நமது மந்திரிகள்
சென்னை அரசாங்க மந்திரிகளின் பெருமைகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் சுருக்கமாக ஒரு வார்த்தையில் விளங்கவைத்துவிடலாம். அதென்னவென்றால், மந்திரிகள் மூவரும் பொதுஜன நன்மைக்கு விரோதிகளான பார்ப்பனர்களால் வெறுக்கப்பட்டவர்கள்.
எனவே இவர்கள் பார்ப்பனரல்லார்களுக்கு எப்படிபட்டவர் களாய் இருக்கின்றார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.
ஏனெனில், பொது ஜனங்களின் நன்மைக்கு நடுநிலையில் இருந்து பாடுபடுபவர்களோ வேலை செய்கின்றவர்களோ அவர்களுக்கு உதவி செய் கின்றவர்களோ ஆகிய எவரும் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகளாய் இருக்க முடியவே முடியாது. அதுபோலவே பார்ப்பனர்களால் மதிக்கப்பட்ட- புகழப்பட்ட- எவரும் பொது மக்களுக்கு ‘துரோகம்’ செய்யாதவர்களாக இருக்க முடியவே முடியாது. இது இன்றைய அனுபவமாக மாத்திரம் இல்லாமல் சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் கண்ட முடிவும் இதுவாகவேதான் விளங்குகின்றது. இன்றைய தினம் யார் யார் பார்ப்பனர்களால் வையவும் தூற்றவும் படுகின்றார்களோ அவர்களில் அநேகமாய் எல்லோருமே பொதுஜனங்களின் நன்றியறிதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்களாக இருப்பதை அனுபவத்தில் காண்கின்றோம். அதிகாரிகளில் கூட ஏறக்குறைய யோக்கியப் பொறுப்பும் நாணயப் பொறுப்பும் ஒழுக்கப் பொறுப்பும் இல்லாத வெள்ளையர்கள் யார் யார் ஹைகோர்ட் ஜட்ஜி முதல் போலீஸ் சேவகன் வரை உள்ள உத்தியோகங்களில் உண்டோ அவர்கள் எல்லோரும் இன்றைய தினம் பார்ப்பன பத்திரிகைகளிலும் பார்ப்பன மேடைகளிலும் புகழப் படுவதோடு அநேகமாய் அப்படிப்பட்ட வெள்ளையர்களின் படங்கள் பார்ப் பனர்களின் படுக்கை வீடுகளிலும் தொங்கிக் கொண்டிருப்பதையும் காணலாம்.
வெள்ளைக்காரர்கள் விஷயங்களே இப்படியானால் இந்தியர்கள் விஷயத்தில் அவர்கள் எப்படி நடந்து கொள்ளுவார்கள் என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டுமா?
சென்ற தேர்தலின் போது பார்ப்பனரல்லாதார் கட்சி வெற்றி பெறுவது கஷ்டமாயிருக்கும் என்கிறதும் பார்ப்பனர்களுக்கும் அவர்களது அடிமை களுக்கும் தான் வெற்றியேற்படக் கூடும் என்கின்றதுமான சந்தேகம் நமது கவர்னர் துரையான லார்ட் கோஷனுக்குத் தோன்றியவுடன் அவர் வகுப்புவாதம் கூடாது; அதனால் தேசத்துக்கு நன்மையில்லை என்று சொன்னார். அந்தப்படி அவர் சொன்னவுடன் அவரைப் பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் புகழ்ந்ததற்கு