பல்லாவரத்துப் பண்டிதர்
திரு. வேதாசலம் அவர்கள் சென்னை குகானந்த சபையில் சமீபத்தில் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கரையும் அவர் நண்பர்களையும் சுயமரியாதை இயக்கத்தையும் பற்றி மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினதாகவும் “ சுத்த சைவ ரத்த ஓட்டம் உள்ளவர்கள் இன்னமும் இவர்களைக் கொல்லாமல் இருக்கலாமா” என்பதாக சபையோர்களைக் கேட்டதாகவும் “தமிழ்நாடு” “திராவிடன்” பத்திரிகைகளில் காணப் படுகின்றது.
அதே கூட்டத்தில் திரு. வேதாசலத்தை திருவாளர்கள் தண்டபாணி பிள்ளை, ராமனாதன், கண்ணப்பர் முதலிய பலர் பல கேள்விகள் கேட்ட தாகவும் பதில் சொல்ல இயலாமல் திக்கு முக்காடியதாகவும் கடைசியாக கண்ணீர் விட்டு அழுததாகவும் மற்றும் பல விதமாய் காணப்படுகின்றது. அன்றியும், சிற்சில விஷயங்களில் திரு. வேதாசலம், நாயக்கரைத் தாக்க உண்மைக்கு மாறாக சில கற்பனைகள் செய்து கொண்டு போனதாகவும் அதைக் அக்கூட்டத்திலேயே வெளியாக்கி அவர் அவமானமடையச் செய்ததாகவும் “திராவிடனி”ல் காணப்படுகின்றது. அவைகள் அடுத்த வாரத்திற்குள் திரு. வேதாசலம் அவர்களால் மறுக்கப்படாத வரை “குடி அரசி”ல் அவைகளை எடுத்து எழுதி தக்க சமாதானங்கள் வெளியாக் கப்படும்.
குடி அரசு – தலையங்கம் – 29.07.1928