கும்பகோணத்தில் பார்ப்பனாதிக்கமும் கிறிஸ்தவர்கள் சுயமரியாதையும்,
கும்பகோணத்தில் சங்கராச்சாரியார் என்கின்ற ஒரு பார்ப்பன மடாதிபதி குடியிருக்கின்ற வீதியில் கிறிஸ்தவர்கள் பஜனை செய்து கொண்டு போகக் கூடாது என்று தடுத்துவிட்டார்களாம். ராயல் கமீஷனை வரவேற்பது இந்தியாவின் சுயமரியாதைக்குக் குறைவு என்று நினைக்கும் திரு. குழந்தை போன்ற ‘தேசீய வீரர்களுக்கு’ கும்பகோணத்து சந்நியாசிப் பார்ப்பான் குடியிருக்கும் ஒரு வீதியில் அதுவும் நாய், கழுதை, பன்றி, மலம், மூத்திரம் தாராளமாய் நடமாடும் வீதியில் தன் இனத்தார்கள் பஜனை பாடிக் கொண்டு நடக்கக் கூடாது என்று சொன்னது தன் சமூகத்தின் சுயமரியாதைக்குக் குறைவு என்று தோன்றவில்லையா? அல்லது தோன்றினாலும் வயிற்றுக் கொடுமை அதை மறைத்துவிட்டு, சைமன் கமிஷனிடமும் இதைச் சொல்ல வேண்டாம் என்று அடக்கி “சைமன் பஹிஷ்காரக்” கூச்சல் போடும்படி செய்கின்றதா? என்று கேட்கின்றோம்.
குடி அரசு – செய்தி விளக்கம் – 10.02.1929