வட ஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவது மகாநாடு
சகோதர சகோதரிகளே, நமது நண்பரும் சகோதரருமான திரு. ஆரியா அவர்களால் துவக்கப்பட்ட இந்த பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கமானது இப்போது நமது நாடு முழுவதும் ஏற்பட்டு பெருத்த கிளர்ச்சி செய்து வருகின்றது.
எனது இயக்கத்தையும் தொண்டையும், எனது உடல் நலிவும் சரீரத் தளர்ச்சியும் எதிரிகள் தொல்லையும் ஒரு சிறிதும் தடை செய்ய முடியாமல் என்னை மேலு மேலும் உற்சாகப்படுத்தி வெற்றிக் கொடியை நாட்டி வருவதற்குப் பெரிதும் உதவியாய் இருந்து வருவது இந்த வாலிப இயக்கமே யாகும். உண்மையிலேயே இப்போதைய வாலிபர்களிடம் எனக்கு அளவுக்கு மேற்பட்ட நம்பிக்கை இல்லாதிருந்திருக்குமானால் என்னுடைய கடையை வெகுநாளைக்கு முன்பே சுருட்டிக் கட்டிக் கொண்டு வேறு ஏதாவது ஒரு துறையில் மூழ்கி இருப்பேன். ஆதலால் இந்த வாலிப இயக்கம்தான் நமது நாட்டிற்கு மாத்திரமல்லாமல் வெளிநாட்டிற்கும் சுதந்திரமும் விடுதலையும் சுயமரியாதையும் வாங்கிக் கொடுக்கப் போகின்றது. எப்படி எனில், எந்த ஒரு நாட்டிற்கும் அரசியல் தலைவனோ, தேசீயத் தலைவனோ, மதத் தலைவனோ, பாஷைப் பண்டிதனோ, சாஸ்திரியோ முயற்சித்து உண்மையான சுதந்திரமோ, விடுதலையோ வாங்கிக் கொடுத்ததாக சரித்திரக் காலந்தொட்டு நமக்கு ஆதாரங்கள் கிடையாது. எங்கும் வாலிபர் கிளர்ச்சிதான் விடுதலை அளித் திருக்கின்றது. ஒவ்வொரு விடுதலை முயற்சியும் முதலில் கட்டுப்பாட்டை உடைத்தெறிந்த பின்தான் வெற்றி பெற்றிருக்கின்றது. கட்டுப்பாடுகளை உடைப்பதற்கு வாலிபர்களால்தான் முடியுமே ஒழிய மற்றவர்களால் சுலபத்தில் சாத்தியப்படாது. ஆதலால் நான் முழுவதும் இந்த வாலிபர் களையே மனப்பூர்வமாக நம்பி இருக்கின்றேன். அவர்கள் இயக்கமும் கிளர்ச்சியும், வெகு சீக்கிரத்தில் உலகை நடத்த முன்வர வேண்டும் என்றும் ஆசைப்பட்டுக் கொண்டு இம்மகாநாட்டைத் திறக்கின்றேன்.
குறிப்பு : 4.1.1929 இல் இராயவேலூரில் நடைபெற்ற வட ஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவதுமாநாட்டைத் திறந்துவைத்து உரை
குடி அரசு – சொற்பொழிவு – 13.01.1929