அளவே இல்லை, அந்த சமயத்தில் நாம் கோஷன் பிரபுவை பலமாக கண்டித்தோம். அதோடு ‘அவர் மீது நம்பிக்கை இல்லை’ என்றும் ‘அவரைத் திருப்பி அழைத்து கொள்ள வேண்டும்’ என்றும் கோயமுத்தூர் மகாநாட்டில் தீர்மானமும் கொண்டுவந்து பலர் வேண்டுகோளின் பேரில் ‘திருப்பி அழைத்துக் கொள்ளவேண்டும்’ என்பதை விட்டுவிட்டு ‘நம்பிக்கை இல்லை, என்கின்ற பாகத்தை ஏகமனதாக நிறைவேற்றினோம். அந்தக் காலத்தில் இந்தப் பார்ப்பன பத்திரிகைகள் திரு.கோஷன் பிரபுவை வானமளாவப் புகழ்ந்ததுடன் அவருக்கு இந்தப் பார்ப்பனர்கள் சங்கராச்சாரிக்கு செய்யும் உபசாரம்போல் உபசாரம் செய்தார் கள். கோஷன் பிரபுவும் இப்பார்ப்பனர்களை நம்பிக் கொண்டு கோவைத் தீர்மானத்தை பற்றி பரிகாசமாய் நினைத்து கொண்டு “இனி நான் மூட்டை முடிச்சுகளுடன் கப்பலேறத் தயாராய் இருக்கவேண்டியது தானா” என்று இறுமாப்பாய் பேசினார். ஆனால் வெகுசீக்கிரத்தில் உண்மை நிலை உணரப் பட்டு தனது தப்பிதத்திற்காக வருந்த வேண்டியும் ஏற்பட்டு கிரமமாய் நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தார். இந்த நிலை ஏற்பட்ட வுடன் மறுபடியும் பார்ப்பனர்களால் வழக்கம்போல் தூற்றவும் பட்டார்.
எனவே யோக்கியமாகவும் நாணயமாகவும் நடக்கக் கூடிய யாரும் பார்ப்பனர்களால் மதிக்கப்பட முடியவே முடியாது. அதுபோலவே நமது மந்திரிகளும் பார்ப்பனதாசர்களாய் இருந்தால் மாத்திரம் தான் பார்ப்பனர் களாலும் அவர்களது கூலிகளாலும் புகழப்படுவார்கள் சற்று கோணலாக நடக்க ஆரம்பித்துவிட்டால் உடனே அவர்களை தூற்ற ஆரம்பித்து விடுவார்கள். அன்றியும் அவர்களை ஒழிப்பதற்கும் எவ்வளவு இழி தொழிலில் வேண்டுமானாலும் இறங்கி வேலை செய்யத் துணிந்துவிடு வார்கள், மற்றபடி ஒழுக்கமோ நாணயமோ ஆகியவற்றைப் பற்றி ஒரு சிறிதும் கவலை கொள்ளமாட்டார்கள்.
கனம் சேதுரத்னமய்யர்
உதாரணமாக இன்றைய மந்திரிகளில் ஒருவரான கனம் சேதுரத்தின மய்யர் அவர்களிடம் பார்ப்பனர்கள் என்ன குற்றம் கண்டுபிடித்துவிட்டார் கள்? அவருடைய ஆட்சியில் ஒரு பார்ப்பனன் கூட இதுவரை குற்றம் சொல்ல முன் வந்ததாகச் சொல்லமுடியாது. அப்படி இருக்க பிராமண மகா நாட்டில் கனம் சேதுரத்தினமய்யர் மந்திரி வேலை ஒப்புக் கொண்டதற்காக கண்டித்து ஒரு தீர்மானம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதே உத்தியோகம் திரு.வி.சி. வெங்கிட்டரமணய்யங்காரோ அல்லது திரு. கே.ஆர். வெங்கட் ராமய்யரோ ஒப்புக் கொண்டிருந்தால் அவரை வானமளாவப் புகழ்ந்து திரிவார்கள்.
