மகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி
வங்காள மாணவர்கள் தங்கள் சமூகத்திலும் புரோகிதக்கொடுமை இருப்பதையும், அதனால் தங்கள் சமூக முன்னேற்றமும் சுயமரியாதையும் உணர்ச்சியும் தடைபட்டுவருவதையும் உணர்ந்து முல்லா வர்க்கத்தையே அதாவது இப்பொழுது உள்ள புரோகித வர்க்கத்தையே அடியோடு ஒழிக்க வேண்டுமென்கின்ற எண்ணத்துடன் சமூக முன்னேற்றத்திற்கு அனுகூலமான சட்டங்களியற்றுவதற்கு எதிரிடையாயிருக்கும் எல்லா முல்லா வர்க்கத்தையும் ஒழிப்பதற்கு என்று புரோகித விலக்கு சங்கம் என்பதாக ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். சென்ற வருஷத்திலும் வங்காளம், பம்பாய், மத்திய மாகாணம் முதலிய இடங்களில் உள்ள வாலிபர்கள் இம்மாதிரியாக ஒரு கிளர்ச்சி செய்தது ஞாபகமிருக்கலாம். எனவே எந்த முற்போக்குக் கிளர்ச்சி களும் அவசியம் என்பது முதலில் வாலிபருக்குத்தான் படும் என்பதும், அவர்கள் தான் இம்மாதிரி சமூகத்திற்குள் நுழைந்து அழுகி நாறிப்போன பழைய பழக்க வழக்கங்களை தக்க தியாகத்தை கைம்மாறாகக் கொடுத்து ஒழிக்க சக்தியுடையவர்களாயிருப்பார்கள் என்பதும் நமது அபிப்பிராய மாகும். ஆதலால் நமது நாட்டு வாலிபர்களும் உலகமெல்லாம் கண் விழித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தை கைவிட்டுவிடாமல் முனைந்து நிர்ப்பார்கள் என்று நம்புகின்றோம்.
குடி அரசு – செய்தி விளக்கம் – 21.04.1929