ஜனநாயகம்

சின்னா பின்னப்பட்டு சீரழிந்து கிடக்கும் ஒரு நாடோ சமூகமோ முன்னேற்றமடைய வேண்டுமானால், கண்டிப்பாய் அந்த நாட்டிற்கு ஜன நாயகம் என்பது அதாவது அந்த ஜனங்களாலேயே அந்த சமூகத்தை ஆட்சி செய்து, முற்போக்கடையச் செய்வது என்பது முடியவே முடியாது. இன்னும் விளக்கமாய்ச் சொல்வதானால், அதாவது, பல மதமாய், பல ஜாதி யாய், பல வகுப்பாய், பல லக்ஷியமாய் பிரிந்து சராசரி 100க்கு 10 பேருக்கு கூட கல்வியறிவில்லாமல் இருக்கும் இந்தியாவுக்கு, இன்று ஜனநாயக ஆட்சி என்பது சிறிதும் பயன்படாது என்பதேயாகும்.

இந்த அபிப்பிராயம், நாம் மாத்திரம் சொல்வதாக மக்கள் கருதினாலும் நமக்கு ஆnக்ஷபணையில்லை. ஆனாலும் அறிஞர்களும், அனுபவ சாலிகளுமான அநேகர் இதே அபிப்பிராயம் கொண்டிருப்பதை நாம் கேட்டு மிருக்கின்றோம்.
அன்றியும் இந்த நமது மேல் கண்ட அபிப்பிராயத்தை நிரூபிக்க இதற்கு முன் பல ஆதாரங்களை நாம் எடுத்து காட்டியும் இருக்கின்றோம். ஆனாலும், இப்போது கிடைத்த இரண்டொன்றையும் எடுத்துக்காட்டு வோம்.
அதாவது:-
இந்திய நாட்டிலுள்ள மனித சமூகத்தில் சுமார் 6 கோடி மக்கள் தீண்டா தவர்களாக- மனிதர்களால் தொடக்கூடாதவர்களாக-அநேக விஷயங்களில் மனித உரிமைகளை அனுபவிக்கக் கூடாதவர்களாக – தெருவில் நடக்கவோ, குளத்தில் தண்ணீர் அருந்தவோ பொதுக்கோயில், மடம், சத்திரம், சாவடி என்பவைகளில் பிரவேசிக்கவோ சில பொது இடங்களில் சென்று படிக் கவோ, சில பொது இடங்களில் சென்று கூலிவேலை, உத்தி யோகம் முதலிய வைகள் செய்யவோ தடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, கொடுமை செய்யப்பட்ட வர்களாகயிருக்கின்றார்கள் என்பதில் சிறிதும் ஆnக்ஷபணையே இல்லை என்பது உலக மறிந்த விஷயமாகும். ஒரு சமயம் 6 கோடி என்கின்ற எண்ணிக்கையில் சிறிது வித்தியாசமிருப்பதாக யாராவது சொல்லியிருக்க லாமே அல்லாமல், இந்த மாதிரி கொடுமைப் படுத்தப்பட்ட மனித சமூகம் இந்தியாவில், இந்துக்கள் என்பவர்களுக்குள் இல்லை என்று யாரும் சொன்ன தேயில்லை.

ஆகவே, சற்றேறக் குறைய இந்துக்கள் என்பவர்களில் 3-ல் 1-பங்கு ஜனங்கள், இந்த நிலையில் வெகுகாலமாய் இருந்து வருகின்றதையறிந்தும், இவர்களுக்கு எவ்வித விடுதலையும் இல்லாமலேயே இப்படிச் செய்யப் பட்ட கூட்டாத்தாராலேயே, இந்தியாவுக்கு ஜனநாயக ஆட்சி கேட்டுக் கொண்டு வரப்படுகின்றது.