கனம் முத்தையா முதலியார்
தவிர கனம் முத்தையா முதலியாரவர்களைப் பற்றியும் பார்ப்பனப் பத்திரிகைகள் தூற்றுவதும் பழிசுமத்துவதும் கூலிகளைவிட்டு விஷமப் பிரசாரம் செய்யச் செய்வதும் கணக்கு வழக்கில்லை. இதுவரையில் பார்ப்பனர்கள் அவர்மீது குறிப்பிட்டு என்ன குற்றம் சொன்னார்கள் என்று பார்த்தால் ஒன்றையுமே காணோம். காங்கிரசைத் துரோகம் செய்ததாக சொல்வதானாலும் “இதே குற்றம் செய்த” திரு கனம் சேதுரத்தன மய்யரவர்கள் மீது இதைப்பற்றி ஒன்றுமே சொல்வதைக் காணோம்.
நிற்க, கனம் முத்தையா முதலியார் அவர்கள் சென்னைக் காங்கிரஸ் காரர்கள் மந்திரி சபை அமைத்த காரியமான ‘பெருந்துரோக’த்தைப் பற்றி காங்கிரசில் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்பாரற்று போனதினாலும் அந்த துரோகங்கள் காங்கிரசினால் ஆதரிக்கப்பட்டதினாலும் அவர் காங்கிரஸ் தீர்மானத்தின் உண்மையான கருத்தை உணர்ந்து அதன்படி நடந்து கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மற்றபடி அவர் மந்திரி உத்தியோகத்தில் பார்ப்பனர்களுக்கு என்ன கெடுதி செய்து விட்டார் என்று பார்த்தால், உத்தியோகங்களில் பார்ப்பனர்களுடைய ஏகபோக உரிமைக்கு ஆபத்தை கொண்டுவந்து விட்டுவிட்டார். அதாவது அவரது இலாகாவில் உள்ள உத்தியோகங்கள் எல்லா வகுப்பாருக்கும் கிடைக்கும்படி செய்து விட்டார். இது பார்ப்பனர்களுக்கு பெரிய ஆபத்தான காரியம். ஏனென்றால் இந்த உத்திரவு மாத்திரம் எல்லா இலாக்காக்களிலும் சரியாக அமுலுக்கு கொண்டு வரப்பட்டு விடுமானால் இனி 10 வருஷத்தில் ‘பார்ப்பான் உயர்ஜாதி’ என்கின்ற பேச்சே கண்டிப்பாய் இல்லாமல் போய்விடும். இன்றைய தினம் நமது நாட்டில் உள்ள அரசியல் இயக்கத்தின் தத்துவம்கூட பார்ப்பன ஆதிக்கத்தையும் பார்ப்பான் உயர்ந்தவன் என்பதையும் நிலை நிறுத்தவே ஒழிய மற்றபடி ஜனங்களுக்கு ஒரு காதொடிந்த ஊசியளவு நன்மைக்குமல்ல என்பதோடு அவற்றால் அநேக ஆபத்துகளும் உண்டாகி வருகின்றது என்பது சத்தியமான விஷயம். எனவே அப்பேர்ப்பட்ட காரியத்தின் தலையில் கனம் முதலியார் கை வைத்து விட்டதோடு, மது விலக்குப் பிரசாரம் செய்யவும் 4 லக்ஷம் ரூபாயும் வைத்துவிட்டதின் மூலமும் பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கு இடமில்லாமல் போய்விட்டதால் பார்ப்பனர்கள் எப்படியாவது அவரை ஒழித்து மறுபடியும் சட்டசபைக்கும் மந்திரி பதவிக் கும் வரவொட்டாமல் தடுத்து அவர் செய்த வேலையையும் அழித்து மறு படியும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திகொள்ள வேண்டியது பார்ப்பன வேதத்தின் கட்டளையாகிவிட்டது. ஆதலால் அவர்கள் தூற்ற வேண்டிய வரும் பொது ஜனங்கள் போற்ற வேண்டியவருமாய் விட்டார்.
