மந்திரி ளு.முத்தையா முதலியார்
வாழ்க! வாழ்க! வாழ்க!
உத்தியோகத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
நமது மந்திரி திரு. ளு. முத்தய்யா முதலியார் அவர்கள் தமது ஆதிக்கத் தில் உள்ள முக்கிய இலாக்காவில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கொள்கையை நிலைநாட்டி விட்டார். அதாவது, பத்திரப்பதிவு இலாக்கா உத்தியோகத்திற்கு நபர்களை நியமிப்பதில் அடியில் கண்ட வகுப்பு வாரிப்படி தெரிந்தெடுத்து நியமிக்கவேண்டும் என்பதாக ஒருவிதி ஏற்படுத்தி, அதை கவர்னர் பிரபு வாலும், மற்ற மந்திரிகள் நிர்வாக சபை அங்கத்தினர்கள் முதலியவர்களாலும் சம்மதம் பெற்று அமுலுக்கு கொண்டு வரவேண்டியதான சட்டமாக்கி விட்டார். அதாவது, பத்திரப்பதிவு இலாக்கா உத்தியோகத்திற்கு நியமிக்க வேண்டிய ஸ்தானங்கள் 12 இருக்குமானால் அவைகளில்
பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்களிலிருந்து 5
பார்ப்பனர்களிலிருந்து 2
மகம்மதியர்களிலிருந்து 2
ஐரோப்பிய ஆங்கிலோ இந்தியர்கள்
அடங்கிய கிறிஸ்தவர்களிலிருந்து 2
தாழ்த்தப்பட்டவர்களிலிருந்து 1
ஆக 12
நபர்களை வகுப்புவாரி முறையில் தெரிந்தெடுத்து நியமிக்க வேண்டும் என்கின்ற சட்டம் செய்திருக்கிறார். எனவே மேல்படி இலாக்காவுக்கு எவ்வளவு பேர் தேவை இருந்தாலும் இந்த விகிதப்படியே நியமிக்கப்படவேண்டும் என்பதாகும். இந்த திட்டத்தின் விகிதங்களில் 100-க்கு 3 வீதம் ஜனத்தொகை உள்ள பார்ப்பனருக்கு 100-க்கு 16 உத்தியோகம் வீதமும், 100-க்கு 20 வீதத்திற்கு மேல்பட்ட மகம்மதியர்களுக்கு 100-க்கு 16 வீதமும், 100-க்கு 20 வீதம் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் என்கின்ற வகுப்பாருக்கு 100-க்கு 8 வீதமும் உத்தியோகங்கள் பங்கு பிரித்துக் கொடுத்திருப்பதானது மிகவும் அநியாயமானதென்றே சொல்லுவோம்.
ஒருசமயம் உத்தியோகத்திற்கு ஏற்ற நபர்கள் குறைவான பங்கு கொடுக் கப்பட்டிருக்கும் வகுப்புகளில் கிடைக்கவில்லை என்று யாராவது சமாதானம் சொல்ல வருவார்களானால் அது அந்த வகுப்பார்களுக்கு உத்தியோகங்கள் கொடுப்பதில் அவர்களுக்கு செய்திருக்கும் கொடுமையை விட பல மடங்கு மேல்பட்ட கொடுமையாகும். என்னவெனில், உத்தியோகப் பங்கில் மண்ணைப் போட்டதல்லாமல் அந்த வகுப்புகளை உத்தியோகத்திற்கு லாயக்கில்லை என்று அவமானப் படுத்தியதாகும். இந்த திட்டத்தை மகமதியர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் ஒப்புக் கொள்வதானது “பிச்சை போடாவிட்டாலும் கவலையில்லை. தயவு செய்து நாயை பிடித்துக் கட்டுங்கள்” என்றபடி ஒரு வீட்டில் பிச்சைக்கு போன ஒருவர் மீது வீட்டுக்காரர் நாயை அவிழ்த்துவிட்டு கடிக்கச் சொன்னபோது எஜமானனைப் பார்த்து அந்தப் பிச்சைக்காரர் கெஞ்சினது போல்தான் ஆகும்.