ஜனநாயக ஆட்சி “வழியில்” சுமார் 20, 30 வருஷகாலமாக நடக்க சந்தர்ப்பம் கிடைத்து மிக்க நெருக்கமான வழி என்பதிலாவது நடந்து வந்தும், இன்று வரை இந்தமாதிரி ஜனநாயக தத்துவம், இந்த 6 கோடி மக்கள் கொண்ட சமூகத்திற்கு ஒரு காரியமும் செய்ய முன்வரவேயில்லை. வேறு யாராவது அவர்களுக்கு ஏதாவது செய்வதாயிருந்தாலும் எந்தக் காரியத்திற்கும் இவர்கள் சம்மதிப்பதும் இல்லை. இவர்களை மீறி ஏதாவது சிறிது நடந்தாலும், நடப்பதாயிருந்தாலும் அது இந்திய ஜனநாயகத்தின் தத்துவத்தின் பலனா யில்லாமல், பிரிட்டிஷ் தனி நாயகத்தின் தயவால் என்றே சொல்லும் படியாகவே நடந்து வந்திருக்கின்றன. வந்துகொண்டே யிருக்கின்றன.
மற்றும், இந்தமாதிரி தாழ்த்தப்பட்டு கொடுமை செய்யப்பட்ட 6 கோடி சமூகமானது இன்றையத்தினம் எங்காவது, ஏதாவது ஒருவித சௌக ரியத்தை வழக்கத்திற்கு விரோதமாய் அனுபவிக்கிறார்கள் என்று சொல்லப் படு மானால், அது ஜனநாயகத் தடையையும் பலத்தையும் மீறி, ஜன நாயகத்தை தனிநாயகம் தோற்கடித்த, ஆதிக்கம் செலுத்தியதின் பயனாய் நடக்கின்றதே யல்லாமல் வேறில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவோம். வெளிப்படை யாய்ச் சொல்லவேண்டுமானால் பார்ப்பாருக்கோ, சைவருக்கோ, சைவ வேளாளருக்கோ மற்றும் தங்களை “பிரம்ம, க்ஷத்திரிய வைசிய சற்சூத்திர” என்று எண்ணிக்கொண்டிருக்கும் மேல் ஜாதிக்கோ இந்த வெள்ளைக்கார அரசாங்கம் “எமனாக”த்தோன்றியபோதிலும், மேல் கண்ட கொடுமை களை யும் கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தக் கொடுமைப் படுத்தப்பட்ட 6 கோடி மக்களுக்கு, இந்த வெள்ளைக்கார அரசாங்கம் “சர்வ தயாபரரும், காருண்ய மூர்த்தியுமான கடவுளால்” அனுப்பப்பட்டது என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதில் சந்தேகமும் இல்லை. அதில் ஒரு அதிசயமும் இல்லை.

அன்றியும், இன்று இனியும் கேட்கப்படும் ஜனநாயக சுதந்திரங்கள் கூட மேற்கண்ட தாழ்த்தப்பட்டு கொடுமை செய்யப்பட்டமக்களை இனியும் தலையெடுக்க வொட்டாமல் செய்யவேண்டும் என்கின்ற ஆசையைக் கொண்டு தான் கேட்கப்படுகின்றது என்பதை மறுக்கவோ, ஆnக்ஷபணை சொல்லவோ போதிய காரணம் கிடையாதென்றே தைரியமாய்ச் சொல்லு வோம். இன்று அவர்கள் அனுபவிக்கும் தொல்லைகளில் முக்கியமானது என்னவென்றால், மற்ற மக்களைப்போல் விகிதாசாரம் தாங்கள் படிக்க முடியாதது, மற்றமக்களைப் போல் தங்கள் விகிதாசாரம் தாங்கள் சம்பாதிக்க முடியாதது, மற்றமக்களைப்போல் தங்கள் விகிதாசாரம் அரசியல் சுதந்திரங்களை அனுபவிக்க உத்தியோக வகையரா பெற முடியாதது முதலியவைகளாகும். இந்தமூன்றும் எந்த ஜனநாயக ஆக்ஷி யிலாவது, ஏதாவது ஒரு பரிகாரத்திற்கு இடம் இருக்கின்றதா? என்று பார்த் தால், பரிகாரம் கேட்பதே தேசத்துரோகமாகவும் ஜனநாயக தத்துவத்திற்கு விரோதமாகவும் பாவிக்கப்படுகின்றது. இதைப்பற்றி யாரும், எந்த ஜன நாயக வாதியும், தேசீய வாதியும் வெட்கப்படுவது கூட கிடையாது. இந்த நிலையைப் போல ஒரு மானக்கேடான காரியம் இந்த நாட்டுக்கு வேறு ஒன்றுமே கிடையாது என்று சொல்லுவோம். அரசியல் சீர்திருத்தம் அதிகமாய் வழங்குவதற்காக என்று இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சைமன் கமிஷனை, இந்த நாட்டில் 100க்கு 99 3/4பார்ப்பனரும் ஆnக்ஷபித்து பகிஷ்கரிக்க வேண்டுமென்றார்கள். சில பார்ப்பனரல்லாத சோணகிரிகளும் அவர்களை பின்பற்றினார்கள். ஆனால், தாழ்த்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்ட வர்களில் எல்லோருமே சைமன் கமிஷனை வரவேற்று, ஆதரித்து தங்கள் குறைகளைச் சொல்லிக் கொண் டார்கள். பகிஷ்கரித்தவர்கள் யோக்கியதையையும், ஆதரித்தவர்கள் அடைந்த பலனையும் இப்போது கவனித்துப் பார்த்தால், பகிஷ்காரக்கூச்சல் போட்டவர்கள் தங்கள் சமூக நலனுக்கும் ஆதரித்தவர்கள் தங்கள் விடுதலைக்குமாக நடந்து கொண்டார்கள் என்பது விளக்கமாகும். சைமன் கமிஷனை ஆதரித்து, தங்கள் குறைகளைச் சொல்லிக்கொண்ட தாழ்த்தப் பட்ட வகுப்பார்களின் பிரதிநிதிகளாக லண்டனுக்குச்சென்ற திருவாளர்கள் டாக்டர் அம்பரிட்கார், ராவ் சாஹிப் சீனிவாசன் ஆகிய இரு கனவான்களும் வெளியிட்டிருக்கும் ஒரு யாதாஸ்துப்படியும் றாவ்சாஹிப் சீனிவாசன் அவர் கள் லண்டனிலிருந்து தங்கள் வகுப்பாருக்கு அறிவித்திருக்கும் கம்பி யில்லாத் தந்தியி லிருந்தும் நாம் அறிவது என்னவென்றால்,
அவர்கள் தங்கள் யாதாஸ்தில் கண்டிருப்பதானது:-

