தொழிலாளர் தூது
பார்ப்பனரல்லாதார் தலைவர்களாகிய திருவாளர்கள் கோவை சட்டசபை அங்கத்தினரான ராவ் பகதூர் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் அவர்களும், மதுரை சட்டசபை அங்கத்தினர் திருவாளர் பி.டி. இராஜன் அவர்களும், சென்னை திருவாளர் ஏ. ராமசாமி முதலியார் அவர்களும் தென் இந்திய ரயில்வே தொழிலாளர்கள் நெருக்கடி விஷயமாக சென்னை கவர்னர் துரை அவர்களை பேட்டி கண்டு பேச வேண்டுமென்று தெரியப்படுத்திக் கொண்டதற்கேற்ப கவர்னர் துரையவர்களும் சம்மதித்து பேட்டி கொடுத்துப் பேசினார்கள்.
தூது சென்ற கனவான்கள் மூவரும், தொழிலாளர்களை ரயில்வேக் காரர்கள் கொடுமைப்படுத்திய விஷயங்களையும், சர்க்கார் அதிகாரிகள் அடக்கு முறை மூலம் தொழிலாளர்களுக்குச் செய்த அநீதிகளையும் பற்றி விரிவாய் எடுத்துச் சொன்னதின் பேரில் கவர்னர் துரையவர்கள் யாவற்றை யும் பொறுமையாய் வெகு அனுதாபத்துடன் கேட்டு இதுவிஷயத்தில் தம்மால் கூடியதைச் செய்வதாக வாக்களித்ததாகத் தெரிய வருகின்றது.
பொதுவாக தொழிலாளர் தலைவர்களில் சிலர் மீதும் தொழிலாளர்களின் அனுதாபிகள் பலர் மீதும் ஸ்தல அதிகாரிகள் 144 உத்திரவு பிரயோகித்து அடக்கினதைப் பற்றியும் இது விஷயமாய் சில இடங்களில் வழக்குத் தொடுத்ததைப் பற்றியும் கவர்னர் துரையும் மற்றும் அவரது நிர்வாக சகாக்களும் மனவருத்தமடைந்ததாகவும் தெரியவருகின்றது. பலாத்காரமான செய்கைகளில் சம்பந்தப்பட்டதாக போதுமான ருஜு கிடைக்கப்பெற்று நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் விஷயங்கள் தவிர, மற்றபடி தொழிலாளர்கள் விஷயத்திலும் பிரசாரகர்கள் விஷயத்திலும் அனுதாபிகள் விஷயத்திலும் ஸ்தல அதிகாரிகள் எடுத்துக் கொண்ட முறைகளைப் பற்றியும் வழக்குகளைப் பற்றியும் தங்கள் முழுகவனத்தைச் செலுத்தி அவைகளுக்குப் பரிகாரம் தேடுவதாக வாக்களித்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. சட்ட மெம்பரின் நிர்ப்பந்தத்தின் மீதிலேயே பல இடங்களில் ஸ்தல அதிகாரிகள் பிரயோகித்த 144 பாணங்களை திருப்பி வாங்கிக் கொள்ள நேர்ந்ததாகவும் தெரிகின்றது.
போலீஸ் இலாக்கா மெம்பரின் நிர்ப்பந்தம் காரணமாகவே ஸ்தல போலீஸ் அதிகாரிகளின் அக்கிரம அடக்குமுறை வழக்குகளை பின்வாங்கிக் கொள்ளச் செய்யவேண்டிய நிலைமையேற்படும் போலவும் தெரிகின்றது. பொதுவாக இந்தத் தூதுக்கூட்டம் கவர்னர் துரை அவர்களை பேட்டி கண்டதின் பயனாக அவசரமானதும் அனாவசியமானதுமான அடக்கு முறைகள் ஸ்தல அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகத்தாலேயே ஏற்பட்டதாக அதிகாரிகள் உணர்வதாகத் தெரியவருகிறது.
ஆனாலும் ஒரு தடவை தங்கள் அவசரப் புத்தியாலும் அறியாமையாலும் செய்த காரியங்களைப் பற்றி பிடிவாதமாயிராமல் தங்கள் குற்றங்களை உணர்ந்து அவற்றிற்கு பரிகாரம் செய்து கொள்ள ஸ்தல அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.
ஆனபோதிலும் இம்மாதிரியான காரியங்களினாலெல்லாம் தொழி லாள சகோதரர்களுக்கு எவ்வித நன்மையாவது ஏற்பட்டுவிடக் கூடும் என்று நாம் நினைப்பதற்கில்லை. ஏனெனில் இதெல்லாம் கண்ணைத் துடைக்கும் காரியமேயொழிய காரியத்தில் எவ்வித அனுகூலத்திற்கும் ஏற்றதாகாது. மற்றபடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்குக் காரணமாயிருந்த குறைகள் ஏதாவது கவனித்து பரிகாரம் செய்யப்படுமானால் அதைப்பற்றி மாத்திரம் நாம் திருப்தியடைய இடமுண்டாகும். ஆனால் அது மாத்திரம் கவர்னர் துரை அவர்களாலோ அல்லது வைசிராய் துரையவர்களாலோ கூடச் செய்யக் கூடிய காரியமல்லவென்பதும் நமக்குத் தெரியும். ஏனெனில் வைசிராய் துரைகளும், கவர்னர் துரைகளும், ரயில்வே துரைகளும் பிரிட்டிஷ் என்ப தான ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். இப்படியிருக்க, ஒருவர் செய்யும் மோசத்தை மற்றொருவர் காட்டிக் கொடுக்க முன்வருவார்களா? அன்றியும் அதற்குத் தக்கபடி அவர்களை நிர்ப்பந்திக்கவாவது நம்மிடம் ஏதாவது மார்க்கமிருக்கின்றதா?
தேசீய இயக்கங்கள் என்பதும் தேசீயதலைவர்கள் என்பவர்களும் ரயில்வேக்காரர்களுடையவும், சர்க்காருடையவும் சிப்பந்திகளாகவும் உள் உளவுக்காரர்களாகவும் இருக்கத்தக்கவர்களாகிவிட்டார்கள். எனவே என்றைக்காவது தொழிலாளர்களும் கூலிக்காரர்களும் இந்த நாட்டில் சுய மரியாதையோடும் சுதந்திரத்தோடும் பிழைக்க வேண்டுமானால் இம்மாதிரி போலி இயக்கங்களையும் போலித்தலைவர்களையும் நம்பாமல் அவர்கள் காலிலே அவர்கள் நிற்கும்படியான நிலைமை ஏற்பட வேண்டும். அம்மாதிரி நிலைமை பெறுவதில் சில தடவை நழுவி விழுந்தாலும் குற்றமில்லை. மற்றபடி சுயமரியாதையில் மாத்திரம் கவனம் இருந்துக் கொண்டு வந்தால் போதுமானது என்றே சொல்லுவோம்.
குடி அரசு – கட்டுரை – 26.08.1928