இனி தாமதம் வேண்டாம்

தற்கால காங்கிரஸையும் சுயராஜ்யக் கட்சியையும் பார்ப்பன ஆதிக்கத் திற்காக தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களால் சிருஷ்டிக்கப்பட்ட சூழ்ச்சி ஸ்தாபன மென்று பல தடவைகளில் எழுதி வந்திருக்கிறோம். ஆனால் அது சமயம் சிலர் நம்மீது காய்ந்து வந்தார்கள். எனினும் சீக்கிரத்தில் நாட்டிற்கு உண்மை நிலை வெளியாகுமென்றே அவற்றில் கவனம் செலுத்தாமல் நமது கருத்தை ஒளியாது வெளியிட்டு வந்தோம். இப்போது நமது கருத்தைத் தழுவி மற்றும் இரண்டொரு ஆதரிப்புகள் நேர்ந்திருப்பது பற்றி நாம் கழிபேருவகை அடைகின்றோம். அவ்விரு பெரும் ஆதரிப்புகளும் திருவாளர்களான திரு. வி. கலியாணசுந்தர முதலியார், டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் ஆகியவர் களின் உண்மை உணர்ச்சிகளினின்றி எழுந்தவைகளேயாகும்.

திரு. முதலியாரவர்கள் பார்ப்பனத் தலைவரான திரு. சீனிவாசப் பார்ப்பனருக்கு விடுத்துள்ள இறுதிக் கடிதத்திலும், பார்ப்பனக் கமிட்டியான காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பியுள்ள தீர்மானத்திலும் * (தீர்மான நகலை மற்றோர் பக்கத்தில் காண்க) தொக்கியிருப்பது என்ன? தெளிந்த சிந்தையுடன் சுருக்கமாயும் Žநுட்பமாயும் நோக்குங்கால் அதன் உண்மை புலனாகும். அஃதாவது “தங்களது (ஐயங்கார்) தலைமையில் நடக்கும் இயக்கத்தில் ஒத்துழையாமைத் தத்துவம் காணக் கிடைக்கவில்லை; சில சுயநலப் புலிகள் ஒத்துழைப்பு நாட்டங் கொண்டு காங்கிரஸை வயப்படுத்திக் கொண்டார்கள். நான் இதை அறியாமல் உங்களையெல்லாம் நம்பி மோசம் போயினேன். இதுகாலை விழித்துக் கொண்டேன்; விடை தாருங்கள்” என்பதேயாம்.

டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் அவர்களோ இப் பார்ப்பனர்களிடம் ஆதி முதல் நம்பிக்கையில்லாதிருந்தும் ‘தேசம்’ ‘தேசம்’ என்னும் பெயரால் தன்னால் இயன்றவரை இப்பார்ப்பனர்களையும், அவர் தம் சூழ்ச்சி முறை களையும் ஆதரித்தே வந்தார். எவ்வளவு ஆதரித்தும் டாக்டர் நாயுடுகார் கண்ணுக்கு தேசம் உருப்படுவதாய் தோன்றாததோடு, தன்னையே பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஒரு ஆயுதமாய் உபயோகித்துக் கொள்ளுவதாகவே தோன்றி விட்டது. ஆதலால் அவர் விடை கேளாமலே விலகிவிட்டார். அஃதாவது, தமிழ்நாடு கமிட்டியிலிருந்து ஒரே முடிவாய் விலகிக் கொண்டார். அவரது ராஜினாமாக் கடிதத்தில் தொக்கியிருப்பது யாதெனில் * * (இதையும் மற்றோர் பக்கத் தில் காண்க) “பார்ப்பன ஆதிக்கத்திற்காக காங்கிரஸை உபயோகித்துக் கொண்டு நீங்கள் செய்யும் காரியத்திற்கு நான் உடந்தையாயிருக்க முடியாது” என்பதேயாம்.

யோக்கியமான பார்ப்பனரல்லாதாருக்கு இனி என்ன சான்று வேண் டும்? எனினும் இவைகள் இப்படியே முடிவுறுமா? இவர்கள் இந் நிலையிலே இருக்க நமது பார்ப்பனர்கள் விட்டுவிடுவார்களா? எனப் பலர் ஐயுறலாம். ஏனெனில் நமது பார்ப்பனத் தலைவர்களின் மோட்டார் வாகனங்களும் அவசரத் தந்திகளும் இராயப்பேட்டைக்கும் குற்றாலத்திற்கும் பறந்து கொண் டிருக்கின்றன. மீண்டும் அவர்களை இழுத்து சேற்றில் நுழைத்து மிதித்தாலும் மிதிப்பார்கள். எது எவ்வாறாயினும் ஆக அதன் முடிவைப் பற்றி இனி நமக்கு கவலையில்லை.