தங்களுக்கு இந்நாட்டின் சமத்துவமான நகரவாழ்க்கை சுதந்திரம் கிடைப்பதற்கு அடியில் கண்ட திட்டங்களை சட்டமாக ஆக்கச்செய்யப்பட வேண்டுமென்றும்,

பிரிட்டிஷ் அரசாங்கத்தார் தங்களுடைய மற்ற குடி ஜனங்களுக்கு கொடுத்திருக்கும் உரிமைகளை, யாதொரு தடையுமில்லாமல் தங்களுக்கும் கொடுக்க வேண்டும். அவைகள் எந்த முறையில் இருக்கவேண்டுமென் றால், மற்றவர்கள் பொதுவாக எல்லாக் காரியங்களிலும் அனுபவிக்கும் சுதந்திரங் களை போலவே உதாரணமாக பொதுசத்திரங்கள், மடங்கள், பள்ளிக் கூடங்கள், ரோட்டுகள், குளங்கள், கிணறுகள், இதர தண்ணீர் துறைகள் முதலாகியவைகளிலும், தரையிலாவது, தண்ணீரிலாவது, ஆகாயத்திலாவது செல்லும் வாகனங்கள், நாடக சாலைகள், பொது இளைப்பாரும் இடங்கள், சந்தோஷ விளையாட்டு, களியாட்டு இடங்கள் முதலிய இடங்கள் ஆகியவை கள் எந்த முறையில் நடத்தப்பட்டாலும், அவைகளில் சென்று, அவற்றின் பலனையும், சௌகரியத்தையும், மற்ற குடிஜனங்கள் அனுபவிப்பது போல் தாங்களும் அனுபவிக்க தாராளமான உரிமைகள் இருக்க வேண்டும் என்றும்,

அவ்வித சுதந்திரங்களை யாராவது தடுத்தால் அப்படித் தடுப்பவர் களை 5 வருஷ காலம்வரை தண்டிக்கத் தகுந்தபடி சட்டத்தில் விதிகள் இருக்க வேண்டும் என்றும்,

மேல்கண்ட நிபந்தனைகளுக்கு விரோதமாய் நடக்கும் முறையில், தங்களை யாராவது, எந்தக் காரியத்திலாவது பஹிஷ்காரம் செய்தால் அல்லது செய்யும்படி தூண்டினால், அப்படிப்பட்ட கூட்டத்தார்களையோ, தனி மனிதர்களையோ, முறையே 7 வருஷம் 5 வருஷகாலம் வரை தண்டிக்கவோ, அல்லது தகுந்த அபராதம் விதிக்கவோ அல்லது இரண்டும் செய்யவோ விதிகள் செய்யவேண்டும் என்றும்,

மற்ற சமூகத்தாருக்கு இருப்பது போல், மற்றவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவும், சாக்ஷி கொடுக்கவும், சொத்துக்களை வாங்கவும், விற்க வும், குத்தகைக்கு விடவும், குத்தகை வசூலிக்கவும், சொத்துக்களை சுதந்திர மாய் அனுபவிக்கவும்,

சர்க்கார் நிர்வாகம், ராணுவம் ஆகிய துறைகளிரண்டிலும் மற்ற ஜனங்களைப் போலவே, தாங்களும் உத்தியோகங்களை தாராளமாய் வகிக்க வும், எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் சேர்ந்து வாசிப்பதற்கும்,
தெரிந்தெடுக்கப்படும் ஸ்தாபனங்களில் தங்கள் சமூகத்தினரின் மொத்த எண்ணிக்கைக்குச் சரியான பிரதிநிதித்துவம் இருக்கவும்,

