நாம் செய்த “துரோகம்”
சுயமரியாதை இயக்கத்தின் பலனாய், அரசியலின் பேரால் வாழ்ந்து வந்தவர்களுக்கெல்லாம் இந்தச் சமயம் நமது நாட்டில் சகல கவுரவங்களும் செல்வாக்குகளும் அடியோடு போய்விட்டதுடன், இது சமயம் அரசியல் என்பதில் சம்மந்தப்பட்டிருக்கின்றவர்கள் என்பவர்களெல்லோரும் சுயநலக்காரரும் வயிற்றுப் பிழைப்புக்காரரும் சிறிதும் நாணயமும் யோக்கியதையும் அற்றவர்கள் என்ற சங்கதியும் பாமரமக்கள் யாவருக்கும் தெரிந்துவிடவே அரசியல் பிழைப்புக்காரர்களின் ஆர்ப்பாட்டங்கள் கொஞ்ச நாளாகவே நமது நாட்டில் தலைகாட்ட யோக்கியதை இல்லாமல் போய்விட்டது என்பது யாவரும் அறிந்ததேயாகும். உதாரணமாக இது சமயம் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் யார் என்பதையும் அரசியல் பிரதிநிதிகள் யார் என்பதையும் அவர்களுக்கு நாட்டில் உள்ள யோக்கியதை என்ன என்பதையும் கவனித்தால் இவ்விஷயம் யாருக்கும் சுலபத்தில் விளங்காமல் போகாது.
தவிர, இப்பொழுது எங்கு அரசியல் மீட்டிங்கு போட்டாலும் எங்கு அரசியல் மகாநாடு கூட்டினாலும் அங்கு தலைவர்களும் பேசுபவர்களும் அபிப்பிராயம் கொடுப்பவர்களும் யார் என்று பார்ப்போமேயானால் திருவாளர்கள் குழந்தை, அமீத்கான், பஷீர் அஹம்மது, குப்புசாமி முதலியார், அண்ணாமலை பிள்ளை முதலியோர்கள் ஆகிய இவர்களோடேயே சகல அபிப்பிராயங்களும் சகல பிரதிநிதித்துவங்களும் நின்றுவிடுகின்றன. சில சமயங்களில் வழக்கம் போல் மற்றும் இரண்டொரு ஆசாமிகளின் பெயர் களும் அடிபடுகின்றன. அந்த இரண்டொரு ஆசாமிகளும், பொதுஜனங்கள் தங்கள் பெயரை மறந்துவிடாமல் இருப்பதற்காக ஏதாவது ஒருவகையில் விளம்பரம் ஆக வேணுமே என்கின்ற கவலையின் பேரில் எங்கு கூட்டம் நடந்தாலும் அங்கெல்லாம் தாங்களும் இருப்பதாக தங்கள் பெயர்களை உபயோகித்துக் கொள்ள மாத்திரம் உத்தரவு கொடுத்துவிட்டு, எந்தக் கூட்டத் திலும் தலைகாட்ட வெட்கப்பட்டுக் கொண்டு தலைமறைவாகவே திரிய வேண்டியவர்களாகி விட்டார்கள். ஆகவே நமது நாட்டு அரசியல் வாழ்வின் யோக்கியதைக்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டியிருக்காது என்றே நினைக்கின்றோம்.
