ஏற்றுக்கொண்டோம்
திராவிடன்’ பத்திரிகையின் நிர்வாகத்தை நாம் ஏற்றுக் கொள்ளுவதா என்கின்ற விஷயத்தைப் பற்றி பொது ஜனங்களுடைய அபிப்பிராயத்தை கேட்டிருந்தது வாசகர்களுக்குத் தெரியும். அதற்கு பதிலாக சுமார் 500 கனவான்களுக்கு மேலாகவே ‘திராவிடனை’ ஒப்புக் கொள்ளும் படிக்கு எழுதினதுடன் தங்கள் தங்களால் கூடுமான உதவியைச் செய்ய முன்வருவதாக வாக்குத்தத்தமும் செய்தார்கள். அதை அனுசரித்து சென்ற ஆவணி -µ 26-தேதி ‘குடி அரசில்’ ‘சென்னைக்குச் செல்கின்றோம்’ என்பதாக ஒரு தலையங்கம் எழுதி அதன் கீழ் ‘திராவிடனை’ நடத்துவதில் நமது கொள்கை இன்னது என்பதையும் விளக்கியிருக்கின்றோம். அதாவது,
‘திராவிடன்’ கொள்கைகள் ‘குடி அரசு’ கொள்கைப்படியேதான் இருக்கும். “குடி அரசின்” கொள்கைகள் யாவரும் அறிந்திருப்பார்க ளென்றே நினைக்கிறோம். அதாவது:- பார்ப்பனரல்லாதாரை அழுத்தி பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த பார்ப்பனர்களுக்கு நமது நாட்டில் ஆயுதங்களாக இருக்கும் அரசியல் புரட்டையும், மதப் புரட்டையும் அடியோடு அழிப்பதுடன் பார்ப்பனீயத்தையும் ஒழித்து மக்களுக்கு சுயமரியாதை உண்டாகும்படி செய்வது என்பதுதான். இதற்கு ‘திராவிடன்’ சொந்தக்காரர்கள் சம்மதிக்காதபோது நாம் விலகிவிடுவோம் என்பது உறுதி. இது சமயம் இந்தக் கொள்கையை ஒப்புக் கொள்ளவோ ஆதரிக்கவோ நமது நாட்டில் ஒரு குட்டித் தலைவராவது ஒருகுட்டிப் பத்திரிகையாவது இல்லை. ஆனாலும் நாம் அதற்காக பயப்படவில்லை.
ஏனெனில் இக்காரியங்கள் நடைபெறாமல் போனால் நமது பார்ப்பன ரல்லாதார் சமூகத்துக்கு மாத்திரமல்லாமல் இந்தியாவுக்கே சுயமரியாதையும் விடுதலையும் ஒருக்காலும் ஏற்படப்போவதில்லை என்பதே நமது முடிவு. பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தாரும் அவர்களது பத்திரிகைகளாகிய ‘ஜஸ்டிஸ்’ ‘திராவிடன்’ பத்திரிகைகளுங்கூட இக்கொள்கைகளைப் பொருத்த வரையில் நம்மிடம் சிறிது அபிப்பிராய பேதம் கொண்டிருப்பதும் நமக்குத் தெரியும். நம்மிடம் ‘திராவிடன்’ ஒப்புவிக் கப்பட்டால் இக்கொள்கைகளுடன் தான் அது நடத்தப்பெறும் என்பதாக அவர்களுக்கும் இப்போதே சொல்லி விடுகிறோம். அரை நூற்றாண்டாக அநேக இந்திய மேதாவிகளால் உண்டாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அரசியலைக் குற்றம் சொல்வதும் ஆயிரக்கணக்கான வருஷங்களாக ரிஷி களாலும், முனிவர்களாலும், கடவுள் அவதாரங்களாலும் உண்டாக்கப்பட்ட தாய்ச் சொல்லப்படும் – ‘மகாத்மா’ காந்தியாலும் கூட சொல்லப்படும் – மத இயலைக் குற்றம் சொல்வதும், இரத்தத்திலும், நரம்புகளிலும், எலும்புகளிலும், சதையிலும் ஊறிக்கலந்து இருக்கும் இவ்விஷயங்களைக் குற்றம் சொல்லி மக்களைத் திருப்புவது என்பதும் ஒருக்காலும் சுலபமான காரியம் என்ற சொல்ல முடியாது. அன்றியும் தற்போது எல்லாத்துறைகளின் ஆதிக்கத்திலும், அதிகாரத்திலும் இருக்கும் பார்ப்பனீயத்தை ஒழிப்பது என்பது இவற்றை யெல்லாம்விட அதிகமான கஷ்டமென்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். இதற்கு ஆதாரமாக “மகாத்மா” காந்தியினாலேயே “பார்ப்பனீயமில்லாதவர்” என்று மதிக்கப்பட்ட ஒரு பார்ப்பனர் ஒரு சமயம் சொன்ன வார்த்தைகளைக் குறிப்பிடுகின்றோம்.
“பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான வருஷங்களாக அனேக பெரியவர்களாலும், சித்தர்களாலும், சமணர்களாலும், புத்தர்களாலும் எவ்வளவோ பாடுபட்டாய் விட்டது. மற்றும் மகமதிய அரசாங்கத்தாராலும் எவ்வளவோ பாடுபட்டு பார்த்தாய் விட்டது. இதனால் இவ்வளவு பேரும் தோற்றார்களே யொழிய ஒருவரும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் உன் ஒருவனுடைய முயற்சி எம்மாத்திரம்?” என்று சொல்லி பரிகாசம் செய்தார்.
இந்த வார்த்தைகள் வாஸ்தவமாக இருந்தாலும் இருக்கலாம். அது போலவே நமது முயற்சியும் வெற்றி பெறாமல் தோல்வியும் உறலாம். ஆனாலும் ஒன்று மாத்திரம் சொல்லுவோம். என்னவெனில் இம்முயற்சிகள் வெற்றிபெறாமல் நமது நாட்டுக்கும் சமூகத்துக்கும் விடுதலை இல்லை என்பதை மாத்திரம் மறுபடியும் உறுதியாய்ச் சொல்லுகிறோம். எனவே நமக்கு இதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று நமக்கு பட்ட வழியில் உழைக்க வேண்டியது நமது கடமையே அல்லாமல் வெற்றி, தோல்வி என்பவைகளைப் பற்றி முதலிலேயே முடிவு செய்து கொள்ள வேண்டியது நமது கடமை அல்ல.
எனவே நமது நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் இவ்விஷயங்களை நன்றாய் கவனிப்பதோடு மற்றொரு விஷயத்தையும் அறியவேண்டும். அதாவது ‘திராவிடனும்’ ‘குடிஅரசும்’ பார்ப்பனர்கள் கையில் இருக்கும் உத்தியோகங்களையும் பதவிகளையும் பிடுங்கி பார்ப்பன ரல்லாத ஜமீன்தாரர்களும் மிராஸ்தாரர்களும் வியாபாரிகளும் லேவாதேவிக் காரருமான பணக்காரர்களுக்கும் ஆங்கிலம் படித்த வக்கீல்களுக்கும் கொடுப்பதற்காக நடத்துகிறது என்று நினைப்பார்களானால் அவர்கள் கண்டிப்பாய் ஏமாந்து பேவார்கள். ஏனெனில் அரசியல் விஷயத்தில் பார்ப்பன ஆதிக்கத்தை விட பணக்கார ஆதிக்கத்தைவிட வக்கீல் ஆதிக் கத்தைவிட வெள்ளைக்கார ஆதிக்கமே ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஏழை மக்களுக்கும் குடியானவர்களுக்கும் யோக்கியர்களுக்கும் அதிகமான கெடுதி இல்லாதது என்பதே நமது அபிப்பிராயம். வெள்ளைக்கார ஆதிக்கம் ஒழிவதாயிருந்தால் நேரே அது ஏழை மக்களான தொழிலாளர்கள் கைக்கு வருவதுதான் நன்மையே அல்லாமல் ஏழை மக்களுக்கு பார்ப்பனர்களும், பணக்காரர்களும், வக்கீல்களும் தர்மகர்த்தாக்களாகவும் தரகர்களாகவும் இருக்கக் கூடாது என்றே சொல்லுவோம். இந்தக் கொள்கையின் பேரில் தான் பணக்காரர்கள் இப்பத்திரிகைக்கு உதவி செய்ய வேண்டும் என்பதாகவும் இப்போதே வெளிப்படையாய் சொல்லிவிடுகிறோம்.
