“ ரிவோல்ட் ”
ரிவோல்ட்” என்னும் ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்றை சென்ற ஆறாம் தேதி செவ்வாய்க்கிழமை பட்டிவீரன்பட்டி திரு. சௌந்திரபாண்டிய நாடார் அவர்களைக் கொண்டு திறப்பு விழா நடத்தி 7ஆம் தேதி புதன் கிழமை முதல் இதழ் வெளிப்படுத்தி விட்டோம். இனி அதை ஆதரித்து அதன் கொள்கைகளை வெற்றி பெறச் செய்து வைக்க வேண்டியது பொது மக்களின் கடமையாகும்.
“ரிவோல்ட்” பத்திரிகையின் ஆரம்பத்தின் உத்தேசமெல்லாம் நமது நிலைமையையும் கொள்கையையும் தமிழ் மக்கள் தவிர மற்ற மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்கிற ஆவலேயாகும். நமது நிலைமை சென்னை மாகாணத்திலேயே தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய பாஷைகளை நாட்டு பாஷையாகக் கொண்ட பல ஜில்லாக்களுக்கே தெரியவில்லை என்றால் வெளி மாகாணங்களுக்கும் வெளி தேசங்களுக்கும் எப்படித் தெரிந்திருக்க முடியும்? உதாரணமாக ஒரு சமயத்தில் இந்தியா மந்திரியுடன் திரு. டாக்டர் டி.எம். நாயர் அவர்கள் பேசிக் கொண்டிருந்தபொழுது, “சென்னை பார்ப்பனரல்லாதார்களுக்காக பெரிய உத்தியோகங்கள் அளிக்கப்
படவில்லை” என்று சொன்னபோது “திரு. க்ஷ.சூ. சர்மா என்பவர் இந்திய அரசாங்கத்தில் நிர்வாக சபை மெம்பராயிருந்து 6500 ரூபாய் சம்பளம் வாங்குகிறாரே, அது போதாதா”என்று இந்தியா மந்திரி சொன்னாராம். “அதற்கு திரு. டாக்டர் நாயர் அவர்கள் நான் இந்தியாவை விட்டு புறப்படும் வரை திரு. க்ஷ.சூ. சர்மா அவர்கள் பார்ப்பனராயிருந்தார், நான் புறப்பட்ட பிறகு அவர் ஏதாவது பார்ப்பனரல்லாதாராய் விட்டாரோ என்னமோ எனக்குத் தெரியவில்லை. ஆதலால் தயவு செய்து அவர் பார்ப்பனரல்லாதாராக ஆயிருப்பதாய் தங்களுக்கு வந்த செய்தியை காட்டுகிறீர்களா” என்று கேட்டாராம். அதன் பிறகு அந்த இந்தியா மந்திரி திடுக்கிட்டு, “நான் இத்தனை நாளாக அவரை பார்ப்பனரல்லாதார் என்றுதான் நினைத்துக் கொண்டிருக் கிறேன்; இப்போது தாங்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாய் இருக்கின்றது” என்று சொன்னாராம்.
அதுபோலவே சென்னையில் சென்ற வருடம் நடந்த காங்கிரசுக்கு கல்கத்தாவிலிருந்து வந்த முக்கியஸ்தர்களில் ஒருவரான திரு. கோஸ்வாமி என்கின்றவரோடு நாம் பேசிக் கொண்டிருந்தபோது, “சென்னை மாகாணத்
தில் தெருவில் நடக்கக் கூடாதவர்களும், கோவிலுக்குள் போகக் கூடாதவர்
களும், தொடக்கூடாதவர்களும், நிழல் மேல் படக்கூடாதவர்களும் இருக்கின்றார்களே, அவர்களைப் பற்றி தங்கள் அரசியல் திட்டத்தில் என்ன கவலை எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்” என்று கேட்டபோது, அவர் ஆச்சரியப்பட்டு, “அப்படி ஒன்று இருப்பதாக எனக்கு இதுவரை தெரியவே தெரியாது. இது உண்மையா” என்று பக்கத்தில் இருந்த திரு.ஆர். கே. ஷண்முகம் செட்டியாரைக் கேட்டார். அதற்கு திரு.ஷண்முகம் செட்டியார் அவர்கள் சிரித்துக் கொண்டே, “இதற்கு சாக்ஷிக்காக அதிக தூரம் போகா
தீர்கள். நானே சில கோவிலுக்குள் போகக்கூடாத ஜாதி என்பதைச் சேர்ந்த
வன். ஹைக்கோர்ட்டு வரையில் விவகாரம் செய்து பார்த்தும் எங்களை அந்த கோவிலுக்குள் போகக்கூடாத ஜாதியிலேயே சேர்த்து தீர்ப்பு பெற்று விட்டார்கள். எனவே இனி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் உண்டா” என்று கேட்டார். பிறகு திரு. கோஸ்வாமி பட்ட ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.
