காந்திப் போர்
இந்தியாவில் இப்போது எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கும் படியானதும் ஏதோ ஒரு பெரிய கிளர்ச்சியை உண்டு பண்ணப் போகின்றது என்று பாமர மக்களுக்குள் பிரமாதமாகப் பிரசாரம் செய்யப் படுவதற்கு உபயோகித்துக் கொண்டிருப்பதும், திரு. “காந்தியின் கடைசிப் போர்” என்று சொல்லப்படும் சத்தியாக்கிரக சட்ட மறுப்பு கிளர்ச்சியேயாகும். இந்த சத்தியாக்கிரக சட்ட மறுப்பு என்பதை உப்புக் காய்ச்சுவதன் மூலமும் உப்பளத் தில் இருந்து உப்பை அள்ளிக் கொண்டு போவதன் மூலமும் செய்து பார்ப் பதாக சொல்லிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
இம்மாதிரி திரு. காந்தியவர்கள் செய்வது இந்தியாவில் இது இரண்டாவது தடவையாகும். அதாவது, இதுபோலவே 1920, 21 – ம் வருஷத் தில் ஒரு தடவை பஞ்சாப் அநீதியைச் சொல்லிக் கொண்டு மது பானத்தின் பேரால் ஒரு கோடி ரூபாய் கை முதலாக வைத்து கள்ளுக்கடை மறியல் மூலமாய் ஒரு சட்ட மருப்பும் சத்தியாக்கிரகமும் தொடங்கப்பட்டு சுமார் நாலு மாத காலம் வெகு மும்முரமாய் நடந்தது. அதனால் சுமார் 20, 30 ஆயிரம் பேர்கள் வரை சிறைசென்று சிறைவாசமும் செய்தார்கள். அப்படி இருக்கை யில் திடீரென்று அந்தச் சட்ட மருப்பு நிருத்தப்பட்டது. திரு. காந்தியும் அது சமயம் ஒரு பார்ப்பனரின் சூட்சியால் சிறையிலடைபட நேர்ந்தது. பிறகு படித்த கூட்டத்தாரால் அவ்வியக்கத்தையும் அவ்வுணர்ச்சிகளையும் அடி யோடு நசுக்கப்பட்டு விட்டது. இதை யாவரும் அறிவார்கள். அது முதல் கொண்டு திரு. காந்தியார் விடுதலையாகி வெளியில் வந்து இந்த 5, 6 வருஷ காலமாய் அவருக்கு இன்னதுதான் செய்வது என்று தோன்றாமல் கதரின் பெயரைச் சொல்லி ஏராளமாக பணம் வசூலித்து அந்த பணத்தினால் தன்னு டன் கூட இருக்கும் சிஷ்யர்களையும் செல்வாக்குகளையும் கொண்டு அரசியல் புரட்டர்களின் இஷ்டப்படி யெல்லாம் அரசியல் இயக்கத்தை அவர் களுக்கு இணங்கச் செய்து கொடுத்துக் கொண்டு அரசியலில் தனக்கென ஒரு கொள்கையும் இல்லாமல் சமயத்திற்குத் தகுந்தபடியெல்லாம் பேசியும் நடந்தும் கொண்டு வந்தார். இதனாலேயே மனப்பூர்வமாய் அவரிடம் பக்திகொண்டு சுயநலமில்லாமல் உழைத்து வந்தவர்கள் பலர் அவரை விட்டு நீங்கினார்கள். இவைகளைப் பற்றி விவர விவரமாக நாம் அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கின்றோமாதலால் இப்போது அவைகளை விவரிக்க வில்லை.
நமது நிலை
நிற்க, நம்மைப் பொருத்தவரை அந்தக் காலத்தில் திரு. காந்தியிடம் நமக்கு இருந்த பக்தியும் கண்மூடித்தனமாய் குடும்ப சகிதமாய் அவரைப் பின் பற்றி வந்த தன்மையும் பிரருக்கு விளக்கிக்காட்டித்தான் தெரியச் செய்ய வேண்டியிருக்குமென்று நாம் நினைக்கவில்லை.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 1922 ´ சத்தியாக்கிரகம் மும்முரமாய் நடக்கும்போது பம்பாயில் சர் சங்கரன் நாயர் தலைமையில் கூட்டப்பட்ட வட்ட மேஜை (ரவுண்டேபிள்) மகாநாட்டின்போது திரு காந்திய வர்கள் பேசிய பேச்சிலிருந்தே நமது விஷயத்தை அறிந்து கொள்ளலாம்.
