தாரா சசாங்கம் (இரண்டு மாணாக்கர்கள் சம்பாஷணை)

– சித்திரபுத்திரன்

ராமசேஷன் : அடே ஜோசப்! இன்று நல்ல டிராமா என்று நோட்டீஸ் பார்த்தேன் போகலாமென்றிருக்கிறேன்; நீயும் வருகிறாயா?

ஜோசப் : அது என்னடா அப்பா அப்பேர்ப்பட்ட நல்ல டிராமா? கொஞ்சம் சொல்லு பார்க்கலாம்?

ராமசேஷன் : அதா? தாரா சசாங்கம்; நல்ல சீன்களும் நல்ல பாட்டு
களும் உடையது.

ஜோசப் : என்னடா என்னமோ கொசமுசாங்கம் என்று சொல்லுகிறாய் அதன் கருத்து என்ன?
ராமசேஷன் : உனக்கென்னடா தெரியும்; நீயோ தற்குறி அது உன் வாயிலேயே நுழைவதில்லை; அதற்கு யாரு என்ன செய்வார்கள்?

ஜோசப் : அந்தக் கிரகமெல்லாம் உன் வாயிலேயே நுழையட்டும், நல்ல வேளையாக என் வாயில் நுழையவேண்டாம். அதன் கருத்தென்ன சொல்லு பார்ப்போம்?

ராமசேஷன் : தாரா சசாங்கம் என்றால் தாரை சந்திரனுக்கு நிர்வாணமாய் எண்ணெய் தேய்க்கும் பாகத்தை நாடக ரூபமாய் பிரத்தியக்ஷத்தில் காட்டுவார்கள்.

ஜோசப் : அப்படியா? தாரை என்றால் என்ன? சந்திரன் என்றால் என்ன? இரண்டு பேருக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் சொல்லு அப்புறம் நிர்வாணத்தைப் பற்றியும் எண்ணை தேய்ப்பதைப் பற்றியும் கவனிக்கலாம்.

ராமசேஷன் : இனி உனக்கு அஸ்திவாரத்திலிருந்து சொல்லியாக வேண்டும்போல் இருக்கிறது.
ஜோசப் : சும்மாதானா ஒருமனிதன் நிர்வாணத்தைப் பார்க்க வருகின்றது? அது இன்னது என்று கூடத் தெரிய வேண்டாமா?

ராமசேஷன் : சொல்லுகிறேன் கேள்.

ஜோசப் : சொல்லப்பா சொல்லு.

ராமசேஷன் : தேவர்களுக்கெல்லாம் குருவாக பிரகஸ்பதி என்பதாக ஒரு தேவகுரு உண்டு.
ஜோசப் : பொறு, பொறு, யாருடைய தேவர்களுக்கு?

ராமசேஷன்: எங்கள் தேவர்களுக்கு.

ஜோசப் : சரி, சரி, அதுதான் கேட்டேன், எல்லோருடைய தேவர் களுக்கு என்று எங்கே சொல்லி விட்டாயோ என்னமோ என்றுதான் கேட்டுப் பார்த்தேன். அப்புறம்?

ராமசேஷன் : அந்த தேவகுருவுக்கு தாரை என்கின்ற ஒரு பெண்சாதி உண்டு. தேவர்களுடைய குழந்தைகளையெல்லாம் அந்த பிரகஸ்பதியிடம் கொண்டுவந்து விட்டுத்தான் கல்வி கற்பிக்கின்றது வழக்கம்.

ஜோசப் : நிறுத்து நிறுத்து, அப்படியானால் அந்த பிரகஸ்பதி யென்கின்றவர் ஒரு வாத்தியாரா?

ராமசேஷன் : ஆமாப்பா, குரு என்றால் என்ன? வாத்தியாரென்றால் என்ன? இரண்டும் ஒன்றுதானே உனக்கு இது கூடத் தெரிவதில்லையே! உன்னோடு எப்படி அழுவது?

ஜோசப் : இரப்பா இரு, அதுக்குள்ளே கோபித்துக் கொள்ள வேண்டாம். குரு என்றால் இந்தப் பல்லக்கில் ஆனை, குதிரை, ஒட்டகை, மேளம், வாத்தியம் இதுகளுடன் மிரவணை (ஊர்கோலம்) வந்து கரண்டியில் தண்ணீர் விற்று பணம் கொள்ளையடிக்கிறானே அந்த ஆசாமியோ என்னமோ அவனுக்குச் சொந்தப் பெண்டாட்டி இல்லையென்று சொல்லுகிறார்களே, அப்படியிருக்க நீ இந்த குருவுக்கு பெண்டாட்டி இருப்பதாக சொல்லுகிறாயே, என்னப்பா அதிசயமாயிருக்குது என்றுதான் யோசிக்கின்றேன்.

ராமசேஷன் : அடே இந்த குரு வேறேயடா; நீ ஒன்றும் தெரியாமல் உளறாதே.