அது போலவே மத இயலில் நமக்கு உதவி செய்பவர்களும் இந்து மதம் என்பதான பார்ப்பன மதத்துடன் போர் புரிந்து வெற்றி ஏற்படுமானால் சைவ சமயத்திற்கு அனுகூலமாகும் என்றோ, வைணவ சமயத்திற்கு அனுகூலமாகுமென்றோ, கிறிஸ்துவ மதத்திற்கு அனுகூலமாகுமென்றோ, மகம்மதிய மதத்திற்கு அனுகூலமாகுமென்றோ, மாத்துவ மதத்திற்கு அனுகூலமாகுமென்றோ ஒவ்வொருவரும் தன் தன் சுயமத நலத்திற்கு என்று நினைத்து கொண்டார்களானால் அவர்களும் ஏமாற்றமடைவார்கள் என்பதையும் இப்போதே சொல்லிவிடுகிறோம். பார்ப்பன மதம் ஒழிவத னால் உண்மையான சமரசமும் சன்மார்க்கமும் உடையதான மதம் ஏற்பட வேண்டும். எல்லா மக்களுக்கும் சுயமரியாதை உணர்ச்சி ததும்பவேண்டும். என்பதாகவே ஓர் அறிக்கையை வெளியிட்டுவிட்டு சென்னை சென்றோம். ‘திராவிடனுக்கு’ உதவி செய்வதாக வாக்களித்திருந்த சில கனவான்கள் இந்த அறிக்கையைப் பார்த்துக்கொண்டு தாங்கள் முற்றிலும் இந்த அறிக்கையை ஒப்புக் கொள்வதாகவும் இந்த நிபந்தனையின் மீதே உதவி செய்து வருவதாகவும் வாக்குறுதி செய்து கடிதம் எழுதினார்கள். அதிலிருந்து இதுவரை ஒருவாறு நம்மால் ‘திராவிடன்’ கவனிக்கப்பட்டு வந்தாலும் ஏப்ரல் முதல் தேதி முதலே கணக்கு முதலிய நிர்வாகங்களும் தென்னிந்திய மகாஜன சங்கத்தை விட்டு பிரித்து நமது வசம் ஒப்புவிக்கப்பட்டு விட்டது.
இதன் மத்தியில் “தமிழ்நாடு” பத்திரிகையும் ஸ்ரீ வரதராஜுலுவும் ‘திராவிடனை’ப் பற்றி எவ்வளவோ பொய்யும் புளுகும் – அதாவது ராமசாமி நாயக்கர் திராவிடனுக்கு வந்தார், தமது ஜம்பம் செல்லவில்லை; ஓடிவிட்டார் என்பது போன்ற பல விஷயங்களை எழுதிவிட்டார். அதற்கும் பொது ஜனங்கள் ஏமாறாமல் எவ்வளவு தூரம் இம்மாதியான ஒரு பத்திரிகையை ஆதரிக்கக்கூடுமோ அவ்வளவு தூரம் ஆதரித்து வந்திருக்கிறார்கள்.
‘திராவிடன்’ பத்திரிகை மற்ற பத்திரிகைகளைப் போல வயிற்றுப் பிழைப்பு பத்திரிகையாகவோ வியாபாரப் பத்திரிகையாகவோ, கூலிக்கு உழைக்கும் பத்திரிகையாகவோ இல்லாமல் ஒரு குறிப்பிட்ட கொள்கையை பிரசாரம் செய்யும் பத்திரிகையாக இருப்பதால் பொது மக்களின் மதிப்பை பெற அது கொஞ்சம் தனது நாணயத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தை முன்னிட்டு “தமிழ்நாடு” முதலிய பத்திரிகைகளைப் போல வெளி ஆடம்பரத்திலும் வியாபாரப் புரட்டிலும் பொதுமக்களிடம் பணம் பறிக்கச் செய்யும் தந்திரங்களையும் கையாளாமல் உள்ளது உள்ளபடி நடந்து வந்ததால் “திராவிடன்” அதனுடைய நிலைக்குத் தகுந்த விளம்பர ஆதரவு முதலியவைகள் பெறவில்லை. ஆனபோதிலும் அதற்காக வேண்டி அது தன் கொள்கையையோ நாணயத்தில் உள்ள கவலையையோ ஒரு சிறிதும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பதாக உறுதி கூறுவோம்.
