ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரின் சமத்துவ ஞானம்
ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் திருவல்லிக்கேணி கடற்கரையில் தனது வெற்றிக் கொண்டாட்டத்தில் பேசும் போது சமத்துவத்தைப் பற்றிச் சொன் னதில் “ஜாதி வித்தியாசத்தை சமூக விஷயங்களில் வைத்துக் கொள்ளுங்கள். அரசியல் விஷயத்தில் அது வேண்டாம்” என்று சொன்னதாக 6 -ந் தேதி ‘மித்திரனில்’ காணப்படுகிறது. இதன் தத்துவம் என்ன என்பதை அவர் பின்னால் திரியும் கோடாரிக் காம்புகள் யோசிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.
சமூக விஷயத்தில் ஜாதி வித்தியாசம் என்றால் என்ன? அவர்கள் பிராமணர்கள் நாம் சூத்திரர்கள் என்பதை வைத்துக் கொள்ள வேண்டியதும் பிறவியிலேயே அவர்கள் உயர்ந்தவர்கள், நாம் தாழ்ந்தவர்கள் என்கிறதும் தானா அல்லவா? அல்லாமல் எல்லோரும் சமம் என்கிற கருத்தாயிருந்தால் சமூக விஷயத்தில் ஜாதி வித்தியாசம் எதற்காக இருக்க வேண்டும் என்கிறார்.
தவிர அரசியலில் ஜாதி வித்தியாசம் வேண்டாம் என்றால் அதனின் தத்துவம் என்ன? அரசியலில் உள்ள எல்லா சுதந்திரங்களையும் பதவி களையும் உத்தியோகங்களையும் ஜாதி வித்தியாசமில்லாமல் ‘‘படித்த வர்களும் கெட்டிக்காரர்களும் தகுதியுடையவர்களும்” ஆகிய நாங்களே பார்த்துக் கொள்ளுகிறோம். இதில் ஜாதி வித்தியாசம் வேண்டியதில்லை; யார் அனுபவித்தாலென்ன; எல்லாம் சமம் என்று ஏமாற்றுவதும் இதில் யாரும் ஜாதி உரிமை காட்டக் கூடாது என்பதுதானா அல்லவா? இதையும் நமது கோடாரிக் காம்புகள் கேட்டுக் கொண்டு இன்னமும் அவர் பின்னால் திரிவது என்றால் இதில் ஏதாவது இரகசியம் இருக்குமா? இல்லையா? என்பதைப் பொது ஜனங்களே உணரட்டும்.
குடி அரசு – வேண்டுகோள் – 12.09.1926