ஜோசப் : அப்படியானால் அந்த குருவுக்கு என்ன பேரு?

ராமசேஷன் : அவர்களுக்கும் குரு என்றுதான் பெயர். அவர்களெல்லாம் சமயாச்சாரியார்கள், மடாதிபதிகள், லோக குரு, குலகுரு, ஆச்சாரி யார்கள், பண்டார சன்னதிகள், சுவாமிகள் என்றும் பலவிதமாகச் சொல்லப் படுபவர்கள். நான் சொல்லுகின்ற இவர் தேவகுரு அதாவது தேவர்களுக்கு உபாத்தியாயர் என்று சொல்லப்படுபவர்.

ஜோசப் : நில்லு நில்லு; அவசரமாகப் போகாதே; எனக்குப் புரிய வேண்டாமா? முன் நீ சொன்னாயே லோககுரு என்று அந்த லோக குரு என்பவர் எந்த லோகத்திற்கு குரு.

ராமசேஷன் : என்னப்பா உன்னோடு பெரிய தொல்லையாய் இருக்கின்றது? ஒவ்வொன்றும் உனக்குச் சொல்லித் தொலைக்க வேண்டும் போல் இருக்கின்றது.

ஜோசப் : சும்மாதானா நிர்வாணத்தைப் போய் பார்க்கின்றது. அது இன்ன நிர்வாணம் என்று புரிய வேண்டாமா?

ராமசேஷன் : கேலி பண்ணாதே, விவரமாய்ச் சொல்லுகிறேன் கேள். எங்கள் ரிலிஜனை (மதத்தை) நீ படித்தால் தானே தெரியும். நடுவில் புகுந்து கொண்டு கேட்டால் சுலபத்தில் புரியும்படி சொல்ல முடியுமா?

ஜோசப் : ஓ ஓஹோ! இதெல்லாம் உங்கள் ரிலிஜனை (மதத்தை)ச் சேர்ந் ததா? அப்படியானால் கவனமாய் கேட்கின்றேன்; சொல்லு பார்ப்போம்.

ராமசேஷன் : லோக குரு என்பது ஒரு பட்டப்பெயர். அவர் பார்ப்பனர்களில் ஒரு கூட்டத்தார்க்கு மாத்திரம் சாமியார். அந்தக் கூட்டத் தாரின் செல்வாக்கினாலும் மற்ற மக்களின் அறிவீனத்தினாலும் அவரை எல்லாருக்கும் குரு என்று சொல்லி பணம் சம்பாதிக்க ஏற்பாடு செய்திருக் கின்றார்கள். இப்படிப் பல பேர்வழிகள் உண்டு. அது போலவே ஒவ்வொரு கூட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு சாமியார் என்பவர் உண்டு. அவர்களை எல்லாம் இம்மாதிரி கவுரவமான பெயர்களால் அழைக்கின்றது எங்கள் வழக்கம். ஏனென்றால் ஒருவகுப்பு சாமியாரை வேறு ஒரு வகுப்பார் பரிகாசம் பண்ணினால் அப்புறம் அந்த வகுப்புச் சாமியாரை மற்ற வகுப்பார் பரிகாசம் செய்வார்கள். அப்புறம் ஒருவருக்கும் யோக்கியதை இல்லாமல் போய்விடும். ஆதலால் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுகின்றது வழக்கம். இந்த முறையில் அவர்களுக்கு அந்தப் பெயர் கிடைத்திருக்கின்றது. ஆதலால் தேவகுரு என்பவர் இதில் சேர்ந்த வருமல்ல. இந்த லோகத்தில் இருப்பவருமல்ல.

ஜோசப் : சரி இந்த சாமியார்களால் உங்களுக்கு என்ன லாபம் சொல்லு பார்க்கலாம்.
ராமசேஷன் : லாபம் என்ன; நஷ்டந்தான். வருஷா வருஷம் வந்து வரி வசூல் செய்வதுபோல் பணம் கொள்ளையடித்துக் கொண்டு போகின்றது அல்லது மடத்துக்கு முன்னோர்களால் விட்ட சொத்துக்களின் வரும்படிகளை அவர்கள் இஷ்டப்படி அனுபவிப்பது ஆகிய காரியங்கள் தவிர அவர்களால் மக்களுக்கு சாதிக்கப்படுவது ஒன்றும் கிடையாது.

ஜோசப் : எனக்கு நேரமாய்விட்டது. இந்த சாமியார்களைப் பற்றி மற்றொரு நாளைக்குப் பேசிக் கொள்ளலாம். இப்போது நிர்வாண காக்ஷிக்கு சம்மந்தப்பட்ட அந்த தேவகுரு சங்கதி சொல்லு சீக்கிரம் முடியட்டும்.

