பார்ப்பனரின் தேசீயம்
குழந்தை விவாகத்தை தடைப்படுத்தும் சாரதா மசோதா இந்திய சட்டசபைக்கு வந்தது முதல் அது நிறைவேறும் வரை நமது பார்ப்பனர்கள் செய்த தடைகளும் சூழ்ச்சிகளும் கொஞ்ச நஞ்சமல்ல என்பது யாவரும் அறிந்ததாகும். இவ்வளவு தடைகளையும் சமாளித்து சர்க்கார் தயவினாலேயே அது நிறைவேற்றப்பட்டு ராஜப் பிரதிநிதி அனுமதியும் பெற்று சட்டமான பிறகு மறுபடியும் நமது பார்ப்பனர்கள் ஊர் ஊராய் கூட்டங் கூடி அச்சட்டத்தைக் கண்டித்து கூட்டம் போட்டு பேசி வருகின்றார்கள். நூற்றுக்கு தொண்ணூறு பார்ப்பனர்களுக்கு இனிமேல் தாங்கள் இவ்விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியாது என்பது தெரிந்திருந்தும் கூட அடுத்த தேர்தலில் பார்ப்பனர்கள் ஒன்று சேர்வதற்கும் தேர்தல் கிளர்ச்சிக்கு ஒரு வழிகண்டுபிடிப்பதற்கும் இதை உபயோகித்துக் கொள்ளலாமா என்கின்ற சூழ்ச்சியின் பேரிலேயே இந்த சாரதா மசோதா கண்டனம் என்னும் செத்த பாம்பை ஆட்டி வருகின்றார்கள். தங்க ளுக்கு உதவியாக மகமதியர்களையும் கிளப்பிவிட்டு அடுத்த தேர்தலுக்கு அவர்களை தங்களுடன் சேர்த்துக் கொள்ளலாமா என்றும் சூழ்ச்சி செய்கின் றார்கள். இதுகடைசியாக கிலாபத்து கமிட்டியினால் பார்ப்பனர்கள் எவ்வளவு லாபம் அடைந்தார்களோ. அதுபோலவும், அது கிலாபத்திற்கு எவ்வளவு பயனளித்ததோ அதுபோலவும் தான் முடியுமே ஒழிய, ஜாக்கிரதையும் முன் யோசனையும் உள்ள மகமதிய மக்கள் இதினாலெல்லாம் ஏமாந்து போக மாட்டார்கள். இவர்களாகவே வேண்டுமானால் கூட்டங்கள் கூடி வானமளாவப் பேசியதாகவும், அபிப்பிராயங்கள் கொடுத்ததாகவும், சத்தியாக்கிரங்கள் செய்வதாக தீர்மானித்ததாகவும் பத்திரிகையில் எழுதிக் கொள்ளலாமே தவிர, மற்றப்படி இவர்களுக்கு காரியத்தில் ஒரு காரியமும் செய்ய யோக்கியதை இல்லை என்பது நமக்கு நன்றாய்த் தெரியும். ஏனென்றால், இந்தக் கூட்டத்தார் களும் திரு.சத்தியமூர்த்தி முதலிய சாஸ்திரிகளும் மூன்று வருடத்திற்கு முன் இந்து தேவஸ்தான சட்டம் செய்யப்படும்பொழுது “மதத்திற்கு ஆபத்து வந்துவிட்டது” “மதத்தில் சர்க்கார் பிரவேசித்துவிட்டார்கள்” “இந்த சர்க்காரை ஒழித்துவிட வேண்டும்” ஆதலால் “எங்களுக்கு ஓட்டுக் கொடுங்கள்” என்று கூக்குரல் போட்டு, அந்த சட்டத்திற்கு விரோதமாக பாமர மக்களின் கையெ ழுத்து வாங்கி அனுப்பும்படி அச்சுப் பாரங்களை பார்ப்பனப் பத்திரிகைகள் மூலம் ஊர் ஊராய் அனுப்பி, பொய்க் கையெழுத்துகள் லட்சக்கணக்காய் போட்டு வைசிராயிக்கனுப்பி மடாதிபதிகள் பணத்தையும் லட்சக்கணக்காய் கொள்ளையடித்து வயிறு வெடிக்கத் தின்றுவிட்டு மேடை மீது ஏறி எவ்வளவோ வீரம் பேசிய கூட்டத்தார், இப்போது அந்த சட்டத்திற்கும் அந்த இலாக்கா வுக்கும் குலாம்களாய் இருப்பதோடு சிறிதும் மான வெட்கமில்லாமல் நேற்றைய சட்டசபை கூட்டத்தில் திரு.