நிற்க “திராவிடன்” நமக்கு சாஸ்வதமான சாதனமல்லவென்பதையும் தற்காலம் நமது தொண்டிற்காக உபயோகித்துக் கொள்ளும் ஒரு உதவி சாதனமேயாகும் என்பதையும் “குடி அரசே” நமது தொண்டிற்கு சாஸ்வத மான மூல சாதனம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இது சமயம் பார்ப்பனர்களுக்கு பலவழிகளிலும் அவர்களது யோக்கியதை வெளியாகி அவர்களது செல்வாக்கு முன்னேறுவது தடைப்பட்டு இருந்தாலும் இனியும் அவர்களால் பொது மக்கள் ஏமாறக்கூடிய நிலைமை இருப்பதற்குக் காரணம் அவர்களுடையவும் அவர்களது கூலிகளாகவும் வால் பிடித்து பிழைப்பவர் களாகவும் உள்ள சில பார்ப்பனரல்லாதாருடைய பத்திரிகைகளினுடையவும் பிரசாரமுமே தவிரவேறல்ல :
இது சமயம் நமது நாட்டிலுள்ள சற்றேறக்குறைய எல்லாப் பத்திரிகை களும் பார்ப்பனத் தலைமையின் கீழ் தான் நடத்தப்படுகின்றன. பார்ப்பனர் களேதான் கொள்கைகளை உற்பத்தி செய்கிறார்கள். அதுவும் பார்ப்பன ரல்லாத சமூகத்திற்கு கெடுதி பயக்கத்தக்கதாகவே பார்த்து கண்டுபிடிக்கின் றார்கள். அதை மீற யாருக்கும் தைரியமில்லை. ஏனெனில் அவர்களை விரோதித்துக் கொண்டால் எந்த பத்திரிகையையும் நடத்த முடியாதபடி செய்யத் தகுந்த அளவு செல்வாக்கு பார்ப்பனர்களுக்கு இருக்கின்றது. எனவே, பார்ப்பன ஆதிக்கம் இந்தப் பத்திரிகைகளின் பிரசாரத்தாலேயே நிலைபெற்றுவிடுவதால் நமக்கும் தக்க பத்திரிகை உதவி வேண்டும். பார்ப்பனர்களை எதிர்ப்பதால் பார்ப்பனர்களின் எதிர்ப்புக்கு தலை கொடுக் கத்தக்க அளவில் நஷ்டப்படவும், கஷ்டப்படவும் தயாராயிருக்க வேண்டும். போதாக்குறைக்கு ஸ்ரீமதி பெசண்ட்டம்மையாரும், சர்.சி.பி. ராமசாமி அய்யரும் ஒரு தமிழ் பத்திரிகையை தினசரியாகவோ வாரப்பதிப்பாகவோ ஆரம்பிப்பதாக ஏற்பாடு செய்து வருகிறார்கள். அதற்காக முன் ஒரு காலத்தில் “ஒரு தேசீயத் தமிழ் பத்திரிகையின்” ஆசிரியராய் இருந்த பார்ப்பனரல்லாத ஒரு கனவானை ஆசிரியராக வர வேண்டுமாய் கூப்பிட்டும் அவர் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் இனியும் தக்க பார்ப்பனரல்லாத ஆசிரியரையே தேடித்திரிகிறார்கள். “சுதேசமித்திரன்” “சுயராஜ்யா” போன்றவைகளின் பிரசாரமும் “தமிழ்நாடு” போன்றவைகளின் கூலி வயிற்றுப் பிழைப்பு முதலிய சமய சஞ்சீவிப் பிரசாரமும் நமது முன்னேற் றத்திற்கு எவ்வளவு தூரம் கெடுதி செய்து வந்திருக்கின்றன என்பதும் ஸ்ரீமதி பெசண்டம்மை ஸ்ரீ ராமசாமி அய்யர் கம்பெனியாரின் புதிய பத்திரிகையும் வெளிவந்தால் இனியும் எவ்வளவு தொல்லை ஏற்படும் என்பதையும் யோசித்துப் பார்ப்பவர்களுக்கு ‘திராவிடனின்’ அவசியமும் அருமையும் தெரியாமல் போகாது. ஆதலால் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையிலும் முன்னேற்றத்திலும் அபிமானமும் கருணையும் உள்ள கனவான்கள் “திராவிடனை” முன்னிலும் அதிகமாக ஆதரிக்க முன்வர வேண்டுமாக வேண்டிக்கொள்கின்றோம். அடுத்து வரும் தமிழ் வருஷப் பிறப்பு தினத் தன்று கூடுமானவரை திராவிடனுக்கு புதிய சந்தாதாரர்களை சேர்க்கும் தொண்டைச் செய்து அன்றைய தினம் தக்க அளவு புதிய சந்தாதாரர் களையாவது சேர்த்துக் கொடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 08.04.1928