செங்குந்தர் சமூக மகாநாடு பொருட்காட்சி திறப்பு
அன்புள்ள சகோதரர்களே!
இன்று தென்னிந்திய செங்குந்தர் முதலாவது சமூக மகாநாட்டின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்பொருள் காட்சி சாலையைத் திறந்து வைக்கும் பெருமையை எனக்கு அளித்ததற்காக என் மனப்பூர்வமான நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். வெகு சொற்ப கால முன்னறிவிப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொருட் காட்சியானாலும், இதில் ஏராளமான சாமான்கள் காட்சிக்கு வந்து குவிந்திருப்பது போற்றத்தக்கதாகும்.
பொருள் காட்சிகள் என்பன மக்களின் முன்னேற்றத்திற்குரிய சாதனமாகும். வியாபாரம், கைத்தொழில், சிக்கனம் ஆகியவைகளின் முன்னேற்றம் பெரிதும் பொருள்காட்சியினாலேயே ஏற்படும். ஒவ்வொரு நாட்டாருடையவும் கைத்தொழில், பொருள் வரவு, மனோபாவம், தொழில் திறம், செய்யும் மாதிரி ஆகியவைகள் தெரியவும் மற்றவர்கள் அதைப் பின்பற்றவும் இன்னும் இம்மாதிரி எத்தனையோ விஷயங்களுக்கு இப்பொருள் காட்சிகள் பயன்படுகின்றன.
எவ்வளவோ கைத் தொழில்களுக்கு நமது நாடு மிகப் பழமை யானதும் பெயர் போனதுமாயிருந்தாலும், நாம் கைத் தொழில் முறையில் ஒரு சிறிதும் முற்போக்கடையவில்லை என்பதை தெரிவிப்பதற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது. பொருள்காட்சி என்பது (இன்வென்ஷன்) கண்டு பிடித்தல், மேலும் மேலும் முற்போக்கடைதல் என்கின்ற தத்துவம் அடங்கியது.
ஆனால் நமது நாடு பழமையை கெட்டியாய் குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருப்பதில் உலகத்திலேயே பேர் போனது என்று சொல்ல வேண்டும். மேல்நாட்டார், அவர்கள் கண்டுபிடிக்கும் விஷயங்கள் எவ்வளவு மேலானதாயிருந்தாலும் மேலும் மேலும் அதிலிருந்து சீர்திருத்தம் கண்டுபிடிப்பதிலேயே கவலை கொள்ளுவார்களே யொழிய, ஓய்வெடுத்துக் கொள்ள சம்மதிக்கவே மாட்டார்கள். உதாரணமாக, ரயில் வண்டி, இரண்டு சக்கரவண்டி, மோட்டார்கார், ஆகாயவிமானம் ஆகிய வாகன சம்மந்த மானவைகள் ஒவ்வொரு நாளும் புதுப்புது சீர்திருத்தங்களுடனே வெளிவந்து கொண்டிருக்கின்றதைப் பார்க்கின்றோம். நாளுக்கு நாள் விலை குறைவு, செலவு சுருக்கம், காலம் சுருக்கம், சமான்கள் கெட்டி ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கின்றார்கள். இதுபோலவே ஒவ்வொரு துறையிலும் அற்புதங்களைக் கண்டு பிடித்துக் கொண்டே இருக்கின்றார்கள். இவற்றைத் தாராளமாய் தங்கள் நாடு முழுவதும் பயன டையும்படி பரப்பிக் கொண்டே வருகின்றார்கள். ஒவ்வொரு தொழிற் சாலைக்காரரும் வியாபாரியும் ஆராய்ச்சிக்காகவும், புதியமுறைகள் கண்டு பிடிப்பதற்காகவும், தங்களது வரும்படிகளிலும், சொத்துக்களிலும் தக்க பாகத்தை ஒதுக்கிவைத்து வருகின்றார்கள். நமது நாட்டிலோ ஆராய்ச்சி என்பதோ புதிய முறைகள் என்பதோ மக்களின் காதுகளுக்கு வெறுப்பாகவும், கண்களுக்கு நோவாகவும் கருதப்படுகின்றது.
சாதாரணமாக நம் ஊர்களிலுள்ள ஒத்தைமாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டிகளை எடுத்துக் கொண்டால் எனக்குத் தெரிய 40, 50 வருஷ காலமாக, இதே மாதிரியாகத்தான் இருக்கின்றது. வண்டிக்குள் உட்கார்ந்து ஒரு பத்து மைல் பிரயாணம் செய்துவிட்டால் இடுப்பு ஒடிந்துவிடும், முதுகு வளைந்துவிடும், உடல்வலி நிற்க ஒரு வாரமாகும். கெர்ப்ப ஸ்திரீயாயி ருந்தால் வண்டியிலேயே பிரசவமாகிவிடும். இது 80 அல்லது 100, 200 வருஷம் என்று கூடச் சொல்லலாம். இதுவரையில் ஒரு கடுகளவுகூட அவை கள் முன்னேற்றமடைந்திருப்பதாய்ச் சொல்ல முடியாது. பணக்காரர்களா யிருந்தால் வெள்ளியில் நுகத்தடி போட்டு தங்கத்தில் பூண்கட்டி இரண்டு வைரமோ செம்போ புதைத்து விட்டால், அதுவே விசேஷ வண்டியாக மதிக்கப்படுகின்றது. இம்மாதிரியே நூல் நூற்பதிலுங்கூட சுமார் 100, 200 வருஷங்களுக்கு முன் செய்த ராட்டினம் எதோ அதுதான் இன்றும் பூஜிக்கப்படுகின்றது. 200 வருஷத்திற்கு முன் ஒரு நாளைக்கு பத்து ரூபாய் எடை பஞ்சு நூற்று, முக்கால் அணா அல்லது ஒரு அணா கூலி பெற்றிருந்தால் இன்றைக்கும் 9 அல்லது 10 ரூபாய் எடை பஞ்சுதான் நூற்று 8 அல்லது 9 காசு கூலி தான் வாங்க வேண்டும். இந்த முறையைச் சற்றும் மாற்றாமல், குரங்குப் பிடிவாதமாய் பிடித்துக் கொண்டிருப்பது தான் இப்போது நமது முன்னேற்ற வேலை, விடுதலை வேலை, ஏழைகளைக் காப்பாற்றும் வேலை என்று மதிக்கப்படுகின்றது.
