சர்வகக்ஷி மகாநாட்டின் வண்டவாளம் ஐ
சர்வகக்ஷி மகாநாடு எனப் பெயர் வைத்துக்கொண்டு சிலர் கூடி செய்துவரும் ஜெகஜாலப் புரட்டுகளையும் சூழ்ச்சிகளையும் மக்கள் ஏமாறத்தக்கவண்ணம் வேண்டுமென்றே நம் நாட்டில் சில தேசீயப் பத்திரிகைகள் என்னும் வயிற்றுப் பிழைப்புப் பத்திரிகைகள் செய்து வந்த புரட்டுகளெல்லாம் இப்போது வெட்டவெளிச்சமாகி விட்டதை யாவரும் அறிந்திருக்கலாம். இதன் காரணம் அப்பத்திரிகைகள் தங்களுக்கென யாதொருவித கொள்கையும் இல்லாமல், சற்றும் விவகார ஞானமும் இல்லா மல் சமயத்திற்குத் தகுந்தபடியும் காசு கொடுப்பவர்கள் சொல்கின்ற
படியும் நடக்க வேண்டியிருப்பதால், சற்றும் மானம் ஈனம் வெட்கமின்றி தினத்திற்கு ஒரு குட்டிக்கரணம் வீதம் போட்டு மாறி மாறி எழுத வேண்டிய வைகளாகவே இருக்கின்றன.
உதாரணமாக சர்வகக்ஷி மகாநாட்டைப் பற்றியும் அதன் தீர்மானங்களைப் பற்றியும் இக்கூலிப் பத்திரிகைகள் ஒரே அடியாக வானமளாவப் புகழ்ந்ததும், அதை உலகமே ஒப்புக் கொண்டாய் விட்டது என்றதும், இனி தேசத்திற்கு விடுதலை ஒரு விரக்கடை தூரம் தான் இருக்கின்றது என்றதும், அதில் கலந்து வேலை செய்தவர்களையெல்லாம் பாராட்டி எழுதி வந்ததும் போய் இப்போது அதில் உள்ளவர்களையும் அதன் முக்கியஸ்தர்களையும் வைவதைப் பார்த்தால் ஒருவரிடம் கூலி வாங்கிக் கொண்டு மற்றவர்களை வைவதாகவோ அல்லது கூலி கொடுக்காததற்காக வைவதாகவோ நன்றாய் விளங்கும். நிற்க,
முதலில் சர்வகக்ஷி மகாநாட்டுத் தீர்மானங்கள் என்பது மக்கள் எல்லோருக்கும் பொதுவான உரிமையும் நலமும் அளிக்கக்கூடியதா என்பதைக் கவனிப்போம். ஏனெனில் எந்த சீர்திருத்தமோ, சுயராஜ்யமோ, விடுதலையோ, பூரண விடுதலையோ என்பவைகள் ஒரு நாட்டுக்கு கிடைப்பதானால் அது அந்த நாட்டு மக்கள் எல்லோரும் சம உரிமை அனுபவிக்கக்கூடிய யோக்கியதையில் இருக்கின்றதா என்பதைத்தான் பார்க்கவேண்டும். இந்த முறையில் நமது நாட்டை எடுத்துக் கொள்ளுவோம். எந்தக் காரணத்தை முன்னிட்டானாலும் சரி, எந்தக் காலம் முதற்கொண் டானாலும் சரி, நமது நாடு அதாவது நாம் சுயராஜ்யமோ விடுதலையோ கோரும் நாடாகிய இந்திய நாடானது பல்வேறு மதம் ஜாதி வகுப்புகளாக பிரிக்கப்பட்டது என்பதும், அதனாலேயே மக்கள் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு பாராட்டுகின்றார்கள் என்பதும் ஒருவருக்கொருவர் நடை, உடை, பழக்கவழக்கம், வாழ்க்கை முதலியவைகளில் ஜாதியின் பேரால், மதத்தின் பேரால், மோக்ஷத்தின் பேரால், கடவுளின் பேரால் மாறுதல் அடைந்திருக்கின்றார்கள் என்பதும், இந்தக் காரணங்களால் ஒருவரிடம் ஒருவர் ஒற்றுமையில்லாமல் நம்பிக்கை கெட்டு வெறுப்புக்கும், துவேஷத்திற்கும், பழிவாங்கும் தன்மைக்கும் ஆளாகியிருக்கின்றார்கள் என்பதும் இதற்கு அரசாக்ஷியும் சட்டமும் கடவுளும் மதமும் வேத சாஸ்திரங்களும் ஆதரவு கொடுத்து வருகின்றன என்பதும் யாராலும் மறுக்கக்கூடிய காரியம் அல்ல.