எனவே, யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதை தீர்மானித்துக் கொள்ளும் விஷயத்தில் சற்று கஷ்டமோ அதிருப்தியோ இருந்தாலும் சர்க்கார் உத்தியோகம் என்பவைகள் பொது சொத்தென்பதையும் அதில் எல்லோருக்கும் பங்குண்டு என்பதையும் ஒப்புக்கொண்டு பங்கு பிரித்துக் கொடுக்கவும் பங்கு பிரித்துக் கொள்ளவும் ஒரு ஆதாரம் ஏற்படுத்திக் கொள்ள இடம் கிடைத்ததே இது சமயம் நமக்கு ஒரு பெரும் வெற்றியாகும். இதுபோலவே மற்ற இலாக்காக்களுக்கும் ஒரு விதி ஏற்பட்டு விடுமானால் நமது நாட்டைப் பிடித்த கேட்டில் பெரும் பாகம் தொலைய மார்க்க மேற்பட்டுவிட்டதென்றே சொல்லுவோம். இந்த முறைக்கு ஒரு சமயம், அதிகப் பங்குகளுக்கு பல வழிகளிலும் முயற்சித்து கொள்ளை அடித்து அனுபவித்து வரும் பார்ப்பனர்கள் ஒப்புக் கொண்டாலும், நமது அரசாங்கத்தார் ஒப்பு கொள்வது என்பது அவர்களுக்கு மிகவும் கஷ்டமான காரியம் என்பதே நமது அபிப்பிராயம். நமது நாட்டில் வெள்ளைக்கார ஆட்சியானது இந்நாட்டு மக்களின் இவ்வளவு அதிருப்தியின் மீதும் கவலையற்று பொருத்தமற்ற கொடுங்கோன்மைமுறையில் நடைபெற்று வருவதற்கு காரணமே ஒரு வகுப்பை ஒரு வகுப்பார் ஏய்த்து கையில் வலுத்தவன் காரியம் என்பது போல் வலுத்தவன் ஏக போக உரிமை அடையும் படியான மாதிரியில் அமைக்கப்பட்டிருக்கும் தன்மை தான் என்றே சொல்லுவோம்.
இத்தன்மையே உள் கலகங்களுக்கும் வகுப்புச் சச்சரவுகளுக்கும் ஒற்றுமையின்மைக்கும் இடமாய் இருந்து வருகின்றது. எனவே அவர்களுக்குள்ள இந்த சவுகரியமான தன்மையை மாற்றிவிடக் கூடியதும் அடி யோடு கவிழ்த்துவிடக் கூடியதுமான வகுப்பு உரிமைக் கொடுத்து விட்டால் எப்படி ஏக போக உரிமைபோய்விடுமோ அதைப்போல் ஏக போக ஆட்சி யும் போய்விடும். ஆதலால் ஏக போக ஆட்சியை எதிர்பாக்கும் எந்த அரசாங்கத்தாரும் இந்த வகுப்புவாரி உரிமையை ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். இருந்தாலும் எப்படியோ சாமர்த்தியமாகவோ தந்திரமாகவோ நமது திரு.எஸ். முத்தையா முதலியார் அவர்கள் விதி ஏற்படுத்திக் கொண்டது போல் மற்ற மந்திரிகளும் நிர்வாக சபை அங்கத்தினர்களும் ஒருவிதி செய்து கொண்டார்களானால், அதிலும் முக்கியமாக திருவாளர்கள் கிருஷ்ணன் நாயர் அவர்களும் மகமது உஸ்மான் அவர்களும் தங்கள் தங்கள் இலாக்கா வுக்கு திரு. முத்தையா முதலியாரைப் பின்பற்றி இம்மாதிரி ஒரு ஏற்பாடு செய்து வைப்பதில் கவலை எடுத்து வெற்றி பெறுவார்களானால் அதுவே அவர்களது உத்தியோக காலத்தை வெற்றி பெற நடத்தியதாகும் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்ளுகின்றோம். அப்படிக்கில்லாமல் 30 நாளை எண்ணிக் கொண்டிருப்பதும் அது எண்ணி முடிந்தவுடன் ரூபாய் 5333-5-4 ஐ எண்ணுவதும் ரூ 5333-5-4-ஐ எண்ணி ஆனவுடன் மறுபடியும் 30 நாட்களை எண்ணுவதும், மீதி ஏதாவது கொஞ்ச நஞ்சம் நேரமிருக்கு மானால் தங்கள் அண்ணன், தம்பி, மாமன், மைத்துனன், சிநேகிதன் அடிமை முதலியவர்களுக்கு உத்தியோகம் வாங்கிக் கொடுப்பதிலும் மறுபடியும் தங்களுக்கு மேல் உத்தியோகங்கள் கிடைப்பதற்கு தந்திரமும் சூழ்ச்சியும் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதில் செலவழிப்பதுமான காரியத்தை செய்து கொண்டிருந்தால் அவர்கள் என்னவென்றழைப்பது என்பதை பொது ஜனங்களுக்கே விட்டு விடுகிறோம்.
இந்த நிலையில் பச்சைப் பார்ப்பனப் பத்திரிகையாகிய “சுதேச மித்திரன்” 8-11-28 தேதி தலையங்கத்தில் “வகுப்புப்பித்தம் தலைக்கேறிவிட்டதா?” என்கின்ற தலைப்புக் கொடுத்து தனது ஆத்திர விஷத்தைக் கக்கியிருக்கின்றான்.
அதாவது, எடுப்பிலேயே “ ஜ°டி° கக்ஷியார் மந்திரிகளாக இருந்த காலத்தில் செய்யத் துணியாத அக்கிரமத்தை ….கனம் எ°.முத்தையா முதலியார் செய்யத் துணிந்து விட்டார்” என்று ஆரம்பித்து “இது சட்ட விரோதமான காரியமாகும்” என்று முடித்திருக்கிறான்.
“மித்திரனின்” ஜாதிப்புத்தி இதுதான் என்பது ஏற்கெனவே எல்லோ ரும் அறிந்ததுதான். என்னவெனில் பார்ப்பனருக்கு இஷ்டமில்லாத எந்தக் காரியமானாலும் அதைப்பற்றி உலகமே முழுகிப் போய்விட்டது போல முதலில் கூப்பாடு போடுவார்கள். அது பலிக்கவில்லையானால் பிறகு சட்டத்தைக் கொண்டு வந்து சட்டம் பேச ஆரம்பித்து விடுவார்கள். மனுதர்ம சட்டத்தைப்போலவே வெள்ளைக்கார சட்டமும் பார்ப்பனர்கள் பிழைப் புக்குத் தக்கபடி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்கின்ற தைரியம் அவர்க ளுக்கு இருப்பதால் அவர்களுக்கு சட்டம் என்கிற ஆயுதத்தைக் கொண்டு எப்படியும் பேசலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி இந்த நினைப்புக்கு இடம் கொடுக்கக்கூடாது. நாம் நியாயத்திற்கு விரோதமாய் இருக்கும் எந்த சட்டத்தையும் மண்டையில் அடித்து உடைத்து சுட்டு பொசுக்கத் தயாராகயிருக்க வேண்டும்.
“மித்திரன்”ஜஸ்டிஸ் கக்ஷியை புகழ்ந்ததற்கும் ஆதாரம் இல்லாமல் போகவில்லை. ஏனெனில் சென்ற தேர்தலில் பார்ப்பனர்களின் விஷமப் பிரசாரத்தால் ஜஸ்டிஸ் கக்ஷிக்கு நல்ல சூடு கிடைத்துவிட்டதால் இந்தத் தேர்தலிலும் அப்படி ஏற்பட்டு விடுமோ என்கின்ற பயத்தில் சூடுபட்டவர்கள் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளை ஆகலாம் என நினைத்து குட்டிக் கரணம் அடித்து வருகின்றார்கள். இதன் பலன்களில் ஒன்றுதான் திரு. ராமசாமி முதலியாரவர்கள் தலை ஒருவருக்கும் வால் ஒருவருக்கும் காட்டுவது. இதன் பலன்தான் திரு. பாத்ரோ அவர்கள் சமூக சீர்திருத்தத்திற்கு சட்டம் செய்யகூடாது என்றது. இதன் பலன்தான் இப்பேர்பட்ட திரு. பாத்ரோ அவர்களை பனகால் அரசர் சைமன் கமிட்டி மெம்பராக்கினதும் அவரை அக் கமிட்டிக்குத் தலைவராக்கினதும் ஆகும். இதன் பலன் தான் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்பட்ட விஷயத்தில் சற்று கவலை கொள்ளாமல் தங்கள் ஆதிக்கத்தின் பெருமையில் அலட்சியமாயிருந்ததும் இன்னும் இது போன்ற பல இரகசியங்களும் ஆகும். எனவே இதன் சக்தியில் இன்னும் நடப்பதைப்பார்க்கலாம் என்றுதான் காத்திருக்கிறோம். எது எப்படியானாலும், ‘மித்திரன்’ ஜாதி என்ன சொன்னாலும், ஜஸ்டிஸ் கக்ஷி எப்படி அந்தர் அடித்தாலும் நமது மக்கள் தைரியத்தை விடாமல் அதிகாரத்திலும் பதவி யிலும் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் நமது வீரர் முத்தைய்யா முதலியார் அவர்களைப் பின்பற்ற வேண்டுமென்பதே நமது வேண்டுகோளாகும்.
குடி அரசு – தலையங்கம் – 11.11.1928