சர்க்காருக்கு ஜே! சீர்திருத்தம் வாழ்க! பார்ப்பனீயம் வீழ்க!
இந்திய நாட்டில் சற்றேறக் குறைய ஐம்பது வருட காலமாக சீர்திருத்தக் காரர்கள் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருந்ததும் அந்நிய நாட்டு மக்களால் இந்திய சமூகத்தையே ஏளனம் செய்துகொண்டிருக்க இடம் தந்து கொண்டிருந்ததுமான “குழந்தை மணம்” என்னும் நகரும் பொம்மைக் கலியாணக் கொடுமையானது கடைசியாக இந்தியாவை “ஏக போகமாய் ஆட்சி புரியும் அந்நிய அரசாங்கமாகிய” பிரிட்டிஷ் அரசாங்க உதவியாலேயே அதுவும் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டு விட்டதற்கு பிரிட்டிஷ் சர்க்காருக்கு சந்தோஷத்தோடு மனப்பூர்வமாய் ஜே! சொல்லித் தீர வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். எனவே இந்திய சர்க்கார் நீடூழி வாழ விரும்புகின்றோம். சர்க்காரின் ஒத்துழைப்பும் அவர்களது மனப்பூர்வமான ஆதரவும் உதவியும் இல்லாதிருக்குமானால் சாரதா மசோதாவானது கண்டிப்பாய் நிறைவேறி இருக்காது என்று உறுதியாய்ச் சொல்லுவோம். ஆனால் சிலர் தேசியம் சுயராச்சியம் என்பவைகளின் பேரால் சர்க்காருடன் ஒத்துழைக்கக்கூடாது என்றும்; சர்க்கார் தயவை எதிர்பார்க்கக் கூடாது என்றும்; சீர்த்திருத்தங்களுக்கு சட்டம் செய்யக் கூடாது என்றும்; வெகுசுலபமாய் பேசி மக்களை ஏமாற்றி வீரர்கள் ஆகிவிடலாம் ஆனால், இந்த சாரதா மசோதா விஷயத்தில் சர்க்கார் தயவு, சர்க்கார் ஒத்துழைப்பு, சர்க்காரால் கையாளப்பட வேண்டிய சட்டம் ஆகியவைகள் இல்லாமல் ஏதாவது ஒரு சிறிய விஷயத்தையாவது அமுலுக்குக் கொண்டுவரச் செய்ய முடியுமா என்று கேட்கின்றோம்.
சுயராச்சியம் பெற்ற பிறகு நமக்கு வேண்டிய சீர்திருத்தங்களை யெல்லாம் செய்து கொள்ளலாமென்றும், இப்போது இந்த சர்க்காருடன் ஒத்துழைத்து சீர்த்திருத்தம் பெறுவது அவமானமென்றும் சொல்லும் காங்கிரஸ் தலைவர்கள் இந்த மசோதா விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்களென் பதை யோசித்துப்பார்த்தால் இந்த சர்க்கார் இருக்கும்போது சீர்த்திருத்தமடைய முடியுமா? அல்லது இது “ஒழிந்த”பிறகு அடைய முடியுமா? என்பது விளங்கா மற் போகாது. உதாரணமாக இந்தக் குழந்தைமணத் தடுப்பு விஷயமானது சுமார் 20 வருடத்திற்கு முன்பிருந்து சட்டசபைகளில் பிரஸ்தாபித்து வந்திருப்பது யாவருக்கும் தெரியும். ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் வைதீகர்கள் என்பவர்களும், இந்து மதத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்பவர்களும் தேசியவாதிகள் என்பவர்களும், ஆட்சேபனை செய்து கொண்டேதான் வந்திருக்கின்றார்கள். இந்த சமயத்திலும் தேசியவாதிகளே பெரும் முட்டுக் கட்டையாய் நின்று எவ்வளவோ சூட்சிகளுடன் ஆட்சேபித்துப் பார்த்திருக் கின்றார்கள்.