இந்த நிலையிலுள்ள மக்களைக்கொண்ட நாட்டிற்கு ஏதாவது ஒரு கடுகளவு முன்னேற்றத்திற்கோ விடுதலைக்கோ முயற்சி செய்வதானால் முதலில் மேல்கண்ட கெடுதிகளை ஒழிக்கும்வழி இருக்கும்படியான ஏற்பாட்டுடன் முயற்சிக்க வேண்டியது நியாயமும் யோக்கியமும் நாணயமும் ஆகும். அதை வேண்டுமென்றே மூடிவைத்துக் கொண்டோ அல்லது அதைப்பற்றிக் கவலை இல்லாமலோ இருந்துகொண்டு வேறு வழியில் பிரவேசிப்பதென்பது ஒரு சிறிதும் பயனளிக்காத காரியம் என்பதல்லாமல், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பெரிதும் கேட்டை விளைவிப்பதாகும் என்றே சொல்லுவோம். ஏனெனில் இந்த முக்கியமான குற்றங்கள் நமது நாட்டில் இருப்பதினாலேயே நமது நாடு வெகுகாலமாகவே அடிமை வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திலும் இருக்க வேண்டி இருக்கின்றது. எனவே இவைகளை ஒழிக்கத்தக்க கொள்கைகளோ முறைகளோ ஏதாவது ஒரு சிறிது மேல்கண்ட சர்வகக்ஷி மகாநாட்டில் இருக்கின்றதா என்று பார்த்தால் அடியோடு இல்லாததோடு ஏற்கனவே உள்ள ஒரு சிறிதும் பிடுங்கப்பட்டிருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும்.
அதாவது இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகிய பிரிவினர்களுக்கு தனித்தனி தேர்தல் தொகுதியும், இந்துக்களில் தென்னாட்டில் உள்ள பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவுகளுக்கு தேர்தல் மூலம் ஒதுக்கி வைக்கும் முறையும், தீண்டாதவர்கள் என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்புக்கு சர்க்கார் மூலம் நியமனம் செய்வதற்கு ஒதுக்கி வைத்துக்கொண்டு வருவதும் ஆகிய முறைகள் கொஞ்ச காலமாக இருந்து வந்தது. இந்த முறைகள் 20 வருஷத்திற்கு முன்னும் 10 வருஷத்திற்கு முன்னும் இந்து முஸ்லிம் மகாநாடு என்னும் பேராலும் சீர்திருத்தம் என்னும் பேராலும் காங்கரஸ் என்னும் பேராலும் சர்வகக்ஷி மகாநாடு என்னும் பேராலும் கூட்டங்கள் கூட்டி இந்தியப் பொது மக்களால் ஒப்புக் கொள்ளப்பட்டத் திட்டம் என்கின்ற முறையில் சர்க்காருக்கு அறிக்கை செய்து அதன் மூலமாக அடைந்த சாதனங்களாகும். அன்றியும் இந்த சாதனங்களின் பலனாக சமூக வாழ்க்கை யில் தாழ்த்தப்பட்டவர்களும் கல்வியில் பிற்பட்ட வகுப்பார் என்பவர்களும் ஒரு விதத்தில் தங்கள் நிலைமையையும் யோக்கியதையையும் உணரவும் ஒரு சிறிதாவது மனிதத் தன்மையடைய வேண்டும் என்கின்ற ஆசை பிறக்கவும் மார்க்கம் ஏற்பட்டது. இதற்கு நாம் உதாரணங்கள் எடுத்துக்காட்ட வேண்டிய தில்லை என்றே நினைக்கின்றோம்.
இப்படி இருக்க, இப்போது சர்வகக்ஷி மகாநாட்டின் பேரால் ஏற்படுத்தப்பட்ட சுயராஜ்ய திட்டத்தில் வேண்டுமென்றே இந்த சாதனங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது முகமதியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் இல்லை.
பிற்பட்ட வகுப்பாருக்கு என்று ஒதுக்கி வைக்கும் முறையும் இல்லை.
தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு என்று சர்க்கார் நியமனமும் இல்லை.
இவ்வளவும் இல்லாததோடு இவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு வேறு எந்த விதமான மார்க்கமும் செய்யவும் இல்லை.
வங்காளம், பஞ்சாப்பு ஆகிய மாகாணங்களுக்கு மாத்திரம் இந்து முஸ்லிம்களைப் பொறுத்தவரை சில ஸ்தானங்கள் ஒதுக்கி வைத்து கொள்ள சம்மதித்திருப்பதாக மாத்திரம் காணப்படுகின்றது.
