சுயமரியாதையும் சுய ஆட்சியையும் பற்றி ஒரு சுய ஆட்சிப் பார்ப்பானுக்கும் சுயமரியாதை பார்ப்பனரல்லாதாருக்கும் சம்பாஷணை
– சித்திரபுத்திரன்
சுய ஆட்சி:- என்ன சுயமரியாதை! உன்னை ஒரு வாரமாகக் கண்ணி லேயே காண முடியவில்லை. எங்கு போய் விட்டாய்?
சுயமரியாதை:- ஓ! சுய ஆட்சியே! நான் ஈரோட்டுக்குப் போயிருந் தேன்.
சு. ஆ:- ஈரோட்டில் ஒரு வாரமாக என்ன வேலை உனக்கு?
சு. ம:- ஈரோட்டில் சுயமரியாதை மகாநாடு நடந்ததல்லவா? அதற்காக ஒரு வாரம் முன்னேயே போய் மகாநாட்டு வேலையில் கலந்து கொண்டு என்னால் கூடியதைச் செய்து கொண்டிருந்தேன்.
சு. ஆ:- ஆமா! ஆமா!! நான் கூட கேள்விப் பட்டேன். சுயமரியாதை மகாநாடு நிரம்ப நன்றாய் நடந்ததாகவும் மூன்று நான்கு ஆயிரம் பேருக்கு மேலாகவே வந்திருந்ததாகவும், பெண்களும், ஆண்களும், ஆதி திராவிடர்களும் கூட ஏராளமாய் வந்திருந்ததாகவும் கேள்விப் பட்டேன்.
சு. ம:- ஆதி திராவிடர்கள் வந்திருந்தது மாத்திரம்தானா நீ கண்டாய்? சமையல் பரிமாறினதில் கூட ஆதி திராவிடர்கள் கலந்திருந்தார்கள். மற்றொரு சமையல் இடத்தில் 2, 3 ஆதி திராவிடர்களும் ஒரு ஆதி திராவிடப் பெண்ணும் மாத்திரமேதான் சமையல் செய்து பரிமாறினார்கள். மகாநாட்டுத் தலைவர் திரு. எம்.ஆர். ஜெயகருக்கும் அவருடன் கூட இறங்கி இருந்த கனவான்களுக்கும் ஆதிதிராவிட சமையல்தான் நடந்தது.
சு. ஆ:- பிரதிநிதிகளுக்கு சமையல் செய்த சமையல்காரர்கள் யார்? மதுரை, கோயமுத்தூர் கான்பரன்சுகள் போல சைவர்கள்தானே?
சு. ம:- இல்லவே இல்லை. ஒரு சைவனையாவது சமையல் வீட்டிற்குள் விடவே இல்லை.
சு. ஆ:- பின்னை யார் சமையல் செய்தார்கள். பிராமணனா?
சு. ம:- சைவனுக்கு இடமில்லையென்றால், பார்ப்பானுக்கு அங்கு இடம் கிடைத்து விடுமா?
சு. ஆ:- பின் யார்தான் சமையல் செய்தார்கள்?
சு. ம:- விருது நகரிலிருந்து வரவழைக்கப் பட்டிருந்த முதல் தரமான நாடார் சமையல்காரர்களே சமையல் செய்தார்கள்.
சு. ஆ:- அவர்கள் சமையல் நன்றாயிருந்ததா? ஜனங்கள் சாப்பிட் டார்களா?
சு. ம:- நன்றாயிருந்ததா என்றா கேட்கின்றாய். மகாநாட்டிற்கு பார்ப்பன சமையற்காரனையாவது, சைவ சமையற்காரனையாவது வைத்திருந்தால் குறைந்தது ஒரு பத்து மூட்டை அரிசியாவது குறைந்திருக்கும். நாடார்களை வைக்கப் போக மூன்று நான்கு நாளில் 40, 50 மூட்டை அரிசியும் தீர்ந்து விட்டது.
சு. ஆ:- அது என்ன அப்படி சொல்லுகின்றாய்?
