இராஜகோபாலாச்சாரியின் தேசீயம்
சென்ற வாரம் பார்ப்பனர்களின் தேசியம் என்று தலையங்கமிட்டு திரு.சத்தியமூர்த்தி அய்யர் முதலிய பூரண சுயேச்சைவாதிகளுடையவும், காங்கிரஸ் வாதிகளுடையவும் தேசியத்தின் யோக்கியதையைப் பற்றி எழுதி இருந்தோம். இந்த வாரம் திரு.சி.இராஜகோபாலாச்சாரி போன்ற “ஒத்துழையா தியாகிகளின்” தேசியத்தைப் பற்றி எழுத வேண்டி நேரிட்டுவிட்டது. அதாவது, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூக்கா காங்கிரஸ் மகாநாட்டிற்கு அக்கிராசனம் வகித்த திரு.சி.ராஜகோபாலாச்சாரியார் தமது தலைமை உபன்யாசத்தில் வழக்கம் போல் தேசியப் புரட்டு பரிபாஷையாகிய தீண்டாமை, கதர், மதுவிலக்கு ஆகிய மூன்று வார்த்தைகளை உபயோகித்துவிட்டு, பார்ப்பன தேசிய சூழ்ச்சி பரிபாஷை யாகிய சாதித் துவேஷத்தை ஒழிக்க வேண்டும் என்னும் வார்த்தையைச் சொல்லிவிட்டு சுயமரியாதை இயக்கம் தெய்வங்களையும், அவதாரங்களையும், புண்ணிய ஸ்தலங்களையும், பெரியோர் சாஸ்திரங்களையும் நிந்திப்பதாகச் சொல்லி பாமர மக்களை கிளப்பிவிடப் பார்த்து இருக்கின்றார். சமீபத்தில் இவரால் வடநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட திரு.பட்டேல் அவர்களுக்கு இவர் எதைச் சொல்லிக் கொடுத்து நம்மையும் சுயமரியாதை இயக்கத்தையும் வையச் சொன்னாரோ அதே வார்த்தைகளை அப்படியே, சற்று மெருகு கொடுத்து இப்பொழுது இவரும் சொல்லி இருக்கிறார். திரு.ராஜகோபாலாச்சாரி யார் தீண்டாமை விலக்கு தத்துவம் நாம் அறியாததல்ல. அவருடன் நாம் காங்கிர சிலும் ஒத்துழையாமையிலும் இருக்கும்போது அவரது தீண்டாமை விலக்கை நேரில் கண்டிருக்கின்றோம். அதாவது, தீண்டாமை ஒழிப்பதற்கென்று காங்கிரசில் ஒதுக்கிவைத்த பணத்தை முழுதும் தன்பேரில் பிரித்துவைத்துக் கொண்டு அதனால் ஒரு காரியமும் செய்யாமல், செய்யவும் விடாமல் காப்பாற் றிய வீரராவார். செய்கைதான் இப்படி என்றாலோ, காரியத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டம் பிறவியில் ஜாதி வித்தியாசம் கூடாது என்று தீர்மானித்த உடன் ராஜினாமா எழுதிக் கொடுத்து தனது சினேகிதர்களையும் ராஜினாமா கொடுக்கச் செய்தவர். கதர் விஷயத்தில் இவர்களது ஏழைகளைக் காப்பாற்றும் நாணயமும் கதரால் நாட்டிற்கு nக்ஷமமுண்டாகும் நாணயமும் கதரின் பேரால் பார்ப்பனரல்லாதார்களிடத்தில் பத்து லட்சக்கணக்காய் ரூபாய் வசூலித்து கதர் திட்டத்தில் 100க்கு 90பேர் திரு ராஜகோபாலாச்சாரியின் ஜாதியாரே உட்கார்ந்து கொண்டு வயிறு வளர்ப்பதும், தாங்கள் என்ன அக்கிரமம் செய்தாலும் தங்களை விலக்க முடியாமலும், யாரும் கணக்கு கேட்க முடியாமலும் இருக்கும்படி செய்து கொண்ட சூழ்ச்சியும், அதில் நடக்கும் அக்கிரமங்களை அன்னியர் எழுதிக் கேட்டால் அதற்கு அவர்கள் சொல்லும் பதிலும் திரு.ராஜகோபாலாச்சாரிக்கும் திரு.எஸ்.ராமனாதனுக்கும் இந்த ஒருவாரமாக நடக்கும் கடிதப் போக்குவரத்தை கவனித்தவர்களுக்கே நன்றாய் விளங்கும். மற்றபடி இவரது மதுவிலக்கு கவலையைப்பற்றி தெரிய வேண்டுமானால், தேர்தல் வரும்போதெல்லாம் கள்ளுக்கு மரம் பதினாயிரக் கணக்காய் விட்டுக் கொண்டிருக்கும் திரு.சி.வி. வெங்கிட்ட ரமணய்யங்காருக்கு மதுவிலக்குப் பேரைச் சொல்லி ஓட்டு வாங்கிக் கொடுத்ததும் தனது இஷ்டப்படி நியமிக்கப்பட்ட மந்திரிகள் இருக்கும் காலத்தில் மதுவைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் இருப்பதும், மறுபடியும் தேர்தல் வரும்போது மாத்திரம் பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும் மாத்திரம் சட்டசபைக்கு வரும்படியாகச் செய்வதற்கு மது விலக்கை ஒரு சூழ்ச்சியாக உபயோகிப்பது மான தந்திரங்களைப் பார்த்தால் விளங்காமல் போகாது. தவிர, ஜாதித் துவேஷத்தை ஒழிக்க வேண்டும் என்பது.