கோயில்கள், பொது மடங்கள், சத்திரங்கள் ஆகியவைகளின் சொத் துக்களை மற்றவர்கள் அனுபவிப்பது போலவே தாங்களும் அனுபவிக்கவும்,

தங்கள் உரிமைகளை காப்பாற்றிக்கொள்ளும் விஷயத்தில் மற்றவர் களுக்கு இருக்கும் சுதந்திரங்கள் சௌகரியங்கள் தங்களுக்கும் இருக்கவும்,

குற்றங்களுக்கு தண்டனைகள் விதிப்பதில் கொஞ்சமும் வித்தியாச மில்லாமல் இருக்கவும், கண்டிப்பான சட்டவிதிகள் செய்யப்பட வேண்டும்.

மற்றும், தங்கள் சமூக எண்ணிக்கைக்குச் சரியான பிரதிநிதித்துவம் அளிப்பதும், தங்கள் பிரதிநிதிகளைத் தாங்களே தெரிந்தெடுக்கவும்,

முதல் 10 வருஷத்திற்கு தனித் தேர்தல் முறை அளிக்கவும்,

பிறகு சாத்தியப்பட்டால், பொதுத் தேர்தலில் சேர்த்துக்கொள்ள வசதி செய்து கொள்ளவும்,

பொதுத்தேர்தல் முறையை தங்கள் வகுப்பார் ஆnக்ஷபித்தால் அவர்களை நிர்பந்தப்படுத்தாமல் இருக்கவும்,

உத்தியோகத் தெரிந்தெடுப்பில், தங்கள் வகுப்பில் வீதாச்சாரம் தெரிந் தெடுக்கவும்,

உத்தியோகங்களில், இப்போது இதர ஜாதிகள் எத்தனை விகிதாச் சாரம் இருக்கின்றார்களோ, அத்தனை பேர்கள் வீதாச்சாரம் வீதம், தங்கள் சமூகத் தாரும் உடனே வந்து சேர்ந்து உத்தியோகம் அடைவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யவேண்டியதும்,

இந்தக் காரியங்களுக்காக ஏற்படுத்தப்பட்டச் சட்டங்களை, எந்த மாகாணமாவது சரியான படி அமுலில் கொண்டுவரவில்லையானால், கவர்னர் ஜனரல் சபையிடம் அப்பீல் செய்துகொள்ள உரிமையிருக்கவும், அப்படிப் பட்ட அப்பீலின் மீது, கவர்னர் ஜனரல் உடனே பிரவேசித்து மேல்படி சட் டத்தை சரியானபடி நடத்திவைக்கப் பாதுகாப்புகளும் இருக்கவேண்டும்.

கடைசியாக, இந்த சீர்திருத்தங்கள் வழங்கப்பட்டு இது அமுலுக்கு வரும் போது, இதற்காக அதாவது இவை ஒழுங்காக நடைபெற இதற்கென்றே ஒரு தனி இலாகா ஏற்படுத்தி, அதற்காக ஒரு தனி மந்திரியையும் ஏற்பாடு செய்யவேண்டும். அவர் மத்திய சபையின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் இருக்கவேண்டியதோடு பாரபக்ஷமில்லாமல் நடந்துகொள்ளக்கூடிய சுதந்திர மும், தன்மையுமுடையவராகவும் இருக்க வேண்டும்.
மாகாண நிர்வாகசபைகளிலும், மத்திய அரசாங்க நிர்வாக சபையிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் ஸ்தானம் பெறத்தக்க முயற்சியும், ஏற்பாடும் செய்ய கவர்னருக்கும் கவர்னர் ஜனரலுக்கும் சட்டப்பூர்வமான வசதிகள் இருக்க வேண்டும் என்பவைகளாகும்.

இந்தப்படியான ஒரு யாதாஸ்தை வட்ட மேஜையில் ஆஜர் செய் திருக்கின்றார்கள்.

நிற்க, மேற்கண்ட இந்த யாதாஸ்துக்கு அதாவது இந்தப்படியான சீர்திருத்தம் வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டதற்கு வட்டமேஜை யாரும் ஒப்புக் கொண்டிருப்பதாக திரு. ராவ்சாஹிப் சீனிவாசன் அவர்கள் தனது சமூகத்தாருக்குக் கொடுத்த ஒரு தந்தியால் தெரியவருகின்றது.

