தென்காசியில் பார்ப்பனர்கள் ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் கதவடைப்பும்
தென்காசி சிவன் கோவிலில் பார்ப்பனர்களின் வேத பாராயணத் தைப் போலவே தமிழ் மக்களின் தேவாரப் பாராயணமும் செய்யப்பட வேண்டும் என்பதாகக் கருதி தேவாரப் பாராயணம் ஆன பிறகு பிரசாதம் கொடுக்கப்பட வேண்டும் என்று தேவஸ்தான போர்டாரும் கமிட்டியாரும் தர்மகர்த்தாக் களும் உத்திரவு போட்டதினால் அப்பேர்ப்பட்ட சுவாமி தெரிசனமும் பிரசாதமும் தங்களுக்கு வேண்டியதில்லை என்று சொல்லி அதோடு ஒத்துழையாமையும் பஹிஷ்காரமும் செய்து அவ்வூர் பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று கூடி பார்ப்பன ஸ்ரீகள், புருஷர்கள், குழந்தை குட்டிகள் சகிதம் யாரும் அக் கோவிலுக்குப் போகக் கூடாது என்றும், சுவாமியை தரிசிக்கக் கூடாதென்றும் பரிசாரகம் முதலிய வேலையைச் செய்யக் கூடாது என்றும், சுவாமி தங்கள் வீதிக்கு எழுந்தருளி வந்தாலும் ஒவ்வொரு பார்ப்பனரும் வீதி தெருக் கதவை அடைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் செய்து கொண்டு அந்தப்படி அமுலிலும் நடத்தி வருகிறார்கள் என்கின்ற விபரம் அறிய மிகவும் சந்தோஷமடைகிறோம். ஏனெனில் பார்ப்பனர்கள் பஹிஷ் காரம் செய்த வேலைகளை ஆதி சைவ குருக்கள் பட்டமார்களைக் கொண்டு கோவிலதிகாரிகள் வேலை வாங்கி வருகிறார்கள். இது போலவே மற்ற ஊர்களிலும் உள்ள பார்ப்பனர்களும் மற்ற கோவில்களோடும் சுவாமிக ளோடும் ஒத்துழை யாமையும் பஹிஷ்காரமும் செய்து விடுவார்களேயானால் நமது தெய்வங் களைப் பிடித்த சனியனும் நமது மதங்களைப் பிடித்த கிரகங்களும் அடி யோடு ஒழிந்து யோக்கியமானதும் உண்மையானதுமாக விளங்கும்.
குடி அரசு – கட்டுரை – 12.12.1926