கதர் புரட்டு இராட்டின் இரகசியம்
கதர் இயக்கம் என்பது பார்ப்பனர்கள் தங்கள் பிழைப்புக்கும் ஆதிக்கத்திற்கும் மோட்சம் என்றும், சுயராஜ்ஜியமென்றும், தேசியம் என்றும் பாமர மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்து வாழ்ந்து வருவது போலவே, ஏழைகளுக்கு மொத்த உதவி செய்கின்றவர்கள் போல் வேஷம் போட்டுக் கதர் என்னும் பெயரால் பாமரமக்களை ஏமாற்றி வருகின்றதற்கு உபயோகப் படக்கூடியதே தவிர அதனால் உண்மையான பலன் ஒன்றும் கிடைக்காதென்று பலதடவை புள்ளி விவரங்களுடன் எழுதியும் பேசியும், மெய்ப்பித்தும் வந்திருக்கின்றோம். ஆனால் பார்ப்பனரல்லாதார்களிலேயே பலர் நாம் எழுதி வந்ததைச் சரிவர பகுத்தறிவை உபயோகித்துக் கவனித்துப் பார்க்காமல் மேலாக நுனிப் புல்லை மேய்வதுபோல் அலட்சியமாய் இருந்து கொண்டு பார்ப்பனர் களும் அவர்களது பத்திரிகைகளும் சொல்லுவதையே கிளிப்பிள்ளைபோல் திருப்பிச் சொல்லிக் கொண்டு மிக்க பொதுநலக் கவலை இருப்பவர்கள்போல் வேஷம் போட்டு நம்மைக் கண்டித்து வந்தார்கள். இப்பொழுது வேதாரண்யம் மகாநாட்டில் திரு.ராஜகோபாலாச்சாரியார் கதர் கண்காட்சியை திறந்து வைக்கும் போது அவர் செய்த பிரசங்கத்தில் நமது அபிப்பிராயம் முழுதினையும் தாராளமாய் ஒப்புக் கொண்டுவிட்டார். அதாவது “இராட்டினால் கிடைப்பது தினம் ஒரு அணா கூலிதான்” “இதில் கிடைக்கும் வருமானம் சொற்பம்தான்”. “ஒரு அணாகூட சம்பாதிக்க முடியாதவர்கள் இந்த வேலை செய்யட்டும்; மேற்கொண்டு சம்பாதிக்கக் கூடியவர்கள் வேறு வேலை செய்யட்டும்; வேறு வேலையில் அதிகக்கூலி கிடைக்கும் வரை இதைச் செய்வோம்” என்று சொல்லி இருக்கின்றார். இதிலிருந்து “இராட்டினமே சுயராஜ்யம் சம்பாதித்துக் கொடுக்கக் கூடியது, அதை தான் எல்லோரும் செய்ய வேண்டியது. சுயராஜ்ஜியத்திற்கு மார்க்கம் ராட்டினம் சுற்ற வேண்டியது என்று சொல்லிக் கொண்டிருந்த “அருள்வாக்கு” இப்போது திரு.ராஜகோபாலாச்சாரியார் சொல்வதிலிருந்தே மருள்வாக்காய் விட்டதை நன்றாய் உணரலாம். தவிரவும், கதர் சம்பந்தமான புள்ளி விபரங்கள் காட்டி அதனால் பொதுஜனங்களுக்கு ஏற்பட்ட நன்மையை எடுத்துச் சொல்லி இருப்பதில் 1928ம் வருஷத்தில் 60 லட்சம் சதுரகெஜம் கதர் துணி உற்பத்தி செய்து சுமார் 25 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதாக எடுத்துக்காட்டி மிக்க பெருமை பாராட்டிக் கொண்டிருக்கின்றார்.
