மீண்டும் படேல்

திரு.படேல் அவர்கள் தமிழ்நாட்டிற்குள் வந்து செய்துவந்த பார்ப்பனப் பிரசாரத்தைப் பற்றி ‘ஜஸ்டிஸ்’ ‘திராவிடன்’ ‘குடி அரசு’ ‘குமரன்’ ‘தமிழ்நாடு’ ‘தமிழன்’ ‘சென்னை வர்த்தமானி’ ‘நாடார் குலமித்திரன்’ முதலிய பல பத்திரிகைகள் கண்டித்தெழுதி இருந்தது வாசகர்களுக்குத் தெரிந்த விஷய மாகும். ஏறக்குறைய இவைகளெல்லாம் நமது பார்ப்பனர்கள் திரு.படேல் தகவலுக்குக் கொண்டு போகப்படாமல் சூழ்ச்சிகள் செய்திருந்தாலும் ஆங்காங்கு சென்ற இடங்களிலெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகளாலும் ஆங்காங்கு இவருக்கு விநியோகிக்கப்பட்ட பத்திரிகைகளாலும் ஒருவாறு அறிந்துதான் இருக்க முடியுமென்று சொல்லுவோம். எப்படியெனில் திரு.படேல் மேற்கண்ட பத்திரிகைகள் மீது பாய்ந்து தனது முழு விஷத்தையும் கக்கி அவைகளை யாரும் படிக்கக் கூடாதென்று சொல்லி வருவதால் அவற்றிலுள் ளது இன்னது என்பதை உணராமல் இப்படிச் சொல்லியிருப்பாரென்று நினைப்பதற்கில்லை. தவிரவும் தமிழ்நாட்டில் பல இடங்களில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சமாதானம் சொல்ல முடியாமல் கஷ்டப்பட்டு தனது வருத் தத்தை தெரியப்படுத்தியிருப்பதாலும் ஒருவாறு விஷயங்கள் தெரிந்திருக்கலாம். தவிரவும் மதுரையில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பல நண்பர்களைக் கண்டு சம்பாஷித்திருப்பதுடன், சுயமரியாதை இயக்கத்தின் ஆங்கிலப் பத்திரிகையாகிய “ரிவோல்ட்” பத்திரிகையின் பிரதிகளில் 10, 15 வாரப் பிரதி களையும் வாங்கிப் பார்த்ததாகவும் தெரியவருகிறது. இவ்வளவும் தெரிந்த பிறகு தமிழ்நாட்டைவிட்டு வெளியேறி மைசூர் ராஜ்யத்திற்குச் சென்றதும் பெங்களூரில் ஒரு பெரிய கூட்டத்தில் பழையபடியே பேசியிருக்கின்றார்.

“தாழ்த்தப்பட்டவர்களின் நன்மைக்கு உழைப்பதாகச் சொல் லிக் கொண்டு ஒரு சிலர், சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒன்றை ஆரம்பித்து இந்திய நாட்டிற்குப் புனிதமானவைகளை அழிப் பதும், ஸ்திரீகளின் மேன்மைக்குப் பங்கம் விளைவிப்பதும் இந்து மதத்தைத் தாக்குவதும், கோடிக் கணக்கான மக்களால் பூஜிக்கப்படும் இராமனை யும் சீதையையும் குற்றம் சொல்லுவதும், பிராமண சமூகத்தின்மீது துவேஷம் உண்டு பண்ணுவதுமான காரியங்களைச் செய்து வருகிறார் கள். இதை யோக்கியமான அரசாங்கம் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது.”
என்றும்,

“பிராமணர் மற்றும் பிராமணரல்லாதார் பிளவுகளை சர்க் காரே உண்டாக்கி யோக்கியதையும் சக்தியுமற்றவர்கள் தலையில் சுயராச்சியப் பொறுப்பு பெறுமாறு செய்து தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ளப் பார்க்கின்றார்கள்”
என்றும்,

“தற்போது தென்னிந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பிராமண – பிராமணரல்லாத சச்சரவுக்கு மேற்கண்ட இரு சமூகத்தாரைச் சேர்ந்த வர்களின் அதிகாரப் பதவி போட்டியே மூல காரணம்”
என்றும்,

