பரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா
செங்கல்பட்டு சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்களுக்குப் பிறகு உலகமே முழுகிப் போய்விட்டதாக தமிழ்நாட்டில் சில அழுக்கு மூட்டைகள் போடும் கூச்சல்களையும் இதைப் பார்ப்பனர்கள் தங்கள் தேர்தலுக்கு ஒரு ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூலிகளையும் காலிகளையும் விட்டு கூப்பாடு போடச் சொல்வதையும் பொது ஜனங்கள் கவனித்திருக்கலாம். அத் தீர்மானங்களில் மிகவும் ஆபத்து என்று சிலரால் கருதப்பட்ட கல்யாண ஒப்பந்த ரத்து தீர்மானத்தைப் பற்றி வெளிப்படையாய் பேசுவதற்கு தைரிய மில்லாத சில பயங்கொள்ளிகள் இரகசியமாக விஷமப் பிரசாரம் செய்வதும் பலர் அறிந்திருக்கலாம்.
ஆனால், செங்கல்பட்டு தீர்மானத்தை அமுலுக்கு கொண்டுவர பரோடா அரசாங்கத்தார் முந்திவிட்டார்கள் என்பதாக 29-3-29 -ந் தேதி ‘இந்து’ ‘சுதேசமித்திரன்’ ‘சுயராஜ்யா’ ‘ஜஸ்டிஸ்’ முதலிய பத்திரிகைகளில் காணப்படுகின்றது. அதாவது பரோடா சமஸ்தானத்தில் நடந்த- இனி நடக்கப் போகும் கல்யாணங்கள் எவையாயினும் அவற்றை தம்பதிகள் இஷ்டப்பட்ட போது ரத்து செய்து கொள்ளலாம் என்பதாக ஒரு மசோதா கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அதை கொண்டுவந்தவர்கள் அம் மசோதாவின் ஒவ்வொரு பிரிவுக்கும் “சாஸ்திர” ஆதாரங்களை காட்டியிருக்கின்றார்களாம். இனி இதைக் கேள்விப்படும் தமிழ்நாட்டுக் கிணற்றுத் தவளைகள் பெண்களை “காப்பாற்ற” ‘பரோடா சமஸ்தானத்திற்கு ஓடுவார்களா? அல்லது இங்கேயே மூலையில் உட்கார்ந்து கொண்டு “பெண்ணின் பெருமையை” பேசிக் கொண்டு வயிறு வளர்ப்பார்களா? என்பது பொறுமையுடன் எதிர்பார்க் கப்பட வேண்டிய விஷயமாகும். பெண்களின் சுதந்திரத்திற்கு முதலாவது அவர்களுக்கு கல்யாண ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்ளும் உரிமை அளிப்பதே முக்கியமானதாகும். இது விஷயமாய் நமது செங்கற்பட்டுத் தீர்மானத்திற்குப் பிறகு அமெரிக்காவில் இம்முறை சில பாகங்களில் நடைபெறுவதையும், ஜர்மனி பார்லிமெண்டில் ஒரு மசோதா கொண்டுவந்தி ருப்பதையும், ஜப்பான், பிரான்ஸ், இட்டாலி, ஸ்காண்டிநேவியா, ஜெக்கோஸ் லோவியா, ஹாலண்டு, நியூஜிலந்து, ரஷ்யா, டென்மார்க், கனடா முதலிய தேசங்களிலும் கல்யாண ரத்துக்கனுகூலமாக உள்ள சட்டங்களையும் ஆதாரமாக எடுத்துக் காட்டி பரோடா சட்டசபையில் ஒரு மசோதா கொண்டு வந்திருப்பதையும் பார்த்துவிட்டோம். இனியும் நமது தமிழ் நாட்டிலும் பழந்தமிழ் மக்களில் ஏறக்குறைய அநேக வகுப்புகளில் இவ்வழக்கம் இன்றும் இருந்து வருவதையும் நடைபெற்று வருவதையும் பார்க்கின்றோம்.
குடி அரசு – கட்டுரை – 31.03.1929