இதன் யோக்கியதையை சற்று கவனிப்போம். 60 லட்சம் ச. கஜம் 25 லட்ச ரூபாய் ஆனால் ஒரு சதுர கஜத் துணி 0-6-8. ஒரு ச. கஜம் 0-6-8பை. ஆனால் ஒன்றரை கஜ அகலமுள்ள துணி கஜம் ஒன்றுக்கு 0-10-0 அணா ஆகின்றது. எனவே இந்த அறுபது லட்சம் சதுரகஜம் துணிக்குப் பதிலாக இந்தியாவில் இந்தியக் கூலிகளைக் கொண்டு யந்திரத்தில் நூற்கப்பட்ட நூலால் நெய்த மில் துணியை வாங்கினால், கஜம் ஒன்றுக்கு 0-3-4 பை வீதம் கிடைக்கும். அதாவது ஒன்றரை கஜ அகலமுள்ள மில் துணி கதரைவிட நல்ல நைசும் கெட்டியும் உள்ள துணி கஜம் ஒன்றுக்கு 0-5-0 அணாவுக்கு கிடைக்கும். இதற்குக் கிரையம் 12 1/2 லட்சம் ரூ. தான் ஆகிறது. எனவே, 1928 வருஷம் உற்பத்தி செய்த 60 லட்சம் ச. கஜம் கதர்த் துணியை பொது ஜனங்கள் வாங்கினதின் பயனாய் ஒரு வருடத்தில் பன்னிரண்டரை லட்சம் ரூ. நஷ்மடைந்திருக்கின்றார்கள் என்பதை திரு. ராஜகோபாலாச்சாரியாரும் திரு.காந்தியும் மற்றும் “கதர் தொண்டர்களும் அன்பர்களும்” எந்தக் காரணத்தைக் கொண்டு ஆட்சேபிக்க முடியாது.
ஆனால் அந்த நஷ்டப்பட்ட ரூபாய் ஏழைகளுக்குப் போய் சேர்ந்தது என்று ஒரு சமாதானம் சொல்ல வருவார்கள். அதன் யோக்கியதையையும் சற்று கவனிப்போம். அதை பிரசங்கத்தில் திரு.ராஜகோபாலாச்சாரியார் 1928-ம் வருடத்தில் கதர் நூல் நூற்றதற்கு கூலியாக 98000 பேருக்கு 6 லக்ஷம் ரூபாய் நூற்புக் கூலி கொடுத்ததாக சொல்லி இருக்கின்றார். இதில் நெசவுக் காரர்களைப் பற்றி நாம் கவனிக்க வேண்டியதில்லை. ஏனெனில், நெசவுக் காரர்கள் கதர் நெய்வதால் சரியான கூலி கிடைப்பதில்லை என்றும் மில் நூலினால் அதிகக்கூலிக் கிடைக்கின்றதென்றும் சொல்லுகின்றார்கள். அவர்களுக்கு எப்படியும் வேலை கிடைத்துத்தான் தீரும். ஆதலால் அவர் கள் விஷயத்தை விட்டுவிட்டு நூற்புக்காரர் விஷயத்தைக் கவனிப் போமானால் 98000 அல்லது ஒரு லட்சம் பேர் ஒரு வருடத்திற்கு ஆறு லட்சம் ரூபாய்க் கூலி சம்பாத்தியத்திற்காக அதுவும் தினம் ஒன்றுக்கு ஒரு அணா – ஒரு மணிக்கு ஒரு பைசா வீதம் சம்பாத்தியத்திற்காக பொது ஜனங்களிடமிருந்து அதிகக் கிரயம் 12 1/2 லட்ச ரூபாயும், இவ்வியக்கத்தை நடத்தப் பொது ஜனங்களின் வசூல் பணம் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 14 லட்ச ரூபாயும் செலவு செய்து, மேல் கொண்டு இந்த தொண்டுக்காக “மகாத்மா” காந்தி “உத்தமப் பிராமணர்” ராஜகோபாலாச்சாரி மற்றும் சர்தார் பட்டேல் முதலிய “மகான்களும்” மாதம் 150, 200, 250 வீதம் “குறைந்ததொகை” வாங்கிக் கொண்டு வேலை செய்யும் பல “உத்தமப் பிராமணர்” கதர் தொண்டர்களும் வருடமெல்லாம் தியாகம் செய்தாக வேண்டியிருக்கிறது என்றால், கதரினால் இந்தியாவுக்கு ஏற்பட்ட லாபம் என்ன என்றுதான் கேட்கின்றோம். மேலும் கதர் இயக்கம் இனியும் சற்று வெற்றி பெற்று இன்னும் ஒரு லட்சம் பேருக்கு இன்னும் ஒரு ஆறு லட்ச ரூபாய் ஒரு