நமது கருத்து
குடி அரசின்’ நான்காவது ஆண்டு முதல் இதழில் எழுதியிருந்த தலையங்கத்தைப் பார்த்த நண்பர்கள் பலர் நமது இயக்கத்தைப் பற்றியும் நம் ‘குடி அரசின்’ வளர்ச்சியைப் பற்றியும் வாழ்த்துக் கூறி பல கடிதங்கள் எழுதி இருக்கின்றார்கள். உதாரணமாக காரைக்குடி ‘குமரன்’ பத்திரிகையும், அதன் ஆசிரியர் திரு. முருகப்ப செட்டியார் அவர்களும், அமராவதிப்புதூர் திரு. பிச்சப்பா சுப்பிரமணிய செட்டியாரும், கானாடுகாத்தான் திரு. வையி. சு. ஷண்முகம் செட்டியார் அவர்களும், மதுரை, அருப்புக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சி, நாகப்பட்டணம், கும்பகோணம், மாயவரம், தஞ்சை, திருச்செங்கோடு, மாரண்டள்ளி, அம்பலூர், சென்னை, கொளும்பு முதலிய இன்னும் பல இடங்களிலிருந்து பல நண்பர்களும் எழுதி இருக்கின்றார்கள். அவற்றுள் சிலர் ‘குடி அரசை’ லிமிட்டெட் கம்பெனியாய் ஏற்படுத்துவதை ஆதரித்தும் பலர் அதைத் தடுத்தும் எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் சுயமரியாதை இயக்கத்தை ஒரு தனி ஸ்தாபனமாக்கி அதற்கு வேண்டிய சங்கம், பிரசாரம் காரியஸ்தலம் முதலிய ஏற்பாடுகள் செய்யும் விஷயத்தில் யாவரும் ஒரே அபிப்பிராயமாகத்தான் எழுதி இருக்கிறார்கள். இதை சுமார் ஒருவருஷ காலமாகவே பலர் எழுதி வருகிறார்கள். இவைகளில் மலேயா நாட்டுக் கடிதங்களே பல. ‘குடி அரசை’ தனித்த முறையில் நமது சொந்த பத்திரிகையாக நடத்துவதில் பொருள் நஷ்டம் ஒன்றுமில்லையானாலும் நம்மால் இனி நிர்வகிக்கக் கூடியதாயில்லை என்பதை நாம் தெரிவித் தாக வேண்டியதாயிருக்கின்றது.
எனவே சுயமரியாதைக் கொள்கை உடையவர்களாகவே சேர்த்து ஒரு லிமிட்டெட் கம்பெனியாக்கி (எந்த மதத்தைப் பற்றியானாலும் சரி) வேதம், சாஸ்திரம், புராணம், ஜாதி, மதம் முதலியவைகளில் (எந்த மதத்தில் பிறந்தவர் களானாலும் சரி) அடியோடு நம்பிக்கையில்லாதவர்களாகவும் மனம், வாக்கு, காயங்கள் மூலம் சற்றும் அவை அனுபவத்திலில்லாதவர்களுமான ஒரு கூட்டத்தாரின் சுதந்திரத்தில் ஆசிரியத் தன்மையை விட்டு ‘குடி அரசு’ம், ‘ரிவோல்ட்’டும் நடைபெறும்படியான ஏற்பாடு செய்வது மிகுதியும் அவசிய மான காரியம் என்பதே நமது அபிப்பிராயம். ‘குமரன்’ பத்திரிகை எழுதியி ருப்பது போலும் மற்றும் பல நண்பர்கள் எழுதியிருப்பதுபோலும் வெகு காலமாகவே இம்மாதிரி இயக்கம் நம் நாட்டில் பல தோன்றித் தோன்றி, மறைந்து கொண்டே வந்திருக்கின்றதே ஒழிய ஒன்றாவது நிலைத்திருக்கவே யில்லை. இதை நமது எதிரிகளே நன்றாய் சொல்லிக்காட்டி நம்மையும் வெருட்டி வருகிறார்கள். அதாவது “வள்ளுவர், புத்தர் முதலியோர்களின் இயக்கங்களும் இன்னும் எத்தனையோ பேர்கள் முயற்சியும் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. அப்படியிருக்க