காங்கிரஸ் புரட்டைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்

கல்கத்தாவில் இது சமயம் கூடிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் என்னும் கூட்டம் இந்த வருஷத்திய மற்றொரு ஏமாற்றுத் திருவிழா என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வருஷமும் நமது இந்தியப் பாமரமக்கள் ஆயிரக்கணக்காகக் கூட்டம் கூடுவதும் நாலைந்து கூட்டுக் கொள்ளை சுயநல ஆசாமிகள் சேர்ந்து இப்பாமர மக்கள் ஏமாறும்படி ஜாலவித்தைபோல் இரண்டொரு சதியாலோசனைத் தீர்மானங்கள் செய்வதும் “அதற்குள் இதுவும் இருக்கின்றது, இப்படியும் சொல்லலாம் அப்படியும் சொல்லலாம், எனினும் பொருந்தும், அதற்கு இதுவே முதற்படி, முதற்படிக்கும் இதுவே முதற்படி” என்பது போன்ற தந்திரவார்த்தைகளால் அத்தீர்மானங்களை அரண் செய்வதும், வாலிபர்களை இளம் பெண்களைக் காட்டி ஏமாற்றுவது போல் பாமர மக்களை திரு காந்தியவர்களைக் காட்டி ஏமாற்றி வருவதுமே காங்கிரஸ் நாடகமாக நடத்திக் காட்டப்பட்டு வருகின்றது. இதைப் போன்ற ஒரு மோசமான ஏமாற்றுத் திருவிழா நமது நாட்டில் வேறு எதன் பேராலும் நடத்தப்படுவதாகச் சொல்ல முடியாது. பார்ப்பனர்களோ, அல்லது ஆங்கிலம் படித்து உத்தியோகத்திற்கு காத்திருக்கும் படித்தவர்கள் என்பவர்களோ, அல்லது பெருமையையும் பதவியும் அடையக் காத்திருக்கும் பணக் காரர்களோ இவ்வித நாணயப் பொறுப்பற்ற காரியங்கள் செய்வதில் நமக்கு சிறிதும் அதிசயமில்லை. பார்ப்பனர்கள், படித்தவர்கள், பணக்காரர்கள் ஆகிய மூவரும் சிறப்பாக நமது நாட்டைப் பொருத்தவரையில் ஏழை மக்களுக்கும் குடியானவர்களுக்கும் எப்போதும் எதிரிகளே ஆவார்கள். அதனாலேயே தான் முதலில் பார்ப்பன ஆதிக்கத்தை அடியோடு அழித்தெறிய வேண்டுமென்கின்றோம். அது ஒழிந்தால் அடுத்ததைச் செய்யவே நமது சுயமரியாதை இயக்கம் தோன்றியிருக்கின்றது.

மற்றபடி திரு. காந்தி, துறவி என்றும் மகாத்மா என்றும் உத்தமர் என்றும் சத்திய சீலர் என்றும், ஏழைகள் நண்பர் என்றும் ஏன் அவதாரம் என்றும்கூட சொல்லும்படியான ஒருவர், ஒருகாலத்தில் தமக்கு ஏற்பட்ட செல்வாக்கையும் நம்பிக்கையையும் இவ்வேமாற்றுத் திருவிழாவுக்கு உபயோகப்படுத்துவதைப் பற்றி நாம் கண்டிக்காமலோ பாமர ஜனங்களுக்கு எடுத்துக்காட்டாமலோ இருக்க முடியவில்லை. நேற்றும் முன்தினமும் கல்கத்தா காங்கிரசின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி விஷயாலோசனைக் கூட்டத்தில் இரண்டு வித தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதாவது:-

“ராஜீய சமூகப் பிரசினைகளை தீர்த்து வைப்பதற்கு சர்வ கக்ஷி மகாநாட்டுத் தீர்மானம் உதவியாயிருப்பதால் அதைப் பாராட்டுகின்றது.”

