செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்களும் ஜஸ்டிஸ் பத்திரிகையும்

செங்கற்பட்டுத் தீர்மானங்களைக் குறித்து ஜஸ்டிஸ் பத்திரிகை எழுதிய அபிப்பிராயத்தைப் பற்றி, சிறிது சென்றவாரம் அதாவது கடவுள் வணக்கத் திற்கு பணம் செலவு செய்ய வேண்டுமா என்பதைப் பற்றி எழுதிவிட்டு, கல்யாணம், கல்யாண ஒப்பந்தவிலக்கு என்கின்ற விஷயங்களைப் பற்றி இவ்வாரம் எழுதுவதாய்க் குறிப்பிட்டிருந்தோம்.

கல்யாணம்
கல்யாணம் என்பது என்ன? அது மக்களின் வாழ்விற்கும் இயற்கை உணர்ச்சிகளுக்கும் அவசியமான ஒரு சாதனமே ஒழிய மற்றபடி வேறு ஏதாவதான அதாவது “தெய்வீகத்தன்மை” கற்பிக்கக் கூடியதான விஷயங் கள் அதில் என்ன இருக்கின்றது என்பதை நாம் அறிய முடியவில்லை. ஒரு மனிதன் தன் வாழ்க்கைக்கும் திருப்திக்கும் இன்பம் அனுபவிப்பதற்கும் என்று எப்படி சொத்து, உத்தியோகம், கீர்த்தி, நல்ல துணிமணிகள், அழகும் அறிவும் உள்ள குழந்தைகள், அதிகமான சவுகரியமும் பெருமையும் தரத்தக்க வீடுகள், மனமொத்த நண்பர்கள் ஆகியவைகளை அடைய விரும்புகின்றானோ அதுபோலவே ஒரு ஆண் ஒரு பெண்ணையும் ஒரு பெண் ஒரு ஆணையும் வாழ்க்கைத் துணையாக விரும்புவதும், அவ் விருப்பப்படி ஒருவரை ஒருவர் தெரிந்தெடுத்து தங்களுக்குள் திருப்தி உண்டானபின் தங்கள் இருவருடைய வாழ்க்கைக்கும் இன்பத்திற்கும் ஒத்தபடி செய்து கொள்ளும் ஒப்பந்தந்தான் கல்யாணம் என்று சொல்லப் படுவதாகும். எனவே இதில் “தெய்வீகத்திற்கோ” “ஆத்மார்த்தத்திற்கோ” என்ன வேலை இருக்கின்றது என்பது நமக்கு விளங்கவில்லை.

சொத்து, வீடு, ஆடை, ஆபரணங்கள், குழந்தைகளிடம் கொஞ்சுதல், சிநேகிதர்களின் மூலம் மகிழ்ச்சி அடைதல் ஆகியவற்றிலும் ஆத்மார்த்தமும் தெய்வீகமும் இருக்கின்றது என்றால் அந்த அளவுக்கு ஆத்மார்த்தத்தையும் தெய்வீகத்தையும் கல்யாணத்திலும் வைத்துக் கொள்வதில் நமக்கு அதிக கவலையில்லை. ஆனால் “அவைகள் எல்லாம் மானுஷீகத்தில் சேர்ந்தது, கல்யாணம் மாத்திரம் தெய்வீகத்தில் சேர்ந்தது” என்றால் அதை நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியவே முடியாது என்கின்றோம். அன்றியும் மற்றெல்லா விஷயங்களையும் விட மானுஷீக வாழ்க்கையில் கல்யாணம் என்பது ஆண்பெண் இருபாலருக்கும் மிகவும் தெளிவானதாகவும் மற்றெல்லாவற்றையும்விட அதிக சுதந்திரமும் சுயேச்சையும் உடையதா கவும் இருக்க வேண்டுமென்றும் சொல்லுவோம். ஏனெனில் கல்யாணம் என்பதில் ஆண்பெண் இருவருக்கும் அதிக நம்பிக்கையும் ஒற்றுமையும் வேண்டியிருப்பதால் இருவருக்கும் தெளிவும் சுதந்திரமும் அதிகம் வேண்டி யிருக்கின்றதென்கின்றோம். ஆனால் இப்போதைய பெரும்பான்மையான கல்யாணங்கள் என்பவைகள் ஒரு சிறிதும் மனிதத்தன்மைக்குப் பொருந்தி னவையல்லவென்றே சொல்லுவோம். முதலாவது ஆணும் பெண்ணும் அல்லது ஆணோ பெண்ணோ அறியாமைப் பிராயத்தில் இருக்கும்போதே கல்யாணங்கள் வேறு ஒருவரால் நடத்தப்படுவது. இரண்டாவது தாலி கட்டும் சடங்கு வரையில் சில சந்தர்ப்பங்களில் தாலி கட்டி சிலநாள் ஆகும் வரையில் கூட ரூபத்தைப் பொறுத்த வரையில் கூட பெண் எப்படிப்பட்டது என்று ஆணுக்குத் தெரியாமலும் ஆண் எப்படிப்பட்டது என்று பெண்ணுக்குத் தெரியாமலும் இருக்க நேரிடுவதோடு, குணங்களைப் பற்றியோவென்றால் கல்யாணமாகி 2, 3, 4- வருஷங்களுக்குக் கூட இருவர் குணங்களையும் பற்றி ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்ள முடியாமலும் சில சந்தர்ப்பங்களில் சரீர சம்மந்தமாகி 3, 4 – வருஷங்கள் வரையில்கூட ஒருவரை ஒருவர் நன்றாய் தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பதோடு ஆண் பெண்ணைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல் இருப்பதும், பெண் ஆணின் தாய், தகப்பன்மாருக்கும் அடிமையாக வாழ்க்கைப்பட்டதாக கருதிக் கொண்டு ஒரு வேலையாளாகவே இருக்க வேண்டியதோடு வெறும் ஒருவனுடைய புணர்ச்சி உணர்ச்சிக்காகத்தான் தயாராய் அவனுடைய சமயத்தை எதிர்ப் பார்த்துக் கொண்டு காத்திருக்க வேண்டியதான ஒரு நகரும் யந்திரம்போல் இருப்பதும் பெண் தனக்கு தன் தேவைக்குத் தேவையான சமயத்திற்கு எந்தவிதமான பரிகாரமும் கிடையாது என்பதாகத் தீர்மானித்து தனக்கும் இயற்கை உணர்ச்சி என்று ஒன்று இருப்பதாகவே கருதக் கூடாது என்றும் நிர்ப்பந்தப்படுத்தி வருவதுபோலாகவும் இருக்கின்றது. இதை யாராவது மறுக்கமுடியுமா? என்று கேட்கின்றோம்.

