சர். செட்டியாரும் டாக்டர் அம்மையாரும்
ஒத்துழையாமையின் போது ஜயிலுக்கு ஜனங்கள் போய்க் கொண்டி ருந்ததை ஒப்புக்கொள்ளாத ஸர்.பி. தியாகராய செட்டியார் ஜயிலுக்குப் போன ஸ்ரீமான் எஸ்.ராமநாதன் அவர்களுக்கு பிரத்தியேக சௌகரியம் செய்து கொடுக்க சம்மதிக்கவில்லையாம். இது குற்றமல்ல வென்று கஷ்டப்பட்ட ஸ்ரீமான் எஸ்.ராமநாதனே ஒப்புக்கொண்டாலும், மறைந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நமது பிராமணர்களுக்கு ஸர்.செட்டியார் “டயராய்” விட்டார். அவருடைய கக்ஷி தேசத்துரோக கக்ஷியாய்ப் போய்விட்டது. ஆனால் பஞ்சாப் படுகொலையானபோது ஸ்ரீமதி பெசண்டம்மையார் “ஜலி யன் வாலாபார்க்கில் நிரபராதிகளை டயர் சுட்டது சரி; இவர்கள் கல்லு போட் டார்கள்; அதற்கு டயர் குண்டு போட்டார்; இதிலொன்றும் தப்பில்லை” என்று சொன்னார். அதைப்பற்றி கேள்ப்பாரில்லை. அவருடனும் அந்தம்மாள் கக்ஷியிலும் அநேக பெரிய “மதிப்பு வாய்ந்த” பிராமணர்கள் சூழ்ந்து கொண்டு சபை நடுவிலிருத்தி ஆட்டத்துக்குத் தகுந்த தாளம் போடுகிறார்கள். ஏன்? அந்தம்மாள் பிராமணர்களுக்கு அநுகூலமாய் இருந்துகொண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாது என்கிறார். தனக்குள்ள செல்வாக்கை பிராமணர்களுக்கு உத்தியோகங்கள் வாங்கிக் கொடுப்பதிலும் அதற்குத் தகுந்த திட்டம் போடுவதிலும் சிலவிடுகிறார். அல்லாமலும் ஜலியன் வாலா பார்க்கில் குண்டுபட்டு இறந்த குழந்தைக் குட்டிகளும் அவமானப்படுத்தப் பட்ட பெண்களும் ஏறக்குறைய எல்லோரும் பிராமணரல்லாதவர்கள். ஆதலால், அந்தம்மாளுக்கு பிராமண அநுசரணை தாராளமாய் இருக்கிறது. அப்படி இல்லாததால் ஸர். செட்டியாருக்கு பிராமணர்களைத் தவிர பிராமண ரல்லாதாரிலும் சில துரோகிகள் இருக்கிறார்கள். என்னே காலத்தின் கோலம்.
குடி அரசு – செய்தி விளக்கம் – 18.04.1926