“சென்னை காங்கிரசில் பூரண சுயேச்சைதான் நமது லக்ஷியம் என்று தீர்மானித்திருப்பதை பின்பற்ற சம்மதித்தது.”

“கால தேச வர்த்தமானத்திற்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளும் அதிகாரத்தோடும் பிரிட்டிஷார் ஒப்புக் கொள்ளுவதைப் பொருத்தும் இந்த காங்கிரஸ் நேரு ரிபோர்ட்டில் கண்ட அரசியல் திட்டத்தை ஒப்புக் கொள்ளுகின்றது.”

“இதை பிரிட்டிஷார் 2 வருஷ வாய்தாவுக்குள் ஒப்புக் கொண்டு அந்தப்படி சீர்திருத்தம் கொடாவிட்டால் பலாத்காரமற்ற தன்மையில் வரிகொடாமை, உதவி மறுத்தல் முதலிய ஒத்துழையாமை செய்வது” என்பதாகும்.

இது, திரு காந்தியால் பிரேரேபிக்கப்பட்டு திரு. சீனிவாசய்யங்காரால் ஆமோதிக்கப்பட்டு 3ல் 2 பங்கு பேர்களால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

சுயேச்சைக் கொள்கையின் மூலப் புருஷர்களான திரு. ஜவாரிலால் நேருவும், சுபாஷ் சந்திரபோசுவும் அவர்களது நண்பர்களும் கூட்டத்திற்கு வரவில்லை.

நிற்க ³ தீர்மானத்தை பிரேரேபித்த திரு. காந்தியவர்களின் யோக்கியதையை முதலில் கவனிப்போம்.

அத்தீர்மானத்தில் மூன்று விஷயத்தை முக்கிய விஷயமாய் எடுத்துக் கொள்ளுவோம். அதாவது,

முதலாவது, பூரண சுயேச்சைத் தீர்மானத்தை பின்பற்றுவதாய் சம்மதித்தது,

இரண்டாவது, நேரு கமிட்டி அறிக்கையை ஒப்புக் கொள்ளுவது,

மூன்றாவது, இரண்டு வருஷத்தில் நேரு அறிக்கைப்படி சர்க்கார் சுயராஜியம் கொடாவிட்டால் ஒத்துழையாமை செய்வது.

திரு. காந்தி சென்ற வருஷத்திய சென்னை காங்கிரசிற்கு வந்திருந்தும் சில சிஷ்யர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு பூரண சுயேச்சைத் தீர்மானத்தை எதிர்க்காமல் தாராளமாய் நிறைவேற்ற விட்டு விட்டு, காங்கிரஸ் முடிந்து நாலைந்து நாள் பொறுத்து அத்தீர்மானத்தை “விளையாட்டுப் பிள்ளைத் தனம்” என்று தனது “யங் இந்தியா”வில் எழுதி பரிகாசமும் செய்துவிட்டு இப்போது கொஞ்சமும் பொறுப்பும் கவலையும் இல்லாமல் பூரண சுயேச்சைத் தீர்மானத்தை தான் பின்பற்ற சம்மதித்திருப்பதாய் சொல்லுவது நாணயமாகுமா என்று கேட்கின்றோம்.
இரண்டாவது,

ஜாதி வகுப்புச் சச்சரவுகளும் ஜாதி உயர்வு தாழ்வுக் கொடுமைகளும் தீர்ப்பதற்கு யோக்கியமான முறைகள் ஒன்றும் இல்லாத நிலையில் புதிய சீர்திருத்தத்தை கேட்பது பொறுப்புள்ள அரசியல்வாதிக்கோ பொதுநல
வாதிக்கோ யோக்கியமான காரியமாகுமா என்று கேட்கின்றோம்.

எனினும், திரு. காந்தியவர்கள், நேரு திட்டத்தில் கண்ட பரிகாரங்
களே ஜாதி வகுப்பு ஒற்றுமைக்கும் கொடுமைகள் ஒழிவதற்கும் போதுமானது என்று மனப்பூர்வமாய் தன் மனசாக்ஷி அறிய நம்புகின்றாரா என்று கேட்கின்றோம்.