சு. ம:- அனேகமாய் ஒவ்வொரு ஆளும் ஒன்றரை ஆள் சாப்பாடு சாப்பிட்டார்கள். இது நான் சொல்லுவதல்ல, பிரதிநிதிகளே சொன்னது. ஏனென்றால் சாப்பாடு அவ்வளவு சுத்தமாகவும் ருஜியாகவும் இருந்ததோடு வெகு அன்பாகப் பரிமாறினார்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.
சு. ஆ:- எல்லா பிரதிநிதிகளும் சாப்பிட்டார்களா?
சு. ம:- எல்லா பிரதிநிதிகளுமே சாப்பிட்டார்கள். இன்னம் ஒரு விசே ஷம் என்ன தெரியுமா? ஆதிதிராவிட வாலண்டியர்கள் சாப்பாடு பரிமாறி னார்கள். மற்றும் மகமதியர் வாலண்டியர்களும், கிறிஸ்தவ வாலண்டியர்களும் பரிமாறினார்கள். திருப்தியாகவே எல்லோரும் சாப்பிட்டார்கள்.
சு. ஆ:- அப்படித்தான் இருக்க வேண்டும். எனக்கு இந்த விஷயம் காதில் கேழ்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாயிருக்கின்றது.
சு. ம:- நீங்கள் எல்லாம் வாயில் சந்தோஷப்பட்டு விட்டு போகின்றவர் களே தவிர காரியத்தில் வரும் போது மறைந்து கொள்ளுகின்றவர்கள் தானே?
சு. ஆ:- அதென்ன அப்படிச் சொல்லுகின்றாய்
சு. ம:- சொல்லுவதென்ன. நீதான் சொல்லேன் பார்ப்போம். எந்த அரசியல் கான்பிரன்சிலாவது இன்றைய வரை பார்ப்பனர்களைத் தவிர வேறு வகுப்பார்களை வைத்து சமையல் செய்திருக்கின்றீர்களா?
முதலாவது சமபந்தியாய் வைத்து சாப்பாடு போட்டிருக்கின்றீர்களா?
ஒத்துழையாமையின் போதுகூட பார்ப்பன சமையற்காரர்கள் தான் – அதற்கு பிறகு கூட பார்ப்பன சமையற்காரர்கள் தான் – யாராவது கேட்டால் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று சொல்லி ஏமாற்றிவிடுவீர்கள்.
காங்கிரஸ் முதலிய கூட்டங்களுக்கு வேறு மாகாணங்களுக்கு போனால் கூட அவ்விடத்திற்கும் இங்கிருந்தே பார்ப்பன சமையல்காரர் களைக் கூட்டிக் கொண்டு போய் அங்கும் வேறு வேறாக உட்கார வைத்துச் சாப்பாடு போட்டு அவமானப் படுத்துவீர்கள். வாயில் மாத்திரம் சமத்துவம், சுதந்திரம், சுயராஜ்ஜியம், பூரண சுயேச்சை பேசுவீர்கள்.
சு. ஆ:- கொஞ்சம் கொஞ்சமாகத் தானே ஆக வேண்டும். ஒரே நாளில் ஆய்விடுமா? அதன் பாட்டுக்கு அதுவும் நடக்க வேண்டியது தான். சுய ஆட்சி பாட்டிற்கு அதுவும் வரவேண்டியதுதான். சரிசமமாய் உட்கார்ந்து சாப்பிடுவதற்கும் சுய ஆட்சிக்கும் சம்பந்தம் வைத்துக் கொண்டிருந்தால் முடியுமா? இது இன்று நேற்று ஏற்பட்ட விஷயமா? ஏதோ ஒரு நன்மைக் காகத்தான் பெரியவர்கள் இந்த ஏற்பாடுகளெல்லாம் செய்து வைத்திருக் கிறார்கள். அதை அழிப்பது அவ்வளவு சரியான காரியமாய் விடாது. இருந்தாலும் மெள்ள மெள்ளச் சரிப்படுத்த முயற்சிக்க வேண்டியதுதான். அது எப்படியோ இருக்கட்டும். இப்பொழுது சாப்பாட்டிற்கு என்ன அவசரம் வந்து விட்டது? மகாநாட்டு மற்ற நடவடிக்கைகளைப் பற்றி பேசுவோம் – மகாநாடு ரொம்பவும் நன்றாய் நடந்ததென்று தான் சொன்னார்கள். ஆனால் என் அபிப்பிராயத்தில் ஒரே ஒரு தவறு தான் நடந்து விட்டது என்று படுகிறது.