“சிறந்த தேசத் தொண்டர்களில் சிலர் சமூக சீர்திருத்தம் செய்ய துவேஷத்தை சாதனமாகக் கொண்டது தேசத்தின் துரதிர்ஷ்டம்” என்கின்றார். இதில் தீண்டாமையை ஒழிக்கவேண்டும் என்பவர்களிடத்தில் ஜாதித் துவேஷம் இருக்கக் கூடுமா? தீண்டாமை ஒழிக்க இணங்காதவர்களிடத்தில் ஜாதித் துவேஷம் இருக்க முடியுமா என்பதை வாசகர்கள் தான் உணரவேண்டும். தீண்டாமையை ஒழிப்பதானாலும் சமூகத்தில் ஏதாவது சீர்திருத்தம் செய்ய வேண்டுமானாலும் தீண்டாமையினால் பலன் அனுபவிப்பவர்களுக்கும் சமூகக் கொடுமையினால் நலமனுபவிப்பர்களுக்கும் நஷ்டமாவது மனத்தாங்கலாவது இல்லாதிருக்க முடியுமா? என்று கேட்கின்றோம். இந்த மனத்தாங்கலுக்குப் பயந்தால் ஒரு சிறு காரியத்தையாவது நடத்த முடியுமா என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம். அயோக்கியர்களையும் சுயநலக்காரர்களையும் சூழ்ச்சிக்காரர்களையும் மக்கள் வெறுப்பதும், அவர்கள் மீது மக்களுக்கு துவேஷமேற்படுவதும், உலகம் அவர்களை நிந்திப்பதும் இயற்கை என்பதையும், “இயற்கையை வெல்ல யாராலும் முடியாது” என்று சொல்லும் திரு.இராஜகோபாலாச்சாரியாரே உணராமல் போனது “தன் குற்றம் தனக்குத் தெரியாது” என்கின்ற பழமொழிக்கு இரும்புப் பூண்போட்டது போலாகின்றது. “சீர்திருத்தக்காரர்கள் அந்தரங்க சுத்தியோடு வேலை செய்தால் யாருக்கும் எவ்வித தீமையும் விளையாது” என்கின்றார். இது பயனற்ற வார்த்தை என்றே சொல்லுவோம். ஏனெனில், எவ்வளவு நல்லெண்ணத்தோடானாலும் ஒரு கேட்டை விலக்க முயற்சித்தால் அக்கேட்டினால் பிழைப்பவனுக்கு கெடுதி ஏற்பட்டுத்தான் தீருமே ஒழிய அது கேட்டை விலக்குபவனின் நல்ல எண்ணத்தினால் மறைந்துவிடாது. ஒரு சமயம் அந்தக் கெடுதி அவன் நியாயமாய் அனுபவிக்க வேண்டிய கெடுதிதானா? அல்லது அநியாயமாய் அனுபவிக்கும் கெடுதியா? என்று வேண்டுமானால் யோசிக்கக் கூடியதாயிருக் கும். அதாவது, எவ்வளவு நல்லெண்ணத்தோடு காத்திருந்து ஒரு திருடனைப் பிடித்தாலும் பிடிபட்ட திருடன் நம்மை குத்திவிட்டு ஓடவோ, முடியாவிட்டால் வசைபாடவே செய்வானே ஒழிய நமது நல்லெண்ணம் அவனை “என்னைப் பிடித்துவிட்டாயே புண்ணியவானே” என்று புகழச் செய்யாது என்பதை உறுதியாய்ச் சொல்லுவோம். தவிர “ஜாதித் துவேஷம் ஒழிய வேண்டும் என்று எல்லோரும் தினந்தோறும் கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டும்” என்று உபதேசம் செய்கின்றார். திரு.