கனம் சுப்பராயன்
அதுபோலவே கனம் திரு.சுப்பராயன் அவர்கள் மீதும் பார்ப்பனர் களுக்கு ஆத்திரம் இருப்பதில் அதிசயமில்லை. அது மாத்திரமல்ல கனம் முத்தையா முதலியாரவர்கள் மீது உள்ள ஆத்திரத்தைவிட அதிகமான ஆத்திரம் கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கள் மீது இருக்கப் பல காரணங்கள் உண்டு. ஏனென்றால் கனம் சுப்பராயன் அவர்களின் இடுப்பில் கயிறுகட்டி தங்கள் இஷ்டப்படி ஆட்டலாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் ஒத்துழையாதாரான திரு.சி. ராஜகோபாலாச்சாரி, கிழ தேசீயவாதியான திரு. சி. விஜயராகவாச்சாரி, சர்.சி.பி.ராமசாமி அய்யர் ஆகிய இவ்வளவு பேராலும் மற்றும் அரசாங்கத்தை “முட்டுக்கட்டை போடுவதன் மூலம் பணியச்செய்யச் செய்பவர்களான தேசீயவாதிகளும்” சுயராஜியக் கக்ஷியாரும் காங்கிரஸ் காரருமான இவ்வளவு பார்ப்பனர்களாலும் பிரதிஷ்டை செய்து கும்பா பிஷேகம் செய்யப்பட்ட ஒரு மந்திரியானவர், கனம் முத்தையாவைவிட ஆபத்தான காரியத்தில் பார்ப்பனர்களின் தலையில் கையை வைக்கத் தொடங்கிவிட்டதால் இனி ஒன்றா, அவரை மறுபடியும் எந்த விஷத்திலாவது தங்கள் சுவாதீனம் செய்து கொள்ளப்பார்க்க வேண்டும். அல்லது அவரையும் சட்டசபைக்கு வராமலும் மந்திரியாகாமலும் பார்த்துக் கொள்ளவேண்டும். இந்த இரண்டில் ஒன்று இல்லாவிட்டால் ஆபத்துத்தானென்பதில் சிறிதும் அவர்களுக்குச் சந்தேகமில்லை. ஏனெனில் கனம் முத்தையாவோ உத்தி யோகத்தின் வாயில் மண்ணைப் போட்டார் என்றால், கனம் டாக்டர் சுப்ப ராயனோ அடியோடு அவர்கள் பஞ்சாங்கப் பிச்சைப் பிழைப்பிலும்கூட மண்ணைப் போட்டுவிடப் பார்க்கின்றார். அவர்களின் உபன்யாசங்க ளிலிருந்தும் மற்றும் செங்கல்பட்டு சுயமரியாதை மகாநாட்டைப் பற்றி சட்டசபையில் பார்ப்பனக் கூலிகளாகிய திரு.முத்துரங்கம் கம்பனியார்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கனம் சுப்பராயன் அவர்கள் சொன்ன மறு மொழிகளிலிருந்தும் பார்ப்பனர்களுக்கு கனம் சுப்பராயனை விட கனம் முத்தையாவே சற்று தேவலாம் என்று நினைக்கும்படியாக ஏற்பட்டுவிட்டது. என்னவென்றால், முதலாவது “கல்வி விஷயத்தில் இனி உயர்தரக் கல்விக்கு நான் அதிகம் பணம் செலவழிக்க மாட்டேன்” என்றும் “ஆரம்பக் கல்விக்குதான் செலவு செய்யவேண்டும்” என்றும் “கூடிய சீக்கிரத்தில் சென்னை மாகாணத்தில் படியாத மக்களே இல்லை என்று சொல்லும் படியாக செய்துவிடுவேன்” என்றும் சொல்லி இருக்கின்றார். மறுபடியும் “கல்வி என்பதில் ஜாதி வித்தியாசத்தையும் பிறவியில் உயர்வு தாழ்வு என்கின்ற வித்தியாசத்தையும் ஒழிப்பதுதான் முக்கியமான கல்வி” என்றும் “அதைச் செய்யும் முறையில் கல்வியை திருப்பப் போகின்றேன்” என்றும் சொல்லி இருக்கின்றார், “ஆரம்பக் கல்விக்கு பெண்மக்களையே உபாத்தியாயர்களாக இருக்க ஏற்பாடு செய்யப் போகின்றேன்” என்றும் சொல்லி இருக்கின்றார். பெண்களுக்கு பூரண உரிமை அளிக்கபோவதாயும் சொல்லி இருக்கிறார். கிராமப்புணருத்தாரண வேலைப் பிரசாரம் என்பதில் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பிரசாரம் செய்வதும் சேர்ந்தது என்றும் சொல்லி இருக் கின்றார், அதோடு மாத்திரமல்லாமல் சமுதாய விஷயத்தில் பார்ப்பனரின் ஆதிக்கமும் மூடநம்பிக்கையும் ஒழிந்தால்தான் அரசியலிலும் அன்னிய ஆதிக்கமும் மூடநம்பிக்கையும் ஒழியும் என்றும் சொல்லிவிட்டார்.