அதாவது “சத்தியாக்கிரகத்தை நிறுத்துவதென்றால் அது என்னு டைய கையில் இல்லை, ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்மணிகளைக் கேட்டுச் செய்யவேண்டிய காரியமாகும்” என்பதாக சொல்லி இருக்கிறார். மற்றும் அந்த சத்தியாக்கிரகத்திலும் சட்டமறுப்பிலும் நமக்கு இருந்த நம்பிக்கைகளைப் பற்றியும் அதில் நமக்கிருந்த துணிவுகளைப் பற்றியும் நாம் வாசகர்களுக்கு விவரித்துச் சொல்ல வேண்டியதில்லை என்றே கருது கின்றோம். அதையும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சர்க்காரின் அடக்கு முரைக்கு நாம் ஆளாக வேண்டியிருந்த அய்ந்து முக்கிய சந்தர்ப்பங்களிலும் வீடு சோதனை போடப்பட்ட பல சமயங்களிலும் மற்றும் 10 ´ம் 20 ´ம் தண்டிக்கக்கூடிய வழக்குகளிலும் நாம் எதிர் வழக்காட அடியோடு மறுத்து விட்டதன் மூலமும் பல தடவை சிறை சென்றதன் மூலமும் “தண்டிப்பதால் இவன் பயப்பட மாட்டான்” என்று கருதி இரண் டொரு தடவை சர்க்காரரே நம்மீது கொண்டு வந்த வழக்குகளை திருப்பி வாப்பீஸ் வாங்கிக் கொண்டதன் மூலமும் நன்றாய் உணரலாம். கடைசியாய் சொல்ல வேண்டுமானால் தமிழ்நாடு முழுமைக்கும் ஈரோட்டில் போடப்பட்ட 144 வது பிரிவு உத்திரவு மாத்திரம் தான் 50, 60 பேர்கள் கைதியான பின் ஆயிரக்கணக்கான மக்கள் சட்டத்தை மீறினதால் செல்லுபடி அற்றதாகிற்று. அதாவது அந்த உத்திரவு மீறினவர்களை சர்க்கார் அரஸ்ட் செய்யாமல் விட்டு விட்டார்கள். ஆகவே இவ்வளவு தூரம் நாம் கண்மூடித்தனமாய் திரு. காந் தியை பின்பற்றியதும் எதற்கும் தயாராய் இருந்து கஷ்ட நஷ்டங்களை அனுப விக்கத் துணிந்ததும் எதற்காக என்பதை இந்த சமயம் வாசகர்கள் சற்று கவனித்துப் பார்க்க வேண்டும். இதன்மூலம் நாம் ஏதாவது உத்தியோகத் தையோ பெருமையையோ வரும்படியையோ வயிற்றுப் பிழைப்பையோ அல்லது ஏதாவது ஒரு விதமாய் இதன் பேரால் வாழலாம் என்றோ உத்தேசித்து இதில் இறங்கினோமா? அல்லது தேசத்தின் நன்மையையும் கஷ்டப்பட்டும் மக்களின் பரிதாபத்தை ஒழிப்பதையும் எதிர்பார்த்து இறங்கினோமா? என்பதை வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சாதாரணமாக நாம் இத்தொண்டில் ஈடுபடும்போது ஈரோட்டில் உள்ள பிரபல வியாபாரிகளில் ஒருவனாகவும், முனிசிபல் சேர்மனாகவும், தாலூக்கா ஜில்லா போர்டுகளில் குறிப்பான அங்கத்தினராகவும், தேவஸ்தானக் கமிட்டி ப்ரசிடெண்டாகவும் மற்றும் ஜில்லாவில் உள்ள பொது ஸ்தாபனங்களில் எல்லாம் அனேகமாய் ஒவ்வொன்றிலும் தலைவனாகவும் அல்லது காரிய தரிசியாகவும் அல்லது நிர்வாக மெம்பராகவும் இருந்து வந்தோம். இந்நிலை யில் இருக்கும்போது தான் திரு. சி. ராஜகோபாலாச்சாரியாருடையவும் திரு. வரதராஜலுவுடையவும் நட்பினால் அவ்வேலைகளை திடீரென்று ராஜிநாமா கொடுத்து விட்டு சென்னைக்குச் சென்றோம். இது இப்போதைய நமது நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் நன்றாய் தெரிந்த விஷயமாகும். ஆகவே நாம் இந்த சேவையில் இறங்கினது ஜீவனத்தையோ உத்தியோகத்தையோ பெருமையையோ வயிற்றுப் பிழைப்பையோ வாழ்க்கையையோ உத்தேசித்து இறங்கினோமா அல்லது உண்மையில் இறங்கினோமா? என்பதை யோசித்து முடிவு செய்து கொள்ள வாசகர்களுக்கே விட்டு விடுகின்றோம்.
இதை ஏன் சொல்லுகிறோம்
நிற்க, நாம் ஏன் இதை இப்போது சொல்ல வந்தோமென்றால் “தேசத்தில் இது சமயம் நடக்கும் இவ்வளவு தீவிரக் கிளர்ச்சியில் மகாத்மா முதல் அனேக தேச பக்தர்கள் ஜெயிலுக்கு போய்க் கொண்டிருக்கையில் நீ இதில் சேராமல் இருப்பது “சரியா” என்று நமக்கே பல நண்பர்கள் எழுதி இருப்பதாலும் மற்றும் சர்க்காரினுடையவோ அல்லது மந்திரிகளினு டையவோ ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்களினுடையவோ தயவில் நாம் ஏதோ சுயநலம் கருதி சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு வகுப்பு பூசல்களைக் கிளப்பிவிட்டு தேச நன்மைக்கு இடையூறு செய்வதாக சிலர் விஷமப் பிரசாரம் செய்வதாக தெரிய வருவதாலும் அவைக ளுக்கு சமாதானம் சொல்ல இவற்றை முதலில் எழுதிவிட வேண்டியதா கின்றது. ஏனெனில் பொது ஜனங்கள் என்பவர்கள் பெரிதும் நமது நாட்டில் பாமர மக்களாகவே இருக்கின்றார்கள். இன்னமும் நல்லது கெட்டது இன்னது என்று அறிய முடியாத நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் (ஏனெனில் 100 – க்கு 10 பேருக்குத்தான் கையெழுத்துப் போடத் தெரியும்) ஆதலால் இவைகள் சில சமயங்களில் நமது இஷ்டத்திற்கு விரோதமாகவே சொல்ல வேண்டியதாகிவிடுகின்றது. அன்றியும் நாம் கீழே சொல்லப் போகும் விஷயங்களுக்கும் இவைகளை முதலில் சொல்லிவிட்டால் தான் வாசகர்கள் ஏமாறாமல் உண்மையை உணரக்கூடும் என்றும் கருதியே சொன்னோம்.
