நமது பார்ப்பனர் “இரட்டை ஆட்சி” யைக் கொல்ல முயல்வதின் இரகசியம்
“இரட்டை ஆட்சி”யென்றால் என்ன என்பது நமது ஜனங்களில் அனேகருக்குத் தெரியாதென்றே சொல்லவேண்டும். இரட்டை ஆட்சியைத் தகர்க்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் சொல்லும்போது பார்ப்பனரல்லாத பாமர மக்களும் அரசியல் நடை முறையினை அறியாத பல காங்கிரஸ்காரர், பிரசாரகர் என்று சொல்லிக் கொள்பவரும், இரட்டை ஆட்சி என்பதை ஒரு இராணுவ ஆட்சியென்றும் வெள்ளைக்காரரே நேரிலிருந்து செய்யப்படும் காரியமென்றும் இதை ஒழித்துவிட்டால் அரசாங் கம் நம் கைக்கே வந்துவிட்டதென்றும் நினைத்துக் கொண்டு, கூடவே ஒத்துப் பாடுகிறார்கள். இரட்டை ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்று சொல்லுகிற பார்ப்பனர்கள் இரட்டை ஆட்சியை ஒழித்த பிறகு என்ன செய்வதென்று இது வரையில் ஒரு வார்த்தையும் சொல்லவேயில்லை. பார்ப்பனர்களுக்கு விபூஷ ணாழ்வார் போல் விளங்கின தேசபந்து தாஸரவர்கள் இரட்டை ஆட்சியை ஒழித்த பிறகு என்ன செய்வதென்று சொல்லவேண்டிய அவசியமேற்பட்ட காலத்தில் விண்ணவர்க்கு விருந்தினராகி விட்டார். ஆதலால் இரட்டை ஆட்சி என்ன வென்பதும், அதை அழித்த பிறகு என்ன செய்ய வேண்டு மென்பதும் பாமர ஜனங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமான விஷயமாகும்.
தமிழ்நாட்டுப் பார்ப்பனக் கூட்டத்தினரது தந்திரத்தின் சாமர்த்திய மானது நமது பார்ப்பனரல்லாதார் இரட்டை ஆட்சியின் தத்துவம் தெரியா மலே அதை ‘அழிக்கிறேன்’ என்று சொல்லுகிறவர்களின் பின்னால் திரியவும் அவர்கள் ஆட்டுவிக்கிறபடி ஆடவும் குழந்தைகள் போலும், “சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை” என்பது போலும் நடந்து கொள்ளுகிறார்கள். இரட்டை ஆட்சி என்பதன் பொருள் 35-வருஷ காங்கிரஸ் கேட்டுக் கொண்ட தற்கிணங்க சர்க்காரால் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு ‘உரிமை’ (பதவி) என்பது பொருள். அஃதாவது “சுயஆட்சி செலுத்த இந்திய மக்களாகிய நாங்கள் தயாராகி விட்டோம். ஆதலால் அரசாங்கத்தின் பொறுப் பை எங்கள் வசம் ஒப்புவித்து விடுங்கள்” என்று நம்முடைய தலைவர்கள் என்போர் சர்க்காரை விண்ணப்பம் மூலமாய்க் கேட்டுக் கொண்டதால், அதாவது ஸ்ரீமதி பெசண்டம்மையாரின் ஆதிக்கத்திலிருந்த காங்கிரஸின் போது ‘19 பேர் விண்ணப்பம்’ என்று சொல்லப்பட்ட நமது பிரதிநிதிகளான ‘தலைவர்கள்’ ஒன்று கூடி யோசித்துத் தீர்மானஞ் செய்து எழுதி அதில் 19 இந்திய ‘தலைவர்’ கள் கையெழுத்துப் போட்டனுப்பியதும், மாண்டேகு துரை மகனார் இந்தியாவிற்கு வந்த காலத்தில் அவரிடம் சமர்ப்பிப்பதின் பொருட்டு பத்து