வருடத்திற்குக் கிடைக்க வேண்டுமானால், பொது ஜனங்கள் இனியும் மேற்கொண்டு ஒரு 121/2 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டாமா என்றும் கேட்கின்றோம். அன்றியும் நமது கிராமத்துப் பெண்மணி ஒருவர் ஒரு மணிக்கு ஒரு பைசா கூலி கிடைக்கும்படி இரவும் பகலும் வேலை செய்து மொத்தத்தில் வருடத்திற்கு ஆறு ரூ. சம்பாதிக்கும், இயக்கத்தில் ஈடுபட்டிருக்கும் “உத்தமப் பிராமணர்கள்” மாதம் ரூபாய் 250 முதல் 50 ரூபாய் வரையில் குறைந்த சம்பளத்திற்கு ஈடுபட்டிருந்து கொண்டு, நம்மை என்ன கேட்கின்றார்கள் என்றால், “இந்த மணிக்கு ஒரு பைசா கூலியாவது கிடைக்கும்படி வேறு வேலை காட்டு பார்ப்போம்” என்று கேட்கின்றார்கள். அப்படியாவது உண்மையிலேயே இந்தத் தொண்டில் மணிக்கு ஒரு பைசாவாவது கிடைக்கின்றதா என்று பார்ப்போம். நூற்புக்காரர்கள் இந்தக் கதரை வாங்கி கட்டி விட்டார்களேயானால் அவர்கள் கொடுத்த அதிக விலைக்கும் அவர்களுக்குக் கிடைத்த கூலிக்கும் சரியாய் போகின்றது. மற்றும் வீட்டிலுள்ளவர்களுக்கு வாங்கிக் கொடுத்து விட்டால் வேலை செய்த பணமும் போய் மேல் கொண்டும் கையிலிருந்த பணமும் போய் விடுகின்றது. ஆனால் இந்தத் தொண்டில் ஈடுபட்ட “தியாகி களான” உத்தமப் பிராமணர்களுக்கு மாதம் 250 முதல் 50 ரூபாய் வரை மீதியா வதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. எனவே சில “உத்தமப் பிராமணர் களின்” வயிற்றுப் பிழைப்புக்காக எத்தனை ஏழை மக்கள் நஷ்டமடைவது என்று கேட்கின்றோம். ஒருவனிடம் தேச மென்றும், ஏழை என்றும், தர்மம் என்றும் சொல்லி மனதாற ஏமாற்றி அடித்துப் பிடுங்கி மற்றொருவனிடம் நன்றாய் வேலை வாங்கிக் கொண்டு அரைக்கூலி கொடுப்பதென்றால், இதில் தேசியமோ, கைத்தொழில் லாபமோ என்ன இருக்கின்றது என்றுதான் கேட்கின் றோம். இதற்காக வேலை வாங்காமல் இந்தக் கூலிகொடுப்பதாயிருந்தால்கூட பொது ஜனங்களுக்கு இவ்வளவு நஷ்டம் உண்டாகாதென்றே சொல்லுவோம். இந்தப் பெரிய தர்ம கைங்கரியத்திற்கு ஆச்சிரமம் வேண்டியதில்லை; மகாத்மாக்கள் வேண்டியதில்லை; உத்தமப் பிராமணத் தொண்டர்களும் வேண்டியதில்லை என்பதோடு இது கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் வேலையைவிட மோசமானதா இல்லையா? இந்தக் காரியம் என்றுதான் பொது ஜனங்களை கேட்கின்றோம். ஆகவே கதர் இயக்கமென்பது சிலர் தங்களுக்கு ஆதிக்கமும், சிலர் தங்களுக்கு வயிற்றுப் பிழைப்பும் இருக்கட்டும் என்று கருதிப் பொது ஜனங்கள் பணத்தில் அனுபவிக்கும் ஒரு பதவியே தவிர, அதனால் உண்மையான வருமானமோ, தர்மமோ ஒன்றும் இல்லை என்றும், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பன ரல்லாதாருக்குத் தொல்லை விளைவிக்கப் பார்ப்பனர்களால் உபயோகப் படுத்தப்படும் ஒரு சாதனமென்றும் தைரியமாய்ச் சொல்லுகிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 08.09.1929