ஆனால், “காங்கிரஸ் கட்டளை”, “காங்கிரஸ் கட்டளை” என்றும் “தேசத்திற்கு ஏதாவது ஒரு தேசீய காரியம் வேண்டாமா?” என்றும் “இப் போது உள்ள இயக்கங்களில் சுயராஜ்யக் கட்சி ஒன்றே முற்போக்குள்ள கட்சியாய் – நாணயமுள்ள கட்சியாய் – கட்டுப்பாடான கட்சியாய் இருக்கிற” தென்றும் சொல்லிக்கொண்டு பார்ப்பனர்களைத் தொடர்ந்து நடந்து தூது சென்று வயிறு வளர்த்த தரகர்களான தேச பக்தர்கள், தேசீயத் தொண்டர்கள், காங்கிரஸ் பிரசாரகர்கள் ஆகியோரின் கதி என்னவாகுமென்பதே இது போழ்து நம்மிடை எழுந்த வினா. உண்மையிலேயே இப்பொல்லாப் பார்ப்ப னர்களின் சூழ்ச்சிகளை அறியாமல் திரு. முதலியார், டாக்டர் நாயுடுகார் முதலிய தலைவர்களைப் போன்று நம்பி மோசம் போன சுயநலம் பேணாத உண்மை தேசப் பக்தர்கள், தொண்டர்கள், பிரசாரகர்கள் சிலர் இருக்கலாம். அன்னோரும் இவர்களைப் போன்றே இனி விழித்துக் கொள்வார் என நம்புகிறோம். இதுவரை நாம் தனித்து நின்று இப்போலி இயக்கத்தையும் பார்ப்பனர் தம் சூழ்ச்சியையும் தாக்கியதன் பயனாக நம்மைப் பலர் போற்றி யிருப்பினும், சிலர் தூற்றலுக்கும், பொய்ப் பழிகளுக்கும், வசைமொழிகளுக் கும் உள்ளாகியிருக்கும் விஷயம் வாசகர்களுக்கு விளங்கியிருக்கலாம். அது பற்றி ஒரு சிறிதும் நாம் கவலையுறவில்லை. சர்க்காரைத் தாக்குபவருக்கு சிறைவாசமும், நமது பார்ப்பனரைத் தாக்குபவர்களுக்கு பழிச்சொல்லும் கிடைக்காமற் போகா.

சர்க்காருக்குப் பலமிருக்கின்றமையான் அவர்கள் தைரியமாய் முன் வந்து நம்மைப் பிடித்துத் தண்டித்துச் சிறைக்கனுப்புகிறார்கள். ஆனால், நமது பார்ப்பனர்களுக்கோ அத்தகைய பலமில்லை. சூழ்ச்சியும் தந்திரமுமே அவர்களது பலம். அதையே அவர்கள் உபயோகித்து வெல்லப் பார்ப்பார்கள். அம்முறையில் தாங்களும் தங்களால் ஆகாத சமயங்களில் சில ‘ஓட்டு’ களுக்கும் ‘காலி’களுக்கும் பணம் கொடுத்துத் தூற்றவும் பொய்ப்பழி சுமத்தவுமே செய்யக்கூடும். இவை அனைத்தையும் எதிர்பார்த்தே நாம் இத்துறையில் இறங்கினோமேயன்றி, நம்மை இப்பார்ப்பனர்கள் பூஜிப்பார்கள் என்ற அவாவுடன் இறங்கினோமில்லை. எனவே, இப்பழிகளாலும் சூழ்ச்சிகளாலும் நமக்கு எவ்வித கஷ்டமோ அன்றி நஷ்டமோ ஏற்படினும் அவற்றையும் தைரியத்துடன் சகித்தே தீருவோம். இனியும் நமது சொந்த நஷ்டம், கஷ்டம், நமக்கு நாணயக் குறைவு முதலியன ஏற்படுத்த வேண்டும் என்பதாகச் செய்யும் பழிப் பிரசாரத்தின் பலன் ஆகிய இவையனைத்தையும் இக்கருமத்திற்கு ஆகுதியாய்விடத் தயாராகவே இருக்கிறோம். நாம் எடுத்துக் கொண்ட கருமம் நமக்கு பெரிதேயன்றி அதன் பலனாய் நமது கதி என்ன வாகும் என்பது நமக்குப் பெரிதல்ல. ஆதலால் நமது நண்பர்களும் அதைப் பற்றி கவலையுற வேண்டியதில்லை. நண்பர்கள் நம்மை ஆதரித்து எழுதிய பல கட்டுரைகளைப் பிரசுரிக்காதது பற்றி பொறுத்தருள வேண்டுகிறோம்.

இந்நிலைமையில் தமிழர்களான பார்ப்பனரல்லாதார் இனிச் செய்ய வேண்டியது என்னவென்பதுதான் நாம் இது போழ்து முக்கியமாய்க் கவனிக் கத்தக்கது. பார்ப்பனர்கள் முன்னேற்றத்திற்கு காங்கிரஸ், ஹிந்து மகாசபை, வருணாஸ்ரம தர்ம சபை ஆகிய எத்தனையோ ஸ்தாபனங்கள் இருக்கின்றன. மற்றும் வேறு எத்தகைய பொது நலச் சபைகள் என்று ஏற்படுத்தினாலும் அவற்றிற்குள்ளும் தாங்கள் Žநுழைந்து கொண்டு அவற்றையும் தங்கள் வயப்படுத்திக் கொள்ளுகிறார்கள்.