ராமசேஷன் : மேலே சொன்ன அந்த பிரகஸ்பதி என்கின்ற தேவ குருவுக்கு தாரை என்கின்ற ஒரு பெண்சாதி உண்டு. அந்த அம்மாள் ரொம்ப வும் அழகு வாய்ந்தவள். யௌவன பருவமுடையவள். இந்த பிரகஸ்பதி என்கிற குரு தாடியும் மீசையும் முளைத்துப் பார்க்கின்றதற்கு ‘கிழப்பிசாசு’ போல் இருப்பார். இப்படி இருக்கும் நாளையில் அந்த தேவகுருவிடம் படிப்பிக்க சந்திரனை அவன் தாய் தந்தையர்கள் பிரகஸ்பதியிடம் கூட்டி வந்துவிட்டார்கள்.

ஜோசப் : ஓடாதே ஓடாதே! கொஞ்ச நில்லு சந்திரன் என்று இப்போது சொன்னாயே அது யாரு.
ராமசேஷன் : அடமுட்டாளே! சந்திரன் என்றால் யார் என்று கூடவா தெரியாது. வானத்தில் தெரிகின்றதே. ராத்திரியில் வெளிச்சம் கொடுக்கின்றதே அந்த சந்திரன்தான். இது கூடவா சொல்லித் தொலைக்க வேண்டும்?
ஜோசப் : கோபித்துக் கொள்ளவேண்டாமப்பா! சும்மா தானா நிர்வாணத்தைப் பார்க்க வருகிறது?
மானத்தில் தெரிகின்ற சந்திரனா ஒருவருக்குக் குழந்தையாக பிறந்து பிரகஸ்பதி என்கின்ற குரு இடம் படிக்கக் கொண்டு போய் விடப்பட்டான்.

ராமசேஷன் : ஆமாம், ஆமாம், ஆமாம். உனக்கு நூறு தரம் சொல்லித் தொலைக்க வேண்டுமாக்கும்.

ஜோசப் : தெரியாதவனுக்கு என்னைப் போல் தற்குறிக்கு தெரியும் படியாய்ச் சொல்ல வேண்டாமா? அப்படியானால் நீர் சொல்லுகிற சந்திரன் பிறப்பதற்கு முந்தி மானத்தில் சந்திரன் இருந்ததா இல்லையா?
தவிர பிஸ்பிஸ்பதியிடம் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மானத்தில் என்ன இருந்தது? எப்போதும் அமாவாசையாகவே இருந்ததா? சற்று விளக்கு பார்ப்போம்.

ராமசேஷன் : என்னப்பா இழவு, நீ கிருஸ்தவன் என்பது சரியாய் இருக்கின்றது.
ஜோசப் : திடீரென்று அப்படிச் சொல்லி விடாதே. இதை உன் தம்பி கேட்பதாகவே நினைத்துக் கொண்டு சாமாதானம் சொல்லி விளங்கப் பண்ணப்பா.

ராமசேஷன்: என் தம்பி இந்த மாதிரி கேள்விகள் கேட்பானேயாகில் அப்போதே அவனை நன்றாய் உதைத்து இனிமேல் இம்மாதிரி அதிகப் பிரசிங்கித்தனமானதும் நாஸ்திகத்தனமானதுமான கேள்விகளை கேட்க வேண்டாம் என்று சரியானபடி புத்தி கற்பித்திருப்பேன்.

ஜோசப் : என்னடாப்பா கடைசியாக இப்படிச்சொல்லி விட்டாய், நிர்வாண நாடகம் பார்க்கவாவென்று வெகுஒழுங்காய் கூப்பிட மாத்திரம் உனக்கு அறிவிருக்குது, அந்தக் கதையின் யோக்கியதை என்னவென்று கேட்டால் இப்படிச் சொல்கிறாயே. இது தானா உன்னுடைய மதத் தத்துவம்.

ராமசேஷன் : இல்லையப்பா அதற்காக நான் சொல்லவில்லை. இம் மாதிரியான கேள்விகள் கேட்பதெல்லாம் தப்பு. அதாவது இதனால் ஒரு மத தத்துவத்தை (இன்சல்ட்) அவமானப்படுத்தியதுபோல் ஏற்படுகின்றது. இதை யெல்லாம் அறிந்து தான் பெரியவர்கள், பெரியவாள் சொன்னதையும் எழுதிவைத்ததையும் அப்படியே நம்ப வேண்டுமென்றும் நம்பாமல் கேள்வி கேட்பது நாஸ்திகம் என்றும் பாவம் என்றும் எழுதி வைத்திருக்கின்றார்கள். அதோடு இப்படி தர்க்கம் செய்பவனை சித்ரவதை செய்து கொன்றுவிட வேண்டும் என்றும் வேதம் சொல்லுகின்றது.

ஜோசப் : நல்ல வேளையாக வெள்ளைக்கார அரசாங்கம் இருப்பதால் நீ கூட என்னைக் கொல்லாமல் விட்டாய் போலும். வெள்ளைக்கார அரசாங்கம் வேறு வகையில் எவ்வளவோ மோசமானதென்று சொல்லிக் கொள்ளப்படுவதாயிருந்தாலும் இந்தக் காரியத்துக்காகவாவது இன்னும் கொஞ்ச நாளைக்கு இருக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகின்றது. அதிருக்கட்டும் இதையாவது சொல்லு பார்ப்போம்.