அந்தத் தந்தியின் சாரமாவது:-
1. தனித்தொகுதி மூலம் தேர்தல் நடத்துவது,
2. தங்கள் சமூகத்தில் வயது வந்தவர்களுக்கு எல்லாம் ஓட்டு உரிமை அளிப்பது,
3. மாகாண சட்ட சபைகளில் எப்படியும் 100க்கு 15 வீதம் ஸ்தானங்களுக்கு குறைவில்லாமல் இருப்பது,
4. மந்திரி சபையில் தாழ்ந்த வகுப்பாருக்கு ஒரு ஸ்தானம் இருப்பது,
5. எல்லா உத்தியோகங்களிலும் விகிதாச்சாரம் தங்கள் சமூகத்துக்கு உத்தியோகம் வழங்குவது,

ஆகிய இவைகளுக்கு விதாயங்கள் ஏற்பட்டு விட்டதாக தெரி கின்றது. ஆகவே இந்த சௌகரியங்கள் அவர்களுக்கு கிடைப்பதற்கு இன்று ஜன நாயகம் உதவி செய்ததா? தனி நாயகம் உதவி செய்ததா? என்று பார்த் தால் தனிநாயகத்தின் பெருமை விளங்காமல் போகாது.

மற்றொரு உதாரணம்
நிற்க, ஜனநாயகத்தின் யோக்கியதைக்கு மற்றொரு உதாரணம் சொல்லு வோம். அதாவது, சமீபத்தில் ஒரு வருஷத்திற்கு முன் இந்திய சட்ட சபையில் நிறைவேறின பாலிய விவாகத்தடுப்புச் சட்டமானது ஜன நாயகத்தால் நிறை வேற்றப்பட முடியாமல், தனி நாயகத்துவத்தின் உதவியாலேயே நிறை வேற்றப்பட்டது. அது அமுலில் வருவதில் ஜனங்கள் – ஜன பிரதிநிதிகள் ஆnக்ஷபிக்கிறார்கள் என்று இன்றும் சொல்லப்படு கின்றது. இந்தச் சொல்லுக்குப் பயந்து, ஜனநாயகத்துக்கு சார்பளிக்கும் அரசாங்கம், தனி நாயகம் செய்யாமல் பயப்படவும் செய்கின்றது.

அன்றியும் அந்தச் சட்டத்தை ஒழிக்கவும், மீறவுமே ஜன சுபாவம் முந்திக்கொண்டு இருக்கின்றது. இந்தப்படி செய்வதற்காகச் சொல்லப்படும் காரணம் என்ன வென்று பார்த்தால் அது பகுத்தறிவையோ, அனுபவ பலனையோ மனித வர்கத்துவ சாஸ்திரத்தையோ ஆதாரமாய்ச் சொல் லாமல் “ஒரு காலத்தில் இருந்த ஒருவர் சொன்னார்” “அந்தப்படி நடக்கா விட்டால் மதத்துக்கு விரோதம்” “பாவமானதாகும்.” “நரகம் வரும் என்று வேதம் சொல்லுகிறது” என்ற காரணங்களால் ஆnக்ஷபிக்கப்படுகின்றன. இருக்கின்ற அல்லது வரப்போகின்ற அல்லது இன்றும் அதிகமாக வர வேண்டிய ஜனநாயக ஆக்ஷி திட்டம் என்பதிலும், இந்தப்படியான அதாவது ஏதோ ஒரு காலத்தில் யாரோ ஒரு பெயர் உடையவரால் யாருக்காகவோ சொல்லப் பட்டதாக ஏற்பாடு செய்திருக்கும் – எழுதி வைத்திருக்கும் மதத் துக்கும், வேதத்திற்கும் விரோதம் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்படு வதற்கு மார்க்கமில்லாமல் வெகு ஜாக்கிறதையாய்ப் பார்த்து திட்டம் வகுக்கப் படவேண்டுமென்றே சொல்லப்படுகின்றது.
ஆகவே இந்த ஜனநாயகம் மனித வர்க்கத்திற்கு நியாயமான சுதந்திரத்தையும், சுவாதீனத்தையும் கொடுக்கக் கூடியதா அல்லது அடிமைத் தனத்தையும், கெடுதியையும் கொடுக்கக்கூடியதா என்பதை யோசித்தாலும், ஜனநாயகத்தின் யோக்கியதை சுலபத்தில் விளங்காமால் போகாது. நமது மக்களின் ஜனநாயக உணர்ச்சியானது இன்று “நமது தேசம்” “நமது மதம்” “நமது ஜாதி” என்கின்ற தத்துவத்தின் மீதும் “முதலில் தேசம்” என்று பலரும் “முதலில் மதம்” என்று சிலரும் “முதலில் ஜாதி” என்று அநேகரும் கருதியே ஜனநாயக திட்டம் வகுப்பதில் முனைந்திருக்கின்றார்களே யொழிய, முதலில் மனித சமூகம் பிறகுதான் மற்றது என்கின்ற அறிவு இந்த நாட்டில், இன்றைய தினம், மகாத்மாக்கள் முதல் தேசிய வீரர்கள்-தொண்டர்கள் வரை, தேசாபி மானி முதல் தேசபக்தர் தேசியவாதிகள் வரை – ஆச்சாரியார், மடாதிபதி, சுவாமிகள் முதல் அடியார் கூட்டங்கள் வரை, ஆஸ்திக பண்டிதர்கள் முதல் அவர்களது மாணவர்கள் வரை யாராவது ஒருவருக்கு இருக்கின்றதா? என்பதை நடுநிலைமையிலிருந்து யோசித்துப் பார்த்தால் ஜனநாயகத் தத்துவத்தின் யோக்கியதை விளங்காமல் போகாது.
ஜனநாயகம் என்பதில், ஜனம் என்றால் மனிதர்கள் என்றும், நாயகம் என்றால் ஆட்சித்துவம் – எஜமானத்துவம் என்றும் பொருளாகும்.