“ஜனத் தொகையில் சிறுபான்மையான பிராமணர்களைக் கொண்டு பெரும்பான்மை ஜனத் தொகையாளரான பிராமணரல்லா தார் அச்சப்படுவது அவமானம்”
என்றும்,

“பிராமணரல்லாதார் இயக்கம் தென் இந்தியாவில் முதல் முதல் மைசூரில்தான் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகின்றது”
என்றும்,

“சர்க்கார் ஊழியம் சுயமரியாதைக்கு ஏற்றதல்ல”
என்றும்,

“யோக்கியதையும், திறமையுமுடையவர்கள் சர்க்கார் உத்தி யோகம் பெறவேண்டும்”
என்றும், மற்றும் ஏதேதோ உளறியிருக்கின்றார். இவைகள் அநேகமாக திரு.படேல் தமிழ் நாட்டில் இருக்கும்போதே சொன்ன வார்த்தைகளே தவிர, பெங்களுருக்குச் சென்ற பிறகு புதிதாகச் சொன்னவைகளல்ல. இவைகளுக் கெல்லாம் முன்னமேயே பதில் சொல்லப்பட்டிருப்பதை திரு.படேல் சிறிதாவது கவனித்து அதற்கு எவ்வித சமாதானமும் சொல்லாமல் திருப்பித் திருப்பி அதையே சொல்லிக் கொண்டிருப்பது யோக்கியப் பொறுப்புடைய செய்கையாகுமா? என்பதைக் கவனித்து செய்யக்கூடிய முடிவை வாசகர் களுக்கே விட்டுவிடுகின்றோம்.

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள் இன்னது என்பது செங்கற் பட்டு மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட தீர்மானங்களாலும், ஆங்கு நிர்ணயிக்கப் பட்டு எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்கைகளினாலும் யாவரும் தெளிவாக உணர்ந்திருக்கலாம். அப்படியிருக்கும்போது சுயமரியாதை இயக்கத் திலுள்ள குற்றம் இன்னது என்பதாக ஏதாவது ஒன்றை திரு. படேல் குறிப்பிட்டுக் காட்டி தூஷித்து வந்திருக்கின்றாரா? என்று கேட்கின்றோம்.
இவ்வியக்கம் இதுவரை தாழ்த்தப்பட்டவர்கள் விஷயத்தில் எவ்வித கவலையும் எடுத்துக் கொள்ளவில்லையா? என்று கேட்கின்றோம். இதை திரு.படேல் அறிய முடியாமற்போனாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் உணர்ந்திருப் பார்களென்பது மாத்திரம் உறுதி. அதாவது தென்னாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் இது சமயம் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ள மறுத்து தீர்மானங்கள் நிறைவேற்றிக் கொண்டிருப்பதும், வேறு மதத்தில் சேர வேண்டுமென்பதாக தீர்மானித்துக் கொண்டிருப்பதும் சுயமரியாதை இயக்கத்தினாலல்லவா? என்பதைப் பொது ஜனங்களே சிந்தித்துப் பார்க்கட்டும்.

மற்றும் இந்து மதத்தையும், இந்திய நாட்டிற்குப் புனிதமானவை களையும், ஸ்திரீகளின் மேன்மைகளையும், இராமனையும் சீதையையும் தாக்குவதாக அவர் சொல்லுவதற்கு ஒரு ஆதாரத்தையும் அவர் எடுத்துக் காட்டவே இல்லை.