லக்ஷக்கணக்கான பாமர மக்களிடம் கையெழுத்து வாங்கி சமர்பித்த விண்ணப்பத்திலும் கண்ட விஷயங்களேயாகும். இம்மாதிரி கையெழுத்து வாங்க யோசனை கூறியவருள் நமது மகாத்மா காந்தியடிகளும் ஒருவராகும். மாண்டேகு துரையிடம் ‘நமது தலைவர்கள்’ சாக்ஷியம் கூறியபோது, “சில அதிகாரங்களை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள், சில அதிகாரங்களை எங்க ளுக்குக் கொடுங்கள்” என்று சொன்னவையே இரட்டை ஆட்சிக்கு ஆதார மாகும். சர்க்காருக்கு இந்தத் தலைவர்கள் வார்த்தையில் நம்பிக்கையில்லா விட்டாலும், “ஏதோ கொஞ்சம் கொடுத்துப் பார்ப்போம், கொடுக்கப்படும் கொஞ்சத்தையும் இவர்கள் சரியாய் நடத்தாமல் கெடுத்து விட்டால் என்ன செய்கிறது?” என்ற பயத்தின் பேரில் அவர்களுக்குக் கொடுக்கும் அதிகாரத் திலும் தங்களுக்குக் கொஞ்சம் ஆதிக்கமிருக்க வேண்டுமென்னும் கருத் தோடு, “மேற்பார்வை பார்க்கும்” அதிகாரத்துடன் சில இலாக்காக்களின் நிர்வாகத்தை பொதுஜனங்களுக்கு கொடுத்திருப்பதும், சில இலாக்காக்களைத் தாங்களே வைத்துக்கொண்டு இருப்பதும் ஆகிய இந்த இரண்டு நிர்வாகத் திற்குமே ‘இரட்டை ஆட்சி’ என்று பெயர். இது நமது காங்கிரஸ் தலைவர்கள் சர்க்காரைக் கேட்டுக்கொண்ட தத்துவப்படியே கொடுக்கப்பட்டிருக்கிறதே யல்லாமல் சர்க்கார் இஷ்டப்படி கொடுக்கப்பட்டதல்ல. இதை நமது காங்கிரஸ் காரர்களும் ஏற்றுக் கொண்டதுதான். ஆனால், இது போதாது ( ஐயேனநளூரயவந) என்பதாக மட்டும் சொன்னார்களே தவிர இரட்டை ஆக்ஷித் தத்துவமே கூடாது என்று இதற்கு முன் எப்போதும் சொல்லப்படவேயில்லை. இப்போது ‘தலைவர்கள்’ கான்பூர் காங்கிரஸின் பிரகாரம் கேட்கும் சுயராஜ்யத் திட்டத் தில் சர்க்காருக்கு ஒருவித அதிகாரமுமின்றி முழுப்பொறுப்பையும் கொடுக் கும்படி எவரும் கேட்கவில்லை. இராணுவம், போலீஸ், பொது ஜனங் களின் பத்திரம், சமாதானம், ஒழுங்குமுறைகள் ஆகியவைகளின் பொறுப்பை சர்க்காரே வைத்துக்கொள்ள வேண்டுமென்றுதான் சொல்லிக்கொண்டு அவை நீங்கலாக மற்றவைகளை கொடுக்கும்படி கேட்கிறார்களே தவிர வேறில்லை. இன்னும் இப்போது வர வர நீதி நிர்வாக இலாக்காக்களையும் சர்க்காரே வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் இந்திய சட்டசபையில் தமிழ் நாட்டுப் பிரதிநிதி சொல்ல ஆரம்பித்துவிட்டார். அல்லாமலும் இரட்டை ஆட்சியில் மந்திரிகளுக்குள்ள அதிகாரத்தின் மேல் சர்க்காருக்கு ஆதிக்கம் வேண்டுமெனச் சொல்லி இந்திய சட்டசபையிலிருக்கும் ஒரு சென்னை பிரதிநிதி கூறி வாதாடியிருக்கிறார். இந்த நிலைமையில் இரட்டை ஆட்சியை ஒழிக்க வேண்டுமென்று சொல்வதன் பொருள் என்ன? இதன் இரகசியம் என்னவென்பதை அறிய வேண்டாமா?