ராமசேஷன் : எதை?

ஜோசப் : அதாவது எப்பொழுது சந்திரன் பிள்ளையாய்ப் பிறந்தான் எந்த உருவத்தோடு பிறந்தான். எப்படி மானத்திற்கு (ஆகாயத்திற்கு) போனான். அதையாவது சொல்லு பார்ப்போம்.

ராமசேஷன் : இதுவும் அந்த மாதிரி கேள்விகளை சேர்ந்ததுதான் தெய்வமூலம், ரிஷிமூலம், நதிமூலம் ஆகியவைககள் ஒன்றும் கேட்கப்படாது என்பதும் கேட்பதும் அதைத் தெரிய விரும்புவதும் பாவம் என்பதும் எங்கள் வேதத்தில் சொல்லப்பட்ட கட்டளையாகும். ஆதலால் நான் இவைகளைப் பற்றி கவலை எடுத்துத் தெரிந்து கொள்ள முயற்சிக்கவேயில்லை. மற்றபடி இவைகளை உனக்குச் சொல்லக் கூடாது என்கின்ற நிர்பந்தம் ஒன்றும் எனக்கு இல்லை.

ஜோசப் : சரி அப்படியானால் அந்த வேதத்தை நீ பார்த்திருக்கின் றாயா? அதில் இம்மாதிரி எழுதியிருப்பது உனக்கு நேரில் தெரியுமா?

ராமசேஷன்: அதை நான் பார்க்கவில்லை; எங்கள் வேதத்தை எல்லோருமே பார்த்து விட முடியாது.
ஜோசப் : அதென்ன அப்படி?

ராமசேஷன் : அப்படித்தான்; அதைச் சிலர்தான் பார்க்கலாம். அவர் கள் தவிர மற்றவர்கள் பார்த்தால் பார்த்தவர்களின் கண்ணைக்குத்த வேண் டும் என்றும் அதில் உள்ளதைக் காதால் கேட்டால் அந்தக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் வாயால் படித்தால் படித்த நாக்கை அறுக்க வேண்டும் என்றும் மனதில் பதிய வைத்துவிட்டால் அந்த நெஞ்சைப் பிளந்து அதை வெளியாக்கிவிட வேண்டும் என்றும் நிபந்தனை இருக்கின்றது.

ஜோசப் : அது எதில் இருக்கின்றது?

ராமசேஷன் : அதுவும் அந்த வேதத்தில்தான் இருக்கின்றது.

ஜோசப் : அதையாவது நீ பார்த்தாயா?

ராமசேஷன் : நான்தான் பார்க்கக்கூடாது என்று முன்னமே சொன்னேனே.

ஜோசப் : பின்னை உனக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தது?

ராமசேஷன் : பெரியோர்கள் சொல்லித் தெரிந்தது.

ஜோசப் : அப்படியானால் வேதத்தில் உள்ளது உனக்கும் தெரிந்து இப்போது எனக்கும் தெரிந்து விட்டதே. நீ சொல்கின்ற வேத நிபந்தனைப் படி பார்த்தால் உன் காதிலும் என் காதிலும் ஈயத்தைக் காய்ச்சிவிட்டு உன் நெஞ்சையும் என் நெஞ்சையும் பிளந்தல்லவா ஆகவேண்டும்.

ராமசேஷன் : நீ என்னடாப்பா தொட்டதற்கெல்லாம் குதர்க்கவாதம் பேசுகின்றாய் இப்படியே பார்த்துக் கொண்டு போனால் உலகத்தில் எந்த மதமும் எந்த வேதமும் நிலைக்க இடம் இருக்காது. இந்த விஷயங்களை யெல்லாம் நம்பித்தான் ஆகவேண்டும். ஒரு மாதிரியாகத்தான் பார்க்க வேண்டும்.

ஜோசப் : மற்ற மதங்களையும் வேதங்களையும் பற்றி நீ ஒன்றும் கவலைப் படாதே அவைகள் எப்படியோ போகட்டும், அவைகளைப் பற்றி இது முடிந்தவுடன் கவனிக்கலாம் இப்போது உன் சங்கதியை அதாவது உன் தலைமேல் இருக்கும் பாரத்தைப் பற்றி நீ உணர்ந்திருப்பதை எனக்குச் சொல்லு அதாவது நீ இப்போது சொன்ன வேதம் என்பது யாரால் உண்டாக்கப்பட்டது.

ராமசேஷன் : அது கடவுளால் உண்டாக்கப்பட்டது.

ஜோசப் : அந்த வேதம் கடவுளால் உண்டாக்கப்பட்டது என்று யார் சொன்னார்கள்?

ராமசேஷன் : அந்த வேதத்தில் தான் சொல்லப்பட்டிருக்கிறது.

