காங்கிரஸ்காரர்களின் துரோகம்
தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்த சம்மந்தமாக சர்க்காரார் ரயில்வே அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு தொழிலாளர்களை இம்சைப்படுத்தி வருவதைப் பற்றி சென்னை சட்டசபையில் விவாதிப்பதற்காக மற்ற விஷயங்களை ஒத்திப்போட வேண்டுமென்று ஒரு அவசரப் பிரேரேபணைக் கொண்டு வரப்போவதாக கோயம்புத்தூர் திரு.சி.எ°. இரத்தினசபாபதி முதலியார் பத்திரிகைகளுக்கு தெரிவித்திருந்தது யாவரும் அறிந்த விஷயமேயாகும். இதை அறிந்த காங்கிரஸ்காரர்கள் என்னும் அரசியல் பிழைப்புக் கூட்டத்தார்கள் திரு.முதலியார் இந்தப்பிரேரேபணையைக் கொண்டு வந்து பேசுவார்களேயானால் பார்ப்பன சூழ்ச்சியும் தேசீய புரட்டும் காங்கிரஸ் குட்டும் வெளியாகிவிடுமே என்பதாகக் கருதி திரு. சத்தியமூர்த்தி மூலம் திரு. முதலியாரால் இப் பிரேரேபணை பிரேரேபிக்கக் குறிப்பிட்டிருந்த காலத்திற்கு முன்னதாகவே தாங்கள் பிரேரேபிக்கப் போவதாக நோட்டீஸ் கொடுத்தார்கள். இதை உண்மை என்று நம்பிய முதலியாரும் மற்றும் தொழிலாள அனுதாபிகளும் அதில் கலந்து கொள்ளத் தீர்மானித்துத் தங்கள் பிரேரேபிப்பதற்கென்று தனிச்சமயம் கேட்காமல் இருந்து விட்டார்கள். இந்த நிலையில் திரு. சத்தியமூர்த்தி அவர்கள் பொறுப்பில்லாமல் தாங்கள் சூழ்ச்சிக்கு ஏற்றவிதமாய் ஒரு தீர்மானத்தை எழுதிக் கொடுத்துவிட்டு அதைப் பிரேரேபிக்கும்போது அதற்கு விரோத மாய் பேசத் தொடங்கினார். அப்போது சட்டசபை அக்கிராசனர் திரு. சத்திய மூர்த்தியைத் தீர்மானத்தை அனுசரித்துப் பேச வேண்டுமென்று சொன்னா ராம். இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு திரு. சத்தியமூர்த்தி உடனே நாம் இத்தீர்மானத்தைப் பிரேரேபிக்கின்றதில்லை என்று சொல்லி உட்கார்ந்து கொண்டார். உடனே தலைவர் அடுத்த விஷயத்திற்கு போய்விட்டார். அடுத்த நாள் திரு. சி. எஸ். ரத்தினசபாபதி முதலியார் தாம் முன் தெரிவித்திருந்த ஒரு தீர்மானத்தை அனுப்பினார். இதை சட்டசபைத் தலைவர் “இத்தீர்மானம் திரு. சத்தியமூர்த்தியால் நேற்றே கொண்டுவரப்பட்டு அவரால் பின் வாங்கிக் கொள்ளப்பட்டதால் அதே காரியத்திற்கு இன்று மறுபடியும் இடங்கொடுக் கப்படமாட்டாது” என்றும் வேறு இரண்டு அவசரப் பிரேரேபணைகள் கொண்டுவரவேண்டியிருக்கின்றதென்றும் ஆதலால் சமயம் இல்லை யென்றும் சொல்லிவிட்டாராம்.
இந்தக் காரணங்களால் நல்ல ஒரு சமயம் வீணாகப் போய்விட்டது. பொது நிலையில் இருந்து யோசித்துப் பார்த்தால், திரு. சத்தியமூர்த்தி அவர் கள் தீர்மானம் கொண்டு வந்ததும் அவர் அதை பின்வாங்கிக் கொண்டதும் முன் ஏற்பாட்டுடன் செய்த சூழ்ச்சியென்றே சொல்ல வேண்டும்.
சட்டசபைத் தலைவர் “தீர்மானத்திற்கு கட்டுப்பட்டுப் பேசுங்கள்” என்று சொன்னால் இதில் தப்பிதம் என்ன என்றும் அதற்காக திரு. சத்தியமூர்த்தி தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு பேசாமல் தீர்மானத்தையே வாபீசு வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் என்னவென்பதையும் யோசித்தால் விளங்காமல் போகாது.
ஒரு சமயம் அக்கிராசனர் அப்படிச் சொன்னதில் ஏதாவது குற்ற மிருந்தாலோ அல்லது வேறு காரணங்கள் இருந்து தீர்மானத்தை அனுசரித் துப் பேச திரு. சத்தியமூர்த்திக்கு முடியாமல் போயிருந்தாலோ திரு. சத்திய மூர்த்தியவர்கள் பேச்சு ஒன்றும் இல்லாமல் தான் ஏற்கனவே எழுதிக் கொடுத்து அக்கிராசனரால் ஒப்புக்கொண்டபடி தீர்மானத்தை படித்துச் சொல்லி அதைப் பிரேரேபிப்பதில் உள்ள ஆnக்ஷபணை என்ன என்று கேட்கின்றோம். தவிர “அப்படியானால் நான் பேசவில்லை” என்றாவது சொல்லிவிட்டு தான் சும்மா உட்கார்ந்து கொள்ளாமல் “நான் தீர்மானத்தைக் கூட பிரேரேபிப்பதில்லை” என்று சொல்ல வேண்டிய அவசியமென்ன என்று கேட்கின்றோம். எனவே இச்சம்பவம் “தானும் குடிக்காமல் வேறு யாரையும் குடிக்கவொட்டாமல் வீணாய் கீழே கவிழ்த்து விட்ட துரோகக்காரன்” செய்கைக்கு ஒப்பாக இருக்கின்றதா இல்லையா என்று கேட்கின்றோம்.