தென்னாட்டில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவினையும், தீண்டக்கூடாதார், கண்ணில் பார்க்கக்கூடாதார், தெருவில் நடக்கக்கூடாதார் என்கின்ற பிரிவினையும், இந்த வகுப்புகள் ஒன்றுக்கொன்று நம்பிக்கையின்மையும், ஒற்றுமையின்மையும், துவேஷமும் கொண்டு ஒன்றுக்கொன்று சம உரிமை அற்று கொடுமையாய் நடந்து வருவதும் மறுக்கக்கூடாத விஷயமாகும். இதற்கு மேல்கண்ட சர்வகக்ஷி மகாநாட்டில் எவ்வித விமோசனமும் இல்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு தனித்தேர்தல் தொகுதியோ, ஒதுக்கி வைத்தலோ, சர்க்கார் நியமனமோ ஆகிய ஒன்றுமே இல்லாவிட்டால் அவர்கள் மற்றபடி வேறு எந்த வழியில் பிரதி
நிதித்துவத்தை அடைய முடியும்?
அதுபோலவே முஸ்லீம்களுக்கும் தனித்தேர்தலோ, ஒதுக்கி வைத்தலோ, நியமனமோ இல்லாதவரை அவர்கள் எந்த விதத்தில் பிரதி நிதித்துவம் பெற முடியும்? அதுபோலவே பார்ப்பனர் பார்ப்பனரல்லா தார்களும் – பொதுத்தேர்தலாலேயே ஒருவருக்கொருவர் அபிப்பிராய பேதமும், கட்சியும், துவேஷமும் ஏற்பட்டிருப்பதற்கு தனித் தேர்தல் ஏற்படுத்தாத பக்ஷம் வேறு எந்த மார்க்கத்தில் இவர்கள் ஒற்றுமைப் பட முடியும்?
ஒரு நாட்டில் 5ல் ஒரு பங்காகிய 6-கோடி மக்கள் தீண்டாதாராக பாவிக்கப்பட்டு கல்வி, அறிவு, மனிதத்தன்மை, சுயமரியாதை முதலியவைகள் அடைவதற்கு மார்க்கமில்லாமல் அநேக காலமாக அழுத்தி வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு எவ்வித விமோசனமும் செய்யப்படாமல், ஒரு திட்டம் தயாரித்திருப்பதாகச் சொன்னால் அந்தத் திட்டம் யோக்கியமான திட்டமாகுமா? அந்த சமூகத்தார் அத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள சம்மதிப்பார்களா? அன்றியும் பொதுத்தேர்தலில் இவர்களுக்கு ஒரு ஸ்தானமாவது கிடைக்குமா? எனவே எல்லோருக்கும் சமமான பிரதிநிதித் துவம் கிடைக்கும்படியான முறை அதில் இல்லை என்றே சொல்லுவோம்.
தவிர, எல்லோருக்கும் ஓட்டுரிமை அதாவது 20 வருஷத்திற்கு மேற்பட்ட ஆண் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்படவேண்டுமென்று சர்வ கட்சி மகாநாடு திட்டத்தில் கேட்கப்பட்டிருக்கின்றது.
எல்லா மக்களும் தங்களது ஓட்டுரிமையை சரியானபடி உபயோகிக்க கற்பிக்கப்பட்டிருக்கின்றார்களா? என்பது நமது முதல் கேள்வி. ஓட்டுரிமை இன்னதென்றும் அதை எப்படி உபயோகப்படுத்தவேண்டும் என்பதைப் பற்றியும் பாமர மக்களுக்கு ஒரு சிறிதும் கற்பிக்காமலும் கற்பிக்க கவலை கொள்ளாமலும் இருந்துகொண்டு அவர்களுக்கு ஓட்டுரிமை வாங்கிக் கொடுப்பதால் அந்த நாட்டுக்கு என்ன பலன் கிடைக்கக்கூடும்? பாமர மக்களை ஏய்க்கவும், அவர்கள் கையைக் கொண்டே அவர்கள் கண்ணைக் குத்திக் கொள்வதற்குமே உதவுமேயல்லாமல் வேறு என்ன பலன் ஏற்படும்.