ஜோசப் : வேதத்தில் அப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று உனக்கு யார் சொன்னார்கள்?

ராமசேஷன் : வேதம் பார்த்த பெரியோர்கள் சொன்னார்கள்.

ஜோசப் : அந்தப் பெரியவர்கள் அந்த வேதத்தில் உள்ளதை கேட்கவும் பார்க்கவும் படிக்கவும் யோக்கியதை இல்லாத உனக்கு எப்படிச் சொன்னார்கள்?

ராமசேஷன் : இதெல்லாம் தான் அதிகப்பிரசங்கித்தனம், குயுக்தி
வாதம், தர்க்க வாதம், நாஸ்திகம் என்று சொல்வது.

ஜோசப் : சரி சரி கோபித்துக் கொள்ளாதே, நிர்வாணக் கதையாகிலும் சொல்லித் தொலை. சந்திரனை அவன் பெற்றோர்கள் பிரகஸ்பதியிடம் படிப்புச் சொல்லிக் கொடுக்கக் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.
அப்புறம்?

ராமசேஷன் : அப்படிக் கேளு. சொல்லுகின்றேன். கூட்டிக் கொண்டு வந்தார்களா? சரி கூட்டிக் கொண்டு வந்தார்கள். பிரகஸ்பதியும் சந்திரனை தனது மாணாக்கனாக ஏற்றுக் கொண்டார்.
ஜோசப் : சரி அப்புறம்?

ராமசேஷன் : சந்திரனுக்கு பிரகஸ்பதி படிப்புச் சொல்லிக் கொடுத் துக் கொண்டிருக்கும் நாளையில் ஒரு நாள் அவசரமாக தேவர்களுக்கு அரசனான தேவேந்திரன் பிரகஸ்பதியை கூப்பிட்டனுப்பினான்.

ஜோசப் : சரி. கூப்பிட்டனுப்பினான், அப்புறம்?

ராமசேஷன் : பிரகஸ்பதி தம் சம்சாரமாகிய தாரையைக் கூப்பிட்டு சந்திரனைச் சரியாகப் பார்த்துக் கொள்ளும் படிக்கும் தன் மாணாக்கனாகிய சந்திரனைக் கூப்பிட்டு தாரையைச் சரியாகப் பார்த்துக் கொள்ளும்படிக்கும் கட்டளை இட்டுவிட்டு தேவலோகத்திற்குப் போய்விட்டார்.

ஜோசப் : சரிசரி கொஞ்சம் நில்லு. இங்கே ஒரு சின்ன சந்தேகம் என்ன
வென்றால் அந்த பிரகஸ்பதி தேவலோகம் போய்விட்டார் என்று சொன்னாயே அப்படியானால் இது அதாவது அப்போது சந்திரன் தாரை பிரகஸ்பதி ஆகியவர்கள் இருந்து வந்தது எந்த லோகம்?

ராமசேஷன் : இது தானே அதிகப்பிரசிங்கித்தனம்.நாஸ்திகம் என்பது.

ஜோசப் : சரி சரி கோபித்துக் கொள்ளாதே. பிரகஸ்பதி தேவலோகம் போய்விட்டார் அப்புறம் சொல்லு.

ராமசேஷன் : அப்புறமா? அப்புறந்தான் உன்னிடம் அதைப்பற்றி சொல்லுவது சரியல்ல என்று நினைக்கிறேன்.

ஜோசப்: தாரை சந்திரனுக்கு நிர்வாணமாய் எண்ணெய் தேய்ப்பதை நேரில் பார்க்கலாம் வா என்று கூப்பிடுகிற நீ அந்தக் கதையைச் சொல்ல வெட்கப்படுகின்றாயே. இது தானா உன்னுடைய மதபக்தி. ஆஸ்திகம். என்னைக் கூப்பிட்ட யோக்கியதை.

ராமசேஷன் : சரி சொல்லித் தொலைக்கின்றேன் கேளு!

ஜோசப் : சொல்லப்பா சொல்லு “பிரகஸ்பதி” தேவலோகத்துக்குப் போய்விட்டார். அப்புறம்?

ராமசேஷன் : போய்விட்டாரா…..

ஜோசப் : சரி போய்விட்டார். அப்புறம் சொல்லு.

ராமசேஷன் : அப்புறமென்ன? அதைகூடச் சொல்ல வேண்டுமா? சந்திரன் நல்ல அழகு உள்ளவன் என்று உனக்குத் தான் தெரியுமே ஆகாசத்தைப் பார்த்தாலே தெரியாதா?

ஜோசப் : ஆகாயத்தில் உள்ள சந்திரன் அழகுக்கும் பிரகஸ்பதி வீட்டில் உள்ள அழகுக்கும் என்ன சம்பந்தம்?

ராமசேஷன் : இது தானே அதிகப் பிரசிங்கித்தனம்.

ஜோசப் : இல்லை, இல்லை, சொல்லு, சந்திரன் நல்ல அழகானவன் அப்புறம்?

