கராச்சிக்குப் போகின்றவர்களே இந்தியாவுக்கு எது வேண்டும்?
இந்த வாரத்தில் இந்தியாவின் விடுதலையை முற்போக்கை முன்னிட்டு என்று தேசபக்தர்கள், தேசீய வாதிகள் என்பவர்கள் இந்தியாவுக்கு இனிச்செய்ய வேண்டிய வேலை என்ன? என்று நிர்ணயிப்பதற்காக கராச்சிக்குப் போகின்றார்கள். அங்கு இந்த மாதம் 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை காங்கிரஸ் நடைபெறப்போகின்றது. அங்கு சென்று இனிமேல் என்ன செய்ய வேண்டியது என்று தீர்மானிப்பதற்கு முன்பதாக இந்தியாவுக்கு வேண்டியது எது என்று தீர்மானிக்க வேண்டியது முக்கியமானதும், அறிவுடைமையானதுமான காரியமாகும்.
பொதுவாக இன்று உலக மக்களில் பெரும்பான்மையோருக்கும் சிறப்பாக இந்தியாவுக்கும் முக்கியமாய் வேண்டியதான காரியங்கள் என்பவை ஆட்சியில் மாறுதலல்லவென்பதையும், இந்திய மக்களின் மன உணர்ச்சியில் மாறுதல் வேண்டியது என்பதையும் நன்றாய் உணர வேண்டும். அவற்றுள்,
1. மக்களுக்குள் பிறவியில் உயர்வு, தாழ்வு உணர்ச்சி மறைதல்.
2. ஆண், பெண் வித்தியாச உணர்ச்சி ஒழிதல்.
3. ஏழை பணக்காரன் என்ற தன்மை உணர்ச்சி அழித்தல்.
ஆகிய இவை மூன்றுமே முக்கியமாகும்.
தேசபக்தர்களே! தேசீய வாதிகளே! இம்மூன்று காரியங்களும் நடை பெற நேற்றைய சுயராஜியத் திட்டத்திலாவது, இன்றைய பூரண சுயேச்சைத் திட்டத்திலாவது எங்காவது ஒரு சிறு இடமாவது பெற்றிருக்கின்றதா? அல்லது இடம்பெற மார்க்கமாவது இருக்கின்றதா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
இதை விட்டுவிட்டு உண்மை உழைப்பாளிகளைப் பார்த்து “ஐயோ காங்கிரசை வைகின்றார்களே” “சுயராஜியத்திற்கு எதிராய் இருக்கின் றார்களே” “பூரண சுயேச்சைக்கு முட்டுக்கட்டை போடுகின்றார்களே” என்று வருத்தப்படுவதால் பயன் என்ன?
சாதாரணமாகக் கோவில்களில் கல்லுருவங்களுக்கு முன்னால் நின்று கொண்டு, தேவாரம், திருவாசகம் முதலியவைகளில் காணப்படும் புராணக் கதையைப் பற்றிய பாடல்களைப் பாடம் பண்ணிக்கொண்டு அருத்தமும், பொருத்தமும் இல்லாமல் கண்களில் நீர் ஒழுகும்வண்ணம் தேம்பித் தேம்பி அழுதுகொண்டு நீட்டி நீட்டிப்பாடுவதும், அதைக் கண்டவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் கூட சில சமையங்களில் அழுகை வருவதும் பலருக்கு மனதும் “பரவச”ப்பட்டு விட்டதாகச் சொல்லிக் கொள்ளுவதும் பக்கத்தில் இருப்பவர்களில் யாராவது ஒருவர் இருவர் இந்தப் பாட்டுகளுக்கு என்ன அருத்தம் என்றாவது இப்படி அழுது கொண்டு பாடுவதால் பயன் என்ன என்றாவது கேட்டு விட்டால் உடனே அழுதுகொண்டு பாடியவருக்கும் கேட்டுக்கொண்டு “பரவச”ப்பட்டிருந்தவருக்கும் பிரமாதமான கோபம் வந்து கேட்டவர்களை “இதன் அருமை அறியாத மூடர்கள், கயவர்கள்” என்பதாகப் பேசி ஏசுவார்களே யல்லாது வேறு ஒரு சமாதானமும் சொல்ல மாட்டார்கள், சொல்லவும் வகை அறியார்கள். அன்றியும், இந்தப்படி பல பேர்கள் கேட்ட பிறகாவது அந்தப் பாட்டுகளின் அர்த்தமென்னவென்றோ, அவற்றை அழுதுகொண்டு பாடவேண்டிய அவசிய மென்னவென்றோ அதனால் ஏற்படும் பயன் என்னவென்றோ ஒருநாளும் சிந்தித்துப் பார்க்கமாட்டார்கள். ஏனெனில்,
இந்தமாதிரி இவர்கள் கோவிலுக்குப்போனதும், அங்கு பாடினதும், அழுததும் எல்லாம் பெரிதும் எப்படியாவது மற்றவர்கள் தங்களைப் பார்த்து மிகுந்த பக்திவான் என்று சொன்னால் போதும் என்கின்ற ஆசையும், வைதீக – பக்தி உலகத்தில் தனக்கு முதல் வரிசையில் இடம் கிடைத்தால் போதும் என்கின்ற லட்சியத்தைத் தவிர வேறு கவலையே அவர்களுக்கு இருக்காது.