“பழுத்த தேசாபிமானிகளும் பிரபல தேசியத் தலைவர்”களுமாகிய திருவாளர்கள் மாளவியா, கேல்கார், மூஞ்சி, எம்.கே.ஆச்சாரியார், கே.வி.ரங்க சாமி ஐயங்கார், ஏ.ரெங்கசாமி ஐயங்கார், மோதிலால் நேரு ஆகியவர்கள் எல்லோருமே இந்த இருபதாவது நூற்றாண்டில் இடையூறாயிருந்திருக் கின்றார்கள் என்றால், இனி எந்த தேசியவாதியின் ஆதரவை எந்தக் காலத்தி லாவது எதிர்பார்க்கக்கூடுமா என்பதுதான் கேள்வி. இதில் மற்றொரு விஷய மென்னவென்றால், மேல் கூறிய எல்லா தேசியவாதிகளும் மசோதாவின் தத்துவத்தை ஒப்புக் கொள்வதாகச் சொல்லிக் கொண்டே ஆட்சேபித்திருக்கின் றார்களென்றால் இனி ஒப்புக் கொள்ள முடியாத விஷயத்தில் இவர்கள் ஆட்சேபனை எப்படியிருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.
திரு.மாளவியா அவர்கள் தனது ஆட்சேபனைக்கு சொல்லப்பட்ட காரணமென்ன வென்றால் “14-வயதுக்கு மேற்பட்டு கல்யாணம் செய்வது நல்லது தான். ஆனாலும், ராஜியை முன்னிட்டு 12 வயதாக இருக்க வேண்டும்” என்றார். திரு.மூஞ்சே சொன்ன ஆட்சேபனையைக் கவனிப்போம். இவர் பார்ப்பனர் – பார்ப்பன மாணவர்களை மாமிசம் சாப்பிடவேண்டுமென்று சொல்பவர் – வைத்தியர் – இத்துடன் வைத்திய சாஸ்திரப்படியும் உடற்கூறு சாஸ்திரப்படியும் பெண்களுக்கு 18 வயதுக்கு முன் விவாகம் செய்வது கெடுதி என்கின்ற அபிப்பிராயம் கொண்டவர். அப்படி இருந்தும் இந்த மசோதா விஷயத்தில் 12 வயதுக்கு மேல் கலியாண வயது இருக்கக்கூடாது என்று வாதம் செய்தவர். திரு.மோத்திலால் நேரு எந்த மாமிசமும் சாப்பிடுவார், எந்தப் பானமும் செய்வார், 20 வயதுக்கு முன்னால் தங்கள் குழந்தைகளுக்கு கல்யாணம் செய்வதில்லை என்றும் சொன்னார். அப்படி இருந்தும் அந்த மசோதாவின் ஜீவநாடியை பிடுங்கி விடக்கருதி சூட்சி செய்தவர். அதாவது அவசியமிருக்கின்றவர்கள் 14 வயதுக்குள்ளாகவும் கல்யாணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் ஒரு திருத்தம் கொண்டு வந்து மசோதாவை அடியோடு கவிழ்த்து விடப்பார்த்தார். திரு.கேல்கர், திரு.திலகரின் ஸ்தானத்துக்கு வந்தவர். அவரோ மசோதாவின் தத்துவத்தை ஒப்புக்கொள்ளுவதாய்ச் சொல்லி, ஆனால் வைதீகர்கள் இஷ்டத்திற்கு விரோதமாய் சட்டம் செய்யக்கூடாது என்றனர். இனி சென்னைத் “தலைவர்களைப்” பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியமிருக்காதென்றே நினைக்கின்றோம். எனினும் திருவாளர்கள் சேஷய்யங்கார், கே.வி.ரங்கசாமி அய்யங்கார், எம்.கே. ஆச்சாரியார், எ.