ராஜகோபாலாச்சாரிக்கு உள்ள கடவுள் பக்தியும் அவருடைய இருதய சுத்தமும் நமக்கு நன்றாய்த் தெரியும். ஆதலால், இது விஷயத்தில் அவருக்கு நாம் ஒன்றும் சொல்ல வரவில்லை. ஆனால், அவர் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாரோ அவர்களைப் பார்த்து ஒன்று கேட்கின்றோம். அதாவது கடவுளால் துவேஷத்தை ஒழிக்கக் கூடும் என்பதில் கடுகளவு நம்பிக்கையாவது திரு.ராஜகோபாலாச்சாரியார் முதலிய யாருக்காவது இருக்கு மானால் திரு.ராஜகோபாலாச்சாரியார் எதை துவேஷம் என்று கருதி இருக்கின்றாரோ அது சிறிது கூட துவேஷமல்லவென்றும், அறியாமை யினாலோ தந்திரத்திற்காகவோதான் இந்தப்படி சொல்லப்படுகின்றதென்றும், உண்மையாய் – உண்மையாய் – உண்மையாகவே சொல்லுகிறோம். ஏனெனில் துவேஷத்தை அழிக்க சக்தியுள்ள கடவுள் அறிவுடையவராய் இருந்தால் மக்களுக்கு கெடுதியைத் தரும் துவேஷத்தை உற்பத்தி செய்திருக்கவே மாட்டார். அவரில்லாமல் துவேஷம் ஏற்படவே முடியாது என்பதுதான். தவிர “மனிதன் தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டதாகக் கருதி அகம்பாவப் படக் கூடாது”என்கின்றார். இது எதற்கு ஆக சொல்கிறார் என்பது ஒருபுறமிருந்தாலும் மனிதன் தனக்கு “ஒன்றும் தெரியாது” “எல்லாவற்றிற்கும் வேறு காரண மிருக்கும்” என்று கருதுகிற காரணமே அடிமைத் தனத்தின் ஜீவநாடி என்பது நமது அபிப்பிராயம். அன்றியும் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பதை விட தனக்கு ஒன்றுமே தெரியாது என்பதினால் அதிகக் கெடுதியே உண்டாகுமே தவிர சிறிதும் நன்மை உண்டாகாது.
ஆதலால் இவைகள் எல்லாம் வெறும் அலங்கார வார்த்தைகளே தவிர காரியத்திற்கானவைகள் அல்ல. தவிர தெய்வங்களையும், அவதார புருஷர்களையும், புனித ஸ்தலங்களையும், குற்றம் கூறுவதாகவும் அது பெரிய பேடித்தனமென்றும் சொல்லுகின்றார்.