அரசியலில் சம்பந்தப்பட்ட ஆசாமிகளின் யோக்கியதைதான் இப்படி என்றால், அரசியலில் அடிபடும் சங்கதிகளைப் பற்றியோவென்றால், அது இதைவிட மோசமானதும் வெட்கக்கேடானதுமென்றே சொல்லித் தீரவேண்டும். ஏனெனில் எந்த சங்கதியை அரசியல் விஷயமாக எடுத்துக் கொண்டால் பாமர மக்களை ஏமாற்றலாமோ – எந்தச் சங்கதியை எடுத்துக் கொண்டால் யோக்கியர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்களோ – எந்தச் சங்கதி யை எடுத்துக் கொண்டால் பார்ப்பனரல்லாதார்கள் கலந்துகொள்ள முடியாதோ – அந்த நாணயமற்றதும் யோக்கியதையற்றதும் உபயோகமற்றது மான சங்கதிகளை எடுத்துக்கொண்டு, அதை ஒரு பிரமாதமான சங்கதி போல் செய்து, அதன் மூலமாய் பாமர மக்களை ஏமாற்றி எலக்ஷன்களில் தாங்கள் வெற்றி பெற்று பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தலாம் என்பதாகவும், அப்பார்ப்பன ஆதிக்கப் பிரசாரகர்களாகவும் கூலிகளாகவும் இருந்து வயிறு வளர்க்க மார்க்கம் கிடைக்கும் என்பதாகவும் கருதி அதற்கேற்ற வண்ண மான சூழ்ச்சிகள் தயாரிப்பதாக இருக்கின்றதேயல்லாமல் வேறு யோக்கிய மானதும் பொது மக்களுக்கு உபயோகமானதுமாக ஒன்றுமே கிடையாது என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
உதாரணமாக இன்றையத்தினம் அரசியல் துறையில் முக்கிய
மானதும் செல்வாக்கு பெற்றதுமான பிரசினை என்பது சைமன் கமிஷன் பகிஷ்காரம் என்கின்றதான பொருளற்றதும் நாணயமற்றதுமான ஒரு விஷயம். அதைப் பற்றி சுமார் 5, 6 மாத காலமாக நடந்து வரும் கலவரங் களை அறியாதாரில்லை. தேசீயத் தலைவர்கள் என்பவர்களும் தேசீய பத்திரிகைகள் என்பவைகளும் எல்லாம் ஒரே அடியாய் கூடி பேசிக் கொண்டு “சைமன் கமிஷன் பகிஷ்காரத்திற்கு நாடு முழுவதுமே அனுகூல மாயிருக்கின்றது. ஏதோ இரண்டொரு சர்க்கார் பிரசாரகர்கள் மாத்திரந்தான் சைமன் கமிஷனுக்கு அனுகூலமாயிருக்கின்றார்கள்” என்று எழுதியும் பேசியும் வந்தார்கள்.
கடைசியாக இப்போது அந்த ஆசாமிகளும் பத்திரிகைகளும் தாங்களாகவே தங்களின் புரட்டு பலிக்கவில்லை என்று தெரிந்து கொண்டு “சீ இந்தப் பழம் புளிக்கும்” என்பது போல் “சைமன் கமிஷனை பகிஷ்
கரிப்பதால் லாபம் ஒன்றும் இல்லை. பகிஷ்கரிக்காவிட்டால் நஷ்டம் ஒன்றும் இல்லை” என்று சொல்ல வந்து விட்டதுடன் “சைமன் கமிஷன் பகிஷ்காரம் என்பது பெரிய தொல்லையாகிவிட்டது” என்று ஒப்புக்கொண்டு விட்டார்கள்.