அதாவது, இரட்டை ஆட்சியைக் காங்கிரஸ் கேட்கும் போதும் ‘19 பேர்’ கையெழுத்துப் போடும் போதும் அதற்காக கிராமம் கிராமமாய் சென்று பாமர மக்களிடம் கையொப்பம் வாங்கும் காலத்திலும் நமது ‘தலைவர்களான’ பார்ப்பனர்களுக்கு பார்ப்பனரல்லாதார் கட்சி ஒன்று முளைக்குமென்றாவது, முளைத்தாலும் தம்மை மீறி மற்றவர்களால் ஓட்டர்கள் ஏமாற்றப்பட்டு அது செல்வாக்குப் பெறுமென்றாவது, அதன் பலன் முற்றிலும் பார்ப்பனர்களே அடைய முடியாது போகுமென்றாவது அவர்களுக்கு அதுபோழ்து தோன்ற வேயில்லை. ஆதலால் இதன் பலனாய் ஏற்படும் அதிகாரங்கட்குக் கொழுத்த சம்பளங்களனைத்தையும் தாங்களும் தங்கள் பிள்ளை குட்டிகளும் இனத்தார் களுமே அடையலாமென்ற பேரவாவுடன் தீர்மானித்திருந்தனர். இவ்வளவு கொழுத்த பணத்தையும் அதிகாரத்தையும் பார்த்த பின்னர் இப்போது பார்ப்பனரல்லாதார் இயக்கம், மகமதியர் இயக்கம், கிறிஸ்துவர் இயக்கம், தாழ்த்தப்பட்டவரியக்கம், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ இயக்கம் என இத்தகைய பல இயக்கங்கள் இதன் பயனாகத் தோன்றவும், இவ்வதிகாரங் களும் சம்பளமும் பார்ப்பனர்களுக்கு முழுமையும் கிடைக்காமல் பல வழி களில் பிரியவும், பல வகுப்புகளுக்குப் போகவும், அதனால் பார்ப்பனர் களுக்கு ஏமாற்றமேற்பட்டதால், இப்பொழுது பார்ப்பனர்கள் விழித்துக் கொண்டு “முழு அதிகாரங்களும் வெள்ளைக்காரர்களிடமேயிருக்க வேண்டுமேயொழிய, இந்திய மக்கள் கைக்கு வரக்கூடாது; வந்தால் அதற்கு முன் நமக்கு கிடைத்துக் கொண்டிருந்த உத்தியோகங்கள் கூட இப்போது கிடைப்பதற்கில்லாமல் பல வகுப்புகளுக்குப் போய்விடுகிறதென்றும், மற்ற வகுப்பாரும் தங்கள் வகுப்பினருக்குச் சமானமாய் வருவதற்கு வழியேற் பட்டுப் போகிறது” என்றும் நினைத்தே இப்பொழுது ஜனங்களுக்குக் “கொஞ்சமாவது கொடுத்திருப்பதாய்”ச் சொல்லப்படும் அதிகாரத்தையும் வெள்ளைக்காரரே எடுத்துக் கொள்ளவேண்டுமென்று கிளர்ச்சி செய்ய இரகசியத்தில் தீர்மானித்துக் கொண்டனர்.