இங்கு வாசகர்களுக்கு ஒன்று சொல்லுகின்றோம். அதாவது, எவை தெய்வங்கள், அவற்றுள் எந்த தெய்வங்களை என்ன குற்றம் சொன்னோம்? யார் அவதார புருஷர்கள், அவர்களின் எந்த குணத்தை குற்றம் சொன்னோம்? எது புனிதஸ்தலம், அதை எப்படி குற்றம் சொன்னோம்? என்பதைப் பற்றி ஒரு வார்த்தையாவது கூறாமலும் நாம் சொன்னதாகச் சொல்லப்படும் குற்றங்களுக்கு ஒரு சமாதானமும் சொல்லாமலும் சும்மா பாமர மக்களின் முட்டாள்தனத் தையும் வெறியையும் தனக்கு ஆதாரமாய் வைத்துக்கொண்டு தனது மனதார சூதாய் பேசி பாமர மக்களை நம்மீது ஏவிவிட முயற்சிப்பது பேடித்தனமா? அல்லது நாம் உள்ளதை உள்ளபடி நினைத்து நினைத்தபடி வெளியில் ஆதாரங் களுடன் எடுத்துச்சொல்லுவது பேடித்தனமா என்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகின்றோம். தவிர, “பிராமணர் – பிராமணரல்லாதார் சண்டை இல்லாவிட்டால் தென்னாட்டு பிராமணர்கள் பாலிய விவாகத்தடை மசோதாவை எதிர்த்திருக்க மாட்டார்கள்” என்று சொல்லுகின்றார். இது உண்மையாய் இருக்குமானால், “பிராமணர்கள் மனப்பான்மையின் யோக்கியதையை அறிவதற்கு வேறு ஆதாரம் வேண்டுமா” என்று கேட்கின்றோம். அதாவது, நமது நாட்டில் என்ன காரியத்திற்காக பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் சண்டை இருக்கின்றதோ அதற்காகத்தான் பார்ப்பனர்களுடைய சீர்திருத்த எதிர்ப்பும் இருக்கின்றது என்று சொல்லுகிறார். நாமும் இதைத்தான் சொல்லுகின்றோம். பார்ப்பனரல்லாதார் பார்ப்பனருடன் போராடுவதின் முக்கிய தத்துவம் பார்ப்பனரல்லாதாரை விட பார்ப்பனன் பிறப்பினால் மேலானவன் என்கின்ற ஆதிக்கம் இருக்கக்கூடாது என்பதற்காகவே ஒழிய வேறல்ல. திரு.ராஜ கோபாலாச்சாரியார் சொல்லுகின்றபடியே பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே அதாவது, பார்ப்பனரல்லாதாருக்கு விரோத மாகவே எவ்வித சீர்திருத்தங்களையும் எதிர்க்கிறார்கள் என்றாகின்றது. இது தன்னை அறியாமல் சொன்ன உண்மை என்றே கருதுகிறோம். கடைசியாக பொது ஜனங்களுக்கு ஒன்று சொல்லுகின்றோம்.
நாட்டில் எந்த சீர்திருத்தமோ சீர்த்திருத்த இயக்கமோ புறப்பட்டாலும் பார்ப்பனர்கள் அதை நாஸ்திகம் என்றும், தெய்வ நிந்தனை என்றும், சாஸ்திர நிந்தனை என்றும், அவதார நிந்தனை என்றும், புண்ணியஸ்தல நிந்தனை என்றும், தேசத்துரோகம் என்றும், மதத் துவேஷம் என்றும், ஜாதித் துவேஷம் என்றும் பழிகளைச் சுமத்தி பாமர மக்களை ஏய்த்தே இதுவரை தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வந்திருக்கின்றார்கள். அந்தமுறையையே நமது திரு.ராஜகோபாலாச்சாரியார் பின்பற்றியது சிறிதும் அதிசயமல்ல. ஏனெனில் திரு.ராஜகோபாலாச்சாரியார் வருணாசிரம தர்மத்தில் மிக்க நம்பிக்கைக் கொண்டவர். பெரியவர்கள் செய்ததெல்லாம் நன்மையானதே என்று சொல்லு பவர். மூடர்களுக்கு மூடப்பிள்ளையும், புத்திசாலிக்குப் புத்திசாலிப் பிள்ளையும், யோக்கியனுக்கு யோக்கியப்பிள்ளையும், அயோக்கியனுக்கு அயோக்கிய பிள்ளையும் தான் பிறக்கும் என்றும் சொல்லி இருக்கிறார். ஆக தனது முன்னோர்களுடைய குணமே தனக்கு இருப்பதாகவும், குணமே மிகவும் மேலானதென்றும் கருதிக் கொண்டிருப்பவர். இப்படியெல்லாம் சொன்னதில் ஆச்சரியமொன்றுமில்லை. ஆனால் இவர் சொன்னதை யெல்லாம் பொது ஜனங்கள் நம்பி விடுவார்களா என்பதுதான் நாம் முடிவுகாட்ட வேண்டிய விஷயமாகும். முடிவாக பார்ப்பனர்கள் காங்கிரசும் தேசியமும் பூரண சுயேச்சை யும் ஒத்துழையாமையும் என்ன தத்துவத்தைக் கொண்டது என்பதை பொது மக்கள் அறிய வேண்டியே இதை எழுதினோம்.
குடி அரசு – தலையங்கம் – 27.10.1929