அன்றியும் ஒரு பொதுமகள், அல்லது விலைமகள் என்பவள் தனக்குள்ள இயற்கை உணர்ச்சியைத் தன் இஷ்டம் போல் அனுபவிக்கவும் அதற்கும் தன் இஷ்டம்போல் விலை பெறவும் வாழ்க்கையில் தன் இஷ்டம் போல் சுயேச்சையாகவும் சுதந்திரமாகவும் இருக்கவும் நமது சமுதாயத்தில் தாராளமாய் இடமளிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் வாழ்க்கையில் ஈடுபடுத் தப்பட்ட “தெய்வீகம்” என்று சொல்லத்தக்கதான கல்யாணம் செய்து கொண்ட நமது பெண்கள் வெறும் வயிறு வளர்ப்புக்காகவும் உடலை மறைக்கும் துணிக்காகவும் மாத்திரம் வேறு மனிதனுக்குத்தான் ஒரு அறிவும் உணர்ச்சியும் அற்ற நகரும் யந்திரம்போல் இருந்து கொண்டு இருக்க வேண்டியதாயிருக்கின்றது. பெண்ணுக்கு புருஷனிடமிருந்து எவ்வித ஒப்பந்தமும் வாங்க உரிமையில்லை. அவன் தன் கையால் தாலி கட்டிய பெண்ணை அன்று முதலே வேண்டாம் என்று சொல்லி விடலாம். (சொல்லி விடுகிறார்கள்) தாலி கட்டும் முன்பும் தனக்கு வேறு பல பெண்களிடம் சாகவாசமும் ஒப்பந்தமும் இருக்கலாம்.
மற்றும் சில பெண்களையும் பெண்டாட்டியாகக் கட்டிக் கொண்டு வாழலாம். அல்லது தான் முறைப்படி தாலிகட்டி கல்யாணம் செய்து கொண்ட பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு வேறு ஒரு பெண்ணை வைப்பாட்டி யாக அதே வீட்டில் வைத்துக் கொண்டு அந்த வைப்பாட்டியையும் பெண் டாட்டியையும் ஒன்றுபோலவே நடத்துவதும், சில சமயங்களில் வைப்பாட்டி யைப் பெண்டாட்டியை விட உயர்வாக நடத்துவதும், சில சமயங்களில் பெண்டாட்டியை வைப்பாட்டிக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி செய்து வீட்டு நிர்வாக அதிகாரத்தை வைப்பாட்டிக் கையில் ஒப்புவித்து விடுவதும், இவ்வ ளவும் செய்வதோடு மாத்திரம் நின்றுவிடாமல் ஆண் அந்த வைப்பாட்டி இடமே காதல் வைத்து அவளுடன் கூடவே இன்பம் அனுபவித்துக் கொண்டு பெண்டாட்டியை வேலைக்காரி போலாகவும் தொடக்கூடாதவள் போலவும் கருதி நடத்திக் கொள்ளுகின்றான். இவை யாவையும் பிரத்தியக்ஷத்தில் பார்க்கின்றோம். இவைகள் ஜஸ்டிஸ் பத்திரிகைக்குத் தெரியாதா என்று கேட்பதோடு இவற்றிற்கு, இப்போதுள்ள மதக் கொள்கைகளும் கல்யாண முறையும் அல்லவா காரணம் என்றும் கேட்கின்றோம். சுயமரியாதையின் பேரால் சீர்திருத்த நோக்கத்தோடும் சமத்துவ நோக்கத்தோடும் கூட்டப்பட்ட ஒரு மகாநாட்டில் இவ்விதக் கெடுதிகள் ஒழியத் தகுந்த மாதிரியான ஒரு தீர்மானம் அதுவும் ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்க்கைத் துணையாகவும் காதலர்களாகவும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவர்களைத் தாங்கள் தாங்களாகவே தங்கள் இஷ்டப்படி தெரிந்தெடுத்துக் கொள்ள ஒரு தீர்மானம் தீர்மானிப்பது தகுதியற்றது அல்லது ஒப்புக் கொள்ள முடியாதது என்று சொல்வதானால் மற்றென்ன காரியம்தான் மக்கள் முன்னேற்றத்திற்கோ, மனித சுதந்திரத்திற்கோ பெண்கள் முன்னேற்றத்திற்கோ உரிமைக்கோ ஏற்றது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்தத் தீர்மானம் கூட இந்நாட்டு மக்க ளுக்கு கஷ்டமா யிருக்குமானால் அதற்கு பதிலாக மக்களுக்குள் கல்யாணம் என்கின்ற ஒரு முறையே கூடாது என்றுதான் நாம் சொல்லித் தீர வேண்டியவர் களாக இருக்கின்றோம். ஏனென்றால் இன்பத்திற்காக கல்யாணம் என்றால் அதற்கேற்றமுறையில் கல்யாணத்திட்டம் அமைக்கப்படவேண்டுமே ஒழிய மற்றப்படி இன்பமும் காதலும் அல்லாமல் வெறும் உலகத்தை நடத்து வதற்கும் உலக விருத்திக்கு என்று புலபுலென பிள்ளைகளைப் பெறுவ தற்கும் ஆண்மக்களுக்கு அவனது வாழ்வுக்கும் கீர்த்திக்கும் திருப்திக்கும் நிபந்தனையற்ற நிரந்தர அடிமையாகப் பெண் இருப்பதற்கும் தான் கல்யாணம் என்பதானால், அம்மாதிரி கல்யாண வாழ்க்கையில் நமது பெண் மக்கள் ஈடுபடுவதை விடக் கல்யாணமே இல்லாமல் வாழுவதையோ அல்லது அவர்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரத்தோடு நடந்து கொள்வ தையோ தான் நாம் ஆதரிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். சம சுதந்திரத்தில் இயற்கை உணர்ச்சியில் சமசந்தர்ப்பம் அளிக்கப்படாத முறையைக் கொண்ட கல்யாணங்களை நாம் விபசார வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஏனெனில் நாம் விபச்சாரம் என்பதற்குக் கொள்ளும் பொருள் என்னவென்றால் தங்கள் ஆசைக்கும் மன உணர்ச்சிக்கும் விரோதமாய் வேறு நிர்ப்பந்தத்திற்காக அடிமைப்படுவதையேதான் இங்கு நாம் விபசாரம் என்று கொள்ளுகின்றோம்.