இப்பொழுது நமது நாட்டின் தேர்தல்களின் யோக்கியதைகளைப் பற்றி யோசிப்போமேயானால் அதன் தன்மையை வெளியிட முடியாத நிலைமையில் இருக்கின்றோம். வெளியிடுவதானாலும் இதில் இடம் போதாது. எவ்வளவு ஒழுக்க ஈனங்களும், புரட்டுகளும், பித்தலாட்டங்களும், ஏமாற்றல்களும், நாணயக்குறைவான காரியங்களும் நடைபெறுகின்றன! என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டுமா?
இந்த நிலையில் இவைகள் திருத்தப்பட எவ்வித முயற்சியும் செய்யாமல் மேலும் மேலும் இம்மாதிரியான காரியங்கள் அதிகமாவதற்கு தக்க மாதிரியாகவே ஓட்டர் தொகுதிகளை ஏற்படுத்தினால், அதனால் நாட்டிற்கோ மக்களுக்கோ என்ன நன்மைகள் கிடைக்கக்கூடும்? மிராசு
தாரன், முதலாளி, பணக்காரன், படித்த பித்தலாட்டக்காரன், கையில் வலுத்த
வன் முதலியவர்கள் போன்ற சுயநலக்கூட்டத்தாருக்கு இம்முறைகள் பயன்படுமே ஒழிய பாமர மக்களுக்கோ தொழிலாளிக்கோ விவசாயிக்கோ ஏதாவது ஒரு சிறிது அனுகூலமாவது ஏற்பட வழியுண்டா என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.
தவிர, எல்லா மக்களுக்கும் பொதுவுடைமையில் சமஉரிமை அளிக்கப்படும் என்பதாக ஒரு வாசகம் அத்திட்டத்தில் காணப்படுகின்றது.
இது பொது ஜனங்கள் கண்களில் மிளகாய்ப் பொடியை அள்ளிப்போடுவதற்காகவே கண்டுபிடித்து எழுதப்பட்டதாகும். ஏனெனில் மத சம்மந்தமான காரியங்களிலும் பழமையான பழக்க வழக்க அனுபோகங்களிலும் சர்க்கார் பிரவேசிக்கக்கூடாது என்பதாக ஒரு நிபந்தனை ஏற்கனவே இருப்பதாகவும் அது மகாராணியால் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப் பட்டாய் விட்டது.
அந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டே எந்த விதமான உரிமைகளோ சீர்திருத்தங்களோ தலைகாட்டினாலும் ஒரே அடியாய் மண்டையில் அடித்துக் கொன்று விடுவதாயிருக்கின்றது.
அந்த நிபந்தனைகள் இருக்கும்போது மக்களுக்கு புதிதாக வேறு எந்த வழியில் சம உரிமை கொடுக்க முடியும்?
சமீபத்தில் சட்டசபை முதலியவைகளில் சீர்திருத்த சம்மந்தமாய் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களும் மசோதாக்களும் மத ஆச்சாரிகளாலும் உயர்ந்த ஜாதிக்காரர்களாலும் பட்ட பாட்டிலிருந்தும் அவை
களுக்கு ஏற்பட்ட எதிர்ப்பிலிருந்தும் அவ்வுரிமையின் பயன் நன்றாய் விளங்கும். ஆதலால் அந்த வாசகம் மக்களை ஏய்ப்பதற்கு கண்டுபிடிக்கப்பட்டதே தவிர வேறில்லை.
எனவே சர்வகட்சி மகாநாடு என்பது ஒரு ஏமாற்றும் மகாநாடே ஒழிய வேறில்லை. அதில் கலந்திருப்பவர்களிலும் அதை ஆதரிப்பவர்களிலும் பெரும்பான்மையோர் கடைந்தெடுத்த மோசக்காரர்களும், சுயநலக்
காரர்களும் தங்களது சமூகத்தையும், தேசத்தையும் விற்று வாழ்க்கை நடத்தும் இழிகுணம் படைத்தவர்களுமானவர்களேயொழிய வேறில்லை என்றே சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம்.எனவே அத்திட்டத்தை பொதுமக்களும் சிறப்பாக பிற்பட்டவர்களுமே ஒப்புக்கொள்வது என்பது தற்கொலை என்றே சொல்லுவோம்.
மற்றபடி அதன் சூழ்ச்சிகளைப்பற்றியும் இந்த சமயத்தில் அது எதற்காக செய்யப்பட்டது என்பதைப்பற்றியும் சென்னையில் கூட்டிய சர்வ கட்சி மகாநாடு என்பதின் புரட்டைப்பற்றியும் அதில் கூடியுள்ளவர்களின் தனித்தனி யோக்கியதைகளைப் பற்றியும் பின்னால் எழுதுவோம்.
குடி அரசு – தலையங்கம் – 14.10.1928