சர். பாத்ரோ ஆச்சாரியார்
சென்னை சட்டசபையில், பாலிய விவாகத்தை தடுக்க ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மாளால் கொண்டுவரப்பட்ட ஒரு சிபார்சு தீர்மானம் விவாதத்திற்கு வந்த காலத்தில் சர். பாத்ரோ அவர்கள் அத்தீர்மானத்திற்கு எதிரிடையாய் அதாவது மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கக்கூடாது என்று பேசியிருக்கிறார். இது யோக்கியமா என்று கேட்கிறோம். இந்த சம்பவம் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கே ஒரு பெரிய மானக்கேடு என்று சொல்லுவோம். மனிதர்கள் அரசியலில் கரணம் போடுவதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஏனென்றால் அரசியல் என்றாலே அயோக்கியதனம், கேப்பமாறித்தனம், தேசத்துரோகம் என்பவைகள் நமது அகராதி அர்த்தம். காங்கிரஸ் கொள்கை முதல்கொண்டு, அதை ஆரம்பித்த பெரியார்கள் என்பவர்கள் முதல்கொண்டு, அதில் உள்ள தலைவர்கள் என்பவர்கள் முதல்கொண்டு, எல்லாவற்றிலும் பெரும்பான்மையார்கள் அந்த எண்ணத்தைக் கொண்டே ஆரம்பித்து நடத்திவரப்படுகின்றது என்பதே நமது முடிவு. ஆனால் சமூக சீர்திருத்த விஷயத்திலாவது மேல்கண்ட குணங்கள் இல்லாமல் யோக்கியமாய் நடந்து கொள்ள வேண்டாமா என்று கேட்கின்றோம். சர்.பாத்ரோ பிரம்ம சமாஜி என்று சொல்லிக் கொள்ளுபவர். உண்மையிலேயே அவருக்கு மதத்தில் சர்க்கார் பிரவேசிக்கக் கூடாது என்கின்ற அபிப்பிராயமிருக்குமானால் தேவஸ்தான சட்டம் செய்ததைப் பற்றியும் யூனிவர்சிடியில் செய்ததைப் பற்றியும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு மரியாதையாக பார்ப்பனரல்லாதார் கட்சியை விட்டு வெளியில் போய்விடும் படியாக வேண்டிக்கொள்ளுகிறோம். ஸ்ரீ பாத்ரோ ஆச்சாரி யாரைவிட ஸ்ரீ வரதராஜுலு அய்யங்காரே மேல் என்று ஜனங்கள் நினைக் கும்படி நடந்து கொண்டதற்கு நாம் மிகுதியும் பரிதாபப்படுகிறோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 01.04.1928