பட்ஜட் என்னும் வரவு செலவு திட்டம்
சமீபத்தில் சென்னை சட்ட சபையில் நிகழப்போகும் பட்ஜட் வரவு செலவு திட்ட நடவடிக்கையில் மூன்று காரியம் செய்ய பணம் ஒதுக்கி வைக்கவேண்டும் என்னும் விஷயத்தில் கவலை எடுத்து அனுகூலப் படுத்திக் கொடுக்க வேண்டுமாய் சட்டசபை அங்கத்தினர்களைக் கேட்டுக் கொள்ளுகின்றோம். அதாவது,
1. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு புஸ்தகம் துணி சாப்பாடு ஆகியவைகள் சாக்கார் பணத்திலிருந்து செலவு செய்து கல்வி கற்றுக் கொடுப்பது.
2. மாகாணத்தில் சென்னையை விட்டு வெளியில் தமிழ்நாட்டில் ஒன்றும் ஆந்திர நாட்டில் ஒன்றுமாக விதவைகள் ஆச்சிரமம் வைத்து அவர்களுக்கு சௌகரியப்பட்ட பெற்றார் உற்றார்கள் இடமிருந்து செலவுக்கு துகை பெற்றும் முடியாதவர்களானால் சர்க்காரிலிருந்தே செலவு செய்தும் சாப்பாடு துணி கொடுத்துக் கல்வியோ தொழிலோ கற்றுக் கொடுத்து ஜீவனத்திற்கு வழியேற்படுத்திக் கொடுப்பது.
3. இப்போது மது விலக்குப் பிரசாரம் செய்வதுபோலவே சர்க்கார் செலவில் மாகாணமெங்கும் தீண்டாமை விலக்குப் பிரசாரம் செய்வது. இம் மூன்று காரியங்களுக்கும் பணம் ஒதுக்கிவைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
ஆகவே சட்டசபை அங்கத்தினர்களும் மந்திரிகளுமான கனவான் கள் இவ்விஷயங்களை கவனிப்பார்களாக.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 09.03.1930