எனவே, இப்போதுள்ள இரட்டை ஆட்சி ஒழிய வேண்டிய அவசியம் நமது பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டு விட்டது. கல்கத்தாவில் இரட்டை ஆட்சியை ஒழித்ததற்கு அவசியமாய் நின்ற காரணம், அங்கு மகமதியர்கள் மந்திரி பதவிக்கு வந்துவிட்டதாலும்; சென்னையில் இரட்டை ஆட்சியை ஒழிக்கவேண்டிய காரணம் இங்கு பார்ப்பனரல்லாதார் மந்திரி பதவியை வகித்திருப்பதாலுமேயல்லாமல் வேறல்ல. மத்திய மாகாணத்தில் இரட்டை ஆட்சியை ஒழித்த காரணம் அங்குள்ள ஒரு வகுப்புப் பார்ப்பனர்களுக்கு அதிகாரமில்லாமல் போனதேயாகும். ஆகவே, கல்கத்தாவிலும் மத்திய மாகாணத்திலும் இரட்டை ஆட்சியை ஒழித்தாகி விட்டது; மகம்மதியரையும் பார்ப்பனரல்லாத மந்திரிகளையும் வீட்டுக்கனுப்பியாகி விட்டது; இனி தமிழ் நாட்டில் ஒழிக்க வேண்டியதுதான் பாக்கியாயிருக்கிறது.
இரட்டை ஆட்சியை ஒழித்த பார்ப்பனர்களின் வேலை யென்ன? முற்கூறிய இரண்டு இடங்களிலும் இரட்டை ஆட்சி அழிந்து முற்றும் சர்க்கார் ஆட்சியான ஒத்தை ஆட்சியாக மாறி விட்டது. சென்னையிலும் இரட்டை ஆட்சியை ஒழித்து விட்டதாகவே வைத்துக் கொள்ளுவோம்; மந்திரிகளை வீட்டுக்கனுப்பி விட்டதாகவும் வைத்துக் கொள்ளுவோம்; பிறகு இந்தப் பார்ப்பனர்கள் சாதிக்கப் போவதென்ன? வரி கொடாமைக்கு வருகிறார்களா? சட்ட மறுப்புக்கு வருகிறார்களா? தேசமே சட்டமறுப்புக்கு லாயக்கில்லை என்று காங்கிரஸிலேயே வெட்கமில்லாமல் தீர்மானித்து விட்டனர். தேச மக்களை சட்டமறுப்புக்கு தயார் செய்யும் வேலையும் காங்கிரசுக்கு இல்லை யென்று “அகில இந்திய தலைவர்” ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் மாயவரம் வாக்காளர் மகாநாட்டில் விளம்பரப்படுத்தி விட்டார். அதாவது “கான்பூர் காங்கிரஸ் திட்டமெல்லாம் சட்டசபை என்கிற ஒரு அம்சந்தான்” என்று சொல்லிவிட்டு, அதில் நம்பிக்கையில்லாதவர்கள் -தீவிர ஒத்துழையாதார்கள் -ஒதுங்கிக் கொள்ளலாம் என்று உத்திரவும் பிறப்பித்து விட்டார். (இவ் விஷயம் 23-6-26 ² ‘சுதேசமித்திரன்’ பத்திரிகை 7-ம் பக்கத்தில் வெளிவந்திருக்கிறது.)
ஆகலான், எதற்காக இரட்டை ஆட்சியை ஒழிப்பது? பனகால் ராஜாவும், பாத்ரோவும், சிவஞானமும் பதவி வகிக்கும் இரட்டை ஆட்சியை ஒழிப்பதற்கு வேலை செய்வதற்குப் பதிலாய், ஸ்ரீமான் சர்.சி.பி. இராமசாமி ஐயர் வகித்துவரும் ஒத்தை ஆட்சி ஏன் ஒழியக் கூடாது? அதைப்பற்றி நமது பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையாவது பேசுவதேயில்லை. ஏன்? சர்.சி.பி.இராம சாமி ஐயர் வகித்திருக்கும் உத்தியோகம் இரட்டை ஆட்சியுமல்ல, ஒத்தை ஆட்சியுமல்ல; அது சுத்தமான – கலப்படமில்லாத பார்ப்பன ஆட்சி. அதன் பலனாய் பார்ப்பனர் உயர்ந்த ஜாதி என்பதை நிலை நிறுத்தவும் மற்றவர் தீண்டாத ஜாதி என்று ஒதுக்கவும் சகல உத்தியோகங்களும் பார்ப்பனரே அநுபவிக்கவும் மிக்க அநுகூலமாயிருக்கிறது. உதாரணமாக, இந்த வாரத்தில் 10 ஜில்லா ஜட்ஜி பதவியும், 10 ஜப் ஜட்ஜி பதவியும் கொழுத்த சம்பளமாகிய மாதம் 1000, 2000 ரூபாயில் சர்.சி.பி. இராமசாமி ஐயரால் வழங்கப்பட்டன. யாருக்கு? எல்லாம் பார்ப்பனருக்கு! ஒரு சமயம் அதிலும் இரட்டை ஆட்சி நுழைந்து விட்டால் இருபது ஜட்ஜி பதவிகளும் பார்ப்பனருக்கே கிடைக்குமா?
