வேலூரில் பொதுக்கூட்டம்
“சகோதரர்களே! எவனோ ஒரு பைத்தியக்காரன் எங்கோ இருந்து சத்தம் போட்டுவிட்டால் அதற்காக நீங்கள் இத்தனை பேரும் எழுந்து அவன் மீது பாய்வது கொஞ்சமும் சரியான காரியமல்ல. யார் எந்தக் கேள்வி கேட் டாலும், என்ன ஆட்சேபனை சொன்னாலும், அவற்றிற்குப் பதில் சொல்லவும் ஆட்சேபனைகளை சமாளிக்கவும் எங்களுக்கு ஆற்றலிருக்கிறது என்று நீங்கள் கருத வேண்டுமேயொழிய எங்களுக்குச் சிபார்சுக்காக இத்தனை பேரும் சத்தம் போடுவது எங்களை அவமானப் படுத்தியதாகும் என்றும் அன்றியும் நமது எதிரிகளும் பார்ப்பனக் கூலிகளும் தங்கள் பத்திரிகையில் ‘வேலூர் கூட்டத்தில் பெரிய கலவரம்’ என்று பெரிய தலைப்பு கொடுத்து அற்பத் தனமாகவும் இழிதனமாகவும் பத்திரிகையில் எழுதுவதற்கு இடம் கொடுத்த தாகும் என்றும் எந்தக் கேள்வி யார் கேட்டாலும் என்ன விதமான காலித்தனம் யார் செய்தாலும் நாங்களே பார்த்துக் கொள்ளுகிறோம். நீங்கள் அமைதி யாயிருக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கூட்டத்தைக் கலைக்கும்படி அக்கிராசனரைக் கேட்டுக் கொள்ளுவேன்” என்றும் அதட்டியிட்டு உட்கார்ந் தார். உடனே கூட்டம் நிஸசப்தமாய் விட்டது. அந்த சமயத்தில் மறுபடியும் முன் சொன்ன பத்திரிகா நிரூபரின் தூண்டுதலால் ஒருநபர் சந்திலிருந்து கொண்டு ‘பத்திரிகைக்காரர்களை அயோக்கியர்கள் என்று சொன்னதை வாபீஸ் வாங்கிக் கொள்ள வேண்டு’மென்று சொன்னார். நாயக்கர் தன்னிடம் அந்த வழக்கமில்லை என்று சொல்லிவிட்டு மேலால் திரு.கண்ணப்பரை பேசும்படி கேட்டுக் கொள்ள அவர் முன் பேசியதை ஒட்டிப் பேசிவிட்டு, சமூக சம்மந்தமாக பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமங்களை நன்றாய் எடுத்துச் சொல்லி விட்டு உட்கார்ந்தார்.
பிறகு திரு.ஆரியா அவர்களைப் பேசும்படி கேட்டுக் கொள்ள அவர்களும் எழுந்து ஆவேசத்துடன் பேசினார். இந்த சமயத்தில் கூட்டத்தில் இரு சிறு கற்கள் வந்து விழுந்தன. இதை யாரும் லட்சியம் செய்யாமல் இருக்க வேண்டுமென்று திரு.நாயக்கர் கேட்டுக் கொள்ளவே அமைதி ஏற்பட்டது. பிறகு ஆரியா அவர்கள் பேச்சு முடிந்ததும் அக்கிராசனர் திரு.தண்டபாணி பிள்ளை “கேள்வி கேட்கிறவர்கள் கேட்கலாம்” என்று சொன்னதும், ஒருவர், தாம் இரண்டே கேள்விகள் கேட்பதாகச் சொன்னார். உடனே திரு.நாயக்கர் அவரை பக்கத்தில் வரும்படி சொல்லி அழைத்து வந்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு பொது ஜனங்களைப் பார்த்து, “சகோதரர்களே! இவர் கேட்கப் போகும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுகிறேன். நீங்கள் யாரும் இவரைப் பரிகாசம் பண்ணவோ, கைதட்டவோ, சிரிக்கவோ கூடாது என்று கண்டிப்பாய்ச் சொல்லுகிறேன்” என்று சொல்லிவிட்டு “என்ன கேள்வி?” என்று கேட்டார். அக்கேள்வி கேட்க வந்தவர் சொன்ன பதிலாவது:-
“ஐயா, நான் உங்கள் ‘குடி அரசை’ப் படித்த நாள் முதற்கொண்டு என் வீட்டுக்கு எந்தவிதமான சுபாசுப காரியத்திற்கும் பார்ப்பனர்களைக் கூப்பிடுவதில்லை. பார்ப்பனர்களுக்குப் பிச்சையும் கொடுப்பதில்லை. இப்படியிருக்க உங்கள் தலைவர் பனகாலரசு இறந்து போன கருமாதிக்கு பார்ப்பனர்களை வைத்து நடத்தினார்களே, இது நியாயமா?” என்று கேட்டார்.