ஆகவே மனித ஆட்சித்துவம் என்பது மனித தர்மத்துக்கும், மனித துவத்திற்கும் பொதுவான நன்மை பயக்கும்படியானதாகவும் காப்பு அளிக் கும் படியானதாகவும் இருக்கவேண்டியதா? அல்லது “என் தேசம் காப்பாற்றப்பட்டபின்தான் மனித தர்மம், என் மதம் காப்பாற்றப்பட்ட பின்தான் மனித தர்மம், எனக்கு மோட்சத்தில் சரியான இடம் தேடிக் கொண்ட பின் தான் மனித தர்மம், எனக்கு நரகம் கிடைக்காமல் பார்த்துக் கொண்ட பின்தான் மனித தர்மம்” என்று பாதுகாப்பு ஏற்படுத்திக்கொண்டு மனித பொது தர்மத்தையே கவலையற்றதாகக் கொண்டால் அந்த ஜன நாயகம் மனிதவர்க்க ஆட்சி ஆகுமா? அல்லது மத நாயகம், அல்லது தனிப்பட்ட மனிதனின் மோட்சநாயக ஆட்சியாகுமா என்று பார்த்தாலும், ஜனநாயக ஆட்சியின் போலித்தத்துவம் விளங்காமல் போகாது. ஏனெனில் தேசநாயக ஆட்சியும், மதநாயக ஆட்சியும் மோட்ச நாயக ஆட்சியும், மற்ற பொதுக் காரியங்களும் ஒவ்வொரு நாட்டுக்கு ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு தனி மனி தனுக்கும் ஒவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு தனிமனிதனின் ஒவ்வொரு நிலைமைக்கும் ஒவ்வொருவிதமாகவும் இருந்துவருகின்றது. மேலும் இவைகளுக்கெல்லாம் பூரண சுதந்திரமும், பாதுகாப்பும் அளிப்பது தான் ஜனநாயக தத்துவம் என்பதாக மகாத்மாக் களால் பூரண சுயேச்சை வீரர்களால் தேசீய வாதிகளால் உறுதிவாக்களிக்கப் பட்டாய் விட்டது. ஆகவே, இந்த ஜனநாயகம் மனித சமூகத்திற்கு ஆபத் தானதா அல்லது அனுகூலமானதா என்பது அறிவாளிகளுக்கு விளங்காமல் போகாது.

மக்களுக்கு உண்மையான மனித தர்ம நாயகம் எப்படியிருக்க வேண்டுமென்பதற்கு ஒரு உதாரணம் வேண்டுமானால் நடுச் சமுத்திரத்தின் முழுகப்போகும் கப்பலின் நடவடிக்கையைப் பார்த்தால் தெரியவரும். அதாவது, கப்பல் முழுகும்போது கப்பல் ஓட்டும் தலைவன் ஜனங்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் முறையில் மனித தர்மம் விளங்குவதை காணலாம்.

