திரு. காந்தியார்
திரு. காந்தி அவர்கள் சர்க்காரால் பந்தோபஸ்த்தில் வைக்கப்பட்டு விட்டார்கள். இதனால் திரு. காந்தி ஏமாற்றமடைந்தாரே தவிர எவ்விதத்திலும் திருப்தி அடைந்தார் என்று சொல்லமுடியாது. ஏனெனில் தான் உப்பு சட்டம் மீறுவது என்று கிளம்பியவுடன் தன்னை சர்க்கார் கைது செய்து விடுவார்கள் என்றும் இதனால் சர்க்காருக்கு ஏதோ பிரமாதமான கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் என்றும் கருதி வெளிக் கிளம்பினார். ஆனால் சர்க்காருக்கு இந்த விஷயம் ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டபடியால் அந்தப்படி செய்து விடாமல் திரு. காந்தியாரை அவரது இஷ்டப்படி செய்ய விட்டு, அவரது கொள்கைகளாலும் செய்கைகளாலும் ஏற்படும் பலன்களை உலகம் அறியும்படி செய்து தாங்கள் செய்யப்போகும் காரியத்திற்கு நியாயமும் தேடிக் கொண்டு பிறகு வெகு சாதாரணமாய் பிடித்து பந்தோபஸ்த்தில் வைத்து விட்டார்கள். “காந்தியைப் பிடிப்பார்கள்” “காந்தியைப் பிடிப்பார்கள்” என்று பொது ஜனங்கள் பிரமாதமாய்க் கருதி எதிர் பார்த்துக் கொண்டிருந்த காலத்தி லெல்லாம் பேசாமல் அசரப் போட்டு விட்டு பொசுக்கென்று பிடித்ததாலும், அவரைப் பிடிக்கு முன்பு ஆங்காங்கு பல கலகங்களும் குழப்பங்களும் ஏற்பட்டிருந்த சமயமாயிருந்ததாலும் திரு. காந்தியைப் பிடித்தது அவ்வளவு பெரிய உணர்ச்சி ஏற்படத்தக்க காரியமாய் இல்லாமல் போய் விட்டது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயமென்னவென்றால் திரு. காந்தி 1921-ல் அஹிம்சா தர்ம மந்திரத்துடன் சத்தியாக்கிரகம் ஆரம்பித்து அதனால் பல பல கலகங்களும் உயிர் சேதங்களும் கஷ்ட நஷ்டங்களும் மக்களுக்கு ஏற்பட்டு, அதை சமாளிக்க முடியாமல் திடீரென்று சத்தியாக்கிரகத்தை நிறுத்தி “தோல்வியடைந்து விட்டேன்” என்று அவராலேயே ஒப்புக் கொள்ளப்பட்டு இருந்தும், இந்த அனுபவத்தை வேண்டுமென்றே புரக்கணித்து விட்டு மறு படியும் அதே காரியத்தைச் செய்து அதே பலனை அடைவது என்பது சிறிதும் பாராட்டக் கூடிய காரியமாகாது. ஆனாலும் அவரைப் பொருத்தவரையில் அவருக்கு ஒரு ஓய்வு ஏற்பட்டு விட்டது என்பதைப் பொருத்தவரையில் அவரைப் பாராட்ட வேண்டியதேயாகும்.
