திரு. சாமி வெளியாக்கப்பட்டார்
சென்னைக் காங்கிரஸ் கட்சிக்கும் சுயராஜ்யக் கட்சிக்கும் சட்டசபைத் தலைவராக திரு.சாமி வெங்கடாசலம் செட்டியாரை வைத்திருந்தார்கள். ஆனால், திரு.செட்டியார் பார்ப்பனரின் கைக்களிமண் உருண்டையா யிருந்தவரையில் தங்களுக்கு வேண்டிய மாதிரி எந்தவித பொம்மை வேண்டு மானாலும் செய்து கொள்ளலாம் என்கின்ற தைரியத்தில் அவரைத் ‘தலைவர்!’, ‘தலைவர்!’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், திருவாளர் செட்டியார், முத்துரங்கம், குழந்தை, அமீத்கான் கம்பெனி யார்களைப் போல் இல்லாமல் கொஞ்சம் தமது சுயபுத்தியைக் காட்ட ஆரம்பித்தவுடன் அவரைக் கீழே தள்ளிவிட்டார்கள். இது வெகுநாளாகவே நாம் எதிர்பார்த்ததுதான். திரு சாமியும் தயாராகவே இருந்ததாகத்தான் தெரிகின்றது. கடைசியாக திரு. சாமியைத் தள்ளியதற்குக் காரணம், திரு.சாமி, திரு. பனகால் ராஜாவிடம் அடிக்கடிபேசியதுதானாம்.
பிள்ளையாரைப் பிடித்த சனியன் அரச மரத்தையும் பிடித்தது என்பது போல் திரு. சத்தியமூர்த்தியின் உதவித் தலைவர் பதவியும் பிடுங்கப்பட்டி ருக்கிறது. ஆனால், இதற்கு ஏதாவது உள்இரகசியம் இருக்கலாம். அதாவது, திரு.ஸ்ரீனிவாசய்யங்கார், திரு.மூர்த்திக்கு ஏதாவது கொஞ்சம் பணம் கூட்டிக் கொடுத்திருக்கலாம் அல்லது கொஞ்ச நாளைக்கு மாத்திரம் பொறுத்திருக்கும் படி கேட்டுக்கொண்டிருக்கலாம். எப்படி ஆனாலும் திரு. சாமி வெளியாக் கப்பட்டுவிட்டார்.
திரு. வரதராஜுலுவும் காங்கிரஸ் கமிட்டியில் ராஜினாமா கொடுத்து விட்டு இந்த 2, 3 நாளாக பார்ப்பனர்களைத் திட்டுவது போல் வேஷம் போடுகின்றார். இதன் இரகசியம் இன்னது என்பதும் தெரியவில்லை. ஒரு சமயம் ராஜினாமா அனாமத்தில் வைக்கப்பட்டு சைமன் கமிஷன் சென்னை யை விட்டுப்போன பிறகு திருப்பி வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டு, வற்புறுத்தலுக்குக் கட்டுப்பட்டு வழக்கம் போல் மறுபடியும் திருவாளர் நாயுடு மெம்பரானாலும் ஆகலாம்.
சென்ற ஆண்டிற்கு முன்னைய ஆண்டில் காங்கிரசை குறைக் கூறிவிட்டுக் காங்கிரசை விட்டு ஓடிய திரு. கல்யாணசுந்தர முதலியாரும் காங்கிரசை ஆதரிப்பதுடன், செத்துப்போன ஜில்லா தாலூகா காங்கிரஸ் கமிட்டிகளை உயிர்ப்பித்து கிராமப் பிரசாரம் செய்யவேண்டும் என்று உபதேசம் செய்கின்றார். இதன் இரகசியம் விளங்கவில்லை. ஒரு சமயம், அய்யங்காரிடம் வியாபாரம் பேசவோ என்பதும் புலப்படவில்லை. நம்மு டைய பார்ப்பனர்களுடைய வாழ்க்கைக்குத் தக்கபடி அவர்களை விட்டு ஒருவர் போனால் மற்றொருவர் வந்து வலிய விண்ணப்பம் போட்டுக் கொண்டேதான் இருக்கின்றார்கள்.
குடி அரசு – செய்திக் குறிப்பு – 10.02.1929