போரில் நம்பிக்கை இல்லை
நிற்க, முதலாவதாக காந்திப்போர் என்பதில் எனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை. அதாவது முதலாவது இதன் கொள்கைகளிடமும் நடத்துகின்ற தலைவர்களின் சொந்த கொள்கைகளிடமும் சில தலைவர்களின் நல்ல எண்ணத்தினிடமும் நமக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில் இவர்கள் தேசத்தை விட தேச மக்களை விடத் தங்களின் நிலையையும் தங்களின் அந்தஸ்தையும் கவுரவத்தையும் பிரதானமாய்க் கருதி இருப்பவர்களும் சிலர் தங்கள் மதத்தின் ஆதிக்கத்தையும் வருணாச்சிரம தரும ஆதிக்கத்தையும் தங்கள் வகுப்பின் ஆதிக்கத்தையும் சிலர் பிரதானமாய்க் கருதி இருப்பவர் களுமாய் இருக்கின்றார்கள் என்று நாம் நினைக்கின்றோம். அன்றியும் இந்தியாவின் இன்றைய நிலைக்கு பூரண சுயேச்சை வேண்டு மானால் – விடுதலை வேண்டுமானால் சுயராஜ்யம் என்பது வேண்டுமானால் வெள்ளைக் காரர் சுயநல ஆட்சி ஒழிய வேண்டுமானால் முதலில் மத ஆதிக்கமும் அதன்குருட்டு நம்பிக்கைகளும் ஒழிய வேண்டும். தீண்டாமை ஒழிய வேண்டும். பெண்கள் கட்டுப்பாடு ஒழிய வேண்டும். ஜாதி ஒழிய வேண்டும். பார்ப்பனர் ஆதிக்கம் அடியோடு ஒழிய வேண்டும். முதலாளித் தன்மை ஒழிய வேண்டும். இவ்வளவும் நடந்த பிறகுதான் வெள்ளைக்கார கொடுங் கோன்மை (தானாய் ஒழிந்து விடும். அல்லது) நம்மால் ஒழிக்கப்பட வேண்டும். ஒழிக்கப்படவும் முடியும் என்பது நமது முடிவு.
அப்படிக்கில்லாமல் இப்போது வெள்ளைக்கார ஆட்சியைப் பற்றி யோ இந்தியாவின் தரித்திரத்தைப் பற்றியோ பேசுவதென்பது வெரும் (ஹம்பக்) மோசடி அல்லது மடமையான காரியமாகும் என்பதுதான் நமது முடிவு. ஏனெனில்,
இந்தியா சரித்திரம்
இந்தியாவானது நமது புத்திக்கும் மனதிற்கும் எட்டக்கூடிய காலத்தி லிருந்து ஒரு நாளாவது யோக்கியமான அரசாட்சியில் இருந்ததாக இதுவரை எந்த சரித்திரத்திலிருந்தும் அறியக் கூடவே இல்லை. பாரத ராமாயண காலம் என்று சொல்லப்பட்ட கால ஆட்சியும் சேர, சோழ, பாண்டிய காலம் என்று சொல்லப்பட்ட கால ஆட்சியும் மகமதியர், நாயுடு, மராட்டியர் ஆகியவர்கள் காலம் என்று சொல்லப்பட்ட கால ஆட்சியும் ஆகிய இவைகளில் எதை எடுத்துக் கொண்டாலும் யோக்கியமான ஆட்சி நடந்ததென்று பெரும் பான்மை யோராலாவது ஒப்புக் கொள்ளக் கூடிய சரித்திரமோ உண்மையோ இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.
எந்தக் காலத்திலும் பாமர மக்களை ஏய்க்க ஒவ்வொரு கூட்டத்தார் அவ்வப்போது தோன்றி தங்களது முரட்டு பலத்தையும், தந்திரங்களையும், வஞ்சகங்களையும் கொண்டு ஒவ்வொரு வழியில் கிளர்ச்சி செய்து ஆதிக்கமும் சுயநலமும் பெற்றிருப்பதாகவே சரித்திரங்களில் மிகுதியும் காணப்படுகிறது. எல்லா தேசங்களை விட, “கலை ஞானத்தில்” சிறந்ததாகச் சொல்லப்படும் இந்தியாவிற்கு அதன் பழய கலைகளையும், ஆட்சிகளையும் பார்த்தால் இக்காலத்தில் காட்டுமிராண்டிகள் என்பவர்களிடத்திலும் காண முடியாததும் வெரும் கொள்ளைக் கூட்டத்தாரிடத்திலும் காணமுடியாதது மான செய்திகளைக் கொண்டதாகவே இருக்கிறது.
வலுத்தவன் இளைத்தவனை ஆளுவான்
எது எப்படி இருந்தாலும் “இளைத்ததை வலுத்தது அடக்கி ஆண்டு அனுபவித்து வரும்” என்னும் இயற்கைச் சட்டம் யாராலும் எந்தக் கிளர்ச்சி யாலும் ஒரு காலமும் மாற்றிவிட முடியாதென்பதே நமது முடிவான அபிப்பிராயமாகும். ஆதலால் இளைத்தவன் தன்னை வலுத்தவனாக்கிக் கொள்ள முயற்சி செய்து கொண்டால் மாத்திரம் வெற்றி பெறலாமே யொழிய மற்றபடி வெரும் கிளர்ச்சியினால் வலுத்தவனை வென்று விட முடியவே முடியாது.