திரு.நாயக்கர், “அது நியாயமல்ல வென்று நானும் கருதுகிறேன். ஆனால், அந்தக் காரியத்திற்கு பனகால் அரசர் மீது பழி போடுவதற்கு நியாயமில்லை. அவர் இறந்த பிறகு அவர் வீட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து விடுதலை பெறாதவர்கள் செய்த காரியத்திற்கு யார் பொறுப்பாளியாயிருக்க முடியும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். அம்மாதிரி மூடப்பழக்க வழக்கங்களால் கட்டுப்பட்டுக் கிடப்பவர்கள் விடுதலை அடைய வேண்டுமென்றுதான் நாங்கள் இப்பொழுதும் பிரசாரம் செய்து வருகின்றோம். அன்றியும் யார் தங்களைத் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு மேலும் இம்மாதிரி நடந்து கொள்கிறார்களோ அவர் களை எல்லாம் நாங்கள் தாராளமாய் கண்டித்துத்தான் வருகின்றோம். உதார ணமாக, திருவாளர்கள் பாத்ரோ, தணிகாசலம் செட்டியார் முதலியவர் களையும் கண்டித்துத்தான் வந்திருக்கின்றோம்”
கேள்வி கேட்டவர் “இது சரி, திரு.பத்மநாப முதலியார் தன் வீட்டுக் கிரகப் பிரவேசத்திற்கு பார்ப்பனர்களைக் கொண்டு சடங்கு நடத்தலாமா” என்று கேட்டார்.
திரு நாயக்கர் “திரு. பத்மநாப முதலியார் கூட்டத்தில் இருப்பதால் அவர் பதில் சொல்ல வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஏனெனில் இக்கேள்விக்கு பதில் சொல்வதின் மூலம் திரு.முதலியார் அவர்களுக்கும் தனது குற்றம் தெரிய இடம் ஏற்படட்டும்” என்று சொல்லி திரு.முதலியாரை பதில் சொல்லும்படி கேட்டுக் கொண்டார். திரு.பத்மநாப முதலியார் எழுந்து தனக்கு பார்ப்பானை வைத்து நடத்த இஷ்டமில்லை என்றும் தனது மனைவியாரும் மற்றும் இரண்டொரு பெரியோரும் தன்னை நிர்ப்பந்தப் படுத்தினார்கள் என்றும் கண்களில் தண்ணீர் விட்டு அழுதார்கள் என்றும் அதைப் பார்த்துதான் மனமிளகி அவர்களிஷ்டப்படி விட நேர்ந்ததென்றும் தனக்கு பார்ப்பான் உயர்ந்தவன் என்பதிலாவது பார்ப்பானைக் கொண்டு சடங்கு செய்யவேண்டும் என்பதிலாவது நம்பிக்கையில்லை யென்றும் சொன்னார்.
உடனே திரு.நாயக்கர் திரு.முதலியார் அவர்களைப் பார்த்து “ நீங்கள் இந்தக் கூட்டத்தில் ஆஜரில்லாத சகோதரிகள் மீது குற்றம் சுமத்துவது தர்மமல்ல” வென்று சிரித்துக் கொண்டே சொன்னார். திரு.முதலியார் அப்படியானால் தாங்கள் எங்களுக்கு மாத்திரம் உபதேசம் செய்வதில் பலனில்லை, ஸ்திரீகளுக்கும் இந்த விஷயத்தை எடுத்துச்சொல்லி அவர்களையும் திருத்தவேண்டுமென்று சொன்னார். திரு.நாயக்கர் அப்படியே ஆகட்டும், அவர்களுக்காகவே நாளை ஒரு மீட்டிங்கு ஏற்பாடு செய்யுங்களென்று சொன்னார். அந்தப்படியே செய்வதாக பலர் வாக்களித்தார்கள். நிற்க கேள்வி கேட்டவர் “ திரு.நாயக்கர் சீதையை தட்டுவாணி என்று சொல்லலாமா? தசரதனையும் ராமனையும் கெட்டவர்கள் என்று சொல்லலாமா? என்று கேட்டார்.