ராமசேஷன் : அதோடு வாலிப பருவம் உடையவன், அது போல வே தாரையும் நல்லஅழகும் வாலிபபருவமும் உடையவள். இப்படிப்பட்ட இரண்டுபேர் ஒரு இடத்தில் இருந்தால் அப்புறம் சொல்ல வேண்டுமா?

ஜோசப் : அதையும் சொல்லித் தொலை.

ராமசேஷன் : சந்திரன்மேல் தாரைக்கு ஆசை உண்டாய்விட்டது

ஜோசப் : இது சகஜந்தான்; மாணாக்கன் மீது வாத்தியாரைப் போலவே வாத்தியார் சம்சாரத்துக்கும் ஆசை இருப்பது வழக்கம்தான். அதனால் என்ன?

ராமசேஷன் : அந்த மாதிரி ஆசையல்லடா.சந்திரன் மேல் தாரைக்குக் காதல் உண்டாய்விட்டது.

ஜோசப் : அப்படிச் சொன்னால் எனக்கு விளங்கவில்லையே.

ராமசேஷன் : உனக்கு நன்றாகச் சொல்ல வேண்டுமாக்கும். காதல் என்றால் சந்திரனைத் தனது ஆசை நாயகனாகக் கொண்டு அவனிடத்தில் கலவி இன்பம் அனுபவிக்க வேண்டும் என்கின்ற ஆசையும் காமவிகாரமும் உண்டாய் விட்டது.

ஜோசப் : தேவர்களுக்கெல்லாம் குருவாயிருக்கும் தேவகுரு பெண்ஜாதிக்கு தன் புருஷனிடத்தில் படிக்க வந்த மாணாக்கன் மேல் இந்தக் காமவிகாரம் உண்டாய் விட்டது என்றா சொல்லுகின்றாய்.

ராமசேஷன் : ஆம் ஆம்.

ஜோசப் : அப்புறம் சந்திரன் அதற்குச் சம்மதிக்காமல் அவளைத் தடுத்துவிட்டான்.

ஜோசப் : அப்புறம்?

ராமசேஷன்: ஒரு நாள் தாரையானவள் தான் குருபத்தினி என்கின்ற முறையில் சந்திரனை மாணாக்கன் என்கின்ற முறையில் எண்ணை தேய்த்து குளிப்பாட்டுவதுபோல் ஒரு ஏற்பாடு செய்து சந்திரனை உட்கார வைத்து எண்ணைக் கிண்ணத்தை தன் காலடியில் வைத்து தனது துகில் எண்ணை தேய்க்கத் தேய்க்க அவிழ்ந்து விழும்படியாக அவ்வளவு தளர்வாய் கட்டிக் கொண்டு எண்ணை தேய்க்க ஆரம்பித்தாள்.

ஜோசப் : சரி; ஆரம்பித்தாள் அப்புறம்?

ராமசேஷன் : எண்ணை தேய்க்கும் போது சந்திரன் தலை குனிந்து கொண்டிருந்ததால் எண்ணைக் கிண்ணத்திற்குள் குருபத்தினியுடைய அவயவ உருவங்களெல்லாம் நிழலில் தெரியும்படியாக இருந்தது. அப்படியே இருக்கும்போது சந்திரனுடைய புத்தியும் கொஞ்சம் கொஞ்சமாய் சபலப்பட்டுக் கொண்டே வந்தது

ஜோசப் : யாருக்கு?

ராமசேஷன் : மாணாக்கனுக்கு.

ஜோசப் : சரி, சபலப்பட்டு விட்டது அப்புறம்?

ராமசேஷன் : இதே சமயத்தில் தாரைக்கும் மெள்ள மெள்ள அவளுடைய ஆடை அவிழ்ந்து கீழே விழுந்து விட்டது. தாரை நின்று கொண்டு எண்ணை தேய்த்துக்கொண்டிருக்கும்போது ஆடை கீழே விழுந்ததைப் பார்த்த சந்திரன் தலை நிமிர்ந்து பார்த்தான்………..
இதுவரையில் தான் நாடகக் கொட்டகையில் சீன் நடக்கும். இதற்கு மேல் கொண்ட சங்கதிக்கு நாடக மேடையில் உடனே திரையைப் போட்டு விடுவார்கள். இதைத்தான் தாரா சசாங்கம் என்று சொல்லுவது. இதைப் பார்க்கத்தான் உன்னைக் கூப்பிட்டேன்; வருகிறாயா இல்லையா? சொல்லு நீ வராவிட்டால் நானாவது போகிறேன். இன்று நல்ல பாட்டு நல்லசீன் நல்ல காக்ஷி. மிகவும் வேடிக்கையாய் இருக்கும். பெண்கள்கூட அனேகம் பேர் வருவார்கள்.
ஜோசப் : சரி சரி; இந்த கதையைக் கேட்க எனக்கு எப்படியோ வாந்தி வருகின்றது போல் இருக்கின்றது.
இந்த லக்ஷணத்திற்கு இதைப்பார்க்க பெண்கள்கூட வருவார்கள் என்றாயே அது வேறையா இந்த அழகுக்கு. அவர்கள் எதற்காக வருவார்கள்.