மூன்றாவதானது, ஒத்துழையாமைப் பூச்சாண்டி.

அதாவது, 2 வருஷத்திற்குள் சர்க்கார் நேரு திட்டத்தை ஒப்புக் கொள்ளாவிட்டால் ஒத்துழையாமை செய்வேன் என்பது. இதில் எவ்வளவு ஏமாற்றுதல்கள் நிறைந்திருக்கின்றன என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.

மறுபடியும் ஒத்துழையாமை செய்வேன் என்று சொல்லும் திரு. காந்தி முன் ஏன் ஒத்துழையாமையை நிறுத்தினார் என்பதற்கு யாராவது பதில் சொல்ல முடியுமா? இவரை நம்பி ஒரு கோடி ரூபாயும் கொடுத்து முப்பது ஆயிரம் பேர் 1, 2, 3, 4 தடவைகள் ஜெயிலுக்கும் போய் அவரவர்கள் பிழைப்பு, வாழ்வு, பதவி முதலியவைகளைக் கூட விட்டுவிட்டு இவர் பின் திரிந்தார்களே, அந்தச் சமயத்தில் ஏன் நிறுத்தினார்? இப்போது அதைவிட நல்ல சமயமா? அல்லது இரண்டு வருஷமாகி விட்டால் தயாராகிவிடுமா? என்ன எண்ணத்தைக் கொண்டு இந்த தீர்மானத்தை பிரேரேபித்தார்? சற்றும் பொறுப்பும் கவலையும் இல்லாமல் மற்ற பித்தலாட்டக்காரர்கள் சொல்லுகின்ற படி ஆடியிருக்கின்றார் என்பதைத் தவிர வேறு என்னசொல்ல முடியும்?

அதிலும் “பலாத்காரமற்ற ஒத்துழையாமை” என்று பேசியிருப்பது வெறும் கேலிக் கூத்தும் முன்னுக்குப் பின் முரணானதுமாகுமென்றே சொல்லுவோம். ஏனெனில் முன் ஒத்துழையாமையை நிறுத்தினதற்கு காரணம் சௌரீ சௌரா கொலை என்றே குறிப்பிட்டுவிட்டார். இப்போதும் கல்கத்தா காங்கிரசில் பேசுவதற்கு இரண்டொரு மணி நேரத்திற்கு முன்பு தமது “யங் இந்தியா” பத்திரிகையில் “நமது தேசத்தில் பலாத்காரம் என்பது காற்றைப் போல் எங்கும் நிறைந்து கிடக்கின்றது” என்று எழுதியிருக்கின்றார். அந்த இங்கிகூட இன்னம் காயவில்லை. அதற்குள் தான் மறுபடியும் பலாத்காரமற்ற ஒத்துழையாமை செய்யப் போவதாய் மிரட்டுவது கேலிக் கூத்தும் நாணய மற்றதும் ஆகும் என்று சொல்ல வேண்டியதோடு தாம் (காந்தி ஜீ) முன் சென்னைத் தீர்மானத்தைப் பற்றிச் சொன்னது போல் இத்தீர்மானங்களையும் விளையாட்டுப்பிள்ளைகள் கூடிச் செய்யும் வெறும் பேச்சுக்குச் சமான மானவை என்றுகூட சொல்லலாமா வேண்டாமா என்று கேட்கின்றோம். திரு. காந்தி, சைமன் கமீஷன் பகிஷ்காரத்தில் ஏற்படும் பலாத்காரச் செய்கை களையும் சமீபத்தில், பஞ்சாப்பில் நடந்த படுகொலைகளையும் தெரிந்து இப்படிச் சொன்னாரா அல்லது இவ்விரண்டும் அவருக்கு எட்டாமலே சொன்னாரா? என்பதை யோசித்தால், திரு. காந்தியின் பலாத்காரமற்ற தன்மைக்கு அர்த்தம் விளங்காமல் போகாது.