திரு.நாயக்கர், நான் சீதையைத் தட்டுவாணி என்று சொல்லவில்லை என்றும். ஆனால், சீதை “பதிவிரதை” அல்ல என்று சொல்லியிருப்பதாக தனக்கு ஞாபகமிருப்பதாகவும். அதுவும் அந்தப் புராணக்காரர்களும் தர்ம சாஸ்திரத்தில் பதிவிரதைக்கு என்னென்ன நிபந்தனைகள் விதித்திருக் கின்றார்களோ அந்த நிபந்தனைப்படிக்கு சீதையை பதிவிரதைகளில் ஒன்றாகச் சேர்க்க முடியவில்லை என்று ‘குடி அரசில்’ எழுதியிருந்தது உண்மை என்றும் அதற்கு உதாரணம் சீதை தன் புருஷனாகிய ராமனைப் பார்த்து “என்னை நீ கண்டவர்களுக்குக் கூட்டிக் கொடுக்கப் பார்க்கிறாயா” என்றும் “உனக்கு பெண்டாட்டியை வைத்து வாழ ஆண்மையில்லையா” என்றும், தனது கொழுநனான லட்சுமணனை எதிர்த்துப் பேசி, ‘என் புருஷனை சாகவிட்டுவிட்டு என்னை நீ பெண்டாளலாமென்று நினைக் கிறாயா’ என்றும் கேட்டதினாலும், காட்டில் கொண்டுபோய் விட்ட காலத்தில் தன்னைப் பற்றித் தன் புருஷன் சந்தேகப்படக் கூடாது என்று கேட்டுக் கொள்ளும்போது தனது கெர்ப்ப வயிற்றை தன் கொழுநனுக்கு காட்டி தன் புருஷனை அவ்வளவு மோசமாக நினைத்திருப்பதாலும் சீதையை பதிவிரதைகளில் சேர்க்க முடியாமல் போய் விட்டதே ஒழிய வேறில்லை என்றும் சொன்னார்.
வேறொரு பட்டை ராமக்காரர், “இதெல்லாம் எங்கிருக்கின்றது” என்று கேட்டார்,
நாயக்கர் “வால்மீகி ராமாயணத்தில் இருக்கின்றது” என்று சொன்னார்.
மற்றும் “தசரதன் எப்படிப்பட்டவன்” என்று கேட்க திரு.நாயக்கர்,
“தசரதன் தனக்கு பல பெண்கள் இருந்தும் மறுபடியும் கைகேயியை கட்டிக் கொள்ள ஆசைப்பட்டபோது கைகேயியின் தகப்பனாராகிய கேகய மன்னன் தசரதனைப் பார்த்து, உனக்கு ஏற்கனவே பல பெண்கள் இருப்பதால் மறுபடியும் பெண் கொடுக்க முடியாதென்றும் அப்படிக் கட்டாயமாக வேண்டுமென்றால் என் பெண் வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கு பட்டம் கொடுப்பதாய் சத்தியம் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை கேட்க, அதற்கு தசரதன் கட்டுப்பட்டு உறுதி கூறி கைகேயியை மணந்து கைகேயி வயிற்றில் பிறந்த குழந்தைக்கு பட்டம் கொடுக்காமலும், அதற்குத் தக்க சமாதானமாவது பரதனுக்கோ கைகேசிக்கோ சொல்லாமலும், பரதன் ஊரில் இல்லாதபோது ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய நிச்சயித்ததும், ராமனும் இந்த விஷயங்களைத் தெரிந்திருந்தும் தன் தகப்பனாருக்கு நியாயத்தை எடுத்துச் சொல்லி யோக்கியமாய் நடந்து கொள்ளும்படி செய்யாமலும், பட்டம் கட்டிக் கொள்ள சம்மதித்ததுமான காரியங்களால் இவர்கள் இருவரை யும் அயோக்கியர்கள் என்று சொல்லாவிட்டாலும் யோக்கியர்கள் என்று சொல்ல முடியாது என்றும் சொன்னார். உடனே அந்த பட்டை நாமக்காரர்.