நமது நாடு
நடு நிலையில் நின்று பேசுவோமேயானால் இன்றைய தினம் கல்வி, அறிவு, செல்வம், ஆயுள், தொழில், மனிதத் தன்மை, மானம், தைரியம், முன்னேற்றம், பொது நலம் முதலியவைகளில் மற்றெந்த நாட்டாரையும் விட நமது நாடு மிகுதியும் வலுவிழந்திருக்கின்றது.
உதாரணமாக இந்தியாவில் 100க்கு 10 பேர் படித்திருக்கிறார்கள்.
மேல் நாட்டில் 100 க்கு 90 பேர் படித்திருக்கிறார்கள்.
இந்தியர்களின் அறிவு அவர்களது “தலைவிதியில்” அடங்கி இருக்கின்றது.
மேல்நாட்டார் அறிவு அவர்களது விடா முயற்சியால் தூண்டப்பட்டு வருகின்றது.
இந்தியர்களின் ஆயுள் சராசரி 25 வயது.
மேல் நாட்டாரின் ஆயுள் சராசரி 50 வயது.
இந்தியர் வருவாய் ஆள் 1 க்கு சராசரி தினம் 0 – 2 – 8 பை.
மேல் நாட்டார் வருவாய் ஆள் ஒன்றுக்கு சராசரி தினம் 2 – 8 – 0 அணா.
இந்தியாவில் புதுப்பிக்கப்படும் தேசீயத் தொழிலின் வரும்படி ஒரு மணிக்கு 0 – 0 – 1 தம்படி (இராட்டினத்தில் 1 மணிக்கு ஒரு காசு) கிடைக்கின்றது.
மேல் நாட்டில் புதுப்பிக்கப்படும் தொழில்களில் ஒரு மணிக்கு ஒரு ரூபாய் கிடைக்கின்றது.
இந்தியாவில் 100க்கு 93 பேர்கள் இழிமக்கள்“சூத்திரர்” சண்டாளர் (தீண்டார்) மிலேச்சர் (துலுக்கர்) நீச்சர் (கிறிஸ்தவர்) முதலானவர்களாக இருக் கின்றார்கள்.
மேல் நாட்டில் எல்லோரும் சரிநிகர் சமானமான மனிதர்களாக இருக் கின்றார்கள்.
இந்தியாவில் தைரியம் ஒரு துப்பாக்கி சத்தம் கேட்டால் குழந்தை களுக்கு காய்ச்சல் வந்து விடுகின்றது.
மேல் நாட்டில் குழந்தைகள் ஆகாயத்திலிருந்து வெடிகுண்டு எறிய ஆசைப்படுகின்றது.
இந்தியாவின் முன்னேற்றம் “ராம ராஜ்ஜியத்திற்கும் தொல்காப்பிய காலத்திற்கும்” ஆசைப்படுகிறது.
மேல் நாட்டின் முன்னேற்றம் அரசாட்சியையே வேண்டாமென் கின்றது.
இந்தியாவின் ஆராய்ச்சி சாக்கடை நீரைக் குடித்து தலையிலும் தெளித்துக் கொண்டால் வியாதி சவுக்கியமாகி மோட்ச லோகத்திற்குப் போக லாமென்கின்றது.
மேல் நாட்டு ஆராய்ச்சி இமயமலை உச்சிக்கும் சந்திர மண்டலத்துக் கும் போக முயர்ச்சிக்கின்றது. 10,000 மைல் 15,000 மையில் தூரம் தந்தியில் உருவம் போகின்றது.
இந்தியர்களின் தர்மம் வருஷம் பல கோடிக்கணக்கான பொருளை கோவில் கட்டவும் கும்பாபிஷேகம் செய்யவும் சாமிக்குப் பூசை செய்யவும் உற்சவம் செய்யவும் வாகனம் நகை செய்யவும் சோம்பேரிகளுக்கும் அயோக்கியர்களுக்கும் பிழைப்பை ஏற்படுத்தவும் செலவு செய்யப்படு கின்றது.
மேல் நாட்டார் தர்மம் படிப்புக்கும் தொழிலுக்கும் கொடிய வியாதியின் சிகிச்சைக்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஆராய்ச்சி செய்து அற்புதம் கண்டு பிடிப்பதற்கும் “இழி மக்களை” சரிசமான மனிதனாவதற்கு எல்லாம் மக்களும் சம இன்பமடைவதற்கும் செலவு செய்யப்படுகின்றது.
இன்னும் இப்படியே நூத்துக்கணக்காக சொல்லிக் கொண்டே போகலாம்.
இவைகளுக்கு யார் பொருப்பாளி? வெள்ளைக்கார அரசாங்கமா? அல்லது நமது தேசீயமா? என்று தான் கேட்கின்றோம்.
மேலும் இவைகளில் அனேக விஷயங்கள் இந்தியாவில் இன்று மாத்திரமல்லாமல் நம் அறிவுக்கு எட்டாத சரித்திர காலம் முதலாகவே இப்படியே தானே இருந்து வருகின்றது. அன்றியும் இந்த நிலைமை தானே இந்தியாவுக்கு அடிக்கடி மனிதத் தன்மைக்கு விரோதமான கொடுங் கோன்மை ஆட்சியையும் அன்னிய ஆட்சியையும் உலகிலுள்ள மற்று யாவருக்கும் இளைத்த தன்மையையும் அளித்துக் கொண்டே வந்தது, வருகிறது.