அன்றியும், அந்த பக்திக்கும், வைதீகப் பெருமைக்கும், அவர்களு டைய நடவடிக்கைக்கும் சிறிதும் சம்மந்தமும் இருக்காது. அதுபோலவே நமது தேசபக்தர்கள் என்பவர்களும், காங்கிரஸ் பக்தர்கள் என்பவர்களும் சுயராஜியம் அல்லது பூரண சுயேச்சை பக்தர்கள் என்பவர்களும் நமது நாட்டில் மேடைகள் கிடைத்த பக்கம் காங்கிரசைப் பற்றியும், தேசீயத்தைப் பற்றியும் முன்பு யாராவது சொன்ன வார்த்தைகளை – பாட்டுகளைப் பாடம் பண்ணிக்கொண்டு திருப்பித் திருப்பி ஆவேசத்துடன் பார்ப்பவர்கள், கேட்பவர்கள் கை தட்டும்படி உடல் சிலிர்க்க விரைப்பதுமாகச் செய்யுங் காரியங்களைப் பற்றி யாராவது இதன் அருத்தமென்ன? இதற்கு அவசிய மென்ன? இதனால் பயன் யாது? என்பதாகக் கேட்டுவிட்டால் உடனே கோப மும், ஆத்திரமும் வந்து வசைபாடுவதன் மூலம் அடக்கப் பார்ப்பதல்லாமல் யாதொரு சமாதானமும் சொல்லார்கள், சொல்லவும் அறியார்கள். இந்த மாதிரியான காங்கிரசுக்காரர்களைப் பற்றியும், தேச பக்தர், தேசீயவாதிகள் ஆகியவர்களை பற்றியும் 1925ம் வருஷம் முதல் சமீபகாலம்வரை நாம் எழுதின எழுத்துக்களும், பேசின பேச்சுக்களும் அவ்வப்போது பொது ஜனங்கள் அறிந்ததேயாகும்.
அதை அரங்கேற்றாத மேடையே இல்லை என்பதோடு ஊரே இல்லை என்று கூட சொல்லலாம். அதனால் அதுமுதல் சமீப காலம் வரை காங்கிரசுக்கும், தேசீயத்திற்கும் நமது நாட்டில் இருந்த மதிப்பு எவ்வளவு என்பதை இப்போது நாம் எடுத்துக் காட்ட வேண்டிய அவசியமுமில்லை. அதன் பயனற்ற – பரிசுத்தமற்ற நிலையை பலர் உணர்ந்து “அதை கைப் பற்றி பரிசுத்தமாக்கி பயனுண்டாகும்படி” செய்ய பலர் முயற்சித்ததையும் நாம் இப்போது யாருக்கும் ஞாபகப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
ஆகவே இந்த நிலையில் இருந்த காங்கிரசும், தேசீயமும் ஏதோ ஒரு கிளர்ச்சியின் பயனாய் சிலர் சிறை சென்று கஷ்டமடைந்ததின் பயனாய் மறுபடியும் தலையெடுத்து விளம்பரமாக நேரிட்டு மக்களின் கவனத்தை இழுக்கும்படி ஏற்பட்டு விட்டதாலேயே அதற்கு வேறு ஏதாவது ஒரு புதிய யோக்கியதை இப்போது வந்து விட்டதாக கருதிவிட முடியுமா என்று கேட்கின்றோம். அந்தக் காலங்களில் இருந்த காங்கிரசை விட தேசீயத்தை விட இப்போது அவை என்ன புதியதொரு கொள்கைகளை ஏற்படுத்திக் கொண்டுவிட்டது? அல்லது புதியதொரு பயனை உண்டாக்க சக்தியோ யோக்கியதையோ அடைந்து விட்டதா? அல்லது அப்பொழுது அதில் இருந்த மக்களின் யோக்கியதையைவிட இப்போது மாறுதலான மக்கள் அதில் ஏதாவது முன்னிலும் அதிகமாக மிகுந்து விட்டார்களா? என்பனபோன்ற விஷயங்களில் எதில் மாறுதலை யடைந்திருக்கின்றது என்று கேட்கின்றோம். அன்றியும் சமீப கிளர்ச்சியையே அக்காங்கிரசுதான் உண்டாக்கிற்று என்று வைத்துக்கொண்டாலும் இந்தக் கிளர்ச்சிதானாகட்டும், முன் கிளர்ச்சிகளில் இல்லாத முன்வருஷங்களில் இல்லாததாகிய எந்த ஒரு அபாரமான நன்மை யைக் கொண்டு வந்துவிட்டு விட்டது? அல்லது என்ன ஒரு புதிய திட்டத்தையாவது கொண்டுவந்து விட்டது? அல்லது மக்களுக்குள் என்ன விதமான புதிய உணர்ச்சியை உண்டாக்கிற்று? என்று பார்த்தால் “பழைய கருப்பனே கருப்பன்” என்பதல்லாமல் வேறு என்ன சொல்லக்கூடியதாய் இருக்கின்றது என்பது நமக்குப் புலப்படவிடல்லை. இந்த நிலையில் உள்ள காங்கிரசைத்தான் சில மக்களுக்கு கடவுளைக் காப்பாற்றவேண்டிய அவசியம் இருப்பது போல காங்கிரசைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் பலருக்கு ஏற்பட்டுவிட்டது என்பதல்லாமல் அவ் வளவு கஷ்டப்பட்டுக் காங்கிரசைக் காப்பாற்ற அது என்ன ஒரு புதிய தன்மையை அடைந்துவிட்டது என்பது நமக்கு உண்மையிலேயே விளங்கவில்லை. சும்மா, வீணே கோபிக்கின் றவர்களுக்கும் ஆத்திரப் படுகின்றவர்களுக்கும் பயந்து கொண்டு உண்மையை மறைத்துக் கொண்டிருப்பதால் இன்னும் எத்தனை வருஷத் திற்குத்தான் நாம் அதிகமாக வாழ்ந்து விட முடியும்? அல்லது வேறு என்ன பெருமையான பதவியைத்தான் நாம் அடைந்து விட முடியும்? என்பதும் நமக்கு விளங்கவில்லை.
உண்மையிலேயே மனிதன் செய்யப்புகும் பேசப்புகும் காரியங்கள் ஒவ்வொன்றும் அதனால் பொது ஜனங்களுக்கு என்ன பயன் விளையும் என்பதைக்கருதித்தான் செய்யப்பட வேண்டுமே யொழிய, பிறர் என்ன சொல்லுவார்கள்? என்ன நினைப்பார்கள்? என்பதை ஆதாரமாய்க்கொண்ட தாக இருக்கக்கூடாது என்பது நமதபிப்பிராயமாகும். இதை வெகு கால மாகவே சொல்லிவந்திருக்கின்றோம். பிறர் என்ன சொல்லுவார்கள்? நமக்குத் தனித்த முறையில் இதனால் என்ன பலன் உண்டாகும்? என்று யோசித்துச் செய்யும் காரியங்கள் எல்லாம் பெரிதும் வியாபார முறையில் செய்யப்படு பவைகளாகுமேயல்லாமல் பொது நலத்திற்கேற்ற காரியமாகாது என்றுகூட சொல்லுவோம்.