ரங்கசாமி ஐயங்கார் போன்ற “பரம்பரை தேசியவாதி”களின் யோக்கியதை இம்மசோதா விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைக் கூர்மையாய் கவனித்து வந்தவர்களுக்கு விளங்காமல் போகாது. எனவே, நமது நாட்டிற்கென்றோ சமூகத்திற்கென்றோ எவ்வித திருத்தம் கொண்டு வந்தாலும் இந்தக் கூட்டத்தவர்களே அதாவது பார்ப்பனர்களே ஒருபுறம் தேசியத்தின் பேராலும், மற்றொரு புறம் மதத்தின் பேராலும், மற்றொரு புறம் சாஸ்திரத்தின் பேராலும், மற்றொரு புறம் மனச்சாட்சியின் பேராலும் தொல்லை விளைவித்து வருவதை வெகுகாலமாக பார்த்து வருகின்றோம். சாதாரணமாய் வினாவறியாக் குழந்தைகளை கடவுள் பேரால் பொட்டுக்கட்டி விபசாரிகளாக்குவதையும், மக்களை விபசாரத் தொழிலால் ஜீவனம் செய்யக்கூடாதென்றும் கருதி கொண்டு வரப்பட்ட சட்டங்கள் கூட மதத்தின் பேராலும், சாஸ்திரங்களின் பேராலும், சாமிகளின் பேராலும் ஆட்சேபிக்கப்படுமானால், அதுவும் பூரண சுயேச்சை விரும்பும் சங்க காரியதரிசியும் கற்ற பண்டிதர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட வருமான திரு.சத்தியமூர்த்திப் பார்ப்பனராலேயே எதிர்க்கப்படுமானால், இனி சாதாரண பார்ப்பனர்களாலும் அவர்கள் கலந்த இயக்கங்களாலும் நாம் எந்த விதமான சீர்திருத்தத்தை சுயராஜ்யத்தில், ராம ராச்யத்தில் எதிர்பார்க்கக் கூடுமென்பது நமக்கு விளங்கவில்லை. பொதுவாக இந்த பார்ப்பனர்கள் சர்க்காருக்கு விரோதமாகவும் சர்க்காருடன் ஒத்துழைக்கக்கூடாது; சர்க்காரை ஒழிக்க வேண்டுமென்று சொல்லுவதின் இரகசியம் எல்லாம், எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த சர்க்கார் பார்ப்பனரல்லாத மக்களுக்கு வசமாகக் கூடாதென்றும், பார்ப்பனரல்லாத மக்களுக்கு அனுகூலமாக ஏதாவது நன்மையோ சீர்திருத்தமோ செய்ய இடம் கொடுத்து விடக்கூடாது என்பதுமான கெட்ட எண்ணமே தவிர மற்றபடி சர்க்காரோடு ஒத்துழைக்கக் கூடாது என்பதில் ஏதாவது யோக்கியப் பொறுப்போ, தேசியமோ, நாணயமோ இருக்கின்றதா? என்று கேட்கின்றோம்.
ஒத்துழையாமை என்பதற்கும், சர்க்கார் தயவு என்பதற்கும் ஏதாவது ஒரு குறிப்பிட்டதும் நிலையானதுமான கொள்கைகளை ஏற்படுத்திக் கொண்டு பிறகு அதை யோக்கியமாய் அனுஷ்டானத்துக்குக் கொண்டு வருவதானால், அதைப் பற்றி யோசிக்க வேண்டியது அவசியமாகும். அப்படிக்கில்லாமல் தங்களுக்கு இஷ்டமானதும். தேவையானதுமான காரியமெல்லாம் ஒத்துழையாமையில் சேர்ந்ததென்றும் தேசியத்தில் சேர்ந்தது என்றும் சொல்லுவதும் நமது மக்க ளுக்கு இஷ்டமானதும், தேவையானதுமான காரியங்கள் எல்லாம் சர்க்கார் தயவானதும் தேசதுரோகமானதுமான காரியங்கள் என்று சொல்லப்படுவதுமா னால் அம்மாதிரி தேசியத்தை நாம் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? தேசியத்திற்கும் ஒத்துழையாமைக்கும் சர்க்கார் தயவுக்கும் இந்த உலகத்தில் பார்ப்பனர்கள் மாத்திரம் தான், பாஷ்ய கர்த்தாக்களா, மற்றொருவருக்கும் இவற்றில் உரிமை இல்லையா? என்றுதான் கேட்கின்றோம்.