சு. ம:- அதென்ன தவறு?
சு.ஆ:- உப்புச் சத்தியாக்கிரகத்தை பாராட்டியும் கஷ்டப்பட்டவர் களுக்கு அனுதாபம் காட்டியும் ஒரு தீர்மானம் போட்டிருந்தால் மற்ற காரியங் கள் எல்லாம் எப்படி இருந்தாலும் மறைந்து போயிருக்கும். அதில் தான் சற்றுத் தவறி விட்டீர்கள்.
சு. ம:- அப்படியா நினைக்கின்றாய்! எனக்கு அந்த காரியத்தினால் தான் மகாநாடு ரொம்ப சரியாய் நடந்து கொண்டது என்பதாகப் படுகின்றது. மகா நாடு அந்தத் தீர்மானங்களைச் செய்திருந்ததேயானால் கண்டிப்பாய் மகாநாட்டின் யோக்கியதையும் குறைந்திருக்கும். சுயமரியாதை இயக்கத் திற்கும் சாவுமணி அடித்திருக்கும்.
சு. ஆ:- அதென்ன அப்படிச் சொல்லுகின்றாய்?
சு. ம:- ஆம், அப்படித்தான் ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்தால் எப்படி அந்தக் கட்சிக்கு சாவு மணியோ அதுபோல் சுயமரியாதை இயக்கத்தில் அரசியல் சம்மந்தமான எந்தப் பிரச்சினையை கொண்டு வந்தாலும் இதற்கு சாவு மணியேயாகும். இவ்வியக்கத்தின் நாணயமே அடியோடு போய்விடும்.
சு. ஆ;- இதனால் என்ன கெடுதி வந்து விடும்?
சு. ம:- சுயமரியாதை இயக்கத்திற்கு எப்படி கடவுளைப் பற்றி கவலை இல்லையோ அதுபோலவே சுய ஆட்சியைப் பற்றியும் கவலையே இல்லை. சுய ஆட்சி வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி. ஏனெனில் கடவுள் என்கின்ற வார்த்தையைப் போலவே சுய ஆட்சி என்கின்ற வார்த்தையும் அர்த்தமற்ற தாகும். வயிற்றுப் பிழைப்புக்கும், சுயநலத்திற்கும் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு இருப்பது போலவே சுய ஆட்சி பெயரையும் சிலர் சொல்லிக் கொண்டிருப்பதைத் தவிர வேறு இல்லை. ஆகையால் சுய மரியாதைக் காரருக்கு எப்படி மக்களுக்கு கடவுள் உணர்ச்சியும் கடவுள் கவலையும் போக வேண்டும் என்கின்ற கவலை இருக்கின்றதோ, அது போலவே சுய ஆட்சி உணர்ச்சியும் கவலையும் போக வேண்டும் என்கின்ற கொள்கையும் உண்டு. ஆதலால் அவைகளைப் பற்றி மகாநாடு கவனிக் காததே நல்ல காரியமாகும்.
சு. ஆ:- அப்படி ஆனால் மகாத்மா காந்தி கூடவா அர்த்தம் தெரியாமல் செய்கின்றார் என்கின்றாய்?
சு. ம:- அதென்ன மகாத்மா செய்வதாயிருந்தால் எல்லாக் காரியமும் சரியானதாய் இருக்கும் என்பது உனது அபிப்பிராயமோ? மகாத்மாவை சுய மரியாதைக்காரர்கள் ஒப்புக் கொள்வதில்லை என்பது உனக்குத் தெரியாதா?
சு. ஆ:-அதென்ன இந்த சங்கதி எனக்கு அதிசயமாயிருக்கிறது?
சு. ம:- அதிசயமென்ன? மகாத்மா என்கின்ற பட்டத்தை கூட நாங்கள் சேர்ப்பதில்லை. அது உனக்குத் தெரியாதா?