பார்ப்பனரல்லாதாருக்கோ இவ்வுலகிலேயே “தென் இந்திய நல உரிமைச் சங்கம்” என்கிற ஸ்தாபனம் ஒன்றே சென்னையிலிருக்கிறது. அதுவும் நல்ல வேளையாய் பார்ப்பனர்களைச் சேர்ப்பதில்லையென்ற விதி விலக்குடனிருப்பதால் அதைப் பார்ப்பனர்கள் வசப்படுத்திக் கொள்ள இயலாது போயிற்று. ஆயினும் பார்ப்பனர்களின் எவ்வளவோ சூழ்ச்சிகளால் அதைத் தலையெடுக்கவொட்டாமல் அழுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதை அடியோடு ஒழிப்பதற்காகவே, பார்ப்பனரல்லாதாரில் சிலரை வயப்படுத்தி, சிலவுக்குப் பொருள் கொடுத்து ஏற்பாடு செய்து, சென்னை மாகாண சங்கத் தைத் தோற்றுவித்து அதனாலான கொஞ்ச சகாயத்தையும் சாதித்துக்கொண்ட பிறகு இவர்களின் சூழ்ச்சி வெளியாகும் சமயம் பார்த்து அதை ஒழித்து விட்டனர்.

ஆகவே, இப்போது பார்ப்பனரல்லாதாருக்கென சமூகவியலுக்கும், அரசியலுக்கும் ஸ்தாபனம் வேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சி எனப்படும் தென்னிந்திய நலஉரிமைச் சங்கமாகிய மிதவாதக் கொள்கை கொண்ட ஸ்தாபனம் ஒன்றேயிருக்கிறதென்று கூறினோம். ஆதலால், பார்ப்பனரல் லாதார் சமூக நன்மையையும் தீவிர அரசியல் கொள்கையையும் விரும்பு கிறவர்கள் அத்தென்னிந்திய நல உரிமைச் சங்கமான ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து அதை சுவாதீனப்படுத்திக் கொண்டு, அதினின்றே தீவிர கிளர்ச்சி செய்தல் வேண்டும். அக்கட்சியினிடத்து வெறுப்பு இருக்குமேயானால் சமூகவியலுக்கும், அரசியலுக்கும் பொதுவான கொள்கைகளை அமைத்து “தேசீயப் பார்ப்பனரல்லாதார் கழகம்” என்பதாக ஒன்றை ஏற்படுத்தி அதன் வாயிலான் இக்காரியங்களை நடத்தல் வேண்டும். இஃதல்லாது பார்ப்பனர் மெச்சும்படி ஜஸ்டிஸ் கட்சியை திட்டுவதும் பார்ப்பனரல்லாதார் மெச்சும்படி பிராமணீயத்தைத் திட்டுவதுமான குள்ளநரி வேலை இனி உதவவே உதவாது. உறுதியாய், தைரியமாய், ஆண்மையுடன் வெளி வந்து தான் ஆகவேண்டும்.

நமது நோக்கமும் கருத்தும் என்னவென வாசகர்கள் அறிய விரும்பு வரேல் பார்ப்பனரல்லாதார் சமூக முன்னேற்றங் கருதி உழைக்கும் தென்னிந் திய நல உரிமைச் சங்கத்தைக் கைப்பற்றி, அதில் மகாத்மாவின் நிர்மாணத் திட்டத்தைப் புகுத்தி, அதையே பார்ப்பனரல்லாதாரின் சமூகவியல்-அரசியல் ஸ்தாபனமாக ஆக்கிக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. அது இயலாது என்று தோன்றினால் திரு. கலியாணசுந்தர முதலியார், டாக்டர் வரதராஜுலு நாயுடு, ஜனாப் மௌலானா சாஹிபு, திருவாளர்கள் சக்கரைச் செட்டியார், ஆரியா, எஸ்.இராமநாதன், தண்டபாணிப் பிள்ளை முதலியோரும் மற்றும் ஒத்துழையாமையில் ஈடுபட்டு கஷ்ட, நஷ்டங்களை ஏற்று உறுதியுடன் உழைத்து வந்த பார்ப்பனரல்லாத தேசபக்தர்களும் ஒன்று சேர்ந்து எவ்வித திட்டங்கொண்ட ஸ்தாபனம் வேண்டுமென்கிறார்களோ அவ்விதமாகவாவது ஏற்பாடு செய்தல் வேண்டும். இனித் தாமதித்தால் ஆபத்துக்குள்ளாக நேரும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 20.06.1926

You may also like...

Leave a Reply