எப்படியெனில் கல்யாணமில்லாத ஒரு பொதுமகள் பணத்திற்கு ஆசைப்பட்டு தனக்கு இஷ்டமில்லாத நிர்ப்பந்தத்திற்கு சில சமயங்களில் உடன்பட வேண்டியிருப்பதாக வைத்துக் கொண்டாலும் கல்யாணமான குடும்பப் பெண் என்பவள் வெறும் ஆகாரத்திற்கும் துணிக்குமாக மாத்திரம் எப்போதும் தனக்கு சற்றும் சுதந்திரமில்லாமலும் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் மனித உரிமைக்கும் உணர்ச்சிக்கும் இஷ்டத்திற்கும் விரோதமாகவும் நிர்பந்தத்திலேயே ஜெயிலில் உள்ள கைதிபோல் இருக்க வேண்டியிருக்கின்றது. இத்தன்மை பொருந்திய மணம் பொறுப்புள்ள மணமா, காதல் மணமா, இன்ப மணமா அல்லது பொறுப்பற்ற மணமா? விபசார மணமா? அடிமை மணமா? நிர்ப்பந்த மணமா? என்பதை யோசித் துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன். கல்யாணத்தின் விஷயமாகப் பின்னால் எழுதுவோம்.

குடி அரசு – கட்டுரை – 10.03.1929

You may also like...

Leave a Reply