காங்கிரசும் மதுவிலக்கு பிரசாரமும்
நமது இலாக்கா மந்திரி கனம் முத்தையா அவர்கள் மதுவிலக்குப் பிரசாரம் செய்ய சிறிது பணம் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தபோது காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியின் உபதலைவரும் கோவை ஜில்லா பிரதிநிதியும் கள்ளு உற்பத்தி செய்யக் கூடிய சுமார் ஆயிரம் தென்னை மரங்களை உடையவரும் வருஷம் கள்ளில் 5000, 10000 சம்பாதிப்பவரும் அய்யங்கார் பார்ப்பனருமான திரு.சி.வி.வெங்கட்டரமண அய்யங்கார் அவர்கள் எழுந்து சர்க்கார் மது விலக்குப் பிரசாரம் செய்யக் கூடாது என்றும், மதுவிலக்குப் பிரசாரம் செய்தால் குடிக்காத மனிதனுக்குக் கூட இவர்கள் ஏன் குடிக்க வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள் என்று பரீட்சை செய்து பார்ப்பதற்காக குடித்துப் பார்க்க வேண்டுமென்று ஆசை உண்டாக்கிவிடும் என்றும் சொல்லி அதை ஆட்சேபித்தார். (இவர்தான் சென்ற தேர்தலில் திரு.ஊ. ராஜகோபாலாச்சாரியாரால் மதுவிலக்குப் பிரசாரத் தின் பேரால் ஓட்டுவாங்கிக் கொடுக்கப்பட்டு சட்டசபை மெம்பர் ஆவார்.) உடனே கோவை திரு.சி.எஸ்.இரத்தினசபாபதியார் எழுந்து திரு. அய்யங்கார் அவர்கள் சொல்லுகின்ற கொள்கைப்படி பார்த்தால் ஒத்துழையாமை காங்கிரசின் போது பத்துலட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து மது விலக்குப் பிரசாரம் செய்ததால் தான் நாட்டில் குடி அதிகரித்து விட்டது என்பதாக அர்த்தமாகின்றது. இதைத் திரு.அய்யங்கார் ஆம் என்று ஒப்புக் கொள்வாரானால் அய்யங்காருடன் சேர்ந்து ஓட்டுக் கொடுக்கின்றேன் என்று சொன்னாராம். உடனே சபையிலுள்ளவர்கள் “அய்யங்காருக்கு, வெட்கம், வெட்கம்” என்று கைதட்டிச் சிரித்தார்களாம். அய்யங்கார் திருடனைத் தேள் கொட்டியது போல் விழித்தாராம். நிற்க, மது விஷயத்தில் தென்னை மரத்தினால் வருஷம் 10000, 5000ம் சம்பாதிக்கும் நபர். அதிலும் பார்ப்பனக் கனவானிடமிருந்து நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். இது கோவை ஜில்லா ஓட்டர்கள் இவரைத் தெரிந்தெடுத்ததின் மூலம் செய்த பெரிய தவறு என்று உணர்வதற்கு வேறு என்ன உதாரணம் தேடுவார்களோ தெரிய வில்லை.
தவிர, முன்னுள்ள மது மந்திரி, அம்மை குத்தும் இலாகா அதிகாரிகள் கிராமங்களில் மதுவிலக்கு பிரசாரம் செய்யும் வேலையில் தங்கள் நேரத்தைச் செலவிடக் கூடாது என்று சுற்று உத்திரவு போட்ட காலத்தில் இந்தப் பார்ப்பனர்கள் தான் சர்க்கார் அதிகாரிகள் மதுவிலக்குப் பிரசாரம் செய்யக் கூடாது என்று உத்திரவு போடலாமா என்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயற்சித்தவர்கள். இப்போது இதே பார்ப்பனர்கள் சர்க்கார் மதுவிலக்குப் பிரசாரம் செய்வதை எதிர்த்துச் சண்டைபோடுகின்றவர்கள். எனவே இதிலிருந்து காங்கிரசினுடையவும் பார்ப்பனர்களின் மதுவிலக்குப் பிரசாரத்தன்மையினுடையவும் யோக்கியதையை பொது ஜனங்கள் உணர்ந்து கொள்வார்களாக.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 17.03.1929