திருப்பதி வெங்கிடாசலபதியின் நன்றி கெட்ட தன்மை
திருப்பதி வெங்கிடாசலபதி என்னும் கடவுளால் நமது நாட்டிற்கு உள்ள நஷ்டத்தைப் பற்றி சென்ற வாரம் தெரியப்படுத்தி இருந்தோம். அதாவது, மக்களுக்கு வருஷத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் போல் செலவு ஆவதைப் பற்றியும் சுமார் 7,8 கோடி ரூபாய் சொத்து வீணாகிறது என்பது பற்றியும் எழுதி இருந்தோம்.
தேசத்துக்கு இவ்வளவு நாசத்தை உண்டாக்கி இவ்வளவு பூசையும், உற்சவத்தையும், நகையையும், வாகனங்களையும், பூமியையும், கட்டிடங் களையும், ஜமீன்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் கடவுள் சற்றாவது யோக்கியப் பொறுப்பின்றியும் நன்றி அறிதலின்றியும் நடந்து கொள்வதைக் கண்டால் அந்த மாதிரிக் கடவுளை நமது நாட்டில் வைத்திருப்பது முட்டாள் தனமும் பேடித்தனமும் ஆகும் என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில், இவ்வளவு போக, போக்கியத்தையும் அனுபவித்துக் கொண்டு அந்தக் கடவுளின் வேலையை பார்த்து வருபவரும், கடவுளுக்கே தந்தை என்றும், மகன் என்றும் சொல்லத் தகுந்தவருமான மகந்து என்பவருக்கு பைத்தியம் பிடிக் கச் செய்து அவருடைய சிஷ்யர்களையும் ஜெயிலில் அடைக்கச் செய்து போலீ சாரால் மகந்துவைப் பிடித்து சென்னை பைத்திய சிகிச்சைக்கு பலாத்காரமாய் கொண்டு போகும்படி செய்திருக்கின்றதென்றால் வெங்கிடாசலபதி கடவுளின் நன்றிகெட்ட தன்மைக்கு வேறு சான்று என்னவேண்டும்?
குடி அரசு – கட்டுரை – 24.11.1929