‘இந்து மதம் என்றால் என்ன?’
‘இந்து மதம் என்றால் என்ன?’
‘இந்து மதம் என்றால் என்ன?’
என்று மும்முறை திரு. படேலைக் கேட்கின்றோம். இதற்கு திரு.படேல் பதில் சொன்னாலும் சரி அல்லது அவர் தலைவர் திரு.காந்தி பதில் சொன்னாலும் சரி, இதைப் பற்றி திரு.காந்தியையே பெங்களூரில் நேரில் கேட்டதற்கு, “இந்து மதம் என்பதாக குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்றும் இல்லையானாலும், இந்துமதம் என்று சொல்லிக் கொண்டு நமக்கு வேண்டியபடி சீர்திருத்தங்கள் செய்வதற்கு வசதி இருப்பதால் அப்படி ஒன்றை வாயளவில் சொல்லிக் கொள்வது நல்லது” என்று அவரே பதில் சொன்னார். இதைச் சொல்லும்போது திரு.எஸ்.இராமநாதன் அவர்களும் பக்கத்தில் இருந்ததுடன் திரு.காந்தி ஆங்கிலத்தில் சொன்னதை திரு.ராமனாதன்தான் தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னார். அப்பொழுதே நாம், அப்படியானால் இந்துமதம் என்பதாக ஒரு போலி பெயரைச் சொல்லிக் கொண்டு திரு.காந்தி ஒரு சீர்திருத்தத்தைச் செய்வ தும், கொஞ்சநாள் பொறுத்து அதே இந்து மதம் என்பதாகச் சொல்லிக் கொண்டு, திருவாளர்கள் சத்தியமூர்த்தி, எம்.கே.ஆச்சாரி போன்றவர்கள் மற்றொரு “சீர்திருத்தத்தைச் செய்வதுமாயிருந்தால், மக்களுக்கு என்றைக்குத்தான் உண்மைச் சீர்திருத்தம் ஏற்படுவது? ஆதலால் இந்து மதம் என்று சொல்லிக் கொண்டு யாரும் எவ்வித புரட்டும் செய்யாமலிருக்கச் செய்வதற்காக இந்துமதப் புரட்டையே வெளியாக்கி அதை அடியோடு ஒழித்துவிட வேண்டும்” என்பதாக பதில் சொன்ன காலத்தில் திரு.காந்தியவர்கள் ஒன்றும் மறுமொழி பேசாமல் “மறுபடியும் சந்தித்துப் பேசலாம்” என்று சொன்னார். இதை உடனே அங்கேயே திரு.சி. இராஜகோபாலாச்சாரியாரிடம் சொல்லிவிட்டு வெளிவந்ததுடன் இனியும் இதைப் பற்றி திரு.காந்தியுடன் பேசுவதில் பயனில்லை என்று திரு.எஸ்.இராம னாதனிடமும் சொல்லி விட்டு ஈரோட்டிற்குத் திரும்பி விட்டோம். அவர்களை இன்றும் எழுதிக் கேட்டுக் கொள்ளலாம். ஆகவே, அன்று முதல் இன்று வரை திரு.காந்தி முதல் வேறு யாரும் பதில் சொல்லாமலே இருந்துவிட்டு “சுயமரியாதை இயக்கம் இந்து மதத்தை தாக்குகின்றது” என்று சொல்வதில் கடுகளவாவது யோக்கியப் பொறுப்போ நாணயமோ இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம். மற்றும் “இந்தியாவுக்கு புனிதமான” எதை நாம் காப்பாற்ற முயற்சிக்கின்றோம் என்பதைப் பற்றியாவது திரு.படேல் ஆதாரம் எடுத்துக் காட்டியவரல்ல. திரு.காந்தி இந்தியாவுக்கு வந்தபோது வருணாசிரம தர்மம் இந்தியாவுக்குப் புனிதமானது என்றார். திரு.மாளவியா ஜாதி வித்தியாசமும், அதற்கேற்ற இட வித்தியாசமும் இந்தியாவிற்குப் புனிதமானது என்றார்.

டாக்டர் மூஞ்சி “வைத்திய சாஸ்திரப்படி 18 வயதில்தான் பெண்களுக்குக் கலியாணம் செய்ய வேண்டியது அவசியமானாலும் பெண்களை 12 வயதில் கலியாணம் செய்வதுதான் இந்தியாவுக்குப் புனிதமானது” என்றார்.
திருவாளர்கள் எம்.கே. ஆச்சாரியாரும் சி.ராஜகோபாலாச்சாரியாரும் ‘மனுதர்ம சா°திரமே இந்தியாவுக்குப் புனிதமானது’ என்றார்கள்.

