ஒரு பெண்ணுக்கு பல புருஷர்கள்

இந்தியாவில் ஒரு புருஷனுக்கு பல பெண்ஜாதிகள் இருந்து வருவது சாதாரணமாகவும், அவ்வழக்கம் சமூகத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும், மதத்துடனும் மதச்சம்பந்தமான கடவுள்கள், மதாச்சாரியார் முதலியவர்களுக் குள்ளும் இருந்து வருவதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் ஒருவித சீர்திருத்தக்காரர்கள் என்பவர்கள் மாத்திரம், அதுவும் வெள்ளைக்கார தேசத்தை, அவர்களது நாகரீகத்தைப் பின்பற்றிய வர்கள் என்கின்ற முறையில் சிலர் ஒரு புருஷனுக்கு ஒன்றுக்கு மேல்பட்ட பெண்கள் கூடாது என்று சொல்லுவார்கள். அதற்குக் காரணம் சொல்லவும் தெரியாது. இரண்டு பெண்டாட்டிகள் கட்டின மதாச்சாரியாரை வணங்கு வார்கள். இரண்டு பெண்டாட்டிகள் கட்டின சாமியையும் கும்பிடுவார்கள். அதற்கு, கோயில்கட்டி, இரண்டு பெண்டாட்டிகளை வைத்து கும்பாபி ஷேகம் செய்து, பூசை உற்சவமும் செய்வார்கள். தாங்களும் பல பெண் களிடம் சாவகாசமும் செய்திருப்பார்கள். தங்கள் காதலிகளாக பயன் படுத்தியும் வருவார்கள். ஆனால் வாயில் மாத்திரம் இரண்டு பெண்டாட்டி களைக் கட்டிக்கொள்வது சீர்திருத்தத்திற்கு கொள்கைக்கு விரோதம் என்பார்கள். ஆகவே இக் கூட்டத்தார் சீர்திருத்தம் என்பதற்கு அருத்தம் தெரியாதவர்களும், அதில் பொறுப்பும், கவலையும் இல்லாதவர்களும் ஆனவர்கள் என்று சொல்லப் படவேண்டியதோடு, வெள்ளைக்கார நாகரீகத்தைத் தாங்களும் வாயினால் பேசுவதின் மூலம் தங்களை “நாகரீகக் காரர்” என்று பிறத்தியார் சொல்ல வேண்டும் என்கின்ற ஆசையையும் உடையவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே இதன் நன்மை தீமை என்பது எப்படி இருந்தாலும், ஒரு மனிதனுக்கு உள்ள சுதந்திரம் ஒரு மனுஷிக்கும் இருக்கவேண்டியது என்கின்ற முறையில் பார்க்கும்போது நமது புருஷர்கள் இரண்டு பெண்டாட்டிகளுடன் வாழுவது போலவே நமது பெண்கள் இரண்டு புருஷர்களுடன் வாழுவதில் குற்றமில்லை என்பதே நமதபிப்பிராயம் என்பதோடு, அம் முறையை இஷ்டப்படுபவர்கள் கையாளுவதில் எவ்விதத்தடையும் இருக்கக் கூடாது என்பதும் நமதபிப்பி ராயமாகும். புருஷன் பெண்சாதியாக வாழுவது என்பது, புருஷன் பெண் சாதி என்பவர்களுடைய தனித்தனி சொந்த இஷ்டத்தைப் பொறுத்ததே தவிர, அதில் ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதே அவ்விஷயத்தில் நமது அபிப்பிராயமாகும். இந்து மத ஆதாரங் களில் இவ்வழக்கம் இருந்து வந்ததாக எழுதப்பட்டிருப்பது ஒருபுறமிருந் தாலும், மலையாளப் பிரதேசத்தில் இவ்வழக்கம் இன்று பிரத்தியக்ஷத்தில் இருந்து வருவதைக் காணலாம். அதாவது, ஒரு வீட்டில் 2, 3 புருஷர்கள் இருந்தால் அவர்கள் 2, 3 பேருக்கும் ஒரு பெண்ணையே மனைவியாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வரப்படுகின்றது. இது தவிர இந்தியாவின் வடகிழக்கில் உள்ள தீபேத்து என்கின்ற நாட்டில் இன்றும் பெண்மக்களில் அவ்வழக்கம் தாராளமாய் இருந்து வருகின்றது. ஒரு பெண்ணுக்கு நான்கு ஐந்து புருஷர்கள் கணவர்களாக இருந்து வருகின்றார்கள். இதனால் சிறிதும் சண்டை சச்சரவின்றி சந்தோஷமாகவே வாழ்ந்து வருகின்றார்கள். இப்படி யிருக்கின்ற இந்த ஜனங்களிடம் மிக்க நல்ல குணங்களும் நாணையங் களும் இருந்து வருகின்றதாம். இதை தீபேத்துக்கு இரண்டு தடவை பிரயாணம் செய்து நேரிலேயே சென்று பார்த்து விட்டுவந்த ஒரு பிரஞ்சு மாதாகிய திருமதி லாபூஜீ என்கின்ற ஒரு அம்மையார் இதைப் பற்றி வியக்தமாக எழுதுகிறார். (இந்த விபரம் 9-9-31-தேதி “நவசக்தி”யில் காணலாம்.) ஆகவே, நமது மக்களுக்குள் வாழ்க்கை முறையோ, சீர்திருத் தமோ, முற்போக்கோ என்பவைகளைப்பற்றி சுதந்திர உணர்ச்சியோ-சுதந்திர அபிப்பிராயமென்பதோ அநேகருக்கு இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். எந்தப்பழக்க வழக்கம் சீர்திருத்தம் என்றாலும்  நம்நாடு-நம் மதம்-நம் ஜாதி-நம் வகுப்பு ஆகியவைகளில் என்ன இருக்கின்றது? எப்படி நடந்து வருகின்றது? என்கின்ற அளவில் தான் அவரவர் புத்தியைச் செலுத்த அருகதை உள்ளவர்களாயிருக்கின்றார்களே தவிர, உலகத்தில் மற்ற பாகங்களில் எப்படி இருந்தது? எப்படியிருக்கின்றது? என்பவைகளைப் பற்றி கவனிப்பதோ, அல்லது இவ்விஷயங்களின் தன்மை என்ன? இதன் காரணமென்ன? நமது அறிவுக்கு எப்படிப் படுகின்றது? இப்படியிருந்தால் என்ன? என்பது போன்ற சுதந்திர அறிவோ, ஆராய்ச்சியோ கிடையவே கிடையாது என்று தான் சொல்லவேண்டியிருக்கின்றது. இந்தக்காரணமே தான் உலகத்தில் முற்போக்கும், சுதந்திரமும், விடுதலையும் இந்திய நாட்டிற்கு மாத்திரம் தடைப்பட்டிருக்கின்றது என்று சொல்ல வேண்டியும் இருக்கின்றது.

ஆகவே, எந்தக் காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து அனுபவ குண தோஷம் கண்டு, மனதின் சுதந்திரத்தை மறுக்காமல், அடக்காமல், சுயேச்சை யாய் நடக்க வேண்டியது தான் மனித தர்மம் என்றும், அந்தப்படி உலகமே சுயேச்சையாயிருக்க சௌகரியம் இருப்பதுதான் மனித சமூகவிடுதலை என்றும் சொல்லுகின்றோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 13.09.1931

You may also like...

Leave a Reply