சத்தியமூர்த்தி சாஸ்திரியாரே ‘தேவஸ்தானக் கமிட்டிக்கு ஏன் பார்ப்பனர்களை நியமிக்கவில்லை” என்று அந்த இலாக்கா மந்திரியை கேள்வி கேட்டு, தகுந்த யோக்கியதையுடைய பார்ப்பனர்கள் கிடைக்கவில்லை என்று மந்திரி பதிலும் சொல்லி, இந்தக் கேள்வி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தத்துவத்தைக் கொண்டு கேட்கப்படுகின்றதா? என்று கேட்டதற்கும் பதில் சொல்லாமல் மந்திரியைக் கொண்டு ஆம் என்று சொல்லச் செய்த வீரராகிய திரு.சத்தியமூர்த்தி அவர்கள் மறுபடியும் சாரதா மசோதாவைப் பற்றி சென்னையில் பேசியிருப்பதைப் பார்க்கும்போது நாளைக்கு இவரே ஏன் அது சம்பந்தமான உத்தியோகங்கள் தங்கள் கூட்டத்தாருக்கு கொடுபடவில்லை என்று கேட்பதில் சந்தேகப்பட இடமுண்டா? என்று கேட்கின்றோம். எனவே, இப்பொழுது இவர் என்ன பேசியிருந்த போதிலும் இந்த சத்தியமூர்த்தி கூட்டத்தாரே ஆண், பெண் அடங்கலும் நாளைக்கு இந்த சட்டத்தை அமுலில் கொண்டுவரும் உத்தியோகங்களுக்கு பல்லைக் கெஞ்சப் போகிறார்கள் என்பதிலும் இவர்களே சட்டத்தை சரிவர நடத்திவைக்கப் போகிறார்கள் என்பதிலும் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை.
நிற்க. திரு.சத்தியமூர்த்தி சாரதா மசோதா விஷயமாகப் பேசியிருப்பவை களை கவனிப்போம்.
அதாவது. சர்க்கார் சமூக சம்பந்தமான சட்டம் செய்யக் கூடாதென்றும், பார்ப்பனர்களின் ஒத்துழைப்பை சர்க்கார் இழந்துவிடக்கூடும் என்றும், பார்ப்பனர் கள் இச்சட்டத்திற்கு பணிந்து விடாமல் மீறி சத்தியாக்கிரகம் செய்யவேண்டும் என்றும் பேசி இருக்கின்றார். இந்தப் பேச்சுக்கு தலைமை வகித்தவர் சென்னை மாகாண வருணாசிரம கமிட்டி தலைவர் திரு.டி .ஆர். ராமச்சந்திர அய்யர் ஆவார். திரு.சத்தியமூர்த்தியோ பூரண சுயேச்சைக்கட்சி காரியதரிசியாவர். எனவே, பூரண சுயேச்சைக்கும் வருணாசிரம தருமத்திற்குமுள்ள இரகசிய சம்பந்தமும் சூழ்ச்சியும் இந்தக் கூட்டுறவால் நன்கு விளங்கும். தவிரவும் திரு. சத்தியமூர்த்தி பேசும்பொழுது அதுவும் ஒரு கட்டிடத்திற்குள் பேசும்பொழுது கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டு போலீசுக்கு சொல்லி அனுப்பி இரண்டு போலீஸ் சேவகர்களைத் தருவித்து வைத்துக்கொண்டு பேசி இருக்கிறார். இதிலிருந்து இவருடைய சமுக சீர்த்திருத் தமும் தேசியமும் சுயராச்சியமும் வெள்ளைக்காரர் நீங்கிய சுயேச்சையும் எவ்வ ளவு வீரமுள்ளது என்பதை வாசகர்களே உணர்ந்து கொள்ளலாம்.
