திற்காகப் பார்ப்பனரல்லாதார் கட்சியின் அடிப்படையானதும் ஜீவநாடியானதுமான கொள்கைகளை அடியோடு ஒழிக்க விட்டு விடுவதா? என்றுதான் பார்ப்பனரல்லாத பிரமுகர்களையும் வாலிபர்களையும் கேட்கி றோம். இந் நிலையில் பொதுவாக பார்ப்பனரல்லாத பொது மக்கள் தங்கள் மனதில் ஒரு காரியத்தை மாத்திரம் நன்றாய் ஊன்றி வைத்துக் கொள்ள வேண்டியது. அதாவது ஜஸ்டிஸ் கட்சியின் இன்றைய போக்கை பார்க்கும் போது அது இனி பாமரமக்கள் கட்சியாய் இருக்க முடியாது என்பதையும் பார்ப்பனருக்கு அடுத்த நமது எதிரியாகிய பணக்காரக் கூட்டத்தின் ஆதிக்க மாகிப் பார்ப்பனரும் பணக்காரரும் சேர்ந்த பார்ப்பனரல்லாதாரை வதைக்கும் மற்றொரு பெரும் கொள்ளை நோயாய் மாறப்போகின்றது என்பது மாத்திரம் கருத்தில் நன்றாய் ஊன்றி வைத்துக்கொள்ள வேண்டிய விஷயமாகும். இனி இதோடு மாத்திரம் இல்லாமல் சமய பிழைப்புக்காரர்களும் பண்டித பிழைப்புக் காரர்களும் கண்டிப்பாய் அக்கட்சியில் சேர்ந்து உத்தியோக வேட்டையோடு புராண பிரசாரமும் தொடர்ந்து நடைபெறும் என்பதையும் கருத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமாய் குறிப்பிடுகின்றோம். மற்ற விஷயங்களை பின்னால் விவரிப்போம்.

<p style=”text-align: right”>குடி அரசு – தலையங்கம் – 22.06.1930</p>

 

You may also like...

Leave a Reply