அவர் உலகத்திற்கு பெரியவராய் இருக்கலாம் எங்களைப் பொருத்த வரை நாங்கள் அவர்கள் கொள்கையை ஒப்புக் கொள்ள முடியாது. வெள்ளைக்காரர்கள் வேண்டுமானாலும் அவரை ஒப்புக் கொள்ளும்படியான காலம் வரலாம். சுயமரியாதைக்காரரான நாங்கள் அவரை எங்கள் பிரதிநிதி என்று ஒரு காலமும் ஒப்புக் கொள்ளவே மாட்டோம். ஏனென்றால் எங்கள் கொள்கைப்படி அவரும் ஒரு மூட நம்பிக்கைக்காரரே யாவார். சுருக்கமாகச் சொன்னால் பார்ப்பன ஆதிக்கத்திற்கு தாசர் ஆவார். அவரது ராமன், சீதை, அரிச்சந்திரன், கிருஷ்ணன், நாராயணன் முதலியவர்கள் எல்லாம் நமக்கு பிடிக்காதவர்கள். அன்றியும் அவரது கடவுள், செயல், ஜாதி உணர்ச்சி, வரு ணாசிரமக் கொள்கை, மனுதர்ம சாஸ்திர பக்தி, கீதை உபாசனை முதலான வைகள் எல்லாம் எங்களுக்கு அடியோடு உதவாது. இந்த விஷயங்களில் அவர் எப்படி மூட நம்பிக்கையும் பார்ப்பனீயதாசத் தன்மையும் கொண்டு இருக்கிறாரோ அதே மாதிரிதான் ராஜரீக விஷயத்திலும் மூட நம்பிக்கையும் பார்ப்பன ஆதிக்கதாசத் தன்மையும் கொண்டு இருக்கிறார் என்று எண்ணு கின்றோம். ஆதலால் அவரது கொள்கைகளை யெல்லாம் நாம் ஒப்புக்கொள் ளவும் முடியாது. பின்பற்றவும் முடியாது. அதோடு அதில் பாமர மக்கள் ஏமாந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் நமது கடனாகும்.
சு. ஆ:- நீ இப்படிச் சொல்லி விட்டதினாலேயே எல்லோரும் உன் பேச்சை கேட்டு விடுவார்களா?
சு. ம: – அது வேற சங்கதி. ஜனங்கள் கேட்பார்களா இல்லையா என் பதை நாங்கள் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. நாங்கள் சொல்வது சரியா தப்பா என்பதை யோசிக்க வேண்டியதைத் தவிர மற்றவர்கள் கேட்பார் களா? கேட்க மாட்டார்களா? என்பதல்ல நாங்கள் கவனிக்க வேண்டியது. உதாரணமாகச் சங்கராச்சாரியை நாங்கள் லோக குரு என்று ஒப்புக் கொள்வ தில்லை. இந்து மதம் என்று ஒரு மதம் இருப்பதாக நாங்கள் ஒப்புக் கொள்வ தில்லை. சாமி செயல், கோவில் உற்சவம் இவைகளை யெல்லாம் நாங்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஆனால் பத்துலட்சக்கணக்கான மக்கள் இவைகளை ஒப்புக் கொண்டு கூத்தாடுகிறார்கள். அதனாலேயே நாங்கள் ஒப்புக் கொள்ளாதது தப்பிதமாய் விடுமா? அல்லது அவர்கள் ஒப்புக் கொள்வது சரியானதாகி விடுமா?
சு. ஆ: – சுயராஜியமும் வேண்டாம். கடவுளும் வேண்டாம். சங்கராச் சாரியும் வேண்டாம். மகாத்மாவும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம். என்கின் றீர்களே பின்னை எதற்காகத் தான் இவ்வளவு ரூபாய் செலவு செய்து மகாநாடு நடத்தினீர்கள்.
சு. ம: – அப்படிக் கேள். எங்களுக்கு சுயமரியாதை வேண்டும். பகுத்தறிவு வேண்டும். சமத்துவம் வேண்டும்.
சு. ஆ: – இப்பொழுது சுயமரியாதை இல்லாமல் என்ன விதமான அவமரியாதை அனுபவிக்கிறீர்கள்?