போலீஸ் இலாகாவில் சர்.சி.பி. இருப்பதால் “சர்வம் பார்ப்பன மயம் ஜகத்” என்பது போல எல்லா உத்தியோகங்களும் பார்ப்பனருக்கே வினியோ கிக்கப்படுகிறது. அதேபோல் நீதி இலாகாவிலும் சர்.சி.பி.இராமசாமி ஆட்சி இருப்பதால் ஜில்லா முனிசீபுகள் முழுதும் மாதத்திற்கு 20,30 “சர்வம் பார்ப்பன மயம் ஜகத்” என்று ஏற்படுகிறது. அல்லாமலும் பார்ப்பனப் பிள்ளைகள் படித்துவிட்டு உத்தியோகமில்லாமல் திண்டாடித் திரிவதால் அவர்களுக்கு வேலை கொடுப்பதற்காகவே ஒவ்வொரு தாலூகாவிற்கு இரண்டு மூன்று முனிசீப் கோர்ட்டுகளும், ஒவ்வொரு ஜில்லாவிற்கு இரண்டு, மூன்று, நான்கு ஜட்ஜி கோர்ட்டுகளும், அடிஷனல் ஜட்ஜி கோர்ட்டுகளும், சப் கோர்ட்டு களும் சிருஷ்டிக்க சர்.சி.பி.இராமசாமி பிர்ம்மாவாக விளங்குகிறார். இதன் பயன் என்ன? ஊரெங்கும் அக்கிரகாரத் தெருக்களிலுள்ள வீடுகள் தோறும் பார்ப்பன வக்கீல்களின் போர்டுகள் (கருப்புப் பலகை) தொங்கவும், இவர்கள் பிழைக்க ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாதார் தங்களுக்குள்ளாகவே ஒருவர் பேரில் ஒருவர் வழக்குத் தொடர்ந்து முட்டிக் கொள்ளவும், கைப் பணத்தை பார்ப்பனருக்கு அழுதுவிட்டு தலையில் கையை வைத்துக் கொண்டு போகவுமே ஏற்படுகிறது. இரட்டை ஆட்சியை ஒழிப்பதன் இரகசியம் பார்ப்ப னர் பிழைப்புக்கு வழி தேடுவதற்கேயல்லாமல் வேறொன்றும் அல்லவே யல்ல. அப்படிக்கில்லாதவரை இரட்டை ஆட்சியை ஒழித்து விட்டு, அதற்கு மேல் என்ன செய்வது என்பதைக்கண்டிப்பாய் சொல்லியிருப்பார்கள். இந்தப் பார்ப்பனரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்கள் பின்னால் வாலை ஆட்டிக் கொண்டு பார்ப்பனரல்லாதாரைப் பார்த்து குலைக்கும் கனவான்களையும் உண்மையிலேயே விஷயம் அறியாமல் எப்படியாவது ராஜீய வாழ்வில் தனது பெயர் அடிபட்டால் போதுமென்று நினைத்துத் திரிகிற அப்பாவிகளையும் நாம் ஒன்று கேட்கிறோம், இரட்டை ஆட்சியை எதற்காக அழிப்பது? அழித்து விட்டதன் மேல் என்ன செய்வது? இரட்டை ஆட்சியை அழித்து ஒத்தை ஆட்சி செலுத்தும் படி விட்டு விட்ட – விடப்போகிற – கிளர்ச்சி செய்வதை நிறுத்தி விட்டு ஒத்தை ஆட்சியே அழியும்படி செய்தாலென்ன? அல்லது இரட்டை ஆட்சியை அழிப்பது என்கிற வார்த்தையில் அரசியலில் எவ்விதத் திலும் இரட்டை ஆட்சியே கொஞ்சமும் கூடாது என்கிற கருத்து அதில் இருக்கிறதா? அப்படி இல்லையானால் சில அதிகாரங்கள் சர்க்கார் கையிலேயே இருந்துதானே தீரும்.