‘இந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்’ என்று கேட்டார். திரு. நாயக்கர்.
வால்மீகி ராமாயணத்தில் ஆரணிய காண்டத்தில் ராமனே பரதனுக்குச் சொல்லுகின்றதாகவும் வால்மீகி சொன்னதாக வால்மீகி ராமாயணத்தில் இருக்கின்றது என்றும் சொன்னார். உடனே அந்த கேள்வி கேட்டவர், ‘ஆரண்யகாண்டம்’ என்பதைக் குறித்துக் கொண்டார். பட்டை நாமக்காரர். நீங்கள் ஏன் ராமன் என்கின்ற பெயர் வைத்துக் கொண்டீர்கள் என்று கேட்டார்.
திரு.நாயக்கர் “ராமன் என்கின்ற பெயர் ராமாயண ராமனுக்கு மாத்திரம் சொந்தமல்ல என்றும் ராமனுடைய பெற்றோர்களுக்கு தம் மகனுக்கு ராமன் என்கின்ற பெயர் வைக்க எவ்வளவு சுதந்திரம் உண்டோ அவ்வளவு சுதந்திரம் தனது பெற்றோர்களுக்கு உண்டென்றும் ராமன் என்றால் மிக்க அழகானவன் என்றுதான் அர்த்தம் செய்யப்படுகின்றது என்றும் தான் ராமனைவிட அழகானவன் என்று என் பெற்றோர்களுக்கு தோன்றியதால் அந்த ராமனுக்கும் மேலாக என்னைக் கருதி ராமசாமி (அதாவது ராமனுக்குச் சாமி) என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்றும் அதை மறுக்க வேண்டிய அவசியம் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.” என்றும் சொன்னார். உடனே எல்லோரும் கை தட்டி சிரித்தார்கள்.
திரு.நாயக்கர் மறுபடியும் கூட்டத்தைப் பார்த்து கண்டித்து எல்லோரும் அமைதியாயிருக்க வேண்டும் என்றும் யாரும் யாரையும் பரிகாசம் செய்யக் கூடாதென்றும் கேள்வி கேட்க வருகின்றவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்களை அன்பாய் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் எந்த எண்ணத்தின் மீது கேட்டாலும் அதை நாம் நல்ல எண்ணமாகவே கருதி நல்லவிதமாய் உபயோகித்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். உடனே கூட்டத்தில் ஒருவன் நொண்டிக் கொண்டு வந்து “இதுதான் அன்போ! இப்படி என்னை அடிக்கலாமா? இது நியாயமா” என்று கேட்டார். அதற்கு திரு. நாயக்கர் “நீங்கள் அடிபட்டதற்கு நான் வருந்து கின்றேன் என்றும் அடித்தவர்களையும் நான் கண்டிக்கின்றேன் என்றும் அடிபட்டதாக தயவு செய்து இனிமேல் வெளியில் சொல்லிக் கொள்ளாதீர்கள்” என்றும் சொன்னார். மறுபடியும் அவர் தன்னுடைய கைத்தடியை யாரோ பிடிங்கிக் கொண்டு போய்விட்டதாகவும் சொன்னார்.
திரு.நாயக்கர், அவர் கை பிரம்பை எடுத்தவர்கள் கொடுத்து விட வேண்டுமென்று சொன்னார். இந்த நபர்தான் முன் சொன்ன பத்திரிகை நிரூபரின் தூண்டுதலால் சத்தம் போட்டவர் என்று தெரியவந்தது.
குறிப்பு: 05.01.1929 ஆம் நாள் வேலூர் கோட்டை மைதானத்தில் வடஆர்க்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாடு நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு – சொற்பொழிவு – 20.01.1929