சு. ம: – என்ன அவமரியாதை என்றா கேட்கிறாய்? உனக்கு உண்மை யிலேயே தெரிய வில்லையா?
சு. ஆ: – தெரியவில்லையே.
சு. ம: – தெரியச் சொல்லுகிறேன் கேள் – முதலில் நீ யார்? சொல்லு பார்ப்போம்.
சு. ஆ: – நான் ஒரு பிராமணன்.
சு. ம: – நான் யார்? சொல்லு பார்ப்போம்.
சு. ஆ: – நீ ஒரு பிராமணனல்லாதவன்.
சு. ம: – அப்படிச் சொன்னால் முடியாது. உனக்கு நீ பிராமணன் என்கின்ற பட்டம் வைத்துக் கொண்டது போல் எனக்கு அதே முறையில் இருக்கும் பட்டத்தைச் சொல்லு.
சு. ஆ: – அதற்கென்ன சூத்திரன் என்று சொல்லுவார்கள்.
சு. ம: – நான் சூத்திரனாயிற்று. சரி. திரு. எம். சி. ராஜா யார் சொல் பார்ப்போம்.
சு. ஆ : – அவர் ஆதி திராவிடர்.
சு. ம: – அப்படிச் சொன்னால் முடியாது. நீ பிராமணன். நான் சூத்திரன் என்பது போல் அவருக்குள்ள பட்டத்தையும் சொல்லு.
சு. ஆ: – பறையர் அல்லது பஞ்சமர் என்று சொல்லுவார்கள்.
சு. ம: – சரி எங்களை நீங்கள் தொடுவீர்களா?
சு. ஆ: – தொட்டால் என்ன ஒட்டிக் கொள்ளுமோ?
சு. ம: – அதெல்லாம் தெரியாது. நீங்கள் அதாவது உங்கள் ஜாதியார் எங்களையும் எம்.சி. ராஜாவையும் தொடுவார்களா?
சு. ஆ: – பெரியவர்கள் தொடமாட்டார்கள்.
சு. ம: – ஏன் தொடமாட்டார்கள்?
சு. ஆ: – என்னமோ வெகுகாலமாக அப்படி ஒரு வழக்கம் ஏற்பட்டு விட்டது. அது நாங்கள் ஏற்படுத்தியதா நீங்கள் ஏற்படுத்தியதா?
சு. ம: – யாரோ ஏற்படுத்தி இருக்கட்டும் அதைப் பற்றி கவலையில்லை. ஏன் தொட மாட்டார்கள் அதைச் சொல்லு.
சு. ஆ: – பிராமணாள் சற்று மேல் ஜாதி. சூத்திரன் பஞ்மன் என்பது சற்று கீழ் ஜாதி என்று ஏற்படுத்தி விட்டார்கள். அதனால் தொடக் கூடாது என்றும், தொட்டால் தீட்டு என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் எனக்கு அந்த வித்தியாசம் இல்லை.
சு. ம: – உனக்கு இருந்தாலும் சரி இல்லா விட்டாலும் சரி முன் சொன்ன அந்தக் கீழ் ஜாதியில் எங்களை சேர்க்கப் பட்டிருப்பதே தான் எங்களுடைய சுயமரியாதைக் குறைவுக்கு முதல் உதாரணம். இப்படி இன்னும் எத்தனை வேண்டுமானாலும் சொல்லுவேன்.
சு.ஆ:- அப்படியானால் உங்களுக்குள் அந்த வித்தியாசம்இல்லையா?
சு. ம: – இருந்தாலும் இருக்கலாம். அதுவும் உங்களால் வந்த வினை தான். இருந்தாலும் சுயமரியாதை இயக்கத்தில் அந்த வித்தியாசமே இருக்கக் கூடாது, என்பது தான் முதற் கொள்கை. அதற்கு உதாரணமாகவே தான் சாப்பாடு விஷயத்தில் எல்லோரும் சமமாயும் மேல், கீழ் என்கின்ற ஜாதி வித்தி யாசம் இல்லாமலும் சாப்பாடு கொடுப்பனை கொள்வனை ஆகிய காரியங்கள் நடந்து வருகின்றது.
<p style=”text-align: right”>குடி அரசு – உரையாடல் – 22.06.1930</p>