இதுபோலவே பல உதாரணங்கள் எடுத்துக் காட்டலாம். எனவே நம் நிலையையும் தேவையையும் வெளி நாட்டார்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியப்படுத்த வேண்டுமானால் தாக்ஷண்யமும் பய மும் சுயநலமும் அற்ற தன்மையில் தைரியமாய் வெளிப்படுத்தக் கூடிய ஒரு சாதனம் இருந்தாக வேண்டும் என்ற கருத்தைக் கொண்டே “ரிவோல்ட்” ஆரம்பித்து விட்டோம். அதன் கொள்கையைப் பற்றி நாம் அதிகமாக சொல்லிக் கொள்ள வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்.
முக்கியமாக அரசியல் துறையில் உழைக்க வேண்டும் என்பது அதன் கவலையல்ல. ஆனால் அரசியல் அயோக்கியத்தனங்களை தைரியமாயும் தாராளமாயும் வெளியாக்கி விடவேண்டும் என்பதே “ரிவோல்ட்” டின் பெருங்கவலைகளில் ஒன்றாகும். அதுபோலவே சாமியைப் பற்றியும் சமயத்தைப் பற்றியும் அதற்கு சிறிதும் கவலையில்லை. ஆனால் அவற்றின் பேரால் நடைபெறும் அயோக்கியத்தனங்களையும் கொடுமைகளையும் அடிமைத்தன்மைகளையும் அறியாமையையும் வெளியாக்குவது எல்லா வற்றையும் விட முக்கியமானது ஆகும். சுருக்கமாகவும் மொத்தமாகவும் கூறுமிடத்து இதற்கு முன் ஒரு தடவை அதாவது,
“ரிவோல்ட்” பத்திரிகையை அரசாங்கத்தாரிடம் பதிவு செய்து கொண்ட சமயத்தில், அதன் கொள்கை என்ன என்பதாக அரசாங்கத்தார் அறிய விரும்பிய போது தெரிவிக்கப் பட்டதையே மறுமுறையும் தெரிவித்து இதை முடித்து விடுகின்றோம். அதாவது :-
“ரிவோல்ட்” என்ற ஆங்கில வாரப் பத்திரிகை நடத்துவதின் கருத்து, இப்போது நாம் பதிப்பாசிரியராயிருந்து நடத்தும் “குடி அரசு” என்னும் தமிழ் வாரபத்திரிகையின் கொள்கைகளையே முக்கியமாய்க் கொண்டு நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ‘ரிவோல்ட்’ என்கின்ற வார்த்தைக்கு எடுத்துக் கொண்ட அர்த்தம் கட்டுப்பாட்டை உடைத்தல் என்பது. அதாவது மனித தர்மத்துக்கும், மனித இயற்கைக்கும் விரோதமாக அரசியலிலானாலும் சரி, மத இயலிலானாலும் சரி, அதிகார இயலிலானாலும் சரி, முதலாளி இயலிலானாலும் சரி, ஆண் இயலிலானாலும் சரி, மற்றும் எவைகளிலானாலும் சரி அவைகளினால் ஏற்படும் இயற்கைக்கும் அறிவுக்கும் மாறுபட்ட கட்டுப்பாடுகளை உடைத்து, உலகமும் அதன் இன்பமும் எல்லோருக்கும் பொது என்பதும் மக்கள் யாவரும் சமம் என்பது மான கொள்கையை மனசாக்ஷிப்படி சாத்தியமான வழிகளில் பிரசாரம் செய்வதே அதன் நோக்கம் என்பதாகும்.
இதற்கு முக்கிய பத்திராதிபராக திரு. எஸ். ராமநாதன் எம்.ஏ.பி.எல் அவர்கள் இருந்து வருவார். நாமும் அதில் பங்கு எடுத்து வருவோம். எனவே இதை வாலிப உலகம் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின் றோம். எம் வாலிப நண்பர்கள் ஆங்காங்குள்ளவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் சந்தாதாரராய்ச் சேருவதுடன் ஒவ்வொருவரும் இது சமயம் மூன்று சந்தாதாரர்களுக்கு குறையாமல் சேர்த்து விட்டு மறு காரியம் பார்ப்பது என்கின்ற உறுதியைக் கொள்ள வேண்டுகின்றோம்.
சந்தா விபரம்
வருட சந்தா ரூ 4 – 0 – 0
மாணாக்கர்களுக்கு ரூ 3 – 0 – 0
வெளிநாட்டிற்கு ரூ 5 – 0 – 0
மாதிரி காப்பி வேண்டியவர்கள் ஒரு அணா ஸ்டாம்பு அனுப்ப வேண்டும்.
விலாசம்
மேனேஜர் “ரிவோல்ட்”
ஈரோடு.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 11.11.1928