எனவே இந்த மந்திரிகள் தங்களை ஜஸ்டிஸ் கட்சியார் என்று சொல்லிக் கொள்ளாவிட்டாலும் 6 வருஷகாலம் மந்திரியாயிருந்தும் 5500 ரூபாய் வீதம் சம்பளம் வாங்கி வந்தவரும் தற்காலம் ஜஸ்டிஸ் கட்சிக்கு சட்டசபையில் தலைவராயிருப்பவருமான ஜஸ்டிஸ் கட்சியான மந்திரி சர்.ஏ.பி. பாத்ரோவை விட மேலானவர்கள் என்று மாத்திரம் சொல்வ தோடல்லாமல் முடிவாகச் செய்ய வேண்டிய வேலையின் பக்கம் திரும்பி விட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.
நிற்க, இவர்களில் கனம் முத்தையா அவர்கள் தான் செய்ய வேண்டிய காரியங்களை காரியத்தில் செய்து காட்டி விட்டார்கள். கனம் டாக்டர் சுப்ப ராயனவர்களின் திட்டங்கள் வாய் வார்த்தைகளில் இருக்கின்றன. ஆனாலும் இனியும் அவருக்கு இந்தத் தடவை 8 மாத காலம் சாவகாசமிருக்கிறது. இந்த 8 மாதத்தில் அவர்கள் உத்தேசங்களைக் கூடுமான அளவு காரியத்தில் கொண்டு வந்துவிடுவார் என்றே நினைக்கின்றோம்.
அதாவது பெண்கள் போதனை முறைப் பள்ளிக் கூடங்கள் தாராள மாய் ஏற்படுத்தப்பட வேண்டும். விதவைகள் பள்ளிக்கூடங்கள் சென்னைக்கு வெளியிலும் மதுரை, கோயமுத்தூர், வேலூர் ஆகிய ஜில்லாக்களின் தலைமை ஸ்தானங்களிலோ இடவசதியான ஸ்தானங்களிலோ ஏற்படுத்தி அவர்களை வெகுசீக்கிரத்தில் உபாத்தியாயினிகளாக ஆக்கிவிட வேண்டும். தீண்டப்படாத மக்கள் என்பவர்களின் மக்கள் படிப்புக்கும் உணவுக்கும் புஸ்தகங்களுக்கும் சர்க்காரிலேயே செலவு செய்து படிப்பிக்க ஏற்பாடு செய்யவேண்டும். அதற்காக சில இடங்களில் போர்டிங் ஸ்கூல் ஏற்படுத்த வேண்டும்.