பொதுவாகவே அறிவில்லாத மக்களாலும் சுயநல மக்களாலும் நியாய விறோதமாக லாபத்தை அடைந்து கொண்டிருக்கும் மக்களாலும் காற்றடிக்கும் பக்கம் சாயும் மக்களாலும் எவன் ஒருவன் தனது தொண்டின் பயனாய் பெரிதும் வெறுக்கப்படுகின்றானோ – வையப்படுகின்றானோ, சபிக்கப்படு கின்றானோ பழி சுமத்தி தனிப்பட்ட முறையில் எதிர் பிரசாரம் செய்யப்படு கின்றானோ அவனது தொண்டுதான் பெரும்பாலும் உண்மையானதாகவும் பயனளிக்கக் கூடியதாகவும் இருக்க முடியும் என்பதும் அந்தப்படிக் கில்லாமல் அறிவற்ற மக்களாலும், சுய நலக்காரர்களாலும் அக்கிரமமாய் ஆதிக்கம் பெற்று பலனடைந்து வருபவர்களாலும் பகுத்தறிவற்ற மூட நம்பிக்கைக்காரர்களாலும் சமய சஞ்சீவிகளாலும் எவனொருவன் தனது தொண்டின் பயனாய் பெரிதும் போற்றப்படுகின்றானோ கொண்டாடப் படுகின்றனோ அவனது தொண்டானது பெரிதும் பயனற்றதும் உண்மைக்கும் நியாயத்திற்கும் எதிரானதுமாகவும் இருந்தாக வேண்டும் என்பது நமது தெளிவு. ஆகவே மனிதன் தான் செய்யும் பொதுநல சேவை இன்னது என்ப தாக தீர்மானிக்கும் முன்பாக அது உண்மையாகவே பொது மக்களுக்குப் பயன்பட வேண்டியதாய் இருக்க வேண்டுமென்று கருதுகின்றவனாகவும் அதனால் தனக்கு வரும் எவ்வித கெடுதியையும் பழியையும் தாங்கி அலட்சியமாய்க் கருதக்கூடியவனாகவும் இருக்க வேண்டியதோடு அத் தொண்டின் பயனாய் அவன் சுயநலக்காரர்களால் மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்களால் அக்கிரமமாய் ஆதிக்கம் செலுத்தி யணுபவிப்பவர்களால் அறிவற்ற பாமர மக்களால் போற்றப்படாமல் புகழப்படாமல் இருக்கின் றோமா என்றும் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே அந்தமுறையில் பார்ப்பதானால் இந்தியாவுக்கு வேண்டிய முக்கியமான காரியம் எது என்று முதலில் சொல்லப்பட்ட மூன்று காரியங்களையும் செய்யப்பிரவேசித்த ஒரு ஸ்தாபனத்திற்கோ தனிமனிதனுக்கோ ஒருக்காலும் பொதுஜன ஆதரவும் ஆமோதிப்பும் விருப்பமும் கிடைக்கவே கிடைக்காது. அன்றியும் அதில் பிரவேசிப்பதால் அனேக கஷ்டங்களுக்கும், நஷ்டங்களுக்கும் ஆளாக வேண்டியதாகவும் ஏற்படும். அதனாலேயே தான் அப்படிப்பட்ட தொண்டு கள் நமது நாட்டில் சிலராலாவது ஒப்புக்கொள்ள பட்டாலும் வெளியில் தலைகாட்டுவதென்பதே மிக்க அறிதாய் விடுகின்றன. ஒன்று இரண்டு தலை காட்டினாலும் அவை அடிக்கடி மறைந்தும் போகின்றன. ஏதாவது பலத்தால் அத்தொண்டுகள் “சற்று நிலை கொள்ளஆரம்பித்து விட்டாலோ” அவை அனேக கஷ்டங்களுக்கும் நஷ்டங்களுக்கும் ஆளாக வேண்டிய தாயிருக்கின்றன.