இரட்டை ஆட்சியை ஒழிக்க இந்திய சட்டசபைக்குப் போன ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியாரும் எ. அரங்கசாமி ஐயங்காரும் இந்திய சட்டசபையில் பேசியதின் அர்த்தமென்ன? இரட்டை ஆட்சியைப் பற்றி இவ்வளவு எழுதியதின் கருத்து இரட்டை ஆட்சியை நாம் ஒப்புக் கொள்ளுகிறோம் என்பதைக் காட்டுவதற்கு அல்ல. தற்காலம் நம்நாட்டில் அரசியல் தத்துவத்தில் இரட்டை ஆட்சிக்கும், ஒத்தை ஆட்சிக்கும், தற்கால உத்தியோக காங்கிரஸ் கோரும் பார்ப்பன ஆட்சிக்கும் யாதொரு வித்தியாசமே இல்லையென் பதோடு பார்ப்பன ஆட்சியை விட இரட்டை ஆட்சி மோசமானதல்ல என்பதுந்தான் நமது அபிப்பிராயம். ஆதலால் மேற்கண்ட மூவாட்சியிலும் ஏழை மக்களுக்கு – கிராமத்துக் குடியானவர்களுக்கு – தொழிலாளர்களுக்கு – யாதொரு நன்மையும் ஏற்படாததோடு இவைகளின் பலனால் இனியும் அதிகமான கஷ்டம் ஏற்படப் போகிறதென்பதே நமது கருத்து. ஆனால், நம் நிர்வாக சபையிலாகட்டும் மந்திரி சபையிலாகட்டும் மற்ற நீதி இலாக்காக் களிலாகட்டும் ஒத்தை ஆட்சியின் பெயரினாலோ, இரட்டை ஆட்சியின் பெயரினாலோ, நரசிம்ம சர்மா, இராமசாமி ஐயர், வெங்கட்டராம சாஸ்திரியார், சீனிவாசய்யங்கார், இராஜகோபால ஆச்சாரியார், மோதிலால் நேரு, மதன் மோகன் மாளவியா என்கிற பெயர் உடையவர்கள் இருந்து நடத்தும் படியான ஆட்சியை விட வீரய்யன், சௌந்திர பாண்டியன், அப்துல் ரஹீம், இன்னாசி முத்து, வரதராஜுலு என்கிற பெயர் உடையவர்களிருந்தால் நமது நாட்டில் 6 கோடி மக்கள் கண்ணில் பட – தெருவில் நடக்க-சுவாமி தரிசனம் செய்ய – சுதந்திரமில்லாதவர்களாகவும் 28 கோடி மக்கள் ‘வேசி மக்கள்’, ‘அடிமை கள்’ என்று சொல்லப்படக் கூடியவர்களாகவும் 7 கோடி மக்கள் ‘மிலேச்சர் கள்’ என்று சொல்லப்படக் கூடியவர்களாகவும் ‘ஈன ஜாதிக்காரர்கள்’ என்று சொல்லப்படக் கூடியவர்களாகவும் இருக்கமாட்டார்கள் என்கிற ஒரே எண்ணந்தான். நமது நாட்டில் எந்த ஆட்சி இருந்தாலும் பார்ப்பனர் ஆட்சி கூடாது என்பதின் – என்று நாம் சொல்லுவதின் – முக்கிய கருத்து.
குடி அரசு – தலையங்கம் – 27.06.1926