முன் காலத்தில் அதாவது ‘இந்து’ (மூட) ராஜாக்கள் அரசாங்கத்திலும் இப்படியே செய்துவிட்டு இப்பொழுது வெள்ளைக்கார (அறிவாளிகள்) அரசாங்கத்திலும் இப்படியே செய்து நமது சமூகத்தை மிதித்துவைத்துக் கொண்டிருக்க கருதுவதை இனி அரை நிமிஷமும் நம்மால் சகித்திருக்க முடியாது என்பதை வெளிப்படையாயும் உறுதியாயும் சொல்லித் தீர வேண்டி இருக்கின்றது. அதற்காகவே சர்க்காருக்கு ஜே என்றும், பார்ப்பனீயம் வீழ்க! என்றும் சொல்லுகின்றோம்.
எந்தவிதமான அரசியல் கஷ்டங்களை பொறுத்துக் கொண்டானாலும் நமது நாட்டில் பார்ப்பனீயம் அடியோடு ஒழியுமட்டும் இந்த பிரிட்டிஷ் சர்க்காருக்கு “அன்னிய” சர்க்காருக்கு பகுத்தறிவு வளர்ச்சியும், ஆராய்ச்சி அறிவு வளர்ச்சியும் பெற்ற “நாஸ்திக” சர்க்காருக்கு “ஜே” சொல்லித் தீருவோம். இதனால் நாம் தேசத்துரோகியானாலும் சரி, சிலுவையிலும் அறையப்பட்டாலும் சரி, கழுவில் ஏற்றப்பட்டாலும் சரி அவற்றிற்கு சிறிதும் கலங்க மாட்டோம் என்பதையும் தைரியமாய்ச் சொல்லுகிறோம். அஃதோடு இந்த சர்க்கார் எந்த நிலைமையில் எந்தக் காலத்தில் எப்படியானால் எந்த முறையில் எதிர்ப்பது என்பதுவும் நமக்கே தெரியும் என்று உறுதி கூறுவோம். நிற்க.
சாரதா மசோதாவானது இப்போது இந்திய சட்டசபையில் நிறைவேறி விட்டதாலேயே இந்தியாவுக்கு வேண்டிய சீர்த்திருத்தங்கள் எல்லாம் முடிந்துவிட்டது என்பதாகக் கருதி நாம் மகிழ்ச்சிப் பெருக்கடைவதாக யாரும் நினைத்து விடக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளுகிறோம். மற்றென்ன வென்றால் எந்த விதமான சீர்திருத்தத்திற்கும் வழக்கமாய் முட்டுக்கட்டையாய் உபயோகித்து வந்த மதம், சாஸ்திரம், கடவுள், கோபம் என்கின்ற புரட்டுகளும் பூச்சாண்டிகளும் இம்மசோதா விஷயத்தில் குப்பைத் தொட்டிக்குப் போக நேர்ந்ததையே எண்ணி எண்ணி மகிழ்ச்சிப் பெருக்கடைகின்றோம். ஏனெனில் இதன் மூலம் இந்தப் பார்ப்பனர்கள் மேற்கண்ட மதப்பூச்சாண்டிக்கும் சாஸ்திரப் புரட்டுக்கும் எவ்வளவு மரியாதை வைத்திருக்கின்றார்கள் என்பதையும் இவைகளைக் காப்பாற்ற என்ன தியாகமோ வீரமோ காட்டப்போகின்றார்கள் என்பதையும் பார்க்கப் போகின்றோம்.