இதற்கு என்ன பரிகாரம்?
இந்த நிலையை மாற்ற இதுவரையில் யார் என்ன முயர்ச்சி செய்தார் கள்? இத்துறைகளில் யார் என்ன முன்னேற்றம் அடைந்தார்கள்? அல்லது அடைந்து வருகிறார்கள்? இதுதான் போகட்டும் என்றாலோ இன்றைய தினம் நடைபெரும் “காந்தி போரை” யாவது எடுத்துக் கொண்டால் அது மேற் சொன்னவைகளில் ஏதாவது ஒரு காரியத்தை மாற்ற உதவுமா என்று பந்தயம் கட்டி கேழ்க்கின்றோம். இந்தியாவுக்கு இன்றையத்தினம் உண்மையாய்ச் செய்ய வேண்டிய தொண்டு உப்புக் காச்சுவதா? உப்பு களங்களில் உப்பை வாரிக் கொண்டு வருவதா? அதற்காக மக்கள் ஜெயிலுக்கு போவதா? என்பதை வாசகர்களே நீங்கள் நடு நிலையில் இருந்து நன்றாய் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.
வைசிராய் சம்பளம்
இந்தியாவின் செல்வம் ஏழைகளின் வரிப்பணம் ஆகியவை “வெள்ளைக்காரர்கள் கொள்ளைஅடிப்பதற்கு”த் தகுந்த அளவுப்படி ஏன்? அதற்கு மேலாகவும் கூட இந்திய தேசியவாதிகள் என்பவர்கள் கொள்ளை அடிப்பதில்லையா? வெள்ளைக்காரர்கள் கொள்ளைக்கும் இந்தியர்களே ஆதாரமாய் இருந்து அவர்களுக்கு உளவு சொல்லிக் கொடுத்து அவர் களிடமிருந்து பங்கு வாங்குவதில்லையா? என்பதை யோசித்து பாருங் கள். இதற்கு வெள்ளைக்காரன் என்ன செய்வான்.“எனக்கு வேண்டாம்” என்று சொல்லுவானா. திரு. காந்திக்கு வைசிராய் சம்பளமும் கவர்னர் சம்பளமும் பார்த்து சகிக்க முடியவில்லையாம். சத்தியாக்கிரகத்திற்கு இதை ஒரு காரண மாய் எழுதி இருக்கிறார். இந்திய தேசீய வாதிகளும் காங்கிரஸ் தலைவர் களுமான திருவாளர்கள் ஸின்ஹா சம்பளமும் சீனிவாச சாஸ்திரி சம்பளமும் அபிபுல்லா சம்பளமும் சிவசாமி அய்யர் சம்பளமும் சர்.சி. பி. அய்யர் சம்பளமும், கிருஷ்ணன் நாயர் சம்பளமும் வெகு தர்மமானதும் நாணைய மானதுமான சம்பளமா என்று கேழ்க்கிறோம். இவர்களுக்கு இந்த சம்பளத்தை ஏற்படுத்தினவர்கள் இந்த திரு காந்தியும் அவர் கொஞ்சி விளையாடும் திரு. தேசீய காங்கிரசும் அல்லவா என்று கேழ்க்கின்றோம். 1920 ம் ´த்திய சீர்திருத்தம் இந்த திரு “மகாத்மா” காந்தியால் ஒப்புக் கொள்ளப்பட்டதும் வரவேற்கப்பட்டதும்தானா? அல்லவா? என்று கேழ்க் கின்றோம். நாம் நாலு திராம் சாராயம் குடித்துக் கொண்டு வெள்ளைக்காரனை ஒரு திராம் சாராயம் குடிக்க வேண்டாம் என்றால் இதில் நாணையமோ யோக்கி யமோ எப்படி இருக்க முடியும்? கஞ்சி வெள்ளம் சாப்பிட்டுக் கொண்டு மாதம் 2ரூ செலவில் வாழும் மக்கள் தேசத்து சர். சங்கர நாயருக்கு 6333 – 5 – 4 காசு சம்பளம் எதற்கு? பஞ்சாங்கம் சொல்லி பிச்சை எடுத்து வாழும் சர்மாவுக்கும் சாஸ்திரிக் கும் மாதம் 6333 – 5 – 4 காசு சம்பளம் எதற்கு? இதை ஏன் “மகாத்மா” வின் தேசீயமும் மனசாட்சியும் ஏழைகளிடமிருக்கும் அன்பும் தரித்திர நாராயண னும் ஆnக்ஷபிக்கவில்லை என்றுதான் கேட்கின்றோம். தினம் ஒன்றுக்கு ஆள் ஒன்றுக்கு 0 – 2- 8 பை வீதம் சம்பாதனை சம்பாதிக்கும் (இந்திய) தேசத்தானுக்கு மாதம் 1க்கு 6333 – 5 – 4 பை சம்பளம் வேண்டியிருந்தால் அதை தேசிய காங்கிரசும் அனுமதித்து அந்த காங்கிரசின் தலைவரே அந்தப்படி வாங்கிக் கொண்டும் வந்தால் நாள் ஒன்றுக்கு ஆள் 1 க்கு 2 – 8 – 0 அணா வரும்படியுள்ள (இங்கிலாந்து) தேசத்தானுக்கு என்ன சம்பளம் கொடுக்க வேண்டும்? மாதம் ஒன்றுக்கு 95000 தொண்ணூற்றய் யாயிரம் ரூ. அல்லவா நாம் கொடுக்க வேண்டும். இப்போது நாம் வைசிராய்க்கு 21, 000ரூ. தானே கொடுக்கின்றோம். ஆகவே, இந்த ஒருவர் சம்பளத்திலேயே ஏழை இந்தியாவுக்கு µ 74,000 ரூ. மீதிதானே? இதுபோலவே சர் .