நாகைத் தொழிலாளர் சங்கம்
நாகை தென்இந்திய ரயில்வே தொழிலாளருக்கும் ³ ரயில்வே அதிகாரிகளுக்கும் நாகையை விட்டு பொன்மலைக்கு தொழிலாளர் குடிபோக வேண்டிய விஷயமாய் ஏற்பட்ட சிறு தகராறு தீர்ந்து விட்டதாகத் தெரிந்து சந்தோஷமடைகிறோம். ஆனாலும் மத்தியஸ்த தீர்ப்பினால் தொழிலாளருக்கு எவ்வித லாபமும் சவுகரியமும் ஏற்பட்டிருப்பதாய்ச் சொல்ல கொஞ்சமும் இடமில்லை. தொழிலாளர்களுக்கு வெகு காலமாக இருக்கும் சுதந்திரங்களை ரயில்வே அதிகாரிகள் பிடுங்கிக் கொள்வதாய்ச் சொன்னதில் மத்தியஸ்தர் வந்து பிடுங்கிக் கொள்வது சரியல்லவென்று சொல்லி விட்டதினால் தொழிலாளருக்கு லாபம் என்ன? இத்தகராறு ரயில்வேக்காரர்கள் முன் யோசனையின்மேல் செய்த கெட்டிக்காரத்தனமான தந்திரமே அல்லாமல் வேறல்ல. ஏனெனில் வெகு காலமாய் வீடு வாசல் களுடன் வாழ்ந்து வந்த தொழிலாளர்களை ஊரைவிட்டு வேறு ஊருக்கு வாருங்கள் என்று கூப்பிட்டால் யாருக்கும் வர இஷ்டமிருக்காது என்பதை உணர்ந்தும் இதற்காக ஏதாவது அதிகப்படியான சுதந்திரங்கள் கேட்பார்கள் என்று எண்ணியே முன் ஜாக்கிரதையுடன் ஏற்கனவே இருக்கிற சுதந்திரத்தை யும் பிடுங்கிக் கொள்வோம் என்று சொன்னால் மத்தியஸ்தத்திற்கு வருகிற வர்கள் அப்போது “அதிக சுதந்திரமும் வேண்டாம்; இருக்கிற சுதந்திரங்க ளையும் பிடுங்கிக் கொள்ள வேண்டாம்” என்று பைசல் செய்து விடுவார்கள் என்று செய்ததுவே தவிர வேறில்லை. ஆனபோதிலும் தொழிலாளர்கள் கண்ணியமுடன் ஒப்புக் கொண்டது மிகவும் பாராட்டத்தக்கதே. ஆனாலும் தொழிலாளர்கள் கட்டுப் பாட்டுடன் இருந்து தங்களது கிரமமான நன்மை களையும் பிரதிநிதித்துவங்களையும் பெருக்கிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும். நமது மாகாணத்தில் உள்ள தொழிலாளர் சங் கங்களிலெல்லாம் நாகை தொழிலாளர் சங்கமே கூடியவரை உண்மையான சங்கமென்றே சொல்லலாம். அது மற்ற சென்னை முதலிய சங்கங்களைப் போல் ‘தலைவர்களின்’ நலத்திற்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் ஆயுத மாயிராமல் தங்கள் காலிலேயே நிற்கத் தகுந்த யோக்கியதையை அடைந் திருப்பதைப் பற்றி மிகுதியும் பாராட்டுகிறோம். அதற்குத் தலைவராக தொழிலாளர்கள் தங்களுக்குள் ஒருவரையே தெரிந்தெடுத்துக் கொண்டது அச்சங்கத்தின் முற்போக்குக்கும் நமது மாகாணத்தில் அதுவே ஆதிக்கம் பெற்ற சங்கமாகப் போகிற தென்பதற்கும் அறிகுறியாகும். இனியும் அச்சங்கம் அரசியல் சூழ்ச்சியிலிருந்தும் முழுதும் விடுபட்டுவிட்டால் அதனால் நமது மாகாணத்து மற்ற தொழிலாளர் சங்கங்கள் எவ்வளவோ பயனடையத்தக்க மாதிரிக்கும் பின்பற்றத்தக்க மாதிரிக்கும் வந்துவிடும் என்றும் உறுதி கூறுவோம். அதன் நிருவாகஸ்தர்களும் தங்களுக்குள் ஏதாவது சிறு அபிப்பிராய பேதங்கள் இருந்தால் அதை தொழிலாளர்கள் நன்மைக்காக விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் உழைத்து தொழிலாளர் உலகத்துக்கு நன்மை செய்யுமாறு வேண்டுகிறோம்.
குடி அரசு – கட்டுரை – 21.11.1926