மதச் சம்மந்தமான இலாகாவிலும் தீண்டாமை ஒழிய சட்டத்தின் மூலமாகவோ அல்லது ஒரு மகாநாடு கூட்டி எல்லோருடைய சம்மதத்தின் மூலமாகவோ அல்லது அதைப்பற்றி பொதுஜன அபிப்பிராயம் தெரிய ஒரு கமிட்டி நியமித்து அந்த ரிப்போர்ட்டின் மீதிலோ ஏதாவது விதாயம் செய்ய வேண்டும். இன்னும் இது போன்ற அநேக காரியங்கள் இருந்தாலும். சிலவற்றையாவது இக்காலாவதிக்குள் செய்ய வேண்டும். கல்வி, பெண் மக்கள், தீண்டப்படாதார் ஆகிய இம்மூன்று விஷயங்களிலும் அவசரமாக முதலில் ஏதாவது செய்ய வேண்டியது மிகவும் அவசியமானதாகும். வாய்ப்பேச்சில் பலனில்லை.
திரு. காந்தி கூட தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று வாயினால் சொல்லி ‘மகாத்மா’ ஆனார். மகாத்மா பட்டம் நிலைத்ததும் ‘வருணாசிரம தருமம்’ இருக்கவேண்டும். பிறவியில் ஜாதி வித்தியாசம் உண்டு. அவனவன் ஜாதித் தொழிலையே அவனவன் செய்து தீரவேண்டும். அந்தப்படி செய்யாதவன் கீழ்ஜாதிக்காரன் ஆகிறான் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். எனவே கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கள் அது போலில்லாமல் மீதி உள்ள 8 மாதக் காலத்தில் தைரியமாக காரியத்தில் ஏதாவது செய்து தீரவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். தீண்டாதவர்கள் எனப்பட்டவர் களுக்கு தனி தேர்தல் தொகுதியையும் சீக்கிரத்தில் கொடுக்கவேண்டியதும் மிக அவசியமாகும்.
அன்றியும், இந்தப்படி செய்துவிட்டால் அடுத்த தேர்தலுக்கு எந்த கக்ஷியின் பெயரையும் சொல்லிக் கொண்டு நிற்க வேண்டிய அவசியமும் இருக்காது. அப்படி சொல்லிக் கொண்டு நிற்கவும் வேறு யோக்கியமான கக்ஷியையும் காணோம். ஆதலால் சமுதாயச் சீர்திருத்த சம்மந்தமான கொள்கையின் பேரிலேயே தேர்தலுக்கு நிற்கலாம். அதற்கேற்றாற்போலவே மக்களும் அது சம்மந்தமான கொள்கைகளுக்கு மாத்திரமே ஓட்டுக் கொடுக்கும் நிலைமைக்கு வந்து கொண்டு இருக்கின்றார்கள். ஆதலால் அந்தக் கொள்கையின் மீதே கூடிய சீக்கிரத்தில் தேர்தலிலும் வெற்றிபெற்று அரசாங்கத்தையும் நடத்தக் கூடிய நிலைமையை சீர்த்திருத்தக்காரர்கள் அடையலாம் என்றே உறுதிக் கொண்டிருக்கின்றோம்.
எனவே, இந்தத் தடவையில் நமது மந்திரிகள் பொதுவாக சமுதாய விஷயத்தில் சரித்திரத்தில் குறிப்பிட்டுப் பாராட்டத்தக்க அளவு வேலைகள் செய்திருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். கனம் டாக்டர். சுப்பராயன் அவர்களால் குறிப்பிடப்பட்ட வேலைகள் எல்லாம் நிறைவேறுமானால் இந்த மாகாணத்தில் நாம் செய்ய வேண்டிய வேலைகள் தீர்ந்தது என்று சொல்லி விட்டு வேறு மாகாண சட்டசபைகளையும் கைப்பற்றி அங்கு வேலை செய்யப் போய்விடலாம் என்றே சொல்லலாம். ஏனெனில் இந்தத் தடவை மந்திரிகளுக்கு எதையும் செய்வதற்குத் தக்கபடி தாராளமாக ஆதரவு இருந்திருக்கின்றது; இருந்தும் வருகின்றது. ஆதலால் மீதி நாட்களை வீணாக்காமல் துரிதத்தில் குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய வேணுமாய் விரும்புகின்றோம்.
குடி அரசு – தலையங்கம் – 31.03.1929