“திரு.எஸ்.சத்தியமூர்த்தி சாஸ்திரியோ பராசர ஸ்மிருதியும், பெண்க ளுக்கு பொட்டுகட்டி சாமிகள் பேரால் விபசாரத்திற்கு விட்டு அதன் தரகு மூலம் கோயில் குருக்கள் வயிறு வளர்ப்பதுதான் இந்தியாவுக்கு புனிதமானது” என்றார். எனவே இவைகளில் திரு.படேலுக்குத் தெரிந்தவரையில் இந்தியாவுக்குப் புனிதமானது என்ன என்று கேட்கின்றோம்.

திருவாளர்கள் எஸ்.சீனிவாசய்யங்கார் மகாகனம் சீனிவாசசாஸ்திரி, சி.ராஜகோபாலாச்சாரி ஆகிய மூவர்களும் இந்தியாவுக்கு புனிதமானது என்பதை உலகம் ஒப்புக் கொள்ள வேண்டுமென்கிறாரா? என்று கேட்கின்றோம்.
இந்தப் புனிதங்களைத் தவிர வேறு எந்தப் புனிதத்தை சுயமரியாதை இயக்கம் தாக்கிற்று; அல்லது தகர்க்குகின்றது என்று திரு.படேல் தைரியமாய் வெளியிலெடுத்துச் சொல்வாரானால் அவருக்கு திரு.காந்தியால் அளிக்கப் பட்டதாகச் சொல்லப்படும் சர்தார் பட்டத்திற்கு உண்மையான யோக்கியதை உண்டு என்று சொல்லுவோம். தவிர இராமனையும் சீதையையும் சுயமரியாதை இயக்கம் இழித்துச் சொல்லுகின்றது என்று திரு.படேல் சொல்லி இருக்கின்றார். எந்த இராமனையும் சீதையையும் என்று திரு.படேல் சொல்லி இருந்தால் யோக்கியமாக இருந்திருக்கும். பார்ப்பனன் காலில் விழுந்த ராமனையா – மாமிசம் சாப்பிட்ட ராமனையா – கொலை செய்த ராமனையா -பார்ப்பனரல்லா தவனாகிய “சம்பூகன் என்னும் சூத்திரன்” கடவுளை தோத்திரம் – தபசு செய்ததற்காகக் கொன்ற இராமனையா? சுயநலத்திற்காக தம்பி பேச்சைக் கேட்டுக் கொண்டு நியாய அனியாயம் பார்க்காமல் பாரபட்சமாய் அண்ணனைக் கொன்ற ராமனையா? வருணாசிரமத்தை ஆதரித்த ராமனையா? தன் பெண் ஜாதியை ஒரு பாமரன் பேச்சைக் கேட்டு கர்ப்பத்துடன் காட்டில் கொண்டுபோய் விட்டு விட்டுவந்த ராமனையா? கடைசியாக பெண் ஜாதி நடவடிக்கை மீது சந்தேகப்பட்டு நெருப்பிலும், குழியிலும் இறக்கிய இராமனையா? எந்த ராமனை? எந்த ராமனை? என்று திரு.படேலைக் கேட்கின்றோம். திரு.காந்தி ஒரு சமயத்தில் மேற்கண்ட ராமன்களையெல்லாம் ஒப்புக் கொள்ளுவதில்லை என்றும் தன்னுடைய ராமன் வேறு என்றும் சொன்னார். ஆனால் திரு.படேல் சொல்லும் ராமன் மேல் கண்ட ராமாயண ராமனா அல்லது திரு.காந்தி சொல்லும் வேறு ராமனா? என்று சொல்லிவிட்டாரானால் ராமனைப் பற்றிய தகராறு ஒரு வார்த்தையில் ஒழிந்து போகும். அதுபோலவே நாம் குற்றம் சொல்லும் சீதையும் ராமாயண சீதையா? அல்லது திரு.காந்தியுடைய “வேறு சீதையா” என்பதையும் சொல்லி விட்டால் சீதை விஷயமும் ஒரு வரியில் தீர்ந்து போகும். அது வரை ராமர் இழிவும் சீதை குற்றமும் மூடிவைக்க முடியாதென்று கண்டிப்பாய்ச் சொல்லுவோம். இதைச் சொல்லிப் பாமர மக்களை கிளப்பி விடுவதற்காக சுயமரியாதை இயக்கம் சிறிதும் பயப்படாது என்றும் சொல்லுவோம். சுயமரியாதை இயக்கம் கோயில்களை இடிக்கவேண்டுமென்று சொல்வதாக ஒரு இடத்தில் சொன்னதாகத் தெரிகின்றது. எந்தக் கோயிலை சுயமரியாதை இயக்கம் இடிக்க வேண்டுமென்கின்றது என்பதைச் சொன்னாரா? திரு.காந்தியே கோயில்களை விபசாரிகள் வீடுகள் என்று சொல்லியிருக்கிறார். திரு.காந்தியால் போற்றப்படும் இயேசுநாதர் கோயில்களை கள்ளர் குகை என்று சொன்னதாக சொல்லுகிறார்கள். மற்றும் மகமது நபி விக்கிரகங்கள் வைத்து வணங்கும் கோயில்களை இடித்தால் புண்ணியமுண்டு என்று சொல்லி இருக்கிறாராம்.