சி. பி. ராமசாமி அய்யர் சம்பளம் வாங்கிய 5333 – 5 – 4 வீதம் கணக்கு பார்த்தால் சென்னை கவர்னருக்கு µ 80,000 என்பது ஆயிர ரூ. கொடுக்க வேண்டாமா? இப்போது அவருக்கு 10 ஆயிரம் தானே கொடுக்கின்றோம். இதில் ஏழை இந்தியாவுக்கு µ 70 ஆயிரம் மீதி இல்லையா? இது போலவே நாம் உப்பு வாங்குவதில் சர்க்காருக்கு கிடைக்கும் வரிப்பணத்தையும் திருப்பவும் சம்பள ரூபமாக நமது தாஸ், நேரு, போஸ், பட்டேல், சாப்ரூ, ஸின்ஹா, அய்யர், அய்யங்கார், ஆச்சாரி, சர்மா, சாஸ்திரி, சாயபு, நாயர், முதலியார், நாயுடு, ரெட்டியார், செட்டியார், கவுண்டர், (வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி)ஆகிய தேசிய வாதிகளும் காங்கிரஸ் தலைவர்களும் காந்தி சிஷ்யர்களும் µ ஒன்றுக்கு 2000, 3000, 5000, 6000, 7000 வீதம் பங்கு போட்டுக் கொள்கிறார்களே ஒழிய யாராவது வேண்டாமென்று சொல்லி வாப்சு செய்து சம்பளத்தை குறைத்துக் கொண்டார்களா? குறைத்தார்களா? குறைக்கவாவது திட்டம் வைத்திருக்கிறார்களா? இந்தப்படியே மற்ற இந்திய தேசாபிமானிகள் வாங்கும் சம்பளத்திற்கும் “கொள்ளைக்கார வெள்ளைக்காரர்கள்” வாங்கும் சம்பளத்திற்கும், யார் வாங்குகின்ற சம்பளம் அவர்களது தகுதிக்கும் தேவைக்கும் மேல் கொண்டது என்று கேழ்க்கின்றோம். ஆகவே இந்தியர் களின் வரி உயர்வுக்கும் அவ்வரி கொள்ளை அடிக்கப்படுவதற்கும் இந்திய தேசியவாதிகளும் தேசீய காங்கிரசும் அவைகளை ஆதரித்த மகாத்மாக் களும் ஜவாப்தாரிகளா அல்லது வெள்ளைக்காரர்கள் ஜவாப்தாரிகளா? என்று இப்போது யோசித்துப் பாருங்கள்.
இதுவரை செய்தது என்ன?
ஆகவே இந்தப்படி போகும் கொள்ளையை நிருத்த இதுவரை “மகாத்மா” என்ன செய்தார். இந்திய தேசியம் என்ன செய்தது என்று கேட்கின்றோம்,
இந்த வரியினால் கஷ்டப்படுகின்றவர்கள் குடியானவர்களேயாவார் கள். அவர்களுக்கு கஷ்டப்பட்டு உழைப்பவர்கள் தீண்டாத வகுப்பார்களான “சண்டாளர்”களாவார்கள். இந்த இரு வகுப்புக்கும் காந்தி கடைசிப் போரில் “மகாத்மா” என்ன வழி செய்தார் அல்லது செய்கின்றார் என்று கேழ்க் கின்றோம். குடியானவர்கள் வரி குறைய வேண்டுமானால் முதலில் வரி மறுப்பு செய்வதா அல்லது சம்பள மறுப்பு செய்வதா என்றுதான் கேட்கின் றோம். அது போலவே சண்டாளர்களை மனிதர்களாக்க வேண்டுமானால் முதலாவது கட்டுப்பாடுகளை உடைப்பதா அல்லது கட்டுப்பாடுகளான ராமாயணம் பாரதம் வருணாசிரமம் ஆகியவைகளை நிலை நிறுத்த பிரசாரம் செய்வதா என்று கேட்கின்றோம். இவைகளை யெல்லாம் விட்டு விட்டு உப்புக் காய்ச்சுவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடும். வேண்டுமானால் பாமர மக்களில் சிலர் ஏமாந்து ஜெயிலுக்குப் போகக் கூடும். இதனால் நமக்கு லாபமும் இல்லை நஷ்டமுமில்லை. ஆனாலும் தேச முற்போக்கு வெகுதூரம் தடைப்பட்டு விடும் என்றே பயப்படுகின்றோம். அன்றியும் வெள்ளைக்கார னுக்கும் தனது கொள்ளைக்குத் தக்க நியாயம் கிடைத்துவிடும் என்றும் கருதுகின்றோம். ஆகையால் காந்திப் போரால் நாட்டிற்கு நன்மை இல்லை என்றும் கெடுதியே அதிகம் ஏற்படும் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.
