இன்னுமா சந்தேகம்? இரகசியம் வெளியாய் விட்டது
பார்ப்பனர்கள் காங்கிரஸின் பேராலும் தேசீயத்தின் பேராலும் ஸ்ரீ வரத ராஜுலு போன்ற ஆசாமிகளை சுவாதீனம் செய்து கொண்டு பார்ப்பன ரல்லாதாருக்கு கெடுதி செய்து வருவதைப் பற்றியும் சென்ற சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் ‘காங்கிரசுக்கும் தேசீயத்திற்கும்’ விரோதமாய் பொய்க்கால் மந்திரிகளை சிருஷ்டித்ததும் அவர்களை ஆதரித்ததும் பார்ப்பனரல்லாதார்களுக்கு கெடுதி உண்டாகச் செய்யவே என்பதாகவும் பலமுறை எழுதிவந்திருக்கின்றோம். இதற்கு சரியான ருஜூ கொடுக்க சமீபத் தில் சென்னை சட்ட சபையில் விலக்கப்பட்ட மந்திரியாகிய ஸ்ரீமான் ரங்க நாத முதலியார் சொன்ன வாசகமே போதுமானதென்று நினைக்கின்றோம்.
அவர் சொன்னதாவது “1926-ல் நாங்கள் மந்திரி பதவிகளை ஏற்றுக் கொண்டவுடன் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் எங்களை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சியாரிடமிருந்து ஒப்பந்தம் வெளியாயிற்று. அந்த ஒப்பந்த நிபந்தனை என்னவென்றால் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் கமிட்டிகளுக்கும் மற்ற நியமனங்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சியாரை நியமிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்”, இந்த வாசகம் ஸ்ரீமான் எ. ரங்கநாத முதலியார் அவர்கள் சொன்னதாக 23-3-1928 ² ‘சுதேசமித்திர’ னிலேயே இருக்கிறது. இதை காங்கிரஸ் கக்ஷி சட்டசபைத் தலைவர்கள் ஸ்ரீமான்கள் சாமி வெங்கிடாசலமும், சத்தியமூர்த்தியும் சட்டசபையில் மறுக்கவில்லை என்பதினாலேயே இது உண்மை என்பது ஒரு சிறிதும் சந்தேகமில்லை. இப்படி இருக்க ஜனாப் அமீத்கான் சாயபு காங்கிரஸ் கட்சியாருக்கு அம்மாதிரி நிபந்தனை செய்துகொள்ள யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை என்பதி னாலேயே ஸ்ரீ ரங்கநாத முதலியார் சொல்வது பொய்யாகி விடுகிறதா? என்பதை வாசகர்களே யோசித்துப் பார்த்து தேசீயமென்பதும் காங்கிர சென்ப தும் பார்ப்பனரல்லாதாருக்கு ஆபத்தா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டுகிறேன்.
குடி அரசு – கட்டுரை – 25.03.1928