அதாவது கப்பல் முழுக ஆரம்பித்தவுடன் தேசம், மதம், ஜாதி, உத்தியோகம், பணம், பதவி ஆகியவைகளை கவனிக்காமல் பலக் குறை வானவர்களையும் சக்தி குறைவானவர்களையும் காப்பற்றுவதே முதல் கடமையாய் நினைத்து பெண்களையும், வயோதிகர்களையும், குழந்தை களையும், நோயாளிகளையும் முதலில் காப்பாற்றுகின்றான். ஆகவே ஆட்சியிலும் அப்படிப்பட்ட கொள்கையே மனித தர்ம நாயக ஆட்சி யாகும். இந்த ஆட்சியை ஜனநாயக ஆட்சி கப்பலிலிருக்கும் எல்லா ஜனங் களுக்கும் சுதந்திரம் கொடுத்தால் முதலில் எடுத்துக்காட்டிய ஜனநாயகக் கொள்கை ஆதிக்கமானது ஒவ்வொரு தனி மனிதனும் தான் தான் முதலில் காப்பாற்றப் பட வேண்டும் என்று ஆசைப்பட்டு கலகம் ஏற்பட்டு அதனால் கரையேறும் சாதனங்கள் கூட எல்லாம் அடியோடு முழுகிப்போகும். இந்த மாதிரிதான் நமது ஜனநாயகமும் இருக்கின்றது.

மற்றொரு உதாரணம்
அதாவது ஜனநாயக ஆக்ஷி மனித தர்மத்திற்கு எவ்வளவு ஆபத்து கரமானது என்பதற்கு மற்றொரு உதாரணம் என்னவென்றால் “இவ்வாரம் இந்திய சட்டசபையில் சர் ஹரிசிங்கவரால் கொண்டுவரப்பட்ட விவாக சீர்திருத்த சட்டமானது ஒரே அடியாய் தலையில் அடித்து சொல்லப்பட்டு விட்டது.

இந்த சட்டமானது வெகுகாலமாக அனேக அறிவாளிகள் என்பவர் களால் ஆலோசித்து சம்மதிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டதாகும்.

அச்சட்டமானது பூரண முற்போக்கடைந்தது என்றோ மனித தர்மத்திற்கோ, மனித சுபாவத்திற்கோ, மனித சுதந்திரத்திற்கும் முழுஉரிமை அளிக்கக் கூடிய தென்றோ சொல்லிவிட முடியாததாயிருந்துங்கூட, அதாவது ஒரு மனைவிக்கு மேல் விவாகம் செய்துகொள்ளக்கூடாது என்கின்ற தடையை வைத்தும் அது ஜனநாயகத்துவ பிரதிநிதிசபையாலும் ஜனநாயக தத்துவ அரசாங்கத்தின் ஜனப் பிரதிநிதி அங்கத்தினராலும் (நானபிஷியல்லா மெம்பராலும்) விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இதற்கு சொல்லப்பட்ட காரணம் என்னவென்று பார்த்தால் திரு. ராஜாபகதூர் கிருஷ்ணமாச்சாரியர் என்ற ஒரு அய்யங்கார் பார்ப்பனர் “எனது மூதாதைகள் செய்த ஏற்பாட்டு படிதான் இருக்கவேண்டும். அதற்கு விரோதமானவைகளை ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. ஆதலால் இந்தச் சட்டம் கூடாது” என்பதாகச் சொல்லி சட்டத்தை எதிர்த்திருக்கின்றார். மற்றவர்களும் இதை அனுசரித்தே மதக்கட்டளையை முன்னிட்டே எதிர்த்திருக்கின்றார்கள். கடைசியாக சர்க்கார் தரப்பில் சட்டமெம்பர் என்கின்ற ஒரு பார்ப்பனர் தனது பார்ப்பனப் புத்தியையே காட்டி சர்க்காருக்கும் தனது சமூக ஆதிக்கத்திற்கும் குந்தக மில்லாமல் பேசி அதை நிராகரிக்கச் செய்துவிட்டார்.

அந்தச் சட்டத்தின் சாரமெல்லாம் தனக்கு இஷ்டமான பெண்ணை, அதுவும் ஒரே ஒரு பெண்ணை மணந்து கொண்டு வாழ்வதை எந்த சட்டமும் தடுக்கக்கூடாது என்பதேயாகும். (அதாவது கலப்பு மணத்திற்கு அனுமதி யளிப்பது) இதனால் மதம், பெரியோர் செய்த ஏற்பாடு ஆகியவை கள் கெடக்கூடாது என்கின்ற காரணங்களே, மனிதஉரிமைக்கு தடையாய் இருக் கின்றது என்று ஏற்படுகின்றதே அல்லாமல் அது மனித தர்மத்திற்கோ, சரீர சௌக்கியத்திற்கோ நாணையத்திற்கோ ஒழுக்கத்திற்கோ என்ன தடை அல்லது கெடுதி ஏற்படுகின்றது என்பது கவனிக்கப்படவில்லை என்கின்றது நன்றாய் விளங்குகின்றது.