கல்லுச் சாமியும் அயோக்கிய மத ஆச்சாரிகளும்
இந்தியப் பாமரக் குடியானவர்களும் கொடுமைப்படுத்தப்பட்ட வாயில்லாப் பூச்சிகளான கூலிகளும் தீண்டப்படாதவர்களும் பாடுபட்டும் கஷ்டப்பட்டும் சம்பாதித்த பணத்தை நமது நாட்டு கல்லுச் சாமிகளும், அயோக்கிய மத ஆச்சாரிகளும், அக்கிரம மடாதிபதிகளும், சூழ்ச்சிக்காரப் பார்ப்பனர்களும் சுயநலப் படித்தவர்களும் மூட பணக்காரர்களும் கொடிய முதலாளிகளும் மற்றொருபுரம் கொள்ளையடித்துக் கொண்டு நாட்டைக் கொடுமைப்படுத்திக் கொண்டு இருப்பதை விட உலகத்திற்கே முன்னணியில் இருந்து கொண்டு உலக முற்போக்கில் கவலை எடுத்து உழைக்கின்ற முயற்சியும் தகுதியுமுடைய மக்களுக்குப் போவதில் உலகத்திற்கு என்ன கஷ்டம் வந்து விடும் என்று கேட்கின்றோம். “தகுதியுடையவனே அடை வான்” என்கின்ற இயற்கை சட்டம் யார் தடுத்தாலும் செலாவணியாய்க் கொண்டு தான் இருக்கும்.
மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கூச்சல் போடும் சூழ்ச்சிக் காரர்கள் மக்களை தெருவில் நடக்கவிட மாட்டேன் என்கின்றார்கள்.
கடவுளைக் காப்பாற்ற வேண்டும் என்னும் கசடர்களோ, அக்கடவு ளைக் காண மனிதனை அனுமதிக்க மாட்டேன் என்கின்றார்கள்.
மரைகளையும் கலைகளையும் காப்பாற்ற வேண்டும் என்னும் சுயநல தூர்த்தர்களோ அம்மரைகளையும் கலைகளையும் மக்கள் கற்க – அதன் உண்மையை அறிய .இடம் கொடுக்க மாட்டேன் என்கின்றார்கள்.
இந்த மாதிரி மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் உள்ள ஒரு அரசாங் கத்தை அல்லது வெள்ளைக்காரர்களை ஒழித்துவிடுவதால் யாருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது நமக்கு விளங்கவில்லை.
வெள்ளைக்காரர்களையோ அல்லது அரசாங்கத்தையோ ஒழித்து விட்டு இந்த பாமர மக்களையும் ஏழைக் கூலிகளையும் தீண்டக் கூடாத “சண்டாளர்களையும்” பிரகு யாரிடம் ஒப்புவிப்பது என்பதும் நமக்கு விளங்க வில்லை.
ஒத்துழையாமையும் பார்ப்பனரும்
ஒத்துழையாமையின் போது சர்க்கார் மீது மக்களுக்கு எவ்வளவோ வெறுப்பை உண்டாக்கினோம். அதனால் சர்க்காரும் சற்று கலங்கினார்கள். ஆனால் அது சமயமும் ஒரு பார்ப்பான்தான் திரு. காந்தியைப் பிடித்து சிறையில் வைக்க யோசனை கூறி சர்க்காருக்கு உதவி செய்தார். அதன்பிறகு அந்த பலனை யார் அனுபவித்தார்களென்றால் அந்தப் பார்ப்பனர்களே யாவார்கள். உதாரணமாக ஒத்துழையாமை ஒடுங்கின உடனே திரு. இராஜ கோபாலாச்சாரியார் பார்ப்பனர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்கவும் பார்ப் பன ஆதிக்கத்திற்கு ஏற்ற மந்திரிகளை நியமிக்கவும் கோவைக்கும் சென் னைக்கும் ஓடி வந்து விட்டார். மற்றும் ஒத்துழையாமையை வைத, ஒழித்த பார்ப்பனர்கள் எல்லாம் உடனே காங்கிரசுக்காரர்களாகவும், தேசீயவாதி களாகவும் ஆகி பார்ப்பனரல்லாதார் கட்சியை ஒழிக்க ஆளுக்கொரு கல்லைத் தூக்கிப் போட்டார்கள். அது போலவே இப்போதும் தமிழ்நாட்டில் இந்த காந்திபோரின் பேரால் ஒரு ஆயிரம் இரண்டாயிரம் பேரையாவது நாம் ஜெயிலுக்கனுப்பி வைத்தோமேயானால் அடுத்து வரும் ஆகஸ்டு செப்டம்பர் மாதம் சட்டசபை தேர்தலில் பார்ப்பனர்களுக்கு அல்லது அவர்கள் அடிமை களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுத்து பார்ப்பனரல்லாதார் கட்சியை அழித்து பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஏற்ற மந்திரிகளை நியமிக்க இதே திரு. இராஜ கோபாலாச்சாரியார் மறுபடியும் சென்னைக்கு ஓடிவந்து விடுவாரென்பதில் யாருக்கு என்ன சந்தேகம். அதற்காகவே திருவாளர்கள் சத்தியமூர்த்தி, வெங்கிட்டரமணய்யங்கார், சீனிவாசய்யங்கார், முத்துரங்க முதலியார், வரதராஜுலு நாயுடு, ஆதிநாராயண செட்டியார் முதலாகியவர்கள் காங்கிரசில் ராஜினாமா கொடுத்து விட்டு திரு. ராஜகோபாலாச்சாரியார் வசம் காங்கிரசை யும் ஒப்புவைத்து விட்டு தயாராய் நாக்கில் ஜலம் சொட்ட காத்துக் கொண் டிருக்கிறார்கள்.