இன்னும் எத்தனையோ பெரியோர்கள் சித்தர்கள் ஞானிகள் என்பவர் கள் கோயில்களைப் பற்றி எவ்வளவோ கண்டித்திருக்கின்றார்கள். அப்படி யிருக்க திரு.படேல் காப்பாற்ற ஆசைப்படும் கோயில் எது? சுயமரியாதை இயக்கத்தால் இடிக்கும் கோயில் எது? என்று சொன்னால் நலமாயிருக்கும். நிற்க, சர்தார் படேல் சுயமரியாதை இயக்கத்தை அழிக்க சர்க்காரை தஞ்சமடைகிறார். சர்தார் படேலின் வீரமே வீரம்! இவர் சர்தார் படேலா அல்லது கோழை, பேடி படேலா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை அவரை இங்கு அழைத்து வந்த பார்ப்பனர்களுக்கே விட்டுவிடுகின்றோம். இது முன் ஒரு சமயம் இதே மாதிரி பேசிய திருவாளர்கள் சத்தியமூர்த்தி, சீனிவாசய்யங்கார் ஆகியவர்களின் செய்கைக்கு ஒரு உதவி படேலின் செய்கையாயிற்றே ஒழிய மற்றபடி இதில் சர்தார்தனம் எங்கே என்று கேட்கின்றோம். தவிர, ஒரு இடத்தில் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் சண்டைக்கு இரு வகுப்பாரினுடையவும் உத்தியோகப் போட்டியே காரணம் என்று சொல்லிவிட்டு மற்றொரு இடத்தில் பார்ப்பன ரல்லாதார் சுயநலத்தினால் ஏற்பட்ட இயக்கம் என்றும், மற்றொரு இடத்தில் சர்க்காரால் பார்ப்பனரல்லாதாரை தூண்டிவிட்டு ஏற்படுத்தப்பட்ட இயக்க மென்றும், முன்னுக்குப் பின் விரோதமாய் உளறிக் கொட்டி இருக்கிறார். இதிலி ருந்து இவ்வியக்கத்தைப் பற்றி திரு. படேல் எவ்வளவு தூரம் தெரிந்து கொண்டிருக்கின்றார் என்பது விளங்குகின்றது. கடைசியாக திரு.படேல் தன்னை, பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனரல்லாதார் அரசியலை நடத்தவும், உத்தியோகம் பெறவும் யோக்கியதை இல்லையென்று சொல்லிவிட்டதுடன் இந்த மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார் உத்தியோகம் பார்க்காமலும் அரசியலை நடத்த விடாமலும் தாங்கள் பார்த்துக் கொள்வதாய் பந்தயம் கூறுகிறார். இதிலிருந்து அவரது பார்ப்பனரல்லாதார் தன்மையும் அவருக்கு இருக்கும் பார்ப்பனரல்லாதார் வகுப்பு அக்கரையும் தானாகவே விளங்கும். இதுவே வடநாட்டுத் தலைவர்களின் யோக்கியதையை தாராளமாய் விளக்குகின்றது.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 22.09.1929

You may also like...

Leave a Reply