இதைவிட வேறு சாக்ஷி வேண்டுமா?
தென்நாட்டு பார்ப்பனர்கள் ஒத்துழையாமையை ஒழித்து திரு. காந்தியையும் மூலையில் உட்கார வைத்துவிட்டு ஒத்துழையாமையில் ஜெயிலுக்குப் போனவர்களுடையவும் திரு. காந்தியவர்களுடையவும் செல்வாக்கையும் உபயோகப்படுத்திக்கொண்டும், அவர்களுடைய பெயர் களைச் சொல்லிக் கொண்டும் ஒன்று இரண்டு வருஷம் சட்டசபைத் தேர்தல் களிலும் ஜில்லா, தாலூக்கா முனிசிபாலிட்டி முதலிய ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்களிலும் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாகவும் தங்கள் ஆதிக்கத் திற்கு அனுகூலமாகவும் எவ்வளவு தூரம் தலைக்கொழுப்புடன் காரியங்கள் செய்யலாமோ அவ்வளவும் செய்தார்கள். இதற்கு சில பார்ப்பனரல்லாத வயிற்றுச் சோற்றுக் கூலிகளும் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து தங்கள் மானத்தை விற்று பார்ப்பனருக்கு எவ்வளவு தூரம் அடிமையாய் இருந்து கொண்டு பார்ப்பனரால்லாதாருக்கு எவ்வளவு இடையூறு செய்யக் கூடுமோ அவ்வளவும் செய்தார்கள். அந்த சமயத்தில் “குடி அரசு” ஒன்றுதான் தைரியமாய் தனி வீரனாக நின்று இந்தப் புரட்டுகளை எவ்வளவு தூரம் வெளியாக்கி அதனால் ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு தூரம் ஒழிக்க லாமோ அவ்வளவு தூரம் ஒழிக்க முன் வந்தது. இந்தக் காரணத்தால் “குடி அரசும்” அதன் ஆசிரியரான திரு. ராமசாமி நாயக்கரும் பெரிய “தேசத் துரோகி”களானதும் வாசகர்கள் உணர்ந்ததே யாகும்.
ஆனால் “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் வெளியாய் விடும்” என்பதுபோல் அடுத்து தேர்தல்கள் வருவதற்குள்ளாகவே, பார்ப்பனர்களுடையவும் அவர்களது வால்களாகிய வயிற்றுச் சோற்று தேச பக்தர்களுடையவும் புரட்டுகள் வெளியாகி இப்போது இந்தக் கூட்டம் வெளி யில் தலைகாட்டுவதற்குக் கூட யோக்கியதையில்லாமல் முக்காடிட்டு மூலை யில் உட்கார்ந்து கொள்ள நேரிட்டது.
உதாரணமாக சென்னை கார்ப்பரேஷன் கௌன்சிலர் தேர்தல்களிலும் வெளி முனிசிபல் கௌன்சிலர்கள் தேர்தல்களிலும் “சுயராஜ்யக் கட்சிக்கு வெற்றி! காங்கிரசுக்கு வெற்றி” என்று மொச்சைக் கொட்டை பருமனுள்ள எழுத்துக்களில் விளம்பரம் செய்துகொண்டு வந்த “தேசீய பத்திரிகை
களும்” “தேசீய தலைவர்களும்” இப்போது இருக்குமிடம் கூட தெரியவில்லை. ஒரு தேர்தலிலாவது சுயராஜ்யக் கட்சி சார்பாகவோ காங்கிரஸ் சார்பாகவோ ஆட்களை நிறுத்தியதாகவும் தெரியவில்லை.
தேசத்துரோக கட்சியென்று பார்ப்பனர்களாலும் அவர்களது கூலி களாலும் சொல்லப்பட்ட ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களும் மற்றவர்களும் நின்றவிடமெல்லாம் வெற்றி பெற்று வருவதோடு அவர்களுக்கு போட்டியாக ஆட்களை நிறுத்துவதற்குக் கூட காங்கிரஸுக்காரருக்கு தைரியமில்லாமல் போய்விட்டது.
இந்த வருடத்திய சென்னைத் தேர்தலில் திரு. எ. ராமசாமி முதலியார் அவர்கள் சென்னை கார்ப்பரேஷனில் இரண்டு இடங்களில் ஏக காலத்தில் அபேக்ஷகராய் நின்றதில் மேல்கண்ட இரண்டு ஸ்தானங்களிலும் போட்டி யில்லாமலே வெற்றி பெற்றார் என்றால் மற்றபடி வேறு என்ன உதாரணம் வேண்டும்.
நிற்க, காங்கிரஸ் பேரால் ஒரே ஒரு தொழிலாளர் நிறுத்தப்பட்டதில் அவர் மிகப்பெருமித ஓட்டுகளால் நன்றாய் தோல்வியடைந்தார். சென்ற வருஷம் தொழிலாளர் சார்பாய் நின்ற கனவான் தனியாக தொழிலாளர் என்ற முறையில் நின்றதால் காங்கிரஸ்காரர்கள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து அவரை எதிர்த்தும் கூட அத் தொழிலாளர் வெற்றி பெற்றார். இவ்வருஷம் காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு நின்றதன் பயனாகவும், காங்கிரஸ் தலைவர்களாகியவர்கள், காங்கிரஸ் வரவேற்புக் கமிட்டித் தலைவர் திரு. முத்துரங்க முதலியார், திரு. கல்யாணசுந்தர முதலியார் முதலியவர்களும் மற்றும் பல “தேசீய வீரர்களும்” பாடுபட்டும் தெருத்தெருவாய் பிரசங்
கித்தும் தலையில் கையை வைத்துக் கொள்ள நேர்ந்து விட்டது. எனவே காங்கிரஸ் புரட்டும் தேசீயப் புரட்டும் மக்களுக்கு நன்றாய் வெளியாய்விட்டதற்கு இதைவிட வேறு சாக்ஷி வேண்டுமா என்று கேட்கின்றோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 26.08.1928