நிற்க, திரு. காந்தியார் பந்தோபஸ்த்தில் வைக்கப்பட்ட பிறகும் கூட சில இடத்தில் குழப்பமேற்பட்டு உயிர்ச் சேதங்களும் பொருள் நஷ்டங்களும் ஏற்பட்ட சேதியைக் கேள்விப்படும் போது இம்மாதிரியான காரியங்களில் திரு. காந்தியாருக்கு பங்கு இல்லை என்று சொல்லிவிட முடியாதென்றே சொல்லுவோம். இச்சம்பவங்களில் பொது ஜனங்கள் மீது குற்றம் சொல்ல நமக்கு சிறிதும் மனம் வரவில்லை. ஏனெனில் பொது ஜனங்கள் 1000க்கு 990 பேர்கள் பாமர மக்கள், தங்கள் செய்கைகளின் பலன்களில் சிறிதும் ஞானமில் லாதவர்கள். இதை யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டியதேயாகும். ஆகவே இப்படிப்பட்டவர்கள் காரியத்திற்கு அவர்களையே பொருப்பாளிகளாக்குவது சிறிதும் நியாயமாகாது. அவர்களை நடத்துகின்றவர்களே பொருப்பாளிகளா வார்கள். சர்க்காரின் மீதே முழு குற்றமும் சொல்லுவதும் போதிய சமாதானம் ஆகிவிடாது. ஏனெனில் சர்க்கார் புதிதாக ஒன்றும் செய்து விடவில்லை. இதற்கு முன் இப்பேர்ப்பட்ட கலவரங்கள் ஏற்பட்ட போதெல்லாம் என்ன செய்து வந்தார்களோ அதையே தான் இப்போதும் செய்து இருக்கிறார்கள். இது மாதிரி சந்தர்ப்பங்களில் இனியும் இதையேதான் செய்வார்கள். ஏனெனில் அவர்களது “மிருக பலத்தினிடமும்” “அசுர பலத்தினிடமும்” திரு. “காந்தியின் அஹிம்சா தர்ம” பலம் தலைகாட்ட முடியவில்லை என்பது நிதர்சனமாகி விட்டது.
ஆகவே திரு. காந்தியாரின் ஓய்வுக்காகவும் அவரது தோல்விகளும் தவறுதல்களும் மறைபடுவதற்காகவும் பாமர மக்கள் பலி கொடுக்கப்பட் டார்கள் என்பதைத் தவிர இச்சம்பவங்களுக்கு வேறு பெயர் கொடுக்க நமக்கு ஆதாரம் கிடைக்கவில்லை.
தவிர, சர்க்காரால் சட்டம் மீறுகின்றவர்களை எல்லாம் கைதி செய்யா மல் இருப்பதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போமானால் சர்க்காருக்கு அதிகமாக “தேச பக்தர்களை” உண்டாக்கிவிட இஷ்டமில்லை என்பது ஒன்று. மற்றொன்று என்ன வென்றால் முன் போல் இல்லாமல் இப்போது தண்டிக்கப்படுகின்றவர்களுக்கு ஜெயிலில் சற்று சௌகரியம் முன்னிலும் அதிகமாய் செய்து கொடுக்க வேண்டியிருக்கின்றதாகும். இந்த இரண்டு காரியங்களுக்காகவேதான் தொண்டர்களை அடித்தோ விரட்டியோ துரத்தி விடுகின்றார்கள் என்று கருதுகின்றோம். எது எப்படி இருந்தாலும் தொட்ட தற்கெல்லாம் அடிப்பது, சுட்டு வீழ்த்தி பயமுறுத்துவது என்பது போன்ற காரியங்களை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. நம்மைப் பொருத்த வரை சட்டம் மீறுவது என்பது குற்றமான காரியம் என்பதாக நாம் கருத வில்லை. நமது சுயமரியாதைக்கு விறோதமான காரியங்களுக்கு சட்டம் மீற வேண்டியதுதான், அடிபட வேண்டியதுதான், உயிர் மாள வேண்டியது தான், அதை அடக்க சர்க்கார் தன்னால் ஆனதைப் பார்க்க வேண்டியது தான். ஆனால் இந்த கடைசி ஆயுதம் வீணாய்ப் போகும்படி அனாவசியமாய் பொருப்பற்ற தன்மையில் உபயோகப்படுத்தக் கூடாதென்பதே தான் நமது அபிப்பிராயம். இப்போது நடந்து கொண்டிருக்கும் சுயமரியாதை மகாநாட்டில் மனிதத் தன்மையை மனிதன் பெருவதற்காக அதாவது வழி நடை பாத்தியம், தண்ணீர் பாத்தியம் முதலியவை பெறுவதற்கு என்று ஒரு தீர்மானம் செய்து அதற்கு ஒரு கமிட்டியும் போட்டு 6 மாதத்திற்குள் ஏதாவது ஒரு சத்தியாக் கிரகம் துடங்க வேண்டும் என்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆசைப் படுகின்றோம். மகாநாட்டிற்கு வந்திருக்கும் வாலிபர்களும் வாலிபர் மகா நாட்டில் இதை கவனித்து தக்கது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 11.05.1930