விமல போதம்
ஸ்வாமி விமால நந்தா அவர்களால் தொகுக்கப்பெற்ற ‘விமல போதம்’ என்னும் நூலொன்று கிடைக்கப் பெற்றோம். இந்நூலின்கண் சித்த மதத்தை விளக்கி உரைப்பதற்கு, நூலாசிரியர் அவர்கள் அரும்பாடு பட்டிருப்பர் என்றே யாம் கருத வேண்டி இருக்கின்றது. இதிற் காயசித்தி, மனோசித்தி, அறிவு சித்தி என்னும் மூவகைச் சித்தியின் தன்மைகளையும் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஒட்டிய பல ஆராய்ச்சிகளையும் தெள்ளத் தெளிய, மந்த தரத்தாரும் உணரும் வண்ணம் ஆசிரியரவர்கள் பரந்த விஷயங்களை சுருங்க விளக்கியிருப்பது பாராட்டற்பாலதாம்.
நூலிற் கூறும் உண்மைகள் உண்மைகளா என்பதைப் பற்றி நூலை வாங்கிப் படிப்பவர்களே தங்கடங்கள் அறிவைச் செலுத்திப் படித்துத் துணி புறுதல் சிறப்புடைமையாதலால், இவ்விடயத்தைப் படிப்பவர்கட்கே விட்டு விடுகின்றோம்.
நூல் மிகத் தெளிவாகப் பதிக்கப் பெற்றுள்ளது என்றும் நூலைப் பதிப்பிக்க ஆசிரியர் எடுத்துக் கொண்ட முயற்சி சிறிதன்று என்றும், இதன் விலை அணா இரண்டே என்றும் மட்டும் வாசகர்கட்கு எடுத்துரைக்க விழை கின்றோம்.
நூல் சென்னை கோல்டன் கம்பெனி அச்சியந்திர சாலையில் மிக அழகுபடப் பதிக்கப் பெற்றுள்ளது.
குடி அரசு – நூல் மதிப்புரை – 03.11.1929