மிருகப் புணர்ச்சியைவிட மிகக் கேவலமான குழந்தை புணர்ச்சியைத் தடுக்க இவர்களாலும், இவர்கள் மதத்தாலும், இவர்கள் காங்கிரசாலும் தேசியத்தாலும், பூரண சுயேச்சைப் பிரசாரத்தாலும், ஆயிரக்கணக்கான வருஷங்களாக செய்துவரும் சீர்திருத்தத்தாலும், முடியாத ஒரு காரியத்தை சர்க்கார் செய்தால், சர்க்கார் செய்யக் கூடாதென்றும், அதற்கு மக்கள் கீழ்ப்படியக் கூடாதென்றும், அந்தச் சட்டத்தை மீற வேண்டும் என்றும், சர்க்காரோடு பார்ப்ப னர்கள் ஒத்துழைக்கக் கூடாதென்றும் சொல்லும் இவரின் ஒத்துழையாமையும் தேசியமும் என்ன கருத்துக் கொண்டது என்பதை வாசகர்களையே யோசித்துப் பார்க்கவேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
இந்தக் கூட்டத்தாரின் தேசியத்தின் கீழும் காங்கிரசின் கீழும் இந்திய மக்கள் என்றைக்காவது மனிதத் தன்மையை அடைய முடியுமா என்பதையும் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.
தேவஸ்தான மசோதா மத விரோதம், தேவதாசிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம், விபசாரிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம், பச்சைக் குழந்தைகளைப் புணரும் கொடுமையை ஒழிக்கும் மசோதா மத விரோதம் என்பதானால் அப்படிப்பட்ட அயோக்கிய ஒழுக்க ஈனமான இழிவான மதங் களை இந்த பிரிட்டிஷ் சர்க்கார் தயவில்லாமல் அழிக்கவோ ஒழிக்கவோ முடியுமா என்றுதான் தேசீய வீரர்களையும், காங்கிரஸ் பக்தர்களையும், ஒத்துழை யாமை தியாகிகளையும், சீர்திருத்த மகாத்மாக்களையும் கேட்கின்றோம்.
உலகம் போய் கொண்டிருக்கின்ற வேகத்தில் அதாவது ஆகாயத்தில் பறப்பதற்கு சட்டமும், தண்ணீருக்குள் பறப்பதற்கு சட்டமும் செய்து கொண்டி ருக்கின்ற காலத்தில், மனிதனையும் குதிரைகளையும் யந்திரத்தினால் செய்து கொண்டிருக்கும் காலத்தில், ஒரு அவுன்சு எடை சூரணத்தினாலும் ஒரு அவுன்சு எடை திராவகத்தினாலும் பதினாயிரக்கணக்கான மக்களை கொல்ல வழி கண்டு பிடித்திருக்கின்ற காலத்தில், பதினான்காயிரம் மையிலுக்கு அப்பால் இருந்து மத்தியில் கம்பி இல்லாமல் பேசவும் கம்பியில்லாமல் விளக்கு எரிய வைக்கவும் வேலை செய்து கொண்டிருக்கும் காலத்தில், ஆணை பெண்ணாக்கி, பெண்ணை ஆணாக்கி பரீiக்ஷ பார்க்கின்ற காலத்தில், நமது நாட்டில் குழந்தைகளை புணரக்கூடாது என்று சட்டம் செய்யும் வேலையில் ஒரு கூட்டம் ஈடுபடவும், அதை மீறி நடக்க ஒரு கூட்டம் வீரர்கள் அதுவும் “தேசீய வீரர்கள்” ஒத்துழையாமைக்குத் தயாராகவும் இருந்தால் நமது நாட்டின் பெருமையை என்ன என்று சொல்லுவது? என்பது நமக்கே விளங்கவில்லை! இந்த வீரர்களை எப்படி மதிப்பது? எப்படி பின்பற்றுவது என்பதும் நமக்கு விளங்கவில்லை. நம்மைப் பொறுத்தவரை இந்த மாதிரி வீரர்களைப் பற்றி கவலை இல்லையா னாலும் “சுயமரியாதை இயக்கத்தின் எல்லாக் கொள்கைகளையும் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் சர்க்காரோடு ஒத்துழைப்பதாக மாத்திரம் ஒப்புக் கொள்ள முடியவில்லை” என்று சொல்லும் ஒத்துழையாமை தியாகிகளு டையவும்,