ஆகவே இதை திடீரென்று விட்டு விட்டாலும் அக் கூட்டத்தார்களின் வாழ்க்கைக்கும் வேறு வழியில்லை. ஆகையால் செத்தப் பாம்பை ஆட்டுவது போல் மேலும் மேலும் சைமன் பகிஷ்காரம் என்பதைப் பற்றி பேசிக் கொண்டாவது இருக்க வேண்டியிருக்கின்றது. இப்பேர்ப்பட்ட சைமன் பகிஷ்காரம் இந்தியாவிலுள்ள ஏறக்குறைய எல்லா மாகாண சட்டசபை களிலும், அதாவது பொது ஜன பிரதிநிதித்துவ சபை என்று இது சமயம் எல்லா அரசியல்வாதிகள் என்பவர்களும் சொல்லிக் கொள்வதான சட்டசபை களிலும், சைமன் கமிஷனுடன் ஒத்துழைப்பதென்றும், அதற்கு கூடவே இருந்து உதவி செய்ய பொது ஜனப்பிரதிநிதி என்பவர்களுக்குள்ளாக இருந்தே ஒவ்வொரு மாகாணத்திற்கு ஒவ்வொரு கமிட்டி இருக்க வேண்டும் என்றும் ஏற்பாடாகி அந்தப்படிக்கே கமிட்டிகளும் தெரிந்தெடுக்கபட்டாய் விட்டது. இனி கமிஷனை பகிஷ்கரிப்பவர்களோ, ஆட்சேபிப்பவர்களோ யார் என்பதுதான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய காரியமாகிவிட்டது. ஒரு சமயம் காங்கிரஸ்காரர்கள்தான் ஆட்சேபிக்கின்றார்கள் என்று சொல்லப் படுமானால், அக் காங்கிரஸ்காரர்களுக்கு நாட்டில் செல்வாக்கில்லை என்பதற்கும் அக் காங்கிரஸ் அபிப்பிராயத்தை நாட்டு மக்கள் லட்சியம் செய்யவில்லை என்பதற்கும் இதைவிட வேறு சாட்சி தேவை இல்லை யென்றே சொல்லுவோம்.
இவ்வாரம் சென்னையில் நடந்த சட்டசபைக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ்காரர்கள் தேசீயவாதிகள் என்பவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்று காங்கிரஸ்காரர்களாலும் தேசீயக்காரர்களாலும் அவர்களது பத்திரிக்கைகளாலும் காங்கிரசுக்கு வெற்றி தேசீயத்திற்கு வெற்றி என்று சொல்லிக் கொண்ட சட்டசபையில் சைமன் கமிஷனுடன் ஒத்துழைக்கவும் உதவி செய்யவும் ஒப்புக் கொண்டு கமிட்டியும் (அதிலும் போட்டியுடன்) நியமிக்கப்பட்டாய் விட்டது.
இதற்கு அரசியல் பிழைப்புக்காரர்கள் ஒரு சமாதானம்தான் சொல்லக் கூடும். அதாவது “ஜஸ்டிஸ் கட்சியின் துரோகம்” என்பதுதான். அப்படிச் சொல்வதானால் அவர்களை நாம் ஒரு கேள்வி கேட்கின்றோம். அதாவது இந்தியாவிலுள்ள மாகாணங்கள் எல்லாம் கமிஷனுடன் ஒத்துழைக்க சம்மதித்து கமிட்டி நியமித்துக் கொண்டதற்கு யாருடைய துரோகம் காரணம் என்று கேட்கின்றோம்.
தவிர இந்தியாவிலுள்ள ‘சர்வகட்சி’ யாரும் பார்லிமெண்டுக்கு அனுப்ப என்று ஒரு திட்டம் தயாரித்து விட்டார்களே, இதற்கு யாருடைய துரோகம் காரணம் என்று கேட்கின்றோம்.
இந்து சபையார்கள், மகமதிய சபையார்கள், கிறிஸ்துவ சபையார்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பு சபையார்கள், வருணாசிரம வகுப்பு சபையார்கள், பார்ப்பன சபையார்கள் ஆகிய எல்லோரும் சைமன் கமிஷனிடம் ஒத்து ழைக்க சம்மதித்து ஏறக்குறைய எல்லோரும் ஒவ்வொருதிட்டம் தயாரிக்கின் றார்கள். இதற்கு யாருடைய துரோகம் காரணம் என்று கேட்கின்றோம்.
