ஜனாப் அலாவுதீன் ராவுத்தர்
தென்னிந்திய நல உரிமைச் சங்க உதவித் தலைவரும், மதுரை முனிசிபல் கௌன்சிலரும், நமது நண்பருமான ஜனாப் கா.ம. அலாவுதீன் ராவுத்தரவர்கள் 5.5.31ந் தேதி காலை 7மணிக்கு தமது 55 வது வயதில் முடிவு எய்திய செய்தி கேட்டு நாம் பெரிதும் வருந்துகின்றோம். ஜனாப் ராவுத் தரவர்கள் பிராமணரல்லாதாரின் முன்னேற்றத்தில் அதிகக் கவலை பூண்டு, மிக்க அக்கரையுடன் தொண்டாற்றியவராவர். ஜஸ்டிஸ் கக்ஷி தோல்வி யடைந்த பிறகு மதுரையில் கூட்டப்பட்ட பார்ப்பனரல்லாதார் மகா நாட்டின் போது மிக்க ஊக்கத்துடன் ஒத்துழைத்து மகாநாட்டை சிறப்புர நடத்திவைத்த பெரியார்களில் இவரும் ஒருவர் ஆவார். இவர் காலஞ்சென்றது எல்லா பிராமணரல்லாதார்களுக்கும், சிறப்பாக மதுரை பிராமணரல்லாதாருக்கும் ஓர் பெரிய நஷ்டத்தை விளைவித்ததுடன் அவர்களின் முன்னேற்றத்தில் மிக்க கவலையுடன் அரும்பாடுபட்டு வந்த ஒரு உற்ற நண்பரை இழந்து விட்டார் களெனக் கூறுவது மிகையாகாது. நமது அனுதாபத்தை அன்னாரின் குடும்பத் தாருக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – இரங்கல் செய்தி – 17.05.1931