ஓர் மறுப்பு
சுயமரியாதை இயக்கத் தலைவர் திரு. ஈ.வெ. இராமசாமி அவர்கள் கீழ்க்கண்ட மறுப்பை பத்திரிகைகளுக்கு தந்தி மூலம் அனுப்பியிருக்கிறார். அதாவது :-
இருபதாந்தேதி வெளிவந்த சென்னை தினசரிப் பத்திரிகைகளில் ஆயிரக்கணக்கான சுயமரியாதைச் சங்க அங்கத்தினர்கள் உப்பு வரியை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்யப் போவதாக ஒரு செய்தி வெளி வந்திருப் பதைப் பார்த்தேன். யாராவது தன் சொந்த ஹோதாவிலோ அல்லது வேறு ஹோதாவிலோ உப்புச் சட்டத்தை மீறுவதைப் பற்றி எனக்கு ஆட்சேப மில்லை. ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் பெயரால் யாராவது உப்புச் சட்டத்தை மறுப்பு செய்யத் தொடங்கினால் அம்முயற்சி சுயமரியாதை இயக்கத்தாரால் ஆதரிக்கப்பட்டதாகாது. அவ்வியக்கத்தின் முக்கிய அங்கத்தி னர்களில் ஒருவர் என்கின்ற முறையில் எனக்காவது சுயமரியாதை சங்கத் தலைவருக்காவது அதில் சம்பந்தமே கிடையாது. உப்புச் சட்டத்தை மீறுவ தென்பதை இது சமயம் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உப்புச் சட்டத்தை மீறுவதனால் சுயமரியாதை இயக்கத்துக்கு எத்தகைய நன்மையும் உண்டாகாது.
குடி அரசு – அறிக்கை – 23.03.1930