இதை யார் லட்சியம் செய்யப் போகிறார்கள்” என்று சொல்வது போலவே நடந்து வந்திருக்கின்றது. ஆனால் மேல் நாடுகளில் சற்று இவ்வியக்கம் வெகு வேகமாக பரவி வருகிறதாக இப்போது தெரியவருகிறது. நமது நாட்டில் இவ்வியக்கம் வேரூன்றி விட்டதில் சந்தேகமில்லையானாலும் இனி ஒரு ஐம்பது ஆண்டாவது விடாமல் தொடர்ச்சியாய் வேலை செய்தாக வேண்டும். முன்காலங்களில் இவ்வியக்கம் நிலைக்காததற்கும் பலனளிக்காததற்கும் முக்கிய காரணம் என்னவென்றால், அவ்வக் காலங்களில் இருந்த அரசர்கள் வேத, சாஸ்திர, புராண, ஜாதி, மதப் பார்ப்பனர்களின் கைப்பிள்ளைகளாகவே இருந்து வத்ததால்தான். இப்போது உள்ள அரசாங்கம் பார்ப்பனர்களைக் கொண்டு நடைபெறுவதானாலும் வேதம், சாஸ்திரம், புராணம், மதம், ஜாதி என்கின்ற விஷயங்களில் பார்ப்பனர்களைப் பின்பற்றுபவர்கள் அல்ல. அன்றியும் இவ்விஷயங்களில் அரசாங்கத்திற்கும் உண்மையான நம்பிக்கை கிடையாது. ஏதோ அவர்களது ஆட்சி நிலைத்திருக்க வேண்டியும், இவ்வேத சாஸ்திர புராண ஜாதி மதம் அதற்கு அனுகூலமாயிருப்பதாலும் இவற்றை ஒழிக்க அவர்களாக முன்வருவது இல்லையேயல்லாமல் மற்றபடி இவைகளை ஒழிக்கச் செய்யும் இயக்கத்திற்கு வெளிப்படையான எதிரிகள் யில்லை. இது நமக்கு எவ்வளவோ அனுகூலம் என்றே சொல்ல வேண்டும்.
ஆப்கானிஸ்தான அமீரும், துருக்கி கமால் பாட்சாவும், இட்டலி முசோலினியும் ஒரு அளவுக்காவது சுயமரியாதையையும் அறிவையும் ஆதாரமாக கொண்டு அவரவர்கள் நாட்டை உன்னத நிலைமைக்கு கொண்டு வந்து காட்டிவரும் உதாரணத்தைக் காண்பவர்களுக்கு நமது இயக்கத்தைப் பற்றிய பயமோ சந்தேகமோ ஒரு சிறிதும் இருக்கத் தேவையில்லை என்றே சொல்லுவோம்.
மற்றபடி தங்கள் இனத்தாரின் சுயநலங்காரணமாகவோ, சில தனிப்பட்டவர்களின் பிழைப்பு காரணமாகவோ, அறிவில்லாத காரணமாகவோ கூப்பாடு போடுபவர்களை லட்சியம் செய்ய வேண்டிய நிலைமையையும் நமது இயக்கம் ஒருவாறு தாண்டிவிட்டதென்று சொல்லலாம். அன்றியும் அவ்வித கூப்பாடுகளால் நமக்கு பலவித நன்மைகளும் ஏற்பட்டு வருகிறது. ஆதலால் தொடர்ந்து வேலை செய்ய ஏற்பாடுகள் செய்வதுதான் இப்போது நாம் செய்ய வேண்டிய வேலையாகும். ஏதேனும் சில நண்பர்களாவது ஒன்று சேர்ந்து இவ்வியக்கத்திற்கு ஒரு சங்கமேற்படுத்தி அதை பதிவு செய்து அதன் மூலம் பத்திரிகைகளையும் நடத்த ஏற்பாடு செய்வதே நலம் என்று தெரிவித் துக் கொள்கிறோம்.
இதைப்பற்றி சமீபத்தில் தஞ்சை ஜில்லாவில் கூட இருக்கும் மாகாண சுயமரியாதை மகாநாட்டில் ஒரு முடிவு செய்யலாம் என நினைக்கிறேன். அதற்குள் ஏதாவது கடிதப் போக்குவரத்து செய்ய வேண்டும் என்கிற எண்ண முள்ள கனவான்கள் திரு. ஈ.வெ. ராமசாமி என்கின்ற சொந்த விலாசத்திற்கு எழுதிக் கொள்ளலாம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 13.05.1928