ஆகையால் இன்று சுயநலக் காரணமாகவோ மக்களின் புகழ்ச்சி பாராட்டுதல் காரணமாகவோ அல்லாமல் உண்மையான சுயநலமற்ற பொதுத் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற கவலையோ ஆசையோ உடைய வர்கள் பொதுஜன எதிர்ப்புக்கும் வசவுக்கும் பழிப்புக்கும் சற்றும் பின் வாங்காது துணிந்து கொண்டு தாழ்த்தப்பட்டவர்கள் மீது உயர்ந்த ஜாதியார் என்னப்பட்டவர்கள் செலுத்தும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்தி யிருக்கும் நிர்பந்தத்தையும் பெண்களின் மீது ஆண்கள் செலுத்தும் ஆதிக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிபந்தனைகளையும் செல்வவான்கள் என்பவர்களால் மற்ற மக்கள் சமூகத்திற்கு ஏற்படும் கொடுமைகளையும், முறைகளையும் அடியோடு ஒழிக்க வகைதேடவேண்டியது கடமையாகும் என்பதை உணர்ந்து அத்தொண்டில் இறங்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளு கின்றோம். இந்தத்துறையில் செய்ய வேண்டிய வேலை முழுவதும் மற்றும் அவ்வேலைத் தத்துவத்துக்கு தடையாயிருப்பவைகளைத் தகர்த்தெறிய வேண்டியகாரியங்கள் முழுவதும் பெரிதும் நமது மக்களி டையே செய்யப்பட வேண்டியிருப்பதால் நமது மக்களே அதுவும் மேல் கண்ட தத்துவங்களுக்கு பலவழிகளிலும் எதிரான உணர்ச்சியுடைய மக்களே கூடி இருக்கும்படியான காங்கிரசு என்னும் மகாசபையில் அது எவ்வளவு உண்மையானது என்று வைத்துக்கொண்டாலும் இத்தத்துவங்களை எடுத்துச்சொல்லி அதை ஒப்புக் கொள்ளச் செய்வது என்பது லேசான காரியமென்று நமக்குத் தோன்ற வில்லை. அன்றியும் காங்கிரசு என்பதனானது சுயராஜ்யம் பெற ஏற்பட்டதே ஒழிய சமதர்மம் பெற ஏற்பட்டதல்ல என்பதை அதுவே ஒப்புக் கொண்டிருக்கிறது. எந்த முறையில் என்றால் “சமதர்மம் என்பது சுயராஜியம் வந்தபின் தானாகவே வந்துவிடும்” அல்லது “பிறகு உற்பத்தி செய்து கொள்ள லாம்” என்று சொல்லி வருவதின் மூலமே தெரியலாம். “சுயராஜ்யம் பெற்றாலே சமதர்மம் ஏற்பட்டு விடும்” என்று சொல்லுவது அறியாமை அல்லது உண்மையை மறைத்துச் சொல்லுவது என்றுதான் சொல்லவேண்டி யிருக்கின்றது. ஏனெனில் சுயராஜியம் பெற்ற தேசங்களில் எல்லாம் பூரண சுயேச்சை பெற்ற தனி அரசு நாடுகளிலெல்லாம் கூட சமதர்மம் இல்லாமலும், சமதர்மத்திற்கு பாடுபடுவதால் அதன் எதிரிகள் சுயராஜியம் இல்லாவிட்டால் கூட பாதகமில்லை, சமதர்மம் மாத்திரம் கூடாது என்று கிளர்ச்சி செய்வதும் நாம் அறியாததல்ல. ஆகவே சுயராஜியத்திற்கும் சம தர்மத்திற்கும் சம்பந்த மில்லை என்பதை சம தர்மத்தில் லக்ஷியமுள்ளவர்கள் நன்றாய் உணர வேண்டுமாய் வலியுறுத்துகின்றோம். அன்றியும் சுயராஜியத்தின் திட்டமே வேறு என்பதையும் அதனால் பயனடைகின்றவர்கள் வேறு என்பதையும் நன்றாய் யோசித்து உணரவேண்டும். சுயராஜ்யம் கிடைத்தால் சமதர்மம் கிடைத்துவிடும் என்று நம்புகின்றவர்களும், சமதர்மமில்லாமல் சுயராஜ்யம் கிடைத்தால் மக்கள் நலமடைவார்கள் என்று எண்ணுகிறவர்களும் கண்டிப்பாய் ஏமாந்து போவார்கள் என்பதை உறுதியாய்ச் சொல்லுகின்றோம்.
ஆகவே இப்பொழுது ஏன் இதை எடுத்துக்காட்டுகின்றோம் என்று கேட்டால் இந்திய தேசீயக்காங்கிரஸ் என்னும் கூட்டம் இம்மாதம் 27தேதி கராச்சியில் கூடப் போவதாலும் இந்திய மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கின்ற பொதுநல நோக்கமுடைய மக்கள் ஆயிரக்கணக்காக அங்கு கூடப்போவதாலும் பொதுநலத்திற்காக என்று எவ்வித தியாகமும் செய்யத் தயாராகவே இனிச் செய்யவேண்டிய வேலைக்கு திட்டங்கள் வகுக்கப் போகின்றபடியாலும் அங்கு இதற்கு யேதாவது வகை செய்ய முடியுமா என்பதை உணர்ந்து, கூடுமானால் செய்யவோ கூடாவிட்டால் அதன் சம்மந்தத்தில் இருந்து விலகவோ உண்மையாளருக்கு உறுதியளிக்கக்கூடும் என்கின்ற ஆசையினாலேயாகும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 22.03.1931