“சுயமரியாதை இயக்கக் கொள்கையெல்லாம் சரிதான் ; ஆனால் அதில் தேசியமில்லை’ என்கின்ற தேசீய வீரர்களுடையவும்,
“சுயமரியாதை இயக்கம் நாட்டுக்கு நல்லதுதான்; ஆனால், அது மதத்தை எதிர்க்கின்றது” என்கின்ற மதப் பக்தர்களுடையவும்,
“சுயமரியாதை இயக்கம் வேண்டியதுதான்; ஆனால் அது தனது கொள்கையை நிறைவேற்ற சர்க்கார் தயவை எதிர்ப்பார்க்கின்றது” என்கின்ற தேசீய சீர்த்திருத்த மகான்களையும் உடைய அறிவையும் யோக்கியதையையும் எண்ணத்தையும் நினைக்கும்போது தான் நமது நாட்டின் அயோக்கியத்தனமும் வெளியாவதோடு, இந்த மாதிரியான கூட்டத்தாரை விட திருவாளர்கள் சத்தியமூர்த்தி, எம்.கே.ஆச்சாரி, ஏ.ரங்கசாமி அய்யங்கார். சி.இராஜகோபாலாச் சாரி, டி.ஆர். ராமச்சந்திரய்யர் முதலியவர்கள் யோக்கியர்கள் என்றே தோன்று கின்றது. ஏனெனில் சர்க்கார் இல்லாமல் சட்டம் செய்ய முடியுமா? சட்டமில்லா மல் காரியம் நடக்குமா? காரியம் நடக்கும்போது மதங்களையும் மனுதர்ம சாஸ்திரங்களையும் பராசர ஸ்மிருதிகளையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால் எடுத்து எறியாமல் சும்மா இருந்தால் அனுபவத்தில் நடத்த முடியுமா என்று கேட்கின்றோம். அது மாத்திரம் அல்லாமல் திரு.சத்தியமூர்த்தி அவர்கள் இந்த சட்டம் கொண்டு வந்த சாரதா அவர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று பேசி இருக்கிறார். எனவே திரு.சாரதா அவர்கள் திரு.சத்திய மூர்த்தியின் கடவுளுக்கு பயந்து இருந்தால் இந்த சட்டம் முடிந்து இருக்குமா என்றும் கேட்கின்றோம். நிற்க,
இது விஷயத்தில் “பச்சை தேசிய” பத்திரிகையாகிய அதாவது சர்க் காரை கண்ணால் பார்த்தால் கண்ணை லோஷன் போட்டு கழுவ வேண்டும் என்றும், சர்க்காரைப் பற்றி காதில் கேட்டால் காதில் புருஷை விட்டுத் துடைக்க வேண்டும் என்றும் மனதில் நினைத்தால் மனதை விளக்குமாற்றால் தேய்த்து கழுவ வேண்டும் என்றும் கருதிக் கொண்டு இருக்கும் தேசீய பத்திரிகையாகிய தமிழ்நாடு பத்திரிகை திரு.சத்தியமூர்த்தியின் இந்த தேசீயப் பிரசங்கத்தை பற்றி எழுதுவதாவது:-
“சமூகங்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகளை நீக்க சர்க்கார் சட்டமும் சவுக்கடியும் இல்லாமல் முடியாது.”
“புத்தபகவான் சர்வத் தியாகங்கள் செய்து நாடெங்கும் சுற்றிப் பிரசாரம் செய்தும் முடியாமல் போன அநேக காரியங்கள் சர்க்கார் சட்டத்தினாலேயே நடத்த முடிந்து இருக்கிறது.”
