விதவா விவாகம்
சகோதரிகளே! சகோதரர்களே!! உலகமானது இப்போது எம்மாதிரியான முன்னேற்றத்தில் போய்க் கொண்டிருக்கின்றதென்பதை நாம் பார்த்து வருகின்றோம். மனிதனது புத்திக்குப்படாத அற்புத சக்திகளெல்லாம் மனிதனிடமிருந்து வெளியாகிக் கொண்டு வருகின்றது. சையன்ஸ் அதாவது வஸ்து தத்துவ சாஸ்திர ஆராய்ச்சியின் பயனாக மகா அதிசயங்களை யெல்லாம் மனிதன் செய்கின்றான். சமீப முயற்சி என்னவென்றால், சந்திர மண்டலத்திற்குப் போக முயற்சிக்கத் தொடங்கி செவ்வாய் மண்டலத்திலிருந்து சமாச்சாரப் போக்குவரத்துகள் நடத்தப்பட்டு விட்டன. மற்றும் அடுத்த 500 வருடத்தில் மனிதன் அடையக்கூடிய முற்போக்கை இப்போதே நிர்ணயிக்கப்படுகின்றது. எனவே, நம்மைச் சுற்றியுள்ள உலகம் இந்நிலையிலிருக்க நாமோ நமது ஆராய்ச்சிக்காரர்களால் 3000 வருஷத்திற்கு முன்னால் நாம் இருந்த நிலையை அடைய வேண்டுமென்று தொல்காப்பிய ஆராய்ச்சி செய்யப்பட்டு பெருமைப் படுகின்றோம். அப்படிப்பட்ட தொல்காப்பியம் 2000 வருஷத்திற்கு முந்தியதா 3000 வருஷத்திற்கு முந்தியதா என்கின்ற ஆராய்ச்சி இன்னமும் நமக்குள் முடியவில்லை. ஆராய்ச்சிக்காரர்கள் யோக்கியதை இப்படி என்றால், நமது பண்டிதர்களுடைய யோக்கியதையோ சமணர்கள் கழுவேறப்பட்டார்களா அல்லது தானாக கழுவேறினார்களா என்பதற்கு சமயம் போல் பேச ஆதாரம் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் தேசீயப் பண்டிதர்களின் யோக்கியதையோ தேசீய மேடையில் ஏறி தாயைப் புணர்ந்தும் தகப்பனைக் கொன்றும் மோட்சத்திற்குப் போன புராணத்தையும் பெண்ஜாதியைக் கூட்டிக் கொடுத்து மோட்சத்திற்குப் போன புராணத்தையும் படித்தால் சுயராச்சியம் வந்து விடுமென்று தேசியப் பிரசாரம் செய்கின்றார்கள்.
இவ்வளவும் போதாமல் இந்த 20வது நூற்றாண்டின் இன்றைய தினத்தில் நாம் கூட்டம் கூடி விதவைகள் கலியாணம் செய்து கொள்ளலாமா, வேண்டாமா என்கின்றதற்கு உள்ள மதத்தின் தடைக்கும் சாஸ்திரத்தின் ஆட்சேபத்திற்கும் பதில் சொல்ல இங்கு உட்கார்ந்திருக்கின்றோம்.
சகோதரர்களே! நமது நாட்டு நிலையைக் குறிக்க நமக்கு இதைவிட வேறு யோக்கியதை என்னவேண்டும்.
நமது ஆராய்ச்சியும், அறிவும், ஊக்கமும், முயற்சியும் நமது காலமெல்லாம் இந்த மாதிரி காரியங்களுக்கே உபயோகித்துக் கொண்டிருந் தோமானால் நாம் என்றுதான் மனிதர்களாவது?