அன்றியும் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை எப்படியாவது கெடுத்து அவர்களை அடியோடு தொலைக்க வேண்டும் என்கின்ற கருத்துடனே காங்கிரஸ்காரர்களும் தேசீயக்காரர்களும் அவர்களது பத்திரிகைகளும் ஏஜண்டிடம் விலை பேசிக்கொண்டு தொழிலாளர்களுக்கு பரிகாரம் செய்ய முடியாத துரோகம் செய்து விட்டார்கள் என்பதை திரு.சத்தியமூர்த்தி அவர்களின் செய்கை ஆதரிக்கின்றதா இல்லையா என்று கேட்கின்றோம்.
முதலாவது, யாரோ பல போக்கிரிகளும் காலிகளும் சேர்ந்து ரயில் வண்டியைக் கவிழ்த்து விட தென் இந்தியா ரயில்வே தொழிலாளர்கள் செய்து விட்டார்கள் என்று அவர்கள் மீது பழி சுமத்தி தொழிலாளர்களை அக்கிரமமாகப் பிடித்து அடைக்கச் செய்தது ஒரு குற்றம்.
இரண்டாவது, வேலை நிறுத்தம் தோல்வி அடைந்துவிட்டது என்று பொய்யான செய்தியை கட்டிவிட்டது ஒரு குற்றம்.
மூன்றாவது, இவ்விஷயம் தெரிந்தே வேண்டுமென்றே தொழிலாளர் வேலை நிறுத்தத்தை கெடுக்கக் கருதி “வேலை நிறுத்தம் முறிந்துவிட்டது” என்று பத்திரிகைகளில் போட்டு கட்டுப்பாட்டை உடைத்து சின்னாபின்னப் படுத்தியது ஒரு குற்றம். இன்னும் இது போல் பல குற்றங்களும் செய்து விட்டு இவ்வளவும் போதாமல், இதைப்பற்றிய அக்கிரமங்களைப் பற்றி பொது ஜனங்கள் அறியும்படி செய்ய சட்டசபையில் பேசி ஏதாவது ஒரு காரியம் செய்யலாம் என்றால் அங்கு விவரிக்கும் போது இந்த துரோகங்கள் எல்லாம் வெளியாகிவிடுமே என்கின்ற காரணத்தைக் கொண்டு வேறொருவர் தீர்மானம் கொண்டு வராமல் தடுப்பதற்காக, ஒரு தீர்மானம் கொண்டு வருவது போல வேஷம் போட்டு, மற்றவர்களுக்குள்ள சந்தர்ப்பங்களைக் கெடுத்து இம்மாதிரி மோசம் செய்வதென்றால் இதற்கு என்ன பெயர் கொடுப்பது என்பது நமக்கு விளங்கவில்லை.
தங்களாலேயே “உபயோகமற்றது” என்று சொல்லப்படும் சைமன் கமிஷனுடனும், “யார் ஒத்துழைத்தாலும் ஒன்றும் முழுகிப் போய்விடாது” என்று சொல்லப்படும் சைமன் கமிஷனுடனும், இந்திய மக்கள் பிரதிநிதிகள் என்பவர்களால் ஒத்துழைக்க தீர்மானித்த சைமன் கமிஷனுடனும் ஒத்து ழைப்பது என்பதற்கு துரோகம் என்றும் சர்க்கார் தாசத்தனம் என்றும் சொல்வ தானால் இந்த மாதிரி அயோக்கியத்தனமும் கொலைபாதகத்தனமும் பொருந்திய இப்பெரு மோசத்திற்கு என்ன பெயர் கொடுப்பது என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. மனப்பூர்வமாய் 30000, 40000 ஜீவன்கள் கஞ்சியில்லாமல் தவிப்பதும், சாதுக்களும், நிரபராதிகளுமுள்பட 200, 300 பேர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு 10 வருஷம் 20 வருஷம் தண்டிக்கப் படத்தக்க குற்றங்கள் சுமத்தப்பட்டு விசாரணையில்லாமலும் ஜாமீனில் விடாமலும் கொடுமைப் படுத்தப்படுவதுமாயிருக்கும் இச் சமயத்தில் இதைப் பற்றி யாருக்கும் எவ்வித கவலையுமில்லாமல், கவலைப்படுகின்றவர்களை யும் அவர்களால் கூடியதைச் செய்யவொட்டாமல் தடுத்துக் கொண்டும் இருப் பதானால் இந்தக் கூட்டத்தார் “காங்கிரஸ்” காரர்கள் என்றும் “சுயராஜ்யக்” காரர்கள் என்றும் “தேசீயக்”காரர்கள் என்றும் “பூரண சுயேச்சைக்”காரர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுவதானால், இந்த நாட்டில் சூட்சிக்காரர்களுக்கும், வஞ்சகக்காரர்களுக்கும், ஏழைகளைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் துரோகிகளுக்கும் இன்னமும் இடமிருக்கின்றது என்கின்றதாக ஏற்படு கின்றதா இல்லையா என்று கேட்கின்றோம்.
அன்றியும் இந்தக் கூட்டத்தார்கள் தானே தங்களோடு சேராத மற்றவர்களைப் பார்த்து தேசத் துரோகிகளென்று சொல்லுகிறவர்களாக இருக் கின்றார்கள் என்பது தெரிகின்றதா இல்லையா என்று கேட்கின்றோம்.
எனவே முடிவாக இனியாவது பாமர மக்கள் உண்மையை உணர் வார்களா என்று கேட்கின்றோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 09.09.1928