பன்னாட்டு விசாரணையை நோக்கி…
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் போர்க் குற்றங்கள்; மாந்த நேயத்துக்கு எதிரான குற்றங்கள் நடந்ததை உறுதி செய்துவிட்டது அய்.நா. மனித உரிமை ஆணையம். மனித உரிமைக் குழு தலைவர் சையத் உசேன் செப்.16ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சட்டவிரோத கொலைகள், பாலியல் வன்முறைகள், போரில்லா பகுதி என்று அறிவித்த பகுதியில் மக்களை குறி வைத்து நடத்திய தாக்குதல், காணாமல் போனவர்கள், கைது செய்யப் பட்டவர்கள் மீதான சித்திரவதைகள் போன்ற கொடும் குற்றங்கள் நிகழ்ந்ததை உறுதி செய்கிறது அறிக்கை. “இந்த கொடூரமான குற்றங்கள் திட்டமிடப்பட்டவை. இவைகள் நடத்தப்பட்ட ஒரே மாதிரியான முறைகளைப் பார்க்கும்போது, இந்தக் குற்றங்கள் ஆங்காங்கே தனித்தனியாக நடந்ததாகக் கருத முடியாது. அரச அமைப்பே நடத்திய குற்றங்கள் (யடட யீடிiவே வடிறயசனள ளலளவநஅ ஊசiஅநள) என்று அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் மிகவும் முக்கியத்துவம் நிறைந்தது. சிங்களர்கள், சர்வதேச சட்ட நிபுணர்கள் கொண்ட கலப்பு நீதிமன்ற (hலசெனை உடிரசவள) விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்று – மனித உரிமைக் குழு கூறியிருக்கிறது. சர்வதேச விசாரணை மட்டுமே சரியான நீதி வழங்க முடியும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்.16 அன்று சட்டமன்றத்தில் வரவேற்கத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.
ஈழத்தில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேசு வரன் அவர்களும் சட்டமன்றத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறார்.
இலங்கையின் நீதித் துறை இத்தகைய விசாரணைக்குத் தகுதியானது அல்ல என்று மனித உரிமை ஆணையம் கூறினாலும் அமெரிக்காவோ, சீனாவோ, இந்தியாவோ, இலங்கையின் ஆதரவாளர்களாகவே செயல்படும்போது, கலப்பு நீதிமன்ற விசாரணைகூட அய்.நா.வில் தீர்மானமாக வருமா? என்ற கேள்விக்குறியே எழுந்து நிற்கிறது. திட்டமிட்ட இனப்படு கொலைகளை இலங்கை நடத்தியபோது, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுதுமே இலங்கைக்கு ஆதரவாகவே நின்றன. உலகில் வேறு எந்த ஒரு நாட்டுக்கும் போர்க் குற்றத்தின்போது இப்படி ஒருமித்த ஆதரவு இருந்ததே இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகும், “மனித உரிமை மீறல்கள்” மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழர்களுக்கு அரசியல் ரீதியான தீர்வுக்கும் முயற்சிக்காமல், இலங்கை அரசு காட்டிய அலட்சியம் தான், இன்று சர்வதேசத்தை இலங்கையை நோக்கி கேள்வி கேட்கும் கட்டாயத்துக்கு தள்ளியிருக்கிறது.
தமிழர்களுக்கு இறுதியான நிலையான தீர்வு ‘தமிழ் ஈழம்’ ஒன்றுதான் என்பது கல்லில் செதுக்கப்பட்ட உண்மையாக இருந்தாலும், சர்வதேச அரங்குகளில் அதை முன் நகர்த்து வதற்கான அரசியல் ரீதியான செயல் உத்திகள் – காலத்தின் தேவையாகியிருக்கிறது.
இலங்கை சிங்களப் பேரினவாதம். தமிழர்களுக்கான நீதியை ஒரு போதும் வழங்காது என்பதை இலங்கை அரசின் செயல்பாடுகளைக் கொண்டே அம்பலப்படுத்த வேண்டிய நிலையில் தான் சர்வதேசத் தமிழினம் இன்று உரிமையற்ற இனமாக இருக்கிறது. இந்தப் பின்னணியில் ஒற்றை முழக்கங்களை மட்டுமே நாம் எழுப்பிக் கொண் டிருப்பதைவிட நடைமுறை ரீதியாக சர்வதேச அரசியல் நகர்வுகள் குறித்த ஆழமான விவாதங் களுக்கும் அதற்கான செயல் உத்திகளுக்கும் நாம் தயாராக வேண்டும். இல்லையேல் மீண்டும் தனிமைப்படக்கூடிய ஆபத்துகளையே சந்திக்க வேண்டியிருக்கும்.
சர்வதேச விசாரணைக்கு வலு சேர்ப்பதற்கு வடக்கு மாகாண சட்டமன்றம், தமிழக சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் தமிழர்களுக்குக் கிடைத்த அரசியல் ஆயுதங்கள். இவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கும், அதற்கான ‘இடைக்கால’ நகர்வுகள் குறித்தும் விவாதங்களும் புரிதல்களும் அவசிய தேவையாகியிருக்கிறது!
பெரியார் முழக்கம் 24092015 இதழ்