விதவைகளுக்கு விவாகம் செய்யலாமா என்பதற்கும் சாஸ்திரத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு விளங்கவில்லை. ஒரு சமயம் விவாகம் எந்த மாதிரி செய்வது என்பதைப் பற்றி யோசிப்பது என்றாலும் சமாதானம் சொல்லலாம். அப்படிக்கின்றி விவாகம் செய்யலாமா? வேண்டாமா? என்பதற்கே சமாதானம் சொல்லுவதென்றால் அது சுத்த முட்டாள்தனமென்று தோன்றவில்லையா? என்னைக் கேட்டால் இந்தக்கொடிய நாட்டில் விதவைக ளுக்கு துன்பத்தை இழைத்தவர் நமது ராஜாராம் மோகன்ராய் அவர்கள் என்பதே எனது அபிப்பிராயம். ஏனெனில், அவரால்தான் நமது விதவைகள் இருக்கவும் கஷ்டப்படவும் ஏற்பட்டுவிட்டது. எப்படியென்றால், ராய் மோகன் அவர்கள் உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தை நிறுத்தாதிருந்திருப்பாரானால் ஒவ்வொரு பெண்டும் புருஷன் இறந்த உடனே அவனோடு கூடவே அவன் பக்கத்தில் “மாங்கல்ய ஸ்திரீ”யாகவே உயிருடன் கட்டையில் வைத்து சுடப்பட்டு “கற்பு லோகத்தை” அடைந்து “மோட்சத்தி”லிருந்திருப்பாள். கற்பு லோகமும் மோட்சமும் எவ்வளவு புரட்டாயிருந்தாலும் ஒன்று மாத்திரம் நிச்சயம். அதாவது உயிருடன் சுடப்பட்ட பெண்ணுக்கு ஒரு மணி நேரந்தான் கஷ்டமிருந்திருக் கக்கூடும். ஆனால் அந்தப்படி சுடாமல் காப்பாற்றப்பட்ட பெண்ணுக்கு அதன் ஆயுள் கால முழுவதும் அங்குல அங்குலமாக சித்திரவதை செய்வது போன்ற கஷ்டத்தை வினாடிதோறும் அனுபவித்து வர நேரிடுகின்றதா இல்லையா என்றுதான் கேட்கின்றேன். இப்பொழுதும் விதவைகளுக்கு உடனே மணம் செய்யவேண்டும். மணமில்லாத பெண் இருக்கக்கூடாது என்ற நிர்ப்பந்தம் கொஞ்சகாலத்திற்காவது இருக்க வேண்டும். இல்லையானால் உண்மையான ஜீவகாருண்யத்தை உத்தேசித்து பழைய உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தை யாவது புதுப்பிக்கவேண்டும் என்பதுதான் எனது அபிப்பிராயம். ஏனெனில், விதவைத் தன்மையை நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது; நெஞ்சம் கொதிக்கிறது. மனிதனுக்கு தன் பெண்ஜாதி சமீபத்தில் இல்லாத காலங்களில் போக இச்சை ஏற்பட்டால் உடனே போக மாதர்களை கொண்டு அவ்விச்சை தணிக்க வேண்டியதும், மிருகங்களுக்கு ஏற்படும் தினவை தீர்த்துக் கொள்ள மைதான வெளியில் சொரி கல் நட்டு வைக்க வேண்டியதும், 32 தர்மங்களில் இரண்டு தர்மமாகக் கொண்டு கோயில்களில் தாசிகளை வைத்தும் கிராமங்கள் தோறும் நத்தங்களில் சொரி கல் நட்டு வைத்தும் இருக்கிறார்கள். ஆனால், இப்பேர்ப்பட்ட ஜீவகாருண்ய அறிவு நமது பெண் மக்களிடம் மாத்திரம் ஏன் காட்டமுடியாமல் போய்விட்டது? என்பதை நினைக்கும்போது ஜிவகாருண்ய புரட்டும் 32 தர்மங்களின் புரட்டும் நன்றாய் விளங்கும்.
அதோடு மாத்திரமல்லாமல் அம்மாதிரி ஜீவகாருண்யம் கூடாது என்பதற்கு சாஸ்திரம் இருப்பதாயும், அந்த சாஸ்திரம் கடவுளால் சொல்லப்பட்ட தாகவும் மனிதர்கள் என்பவர்கள் சொல்ல வருவார்களானால் அப்படிப்பட்ட சாஸ்திரத்தையும் கடவுளையும் மனிதர்களையும் என்ன செய்வது என்பதை நீங்கள்தான் யோசித்து முடிவு கட்டவேண்டும்.
ஒரு பெண்ஜாதியை இழந்த ஆண், கலியாணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என்பதைப் பற்றி எந்தப் பெண்ணாவது அபிப்பிராயம் சொல்ல வருகிறார்களா? அப்படிக்கிருக்க புருஷனை இழந்தவள் கலியாணம் செய்து கொள்ளலாமா? வேண்டாமா? என்பதைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல புருஷனுக்கு என்ன பாத்தியம்? என்பது நமக்கு விளங்கவில்லை. நாட்டில் சிறப்பாக, நமது சமூகத்தில் விதவைகள் கர்ப்பமடைந்து கர்ப்பத்தை அழிப்பதும், பிள்ளைகளைப்பெற்று கொலை செய்வதும், வீடுகளைவிட்டு பெற்றோர் அறியாமல் நினைத்த புருடர்களுடன் ஓடுவதும், பிறகு பொது விபசாரிகளாகி குச்சுகள் மாறுவதும் முதலான காரியங்களை தினமும் கண்ணால் பார்த்தும் தாங்களாகவே துன்பங்கள் அடைந்தும் வரும்போது விதவா விவாகம் சாஸ்திர சம்பந்தமா? ஜாதி வழக்கமா? என்று பார்க்கும் மூடர்கள் மனித வர்க்கத்தைச் சேர்ந்தவர்களா என்று கேட்கின்றேன். சாஸ்திரத்தில் இடம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? ஜாதியில் வழக்கம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அதைப்பற்றி கவனிப்பதில் பலன் என்ன? புருஷனிழந்த பெண்ணுக்கு புருஷ இச்சை இருக்குமா? இருக்காதா? அவளுக்கு புருஷன் வேண்டுமா? வேண்டாமா? என்பதைத் தானே கவனித்து முடிவு கட்ட வேண்டும். அமாவாசையில் பிறந்த பிள்ளை திருடும் என்று ஜோசியத்திலிருந்து விட்டால் அந்த பிள்ளை திருடின திருட்டையெல்லாம் ஜோசியம் நம்புகிறவன் சும்மாவிட்டு விடுவானா? என்று கேட்கின்றேன்.
