“சர்க்கார் சாதித்ததென்ன”
தீண்டாதார்களுக்கும் தீண்டாமையைப் பற்றியும் “சர்க்கார் சாதித்த தென்ன, சர்க்கார் சாதித்ததென்ன” என்று தலைவர்கள் என்போர்கள் முதல் வாலர்கள் என்போர்கள் வரை கத்துகின்றார்கள்.
‘சர்க்கார் அயோக்கிய ஆட்சிமுறை கொண்டது, கொள்ளை அடிக்க வந்தது’ என்று நாம் தீர்மானம் செய்தாகிவிட்டது. ‘உலகத்தை ரக்ஷிக்க வந்த பிராமணர்களும் மதமும் தேசிய வீரர்களும்’ என்ன செய்தார்கள், செய்கிறார் கள், செய்யப்போகிறார்கள் என்று தான் கேட்கின்றோம். அதற்கு பதில் சொல் லாமல் சற்றும் வெட்கமின்றி சர்க்கார் சாதித்ததென்ன என்று கேட்பது அயோக்கியத்தனமா அல்லவா என்று கேட்கின்றோம்.
அதோடு இன்றையத்தினம் ஸ்ரீ. ஆ.ஊ. ராஜாவும் சிவராஜவும் சாமி சகஜானந்தாவும் சட்டசபைக்குப் போனதும். தங்கள் குறைகளை அங்கெடுத் துப் பேசுவதும் சர்க்கார் சாதித்ததா அல்லது ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தியும் வரதராஜுலுவும், குப்புசாமியும், அண்ணாமலையும் சாதித்ததா என்று கேட்கிறோம்.
அவர்கள் பிள்ளைகள் இன்று ஆயிரக்கணக்காக பள்ளியில் அரிச் சுவடி படிப்பது சர்க்கார் சாதித்ததா அல்லது வேதமும் சங்கராச்சாரியும் இந்து மதமும் சாதித்ததா என்று கேட்கின்றோம்.
கல்பாத்தி தெருவில் நடக்கவும் பச்சயப்பன் பள்ளியில் படிக்கவும் ஏற்பட்டது சர்க்கார் சாதித்ததா அல்லது ஸ்ரீ சீனிவாச அய்யங்காரும் ரங்கசாமி ஐயங்காரும் சாதித்ததா என்று கேட்கின்றோம்.
இன்னும் இம்மாதிரி எத்தனை வேண்டும்?
குடி அரசு – கட்டுரை – 11.03.1928