இன்னும் நெசவுத் துறையிலும் இதுபோலவே நமது நாட்டில் பெரும் பாலும் 100 வருஷத்துக்கு முன் இருந்த முறைகளேதான் கையாளப்பட்டு வருகின்றன. பொதுவில் கொஞ்சமும் மாறுதல் இல்லை. தென்னிந்தியாவில் உள்ள செங்குந்த சமூகம் ஒரு மதிக்கத்தகுந்த ஜனசங்கியை உடையதாக இருந்தும் இவ்வளவு பேருக்கும் 100-க்கு 99 பேருக்கு மேலாக நெசவுத் தொழிலாக இருந்தும், இதுவரையில் இச்சமூகம் எவ்வளவு முன்னேற்ற மடைந்திருக்கின்றது என்று பார்த்தால், செங்குந்தர்கள் என்பவர்கள் யார், நமது ஜனத் தொகை என்ன என்கின்ற விஷயம் தெரிந்து கொள்ளவே இத்தனை காலம் ஆச்சுது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கின்றது. மேலும் ஏதாவது முற்போக்கடைந்து இருக்கின்றோமா என்று பார்த்தால் நாம் எப்படி வந்தோம்? நமது ஆதி பெருமை என்ன? என்பதைப் பற்றிய ஆராய்ச்சியில் கவலை செலுத்தத்தக்க நிலைமையை அடைந்து கண்டுபிடித்து விட்டோம் என்கின்ற சந்தோஷந்தான். எனவே இதுவேதான் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சமூகத்தினுடையவும், சமூக மகாநாட்டினுடையவும், கடமையாய் இருந்து வருகின்றது. நான் இதுவரை சுமார் நூற்றுக்கணக்கான சமூக மகா நாடுகள் பார்த்திருக்கின்றேன். அநேகமாய் ஒவ்வொன்றும் தங்கள் ஆதிப் பெருமையை பற்றிப் பேசுவதில் கவலை கொண்டிருக்கக் கண்டேனேயல் லாமல் இனிமேல் என்ன செய்வது என்பதை முக்கியமாய்க் கவனிப்பதைக் காணவில்லை. நாட்டின் முன்னேற்றமும் தங்கள் சமூக முன்னேற்றமும், தங்கள் நாடு ஆதியில் எப்படி இருந்தது என்று கண்டுபிடிப்பதிலும், தங்கள் சமூகம் ஆதியில் எப்படி இருந்தது என்று கண்டுபிடிப்பதிலும் ஒருசிறிதும் அடங்கி இருக்கவில்லை என்பது எனது அபிப்பிராயம். இம்மாதிரி பொருள் காட்சிகளும், நூதன தொழில் முறைகளும், சமூக மக்கள் அனைவரும் குறைந்த கஷ்டத்தில் தாராளமாய் நல்ல ஜீவனத்திற்கு ஏற்ற மார்க்கம் ஏற்படுத்திக் கொள்ளுவதற்கும் மானத்துடன் அதாவது ஜீவனத்துக்காக உயிர்வாழ்வதற்காக மானத்தையும் மனச்சாட்சியையும் பறிகொடுக்காமல் மனிதத் தன்மையோடு வாழும் நிலைமை உண்டாக்கிக் கொள்வதற்கும் தற்காலம் நமது நாட்டின் முற்போக்குக்கும் வழிகாட்டியாகும். ஆதலால் இந்த இரகசியத்தை உணர்ந்து இச்செங்குந்த சங்கத் தலைவர்கள் இம்மகா நாட்டுடன் ஒரு பொருள்காட்சி ஏற்பாடு செய்தது மிகவும் அறிவுடைமையும் பொருத்தமானதுமாகும் என்று சொல்லி நான் அவர்களைப் பாராட்டுவதுடன் இதைத் திறந்து வைக்கும் கௌரவத்தை எனக்குக் கொடுத்ததற்காக மறுபடி யும் ஒருமுறை எனது நன்றி அறிதலை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
குறிப்பு : 19 , 20-01-1929 நாட்களில் ஈரோட்டில் நடைபெற்ற தென்னிந்திய செங்குந்தர் முதலாவது – சமூக மாநாட்டு – பொருட்காட்சியை திறந்து வைத்து உரை.
குடிஅரசு – சொற்பொழிவு – 20.01.1929