ராமசேஷன் : முதலாவது, இது எங்கள் மதத்தைச் சேர்ந்த ஒரு பக்தி மார்க்க கதை. இக் கதையை கேட்டவர்களுக்கு மோக்ஷம் உண்டு என்று எங்கள் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. இரண்டாவது இது ஒரு வேடிக்கை கதை.

ஜோசப் : என்ன வேடிக்கை கதை இது?

ராமசேஷன் : தாரை சந்திரனைக் கட்டாயப்படுத்தி இழுப்பது, அவன் சம்மதிக்கமாட்டேன் என்று வாதாடித் தப்பித்துக் கொண்டு ஓடுவது, சந்தி ரனை தாரை பலவந்தபடுத்துவதன் மூலம் இருவரும் கட்டிப்புரளுவது சிற்றின்பமான பாட்டுகள் பாடுவது, கடைசியாக நிர்வாணக் காக்ஷி காட்டுவது ஆகிய வேடிக்கைகளை பார்க்கக்கூடும். ஆதலால் எங்கள் பெண்களும் வருவார்களென்று சொன்னேன்.

ஜோசப் : இவ்வித நடவடிக்கை நடக்கும் இம்மாதிரி காக்ஷிகள் காட்டப்படும் இம்மாதிரிப் பாட்டுகள் பாடப்படும் என்கின்ற விஷயங்கள் எல்லாம் தெரிந்தபிறகு தானா உங்கள் ஸ்திரீகளும் ஏராளமாய்ப் போகிறார்
கள் என்கின்றாய்?

ராமசேஷன் : ஆம் தாரா சசாங்க நாடகம் என்று சொல்லி விட்டால் நாடகக்காரன் கூட இன்ன இன்ன காக்ஷி, இன்ன இன்ன வேஷம் இன்ன இன்னார் போடுவார்கள் என்பதை ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் தெரியும் படியாக விளம்பரம் செய்வான்.

ஜோசப் : உங்கள் ஆண்கள் இதெல்லாம் தெரிந்துமா உங்கள் பெண்களை அனுப்புகிறார்கள்?
ராமசேஷன் : ஆம். ஏனென்றால் ஆண்கள் நாடகத்திற்கு புறப்படும்போது பெண்களும் அவசர அவசரமாய் தங்களை சிங்காரித்துக் கொண்டு புறப்படுவார்கள்.
ஆண்கள். இந்த காக்ஷியை பார்க்க வருகிற பல பெண்களைப் பார்க்கலாம், அவர்களைப் பார்த்துச் சிரிக்கலாம் என்றே வருவார்கள். இது எல்லாப் பெண்களுக்கும் தெரியும். ஆதலால் ஆண்கள் தங்கள் பெண்களை வரவேண்டாமென்று சொன்னால் அவர்கள் இந்த இரகசியத்தைச் சொல்லி ஆண்களை கண்டித்து விடுவார்கள்.
தவிர சில ஆண்களுக்கு பெண்களை வீட்டில் தனியாய் விட்டு
விட்டுப் போவதற்கும் சந்தேகம். எனவே இருவரும் போவார்கள். அன்றி யும் இப்படிப் போவதில் இன்னம் ஒரு லாபம் இருக்கின்றது. அதாவது மேல் கண்ட மாதிரியான காமாதுரமான பாட்டும் காக்ஷியும் செய்கையும் நாடகத்
தில் காணப்படும் பொழுது பெண்களுக்கும் ஆண்களுக்கும் காமாவிகார மேற்பட நேரும், அப்போது அவரவர்கள் புருஷனும் பெண் ஜாதியுமாயிருந்தால் அவரவர்களுடைய சொத்தை அவரவர்கள் பார்த்து ஒரு விதத்
தில் திருப்தி அடையக்கூடும். அப்படிக்கில்லாவிட்டால் அச்சமயத்தில் வேறு ஒருவர் சொத்தை ஒருவர் பார்க்க நேரிடும். அதோடு இருவரும் போனால் ஒருவருக்கொருவர் பயந்து கொண்டு வேறு ஒருவரைப் பார்த்துக்
கொள்ளவும் மாட்டார்கள். ஆதலால் புருஷனும் பெண்ஜாதியுமாக போவதே தனியாய் போவதைவிட மேலானது என்பது எனது அபிப்பிராயம்.

ஜோசப் : அது எப்படியோ போகட்டும். மேற்கொண்டு கதையின் முடிவு என்ன?

ராமசேஷன் : கதை முடிவு இதுதான். விசேஷ பாகம். மற்றது சாரமில்லாதது.

ஜோசப் : சாரமில்லாவிட்டாலும் சற்று சொல்லு கேட்போம்.