திருவாளர்கள் சத்தியமூர்த்திகளும் ஸ்ரீனிவாசய்யங்கர்களும், குப்புசாமிகளும், வரதராஜுலுக்களும், நேருக்களும், மாளவியாக்களும், ரங்கசாமி அய்யங்கார்களும், ராஜகோபாலாச்சாரிகளும் போன்றவர்கள் பேசுவதைப் பற்றியோ நடந்து கொள்வதைப் பற்றியோ நாம் இவ்வளவு முக்கிய ஸ்தானம் கொடுத்து சமாதானம் சொல்லவேண்டுவதில்லை. திரு. காந்தி போன்றவர்கள், அதாவது எதாவது ஒருவிதத்தில் மக்களின் செல்வாக்குப் பெற்றவர்கள் இம்மாதிரி -அதாவது தாங்கள் பேசுவதால் என்ன நேரிடும் என்பதைக் கவனியாமல் “பிடித்தவனுக்கெல்லாம் பெண்டாட்டி” என்பது போல் யார் என்ன சொன்னாலும் கிளிப்பிள்ளையைப் போல் – சொல்லிக் கொடுத்ததைச் சொல்லிவிடுவதென்றால், அது மக்களுக்கு எவ்வளவு ஆபத்தை உண்டாக்கி விடுகிறது என்பதை கவனித்தால் நமக்கு ஆத்திரமாக இருக்கின்றது.

சாத்வீகத்திலாவது, தீண்டாமை ஒழிப்பதிலாவது, ஒடுக்கப்பட்ட – தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட – மக்களின் கஷ்டத்தை நிவர்த்திப்பதிலாவது, திரு. காந்திக்கு 4,5 வருஷமாய் ஒரு கடுகளவு கவலையாவது இருக்கின்றதென்று யாராவது சொல்ல முடியுமாவென்று கேட்கின்றோம். தென்னாட்டுக்கு வந்து 3 லக்ஷம் ரூபாய் கொள்ளையடித்து அதை பார்ப்பனர் களுக்கு பாதகாணிக்கை வைத்து விட்டுப் போய்விட்டார், அது நம் பார்ப்பனர்களின் தேர்தல் பிரசாரத்திற்கும் ஆதிக்கத்திற்கும் கதரின் பேரால் செலவாகின்றது. அன்றியும் அது ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் புகுந்து பார்ப்பனரல்லாதார்களுக்கு கெடுதியை செய்து கொண்டு வருகின்றது. இவற்றையெல்லாம் அவரது நேரில் எல்லோரும் சொன்னார்கள். சற்றும் கவனிக்காமல் வந்ததை வரப்பற்றுவதிலேயே கவலையாய் இருந்துவிட்டார். தீண்டாமையைப்பற்றி கனவிலும் நினைப்பதில்லை. யாதொரு பிரசாரமும் செய்தவருமல்ல. சமத்துவத்திற்காவது சம சந்தர்ப்பத்திற்காவது அப் பக்கங்களில் தலை வைத்துக்கூட படுத்தவர் அல்ல. எப்படியாவது அவரை மகாத்மா என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம், தமது மடத்தில் வயிறு வளர்ப்பதே அவருக்கு திருப்தி போல் காணப்படுகின்றது.