ஈரோடு சுயமரியாதை மகாநாட்டில் தலைமை வகித்த திரு. ஜயகர் அவர்கள், கலப்பு மணத்தைப் பற்றிப் பேசும்போதுதான் கலப்பு மணத்தைப் பற்றி வெள்ளைக்கார அதிகாரிகளுடன் பேசியதாகவும், அதற்கவர்கள் “கலப்பு மண சட்டத்தைப் பாசுசெய்து (நிறைவேற்றி) எங்களை இந்த நாட்டைவிட்டு விரட்டப் பார்க்கின்றீர்களா என்று கேட்டார்கள்” என்பதாக எடுத்துச் சொன்னார். ஆகவே, கலப்பு மணம், அனுபவத்தில் நமது நாட்டில் நடைபெறுமானால், நமது நாட்டில் ஐரோப்பியர் ஆக்ஷியோ, கிருஸ்துவர் ஆக்ஷியோ, மகமதிய ஆக்ஷியோ, இந்துக்கள் ஆக்ஷியோ மற்றபடி பௌத்தம், கிறிஸ்து, இஸ்லாம், இந்து முதலிய மதங்களோ, பார்ப்பான், பறையன் முதலிய ஜாதிகளோ அன்னிய ஆக்ஷிகளோ அடியோடு நமது நாட்டைவிட்டு ஏன் உலகத்தையே விட்டுக் கூட ஓடிப்போக மார்க்கமுண் டாகும். இந்த நிலை கூடாது என்கின்றவர்களுடைய ஆக்ஷிதான் இன்றும் ஜனநாயக ஆக்ஷியாகவும், இனியும் அதிகமான முற்போக்குள்ள ஜனநாயக ஆக்ஷியாகவும் இருக்கின்றது, இருக்கவும் போகின்றது.

ஆகவே, லெனின் ஆக்ஷியோ, கமால்பாஷா ஆக்ஷியோதான் மனிதத் தர்ம – மனித நாயக ஆக்ஷியாக இருக்க முடியுமே அல்லாமல் மற்றபடி எந்த சீர்திருத்தம் கொடுத்து, எந்த ஜனநாயக ஆக்ஷி கொடுத்து, அதை எந்த மகாத்மா ஒப்புக்கொண்டு அதை எந்த வெள்ளைப் பார்ப்பானோ, கருப்புப் பார்ப்பானோ மொட்டைப் பார்ப்பானோ மனப்பூர்வமாய் ஒப்புக் கொண்டு நடத்திக் கொடுப்பதாயிருந்தாலும் அது ஒரு நாளும் மனித தர்ம ஆட்சி யாயிருக்க முடியவே முடியாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.

மேலும் மனிதனுக்கு ஒரு நாயகம் வேண்டி இருந்ததின் காரணமே மனிதசமூகம் நாயகமில்லாமல் வாழ்க்கை நடத்தமுடியாமல் போனதி னாலேயேயாகும். அந்தப்படி முடியாமல் போனதற்கு காரணம், மனித னுக்கு அறிவில்லாத தன்மையும் சுயநலத்தடிப்புமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் மேல்கண்ட இரண்டும் மக்களுடன் மக்கள் கலந்து ஒற்றுமையாயும் நம்பிக்கையாயும் வாழச்செய்ய முடியாது.

ஆகவே மக்கள் தங்களுக்கு ஒரு அரசன் வேண்டியது என்பதற்கு ஆதாரமான காரணங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு அரசன் இல்லாமல் வாழ லாம் என்கின்ற தன்மை அடையும் வரை தங்கள் பொது வாழ்வில் தங்க ளுக்கு தாங்களே நாயகர்களாயிருந்து கொள்வது என்பது சாத்தியமான காரியமாகுமா என்பதை கவனித்துப் பார்த்தாலும் ஜனநாயகத்தின் முட்டாள் தனம் விளங்காமல் போகாது. அந்தக் காரணங்கள் சரிபடுத்தப் படாத ஜனங் கள் மறுபடியும் தங்களைத் தாங்களே தங்கள் பொதுவாழ்வுக்கு நாயகர்களாய் இருந்து கொள்ளுவது என்பது சாத்தியமான காரியமாகுமா? என்பதை கவனித்துப் பார்த்தால் ஜனநாயத்தின் முட்டாள்தனம் விளங்காமல் போகாது.
ஆகவே இப்போது ஜனநாயக ஆக்ஷி என்று நாம் சொல்லுவ தெல்லாம் ஒருக்காலும் மனித தர்ம ஆக்ஷியாகவே ஆகாது.

முதலில் நான் மனிதன். பிறகு தான் இந்தியனோ, எவனோ ஆவேன்.

குடி அரசு – தலையங்கம் – 08.02.1931

You may also like...

Leave a Reply