தவிர, சில பார்ப்பனர்கள் இந்த சட்டம் நிறைவேறிவிட்டால் சத்தியாக் கிரகம் செய்து சட்டத்தை மீறித் தண்டனை அடைந்து இந்த சட்டத்தை ஒழிக்கப் போகின்றார்களாம். இந்த செய்தியைக் கேட்ட மாத்திரத்தில், இந்த சட்டம் நிறைவேறிய சேதியைக் கேட்ட மாத்திரத்தில் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தோமோ அதைவிட எண்மடங்கதிகமான மகிழ்ச்சியை அடைந்தோம்.
ஏனென்றால் அவர்களது சத்தியாக்கிரகத்தையும் தியாகத்தையும் பார்த்து அவை வெற்றி பெற்றால் நம்முடைய தேவைகளுக்காக நாமும் அதுபோலவே நடந்து வெற்றி பெறலாம் என்றும், அந்தபடி அவர்கள் வெற்றி பெறாவிட்டால் இப்போதைப் போலவே சர்க்காருக்கு “ஜே” போட்டு அதன்மூலம் வெற்றி பெறலாம் என்றும் கருதியே மகிழ்ச்சியடைகின்றோம்.
நிற்க; இனி சம்மத வயதைப் பற்றிய விஷயம் ஒன்றுண்டு, ஆனால் நமக்கு அதைப் பற்றி அவ்வளவு கவலையில்லை. அது வயித்தியர்களுடைய விஷயமும் அவர்களது கடமையுமாகும். ஆனால் குழந்தை மணமே சுயமரியாதையை பொறுத்ததாகும். தவிர பார்ப்பனர்களும், சம்மத வயதைப் பற்றி தங்களுக்கு அதிக கவலை இல்லையென்று சொல்லிவிட்டார்களாதலால் அது எக்கதியை வேண்டுமானாலும் அடையட்டுமென்றே சொல்லுவோம். அன்றியும் அது ஒரு இயற்கை உணர்ச்சியாகும். அதை எப்படி நடத்துவதென்று மனோதத்துவ ஆராய்ச்சியை சேர்ந்த விஷயமுமாகும். அதை வைத்தியர்களும் அரசாங்கமும் கவனித்து ஒழுக்கத்திற்கும் சுயமரியாதைக்கும் உண்மையான சுதந்திரத்திற்கும் மாறுபாடில்லாத வகையில் எப்படிச் செய்து கொண்டாலும் நமக்கு ஆட்சேபனை இல்லை.
இனி அடுத்தாற்போல் சட்டம் செய்ய வேண்டிய விஷயம் பிறவியில் ஆண் பெண், ஆகிய பல வித்தியாசம், உயர்வு, தாழ்வு ஆகிய ஜாதி வித்தியாசங் களையும் ஒழிப்பதற்கு வேண்டிய சட்டம் ஏற்படுத்த வேண்டியதேயாகும். இதை எல்லாவற்றிற்கும் முன்பாகவே செய்திருக்க வேண்டியதானாலும் இதற்கும் மதமும் சாஸ்திரமும், கடவுளுமே முட்டுக் கட்டையாய் இருந்து வருவதால் ஏதாவது ஒருவகையில் மேற்கண்ட முட்டுகட்டை ஒழிந்தால் மற்றவைகளுக்கும் அவைகளை ஒழிப்பது சுலபமாகி விடுமாதலால் அதையும் ஒருவிதத்தில் நன்மையாகவே கொள்ளலாம். பெண்களுக்கு வாழ்க்கையிலும் சொத்துக்கள் அனுபவத்திலும் சம உரிமை வழங்கப்பட வேண்டியது அறிவும் மனிதத்தன்மையுமுள்ள மக்களுக்கு மிகவும் யோக்கியமான காரியமாகும். ஆகையால் அதை உடனே கவனிக்க வேண்டுமாயும் தீண்டாமையைப் பற்றிக் கவனிக்க வேண்டுமாயும் இந்திய சட்டசபை அங்கத்தினர்களைக் கேட்டுக் கொள்வதுடன் சர்க்காரையும் சாரதா மசோதாவுக்கு அனுகூலம் செய்தது போலவே நல்ல பெயர் வாங்க வேண்டுமாகவும் கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 29.09.1929