எனவே, காங்கிரஸ் தீர்மானம் என்பது பித்தலாட்ட தீர்மானமாயிருப்பது வழக்கமானாலும் திரு. காந்தி அவர்களும் இவற்றில் இவ்வளவு நேரடியாய் பங்கெடுத்துக் கொள்வதென்பது சற்றும் சகிக்கக் கூடியதல்ல
வென்பதற்காகவே இவ்வளவு எழுதினோம். எந்தக் காரணத்தைக் கொண்டும் நமது மக்கள் இனி ‘ஒத்துழையாமை’, ‘பூரண சுயேச்சை’ என்கின்ற நாடகங்களில் கலந்து கொள்வது இது சமயம் சிறப்பாக பார்ப்பனரல்லாத மக்களுக்கு தற்கொலையாகவே முடியும். காலம் சென்ற ஒத்துழையாமையின் பயனாய் ஏற்பட்ட நிலைமை இன்னமும் நமது நாட்டு மக்களின் மானத் தையும் நாணயத்தையும் பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் ஒத்துழையாமையின் தலைவர்களும் சிஷ்யர்களும் மாத்திரம் இன்னமும் மடாதிபதிகளாகவும் மடத்தாண்டிகளாகவும் பெருமையும் பிழைப்பும் பெற்று வாழ்கின்றார்கள்
.
எனவே கடைசியாக பார்ப்பனரல்லாத மக்களுக்கு, சிறப்பாக தாழ்த்தப் பட்ட – ஒடுக்கப்பட்ட, விலக்கப்பட்ட தீண்டப்படாத மக்களுக்கு நாம் சொல்வது யாதெனில் சைமன் கமீஷனிடம் நமது நிலைமையை ஒளிக்காமல் யோக்கியமான முறையில் உள்ளது உள்ளபடி தெரிவித்துவிட வேண்டி யதுதான். இந்தியா மந்திரியும் சைமன் கமிஷனும் பார்லிமெண்டும் நமது நிலைமையை உணர்ந்துவிட்டார்கள் என்பதாக நாம் சந்தேகமற அறிந்த பிறகு அவர்கள் இதற்குத் தக்க பரிகாரம் செய்யவில்லை என்பது நமக்கு தீர்மானமாகத் தெரிந்து விட்டால், அதன்பிறகு காங்கிரசும் திரு. காந்தியும் செய்யும் ஒத்துழையாமை இந்த சர்க்காரை ஆட்டுமா? அல்லது நமது இயக்கம் செய்யும் ஒத்துழையாமை இந்த சர்க்காரை ஆட்டுமா என்பது சற்று பொறுமையோடு இருந்து பார்க்க வேண்டிய விஷயமாகும்.

முடிவாக சர்க்காருக்கு நாம் செய்யும் எச்சரிக்கை என்னவென்றால், இந்த ஜால வேடிக்கைத் தீர்மானத்தை மதித்தோ அல்லது அந்த மாதிரி ஒரு பொறுப்பும் கவலையும் நாணயமும் அற்ற சுயநலக்கூட்டத்தை எப்படியாவது கைக்குள் போட்டுக் கொண்டால் இன்னமும் கொடுமையான முறை வைத்து நாட்டைச் சுரண்டி கொள்ளையடித்துக் கொண்டிருக்கலாமென்றோ சர்க்கார் மனப்பால் குடிப்பார்களானால் அதைப் போன்ற ஒரு முடிவு காலம் அவர் களுக்கு வேறு இருக்காது என்றே சொல்லுவோம். காங்கிரஸ், உத்தியோகத் திற்கும் மற்றவர்களை அழுத்தி வைப்பதற்கும் ஆசைப்பட்டு பயங்காளித் தனமான தந்திரங்கள் செய்கின்றது. அவர்கள் தோற்றால் அவர்கள் பிழைப்புக்கு பிச்சை எடுக்கும் தொழில் இருக்கின்றது.

ஆனால் நமதியக்கமோ அப்படிக்கில்லாமல் சுயமரியாதையையும் சமத்துவத்தையும் சமசுதந்திரத்தையும் லக்ஷியமாகக் கொண்டு யோக்கியமான முறையில் வெளிப்படையாக வேலை செய்யத் தீர்மானம் செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நமதியக்கம் தோற்றால் ஒரு கை பார்த்து உயிர்விடுவதைவிட வேறு வழியில்லை என்பதை சர்க்காருக்கு நண்பர் முறையில் தெரிவிக்கின்றோம்.

குடி அரசு – தலையங்கம் – 30.12.1928

You may also like...

Leave a Reply