ராமசேஷன் : பிறகு ஒருவரை ஒருவர் கூடுகிறார்கள். பிரகஸ்பதி வருகின்ற வரை இதே வேலையாய் இருக்கிறார்கள். இதனால் தாரைக்கு கர்ப்பம் தரித்து விடுகின்றது. பிறகு தேவகுரு பிரகஸ்பதி வந்து ஞான திருஷ்டியால் தெரிந்து கோபித்துக் கொண்டு சந்திரனை 15 நாள் தேயும் படியாகவும் 15 நாள் வளரும்படியாகவும் சபித்து விடுகின்றார். அதுதான் வளர்பிறை தேய்பிறை என்பது. தாரை மீதும் ஏதோ கோபித்துக் கொள்ளு கின்றார். தாரைக்கு புதன் என்கிற பிள்ளையும் பிறக்கின்றது. தேவகுருவும் சந்திரனை சபித்துவிட்டு தன் பெண்சாதியை கடைசியாக மன்னித்து விடு கிறார். அதோடு கூட தாரையை உலகில் உள்ள கற்புள்ள ஸ்திரீகள் ஐவரில் ஒருத்தியாக சேர்த்து விடுகிறார். தாரையை நினைத்தால் நினைத்தவர்களுக்கு சகல பாவமும் உடனே தீரும்படியான சக்தியையும் அவர்களுக்கு ஏற்படுத்திவிடுகிறார். அதுபோலவே இன்னும் உலகத்தில் தினமும் கோடிக்கணக்கான பேர்கள் இந்த தாரையை நினைப்பதன் மூலம் தினந்தோறும் அவரவர்கள் செய்யும் பாவங்கள் மன்னிக்கப்பட்டு புதிது புதிதான பாவங்கள் செய்யவும் மக்களுக்கு எவ்வளவோ தைரியம் கொடுக்க உபகாரமாகவுமிருக்கிறது.

இதுதான் தாரா சசாங்கக் கதையின் தாத்பரியம்.

ஜோசப் : இக்கதையினால் உங்கள் குரு பெண்ஜாதிமார்கள் சங்கதியும் சீஷப் பிள்ளைகளின் சங்கதியும் நன்றாய் தெரிய வந்தது. அதோடு உங்கள் கற்புக்கும் அர்த்தம் தெரிந்தது. இவ்வளவே எனக்கு போதும். நீ சொன்னதிலிருந்தே இந்த கொசமுசாங்க கதையை நேரில் பார்த்தது போலவே ஆகி
விட்டது. இதை நீயும் உங்கள் பெண்களுமே நன்றாகப் பார்த்து மோக்ஷத்திற்குப் போங்கள்.
உங்கள் உபாத்தியாயர் பத்தினிமார்களும் இந்த கண்காட்சியை நன்றாகப் பார்த்து அந்தப்படியே நடந்து மாணாக்கர்களுக்கு கற்றுக்கொடுத்துவிட்டு பஞ்ச கன்னிகைகளோடு சேர்ந்து அவர்களை நினைத்தவர்
களுக்கெல்லாம் மோக்ஷத்தைக் கொடுத்து வரட்டும்.

மாணாக்கர்களாகிய நீங்களும் அவர்களுக்கு சீஷப் பிள்ளைகளாகச் சேர்ந்து சந்திரனைப்போலவே தினமும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு புதன்களைப் பெற்றுக் கொண்டிருங்கள்.
நம்மை மாத்திரம் அந்த மோக்ஷக் காட்சிக்கு கூப்பிடாதீர்கள்.

ராமசேஷன் : இதையெல்லாம் நீ எங்கிருந்து படித்துக் கொண்டாய் என்பது எனக்குத் தெரியும். ‘குடி அரசு’ என்கின்ற அந்த நாஸ்திகப் பத்திரி கையை நீ தினம் படிக்கின்றதை நான் பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். அது உன்னை இம்மாதிரி ஆக்கிவிட்டது. நீ என்ன செய்வாய், உன் மீது தப்பிதமில்லை.
ஜோசப் : குருபத்தினி சீஷப் பிள்ளைக்கு நிர்வாணமாய் எண்ணெய் தேய்ப்பதை பார்க்க இஷ்டமில்லை என்று சொன்னால் அது ‘குடி அரசை’ பார்த்ததனால் வந்த கேடாக்கும்? நாஸ்திகமாக்கும்? போதும், போதும், உங்கள் ஆஸ்திகத்தை மூட்டை கட்டி வையுங்கள். இனி என்னிடம் விரிக்காதீர்கள். எனக்கும் நேரமாச்சுது. நான் போய்வருகிறேன். மற்றொரு நாளைக்கு உங்கள் வேதத்தைப்பற்றி பேசிக் கொள்ளலாம்.

குட்பை – ழுடிடின லெந.

குடி அரசு – உரையாடல் – 08.07.1928

You may also like...

Leave a Reply