தேர்தல் சூழ்ச்சி
இந்த பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும் சட்ட சபைக்குப் போவதுதான் காந்திப் போரின் சட்ட மறுப்பும் சத்தியாக்கிரகமும் என்பதானது தேர்தல் சூழ்ச்சியாய் முடியுமே அல்லாமல் வேறு ஏதாவது காரியம் தமிழ் நாட்டில் நடக்குமா என்று கேட்கிறோம். மேலும் சர்க்கார் மது விலக்குப் பிரசா ரத்தைப் பரிகாசம் செய்து கெட்ட எண்ணம் கற்பிக்கும் இதே திரு. ராஜ கோபா லாச்சாரியாரின் சென்ற தேர்தலுக்கு முந்திய மதுவிலக்குப் பிரசாரத்தின் யோக்கியதை என்ன ஆயிற்று?
வருணாச்சிரமக்காரறான ஒரு திரு. வெங்கிட்டரமண அய்யங்காருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்கவும் பார்ப்பனரல்லாத கட்சி மந்திரிகளை அழிக்கவும் தானே உபயோகப்பட்டது. இந்த திரு. சி. ராஜகோபாலாச்சாரியார் தானே ஒத்துழையாமையை அழிக்க சூழ்ச்சி செய்து காங்கிரசையும் அய்யங்கார் வசம் ஒப்புவித்து அவருக்குத் தலைவர் பட்டம் சூட்டினார்.
நமது சபதம்
டில்லி காங்கிரசில் சூட்சி செய்து காக்கினாடா காங்கிரசில் வெளிப் படையாக நமது மனம் பதறப்பதர திரு. ராஜகோபாலாச்சாரியார் தானே ஒத்துழைமைக்கு கருமாதி செய்தார்? அப்போதே நாம் காங்கிரசை எதிர்த்துப் பிரசாரம் செய்வதாய் சபதம் செய்துவிட்டு வந்தோம். அந்தப்படியே செய்தோம். பிரகு பெல்காம் காங்கிரசில் திரு. காந்தியைப் புரோகிதராய் வைத்து திதியும் செய்துவிட்டார். அப்போதும் திரு. காந்தியிடம் நாம் இந்த கெதி ஆகுமென்று சபதம் கூறிவிட்டுத்தான் வந்தோம். அடுத்தாப் போல் காஞ்சீபுரத்திலும் பைத்தியக்கார திரு. கல்யாணசுந்திர முதலியாரைக் கொண்டு எம் போன்றவர்களைத் தைரியமாய் வெளியாக்கினார். அப்போதும் பொதுஜனங்களிடம் இந்த விஷயங்களைச் சொல்லிச் சபதம் கூறிவிட்டே வெளியேறினோம்.
கடைசியாக பெங்களூர் சென்று திரு. காந்தியவர்களிடம் தனித்து உண்மைகளைச் சொல்லி விட்டு வந்துதான் நமது தொண்டை தீவிரமாய் ஆரம்பித்தோம். ஆகவே அன்றுமுதல் இன்றுவரை நாம் ஒரே கொள்கை யுடன் ஒரே தொழிலைத்தான் செய்து வருகின்றோம். இதனால் நம் நாட்டுக்கு இதுவரை என்ன கெடுதல் ஏற்பட்டுவிட்டது என்பது நமக்கு விளங்கவில்லை. நமது தொண்டுக்கு வேறு விதமாக சமாதானம் சொல்ல முடியாதவர்கள், கடவுளும் மதமும் கலைகளும் போய்விட்டது என்றுதான் சொல்கின்றார் களே அல்லாமல் வேறு ஒன்றும் சொல்லவில்லை. ஆகவே கடவுளுக்காகவும் மதத்திற்காகவும் கவலைப்படுவது போன்ற ஒரு முட்டாள்தனம் உலகில் வேறு ஒன்றும் இருக்கக்கூடுமென்று நம்மால் கருதமுடியவில்லை. இதைப் பற்றி அநேக தடவை எழுதி இருக்கின்றோம். ஆதலால் இப்போது மறுபடியும் விரிக்கவில்லை.
நம்மைப் பொருத்தவரை நமது மக்களுக்குச் சுயமரியாதை ஏற்பட்டு மனிதத் தன்மையுடன் எல்லோரும் சரிசமமாக வாழவேண்டு மென்பதுதான் நமது ஆசையே ஒழிய வெள்ளைக்காரன் போவதோ இருப்பதோ நமது கவலையல்ல. உலகத்தில் நமது பாழும் இந்தியாவைத் தவிர மற்ற எந்த நாட்டிலும் இது சமயம் சமதர்மக் கொள்கைகளே தலைவிரித்து ஆடுகின்றன. இந்தியா மாத்திரம் பார்ப்பன ஆதிக்கத்திலும் முதலாளிகள் ஆதிக்கத்திலும் நசுக்குண்டு அன்னிய ஆட்சிக்கு உளவாளியாகவும் கூட்டாளியாகவும் இருந்து வருகின்றது. இந்த நிலையை மாற்ற திரு. காந்தியின் உப்புக் காச்சும் சத்தியாக்கிரகமோ சட்ட மறுப்போ ஒருக்காலும் பயன்படாது என்று நாம் கருதுவதால் நாம் அதில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றோம். மற்றபடி உண்மையான விடுதலைக்கும் சமத்துவத்திற்கும் என்று எந்த வேலை ஆரம்பித்தாலும் நமது உயிரையும் கொடுக்க நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 16.03.1930