“விதவைகளை உயிருடன் நெருப்பிலிட்டுக் கொளுத்தியதும், உயிர் இருக்கும்போதே கங்கையில் தூக்கிப் போட்டதும், குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கோயிலில் நரபலியிட்டதும், கீழ் ஜாதியாரை மேல் ஜாதியார் கொன்றாலும் கேள்வியில்லை என்று இருந்த சாஸ்திர நீதியும் பிராமணனைத் தவிர மற்றவன் படித்தால் பாபம் என்று இருந்த தடையும் சர்க்கார் சட்டம் செய்த பிறகே நீங்கின”.
“வழக்கங்களிலும் மதக் கொள்கைகளிலும் சர்க்கார் தலையிடக் கூடாது என்று வைதீகர்கள் வாதிப்பது முற்றிலும் தவறாகும்.”
“இந்தியா சுயராஜ்ஜியம் அடைய வேண்டும் என்பதில் முன்னிலையில் இருக்கும் சத்தியமூர்த்தி சமூக தர்மத்தை தடுக்க அடிக்கடி கிளம்பிவிடுவது ஆச்சர்யமாயிருக்கின்றது”
என்பதாக எழுதி இருக்கின்றது. இனி மற்ற தேசீய வீரர்களுக்கும் தேசாபி மானிகளுக்கும் ஒத்துழையாமை தியாகிகளுக்கும் என்று இந்த மாதிரி புத்திவருமோ தெரியவில்லை. முடிவாக நாம் ஒன்று சொல்லுகின்றோம். அநேகமாக இந்த பிரச்சினையையே ஒரு சமயம் அடுத்த தேர்தல் பிரச்சினை யாகக் கொண்டு வரலாமா என்று நமது பார்ப்பனர்கள் கருதிக்கொண்டு இருப்ப தாக தெரிகின்றது. ஏனெனில், இது சமயம் அவர் கைவசம் எவ்வித திட்டமும் இல்லாமல் போய்விட்டது. அதாவது கதர் சங்கதியும், தீண்டாமை சங்கதியும், மதுவிலக்கு சங்கதியும் வெறுத்துப் போய்விட்டது. சர்க்காரை எதிர்ப்பதும் உத்தியோகம் ஏற்றுக்கொள்ளாததும் முட்டுக்கட்டை போடுவதுமான சங்கதி களும் போன தேர்தல் முடிவில் அதாவது மந்திரிகளை நியமித்ததில் வெளியாய் விட்டது.
சைமன் கமிஷன் பகிஷ்காரமும், திருவாளர்கள் காந்தியும், நேருவும், எல்லோரையும் சட்டசபையை விட்டு வெளியேறும்படி கேட்டும் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்தும் யாரும் வெளியேறாததினாலும் சென்னையில் தேசீய பூசை நடந்ததினாலும், அதற்கும் யோக்கியதை இல்லாமல் போய் விட்டது. மற்றப்படி வகுப்புவாதத்தைப் பற்றிச் சொல்வதற்கும் யோக்கியதை இல்லாமல் போய்விட்டது. ஏனெனில், பார்ப்பனர்களே வகுப்புவாதம் பேச வேண்டி வந்துவிட்டதால் அதுவும் போய்விட்டது. கடைசியாக சுயமரியாதை இயக்கம், நாஸ்திக இயக்கம், மத துரோக இயக்கம், சாஸ்திர மறுப்பு இயக்கம் என்று சொல்லி வெளியில் புறப்படலாம் என்று கூலி கொடுத்து ஆஸ்திக சங்கம் ஏற்படுத்தி காங்கிரஸ் பணம் இரண்டு மூன்று ரூபாயும் கொடுத்து பிரசாரம் செய்து பார்த்து, அதுவும் நரிதின்ற கோழி கூப்பிடுவது போல் ஆகிவிட்டது.
இனி அவர்களுக்கு இதைத் தவிர வேறு ஒரு கதியும் இல்லை. ஆகையால் பொது ஜனங்கள் ஜாக்கிரதையாய் தேர்தலில் இந்த கூப்பாடு பலிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுமாய் எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 20.10.1929