தினம் புருஷனுடன் வாழ்ந்து கொண்டு புருஷன் என்பதாக தனக்கு ஒரு எஜமான் இருக்கிறான் என்று நினைத்துக்கொண்டு அடிமைத்தனத்தில் இருந்து குழந்தை குட்டிகளைப் பெற்று கொண்டு இருக்கும் மாங்கலியப் பெண்களின் போக உணர்ச்சியைவிட மேல்கண்ட கவலையில்லாத பெண்களின் உணர்ச்சி எத்தனை மடங்கு அதிகமாயிருக்கும் என்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள்! ஒரு ஜீவனை பட்டினியாகப் போட்டு கொல்லுவதிலும், ஒரு பெண்ணை விதவையாக வைத்து சாகாமல் காப்பாற்றுவது கொடுமை அல்லவா? என்பதை யோசித்துப் பாருங்கள்! ஒரு பெண் எதற்காக விதவையாய் இருக்க வேண்டும் என்பதற்கு இதுவரை யாராவது காரணம் சொன்னார்களா? அல்லது எந்த மதமாவது, எந்த ஜாதியாவது காரணம் சொல்லியிருக்கின்றதா? காரணமில்லாமல் இவ்விதக் கொடுமையான ஜீவஹிம்சையை செய்து கொண்டிருக்கும் சமூகம் வடிகட்டின முட்டாள்தனமுடையது என்பதற்கு என்ன ஆட்சேபனைகள் சொல்லப் போகின்றீர்கள்.
விதவைகளாயிருப்பது கடவுள் கட்டளை என்று கருதுவீர்களானால் விதவைகளுக்குப் போக உணர்ச்சியும், அதனால் ஏற்படும் கவலையும், சில சமயங்களில் கர்ப்பமுண்டாக்கப்படுவதும், அது அழிக்கப்படுவதும், பெற்ற குழந்தையை கழுத்தைத் திருகுவதுமான காரியங்கள் நடைபெறமுடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.
விதவைத் தன்மை நாட்டில் இருப்பதாலேயே சாஸ்திரங்களும் கடவுள் செயல் என்பவைகளும், சோதிடம் என்பவைகளும் பொய் என்பதாக உங்களுக்கு விளங்குகின்றதா? இல்லையா? ஏனெனில், நம்மில் ஒவ்வொரு வனும் கலியாணம் செய்வது கடவுளை பூ வைத்தோ, கருட தரிசனமோ, குறியோ கேட்டுத் திருப்தி அடைந்தும், ஜோசியம் பொருத்தம் பார்த்து திருப்தி அடைந்தும் சாஸ்திர விதிப்படியும் செய்கிறான். அப்படியிருக்க இந்த கதி நேர்ந்தால் மேற்கண்டவைகள் நிஜமாயிருக்க முடியுமா? இந்த அஸ்திவாரப் புரட்டை நாம் நம்பி மதம், ஜாதி, வழக்கம் என்று சொல்லுகின்றோமே? நமக்கு வெட்கமில்லையா? அல்லது புத்தியில்லையா? என்று கேட்கின்றேன்.
பெரும்பாலும் மதப்படியும் ஜாதி வழக்கப்படியும் நடக்காதவர்களேதான் மதம் என்றும், சாஸ்திரமென்றும், ஜாதி வழக்கம் என்றும் தொல்லைபடுத்துகிறார்கள்.
தங்களைப் பொறுத்தவரை தாங்கள் நம்பும் மதக்கொள்கைப்படியும் சாஸ்திரப்படியும் நடக்க முடியாதவர்களேதான் நாம் செய்யும் காரியத்திற்கு இடையூறாக மதத்தையும் சாஸ்திரத்தையும் வழக்கத்தையும் கொண்டு வந்து போடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களால் தங்களுக்காக கொண்டு வந்து போடப்படும் மதத்திற்கும் சாஸ்திரத்திற்கும் கடுகளவு புத்தியுள்ள எந்த மனிதனாவது மதிப்பு கொடுக்க முடியுமா? என்று பாருங்கள்.