“காங்கிரஸ்” தலைவர்கள் என்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டம் தயாரித்து வைத்துக்கொண்டு அவற்றை சைமன் கமிஷனுக்கு அனுப்பவில்லை என்று சொல்வதானாலும் சைமன் கமிஷனுடைய அப்ப னான பார்லிமெண்டுக்கு போய்ச் சேரும்படி செய்துவருகின்றார்களே, இதற்கு யாருடைய துரோகம் காரணம் என்று கேட்கின்றோம். எனவே, சைமன் கமிஷனையோ அதன் தகப்பனான பார்லிமெண்டையோ பஹிஷ் கரிக்கின்றவர்கள் யாராவது இந்த நாட்டில் இருக் கின்றார்களா என்று எந்த யோக்கியனாவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
ஒரு சமயம் யாராவது ஒன்று இரண்டு ‘துறவி’ இருக்கலாம். அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில், ‘துறவிக்கு வேந்தன் துரும்பு’ எது போல் என்றால், ஒரு காலத்தில் நாணயவிகித மாறுபாடுகள் ஏற்பட்ட
போது மக்கள் எல்லோரும் ஒவ்வொரு பாங்கியின் நிலைமையைக் குறித்தும் கவனித்து வந்தார்களாம். ஏனெனில் அவர்கள் ஜீவநாடியான செல்வங்களை எல்லாம் பாங்கியில் போட்டு வைத்திருக்கின்றவர்களானதால் எந்த பாங்கி முறிந்து விடுமோ என்று ஒவ்வொருவரும் கவலைப்பட்டுக் கொண்டு பாங்கி வர்த்தமானத்தை கவனித்த வண்ணமாகவே இருந்தார்களாம். அந்த சமயத்தில் ஒரு மனிதன் “எந்த பாங்கி முறிந்து போனாலும் நான் மாத்திரம் சிறிது கூட கவலைப்பட மாட்டேன்” என்று பெருமை பேசிக்கொண்டானாம் இதைப் பார்த்த பலர் “இவன்” ஒரு பெரிய பிரபுவாக இருக்கலாமோ அல்லது கஷ்டம் வந்தாலும் கலங்காத வீரனாக இருக்கலாமோ என்று கருதிக்கொண்டு அவனுடைய யோக்கியதைகளை அறிய ஆசைப்பட்டு விசாரித்ததில், அவன் பரமபாப்பர் என்றும், எந்த பாங்கியிலும் அவனுக்கு ஒரு காசு கூட இருப்பு இல்லை என்றும், அதனால்தான் அவன் அவ்வளவு “தைரியமாயும்” “வீரமாயும்” “எந்த பாங்கு முறிந்தாலும் நான் ஒரு சிறிதும் கவலைப்பட மாட்டேன்” என்றும் சொன்னான் என்பதாகத் தெரிந்து கொண்டார்களாம்.
எனவே, இப்போது சைமன் கமிஷனை பஹிஷ்கரிப்பதாக ஏதாவது ஒன்று இரண்டு ஆசாமிகளாவது இருக்கிறதாகச் சொல்ல ஏற்படுமானால் அவர்கள் மேற்கண்ட தைரியவானைப் போன்ற “துறவி”யாகத்தான் இருக்க வேண்டும்.
சைமன் கமிஷனை பஹிஷ்காரம் செய்யாத எவரும் இப்பேர்ப்பட்ட ‘துறவி’களின் அபிப்பிராயத்தை லட்சியம் செய்து தாங்கள் ஏதாவது துரோகி களாகி விட்டோமா என்பதாக சந்தேகப்பட வேண்டியதில்லை என்பதே அறிவுடமை என்பதை எடுத்துக்காட்டுகின்றோம். மற்றபடி இதில் ஏதாவது துரோகம் உண்டா என்பதாக கேட்பார்களானால், ஆம் ஒரு வழியில் துரோ கம் என்றே சொல்லுவோம். அதென்னவெனில், பார்ப்பன ஆதிக்கத்திற்கும், பார்ப்பன ஆதிக்கக் கூலிப் பிரசாரத்திற்கும் சந்தேகமில்லாத துரோகம்தான். ஆனால் இந்த துரோகத்தை ஒவ்வொரு உண்மைப் பார்ப்பனரல்லாதாரும் செய்யவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
குடி அரசு – தலையங்கம் – 09.09.1928