உதாரணமாக, சாரதா மசோதாவை எடுத்துக் கொள்ளுங்கள். பெண்கள் பருவமடைந்ததற்குப் பின்னால் கல்யாணம் செய்தால் சாஸ்திரம் விரோதமாம்! பாவமாம்! நரகம் கிடைக்குமாம்! இதற்காக சத்தியாக்கிரகம் செய்து உயிர்விட வேண்டுமாம்! நீங்கள் இந்த வீரர்களை உண்மையானவர்கள் என்று நம்புகிறீர்களா?
இந்த வீரர்களின் ஆண் பெண் கடவுள்களுக்கும் அவர்களது சொந்த காரருக்கும் எப்போது கலியாணம் நடந்தது? கல்யாணம் நடந்ததை இவர்கள் பார்க்காவிட்டாலும் எப்போது நடந்ததாக இவர்கள் சாஸ்திரம் கூறுகின்றது என்பதை சற்று நினைத்துப் பாருங்கள்.
சீதைக்கும், ருக்குமணிக்கும், சத்தியபாமைக்கும், பார்வதிக்கும் வள்ளியம்மாளுக்கும், தெய்வயானைக்கும், மீனாட்சிக்கும், ஆண்டாளுக்கும், நாச்சியாருக்கும், திரௌபதைக்கும் எப்போது கல்யாணம் நடந்தது? இவர்கள் பருவமடைந்த பிறகா? அதற்கு முந்தியா? என்று கேட்கின்றேன். பழைய ராஜாக்கள் என்பவர்கள் காலத்திலும் மதசம்பந்தமான புராணங்களிலும் எங்காவது மைனர் பெண்களையோ பத்து வயதுக்குட்பட்ட பெண்களையோ கலியாணம் செய்து கொடுத்ததாக இவர்கள் சொல்லக்கூடுமா? என்று கேட்கின்றேன். தவிரவும், மேற்கண்ட ஆண்பெண் கடவுள்கள் தாங்களாகவே கலியாணம் செய்து கொண்டார்களா அல்லது அவர்களின் தாய் தகப்பன்மார் கட்டு சாத மூட்டையை தோளில் சுமந்து திரிந்து மாப்பிள்ளை தேடி சகுணம், குறி, சோதிடம், பொருத்தம் முதலியவை பார்த்து கலியாணம் செய்து கொடுத்தார்களா என்று யோசித்துப்பாருங்கள்.
இந்து சாஸ்திரத்தை வைத்துக் கொண்டிருப்பவர்கள் “சாஸ்திரத்தில் பருவமடைந்த பிறகு கலியாணம் செய்வதற்கு இடமில்லை” என்று சொல்ல வருவார்களானால் அதிலும் அதற்காக இவர்கள் சத்தியாக்கிரகம் செய்வே னென்று சொல்வார்களானால், இவர்கள் நம்மை எவ்வளவு முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். எனவே, சகோதரர்களே! உங்களுக்கு ஒரு காரியம் சரி என்று பட்டால் அது சாஸ்திர சம்மதமா? விரோதமா என்று எதிர்ப்பார்ப்பது அறியாமையும் அடிமைத்தன முமாகும். இந்த லோகத்திற்கு அவசியமான காரியம், மேல் லோகத்தில் என்ன பலனைத் தரும் என்பது மற்றொரு அடிமைத்தனமாகும்.
இவ்வளவும் தவிர இப்படிச் செய்தால் அவர்கள் என்ன பேசுவார்கள் இவர்கள் என்ன சொல்லுவார்கள் என்று நினைப்பது எல்லாவற்றையும் விட சுய அறிவும் சுய உணர்ச்சியும் அற்ற அடிமைத்தனமாகும்.
சகோதரர்களே! கடைசியாக உங்களுக்கு ஒன்று சொல்லுகின்றேன். அதாவது எந்தக் காலத்திலோ எங்கிருந்தோ யாராலோ எதற்காகவோ யாருக்கோ எழுதிய ஒரு புஸ்தகத்தை இந்தக் காலத்திற்கு இந்த இடத்திற்கு நமது நன்மைக் காக நமது நன்மையில் கவலை கொண்டவர்களால் எழுதப்பட்டதென்றும், அதன்படி நடந்து தீர வேண்டுமென்றும் கருதுகின்றவன் மனிதனல்ல என்பது தான் எனது மாற்ற முடியாத உறுதியான அபிப்பிராயமாகும்.
குறிப்பு : விதவா விவாக சகாய சபையின் ஆதரவில் சென்னை பிரம்ம சமாஜ கட்டடத்தில் 19.10.1929ல் நடந்த கூட்டத்தில் ஆற்றிய தலைமைச் சொற்பொழிவு
குடி அரசு – சொற்பொழிவு – 27.10.1929